வியாழன், 24 பிப்ரவரி, 2011

“இந்த உலகம் ஏன் ஒரு குடும்பமாக வாழ முடியாது?” :பிடல்காஸ்ட்ரோ


இப்போதே துவங்குங்கள்! மனித குலத்தைப் பாதுகாக்கும் பணியை

வரும் நூற்றாண்டுகளில் அல்லது ஆயிரமாண்டுகளில் நமது மனித குலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. அத்தகைய வேலையை இப்போதே துவங்க வேண்டும்” - பிடல் காஸ்ட்ரோ.

கியூபாவின் தலைநகர் ஹவானாவில் 20வது சர்வதேச புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒருபகுதியாக எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பிடல் காஸ்ட்ரோ பங்கேற்றார். அப்போதுதான் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உணவுப் பொருட்களின் விலை தலைதெறிக்க ஓடிக்கொண்டிருப்பதிலிருந்து, அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியாக போராடிக் கொண்டிருப்பதுவரை பல்வேறு விஷயங்கள் பற்றிக் கலந்துரையாடினார். நீண்டகாலமாக சந்திக்காமல் இருந்த பல நண்பர்களைச் சந்தித்ததில் மிகவும் குதூகலமாகக் காஸ்ட்ரோ காட்சியளித்தார். அண்மையில் நடைபெறும் மற்றும் கடந்த பத்தாண்டு காலகட்டத்தில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வுகள் குறித்து மிகவும் தெளிவாகத் தனது கருத்துகளை அவர் முன்வைத்தார். முதலில் கியூபாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் ஏபெல் பிரிட்டோ அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

விவாதத்தை எங்கிருந்து துவங்குவது என்று அனைவரின் முகங்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டபோது, காஸ்ட்ரோவே அந்த தர்மசங்கடத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். “நாம் சந்திப்பதிலேயே மிகவும் கடுமையான பிரச்சனை எது என்பதை மையமாக வைத்து விவாதத்தைத் துவக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலாக முற்போக்கு சக்திகளின் அணுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று பலரும் பேசினர். திடீரென்று எழும் பிரச்சனைகளை பிராந்திய ரீதியிலான மட்டுமல்ல, சர்வதேச அளவிலான இடதுசாரி சக்திகள் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது.

மீண்டும் விவாதத்தைத் தொடர்ந்த காஸ்ட்ரோ, “மனிதகுலத்தின் இருப்பே அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கை மணியை ஒலிக்க விட்டார். மேலும் பேசிய அவர், இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பதைக்கூட மனித குலம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இந்த பூமிப்பந்து சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பதைத் தள்ளிப்போட முடியாது. அழிவில் உள்ள உயிரினமாக மனிதகுலம் இருந்து வருகிறது. இதுதான் மற்ற பிரச்சனைகளைவிட முக்கியமான பிரச்சனையாக நான் பார்க்கிறேன்” என்றார்.

மனிதகுலம் சந்தித்த மிகப்பயங்கரவாத சம்பவமாக 1945 ஆம் ஆண்டில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதையே காஸ்ட்ரோ குறிப்பிட்டுப் பேசினார். இத்தகைய அபாயங்களிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று ஆய்வு செய்ய வேண்டுமாறு அறிவுஜீவிகளையும், எழுத்தாளர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

உணவுப்பொருட்கள் விலையுயர்வு பற்றிய விவாதமும் நடைபெற்றது. ஊக வணிகம்தான் விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளது. பணக்கார நாடுகளின் கடன் அந்தந்த நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பையும் விட அதிகமாக உள்ளது என்று விவாதத்தில் கருத்துகள் வந்தன.

இதுபற்றிக் கருத்து தெரிவித்த காஸ்ட்ரோ, “நிலைமை என்ன என்று மக்களுக்குச் சொல்ல வேண்டியுள்ளது. ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் நம்மால் எவ்வளவு விளைவிக்க முடியும் என்றும், எவ்வளவு பரப்பில் விளைச்சல் நடைபெறுகிறது என்றும் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த பூமிப்பந்து அழிந்தால் நாம் செல்வதற்கு வேறு இடமில்லை” என்ற அவர், “இந்த உலகம் ஏன் ஒரு குடும்பமாக வாழ முடியாது?” என்ற கேள்வியை எழுப்பினார். சிலரிடம் எண்ணெய் உள்ளது. சிலர் உணவுப் பொருட்களை வைத்திருக்கிறார்கள். அதையும் தாண்டி சில நாடுகளிடம் ஏராளமான மருத்துவர்கள் உள்ளனர். ஒரே மனித குடும்பத்தின் வீடாக பூமி மாற வேண்டும் என்று ஏன் நாம் நினைக்கக்கூடாது” என்ற கேள்வியை அனைவரின் முன்பாக காஸ்ட்ரோ வைத்தார்.

அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களின் கருத்துகளையும் காஸ்ட்ரோ உன்னிப்பாகக் கவனித்தார். அடுத்த புத்தகத் திருவிழாவுக்கு முன்பாக அனைவரையும் சந்திக்கும் காஸ்ட்ரோவின் விருப்பத்தோடு கலந்துரையாடல் நிறைவுக்கு வந்தது.

4 கருத்துகள்:

சுதர்ஷன் சொன்னது…

ஆரோக்கியமான அலசல் .பிடல் காஸ்ட்ரோவின் இந்த கேள்வியை பல விஞ்ஞானிகள்,பலர் ஆராய்ந்து வருகின்றனர் .நாம் அனைவரும் ஒன்றிலிருந்தே வந்தோம் என்றால் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியாது ? முடியும் .. :)

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

சக்தி கல்வி மையம் சொன்னது…

கலக்கல் தல....நம்ம பக்கமும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_24.html

ஓட்டும் போட்டுட்டேன். பாலோவர் ஆகிவிட்டேன்.

விடுதலை சொன்னது…

நன்பர் சுதர்சன் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

நம்மை எல்லாம் தனித்தனியாக வைத்திருப்பதின் மூலம்தான் லாபவெறி பிடித்த ஏகாதிப்பத்தியவாதிகள் தங்கள் கொள்லை நடத்துகிறார்கள். அவர்களை புறக்கணிப்பதன் மூலம்தான் நாம் மனித நேயமிக்க உலகை படைக்கமுடியும்

விடுதலை சொன்னது…

நன்பர் வேடந்தாங்கல் - கருன் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

ஏற்கனவே தங்கள் பிளாக்கை பார்த்து விட்டேன் நல்ல முயற்சி தொடர்ந்து பயனிப்போம்