புதன், 16 ஜூலை, 2008

ஏன் தற்கொலை? தடுப்பது எப்படி?

தற்கொலைகள் செய்வதற்கான காரனங்கள் என்ன?

தாம் மிக அதிகமாக நேசித்தவரின் திடீர் மரணம், பொருளாதார ரீதியாக ஏற்படும் பின்னடைவு , குற்ற உணர்வு , சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்படுதல் , தாங்க முடியாத நோய்கள், மன நிலை பாதிக்கப்படுவது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, பிறர் தூண்டுதல் தற்போதைய உலகத்தின் எல்லாவித போட்டிகளிலும் தோல்வி அடைவது அல்லது அதை கண்டு பயப்படுவது, நிறைவேறாத ஆசைகள் அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள், சுயகவுரவம் பாதிக்கப்படும்போது அதை காப்பற்ற என்று பல காரணங்களினாலும் தற்கொலை நடைபெறுகின்ற போதும் தொண்ணூறு வீதமான தற்கொலைக்குக் காரணம் மனநிலையில் ஏற்படுகின்ற பாதிப்புகளே என்று கண்டறியப்பட்டுள்ளது. மனபதட்டம், மனசிதைவு, psychotic என்பதான மனநோய்கள் ஏற்படுபவர்களுக்கு தற்கொலை செய்து கொள்கின்ற எண்ணம் ஏற்படுகின்றது.


தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் அதைவெளிப்டுத்துவார்களா?

தற்கொலை செய்து கொள்ளப்போகின்றேன் என்று அடிக்கடி மிரட்டிக் கொண்டிருக்கும் மிரட்டலர்கள் நிறையப் பேரும் இருக்கின்றார்கள். இவர்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள். இவர்களை வாய்ச்சொல்லில் வீரர்கள் என்றும் அழைக்கலாம்

சிறிய அளவு மருந்தை குடித்து விட்டு தான் மருந்து குடித்து விட்டேன் என்று உடனேயே கூறுவார்கள். தற்கொலை செய்யப் போகின்றேன் என்று பறைசாற்றி விட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டுவார்கள் (எப்படியும் உடைத்து திறந்து தடுப்பார்கள் என்ற நம்பிக்கை). ஆனால் உண்மையில் தற்கொலைக்குத் துணிபவர்கள் எவருக்கும் தெரியாமல் திட்டம் தீட்டுவார்கள். தன்னை யாராலும் காப்பாற்ற முடியாத வழிகளையும், நேரத்தையும் இவர்கள் தெரிந்தெடுப்பார்கள். சிலர் மிரட்டி காரியம் சாதிக்க வேண்டும் என்றும் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வதாக கூறுவார்கள். இது பல நேரங்களில் அதுவே ஆபத்தாக மாறிய சம்வங்களும் உண்டு . பொதுவாக தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் சாதாரனமாக பேசும் போதும் அவர்களின் தினசரி நடவடிக்கைளிலும் பல்வேறு விதங்களில் தற்கொலை எண்ணத்தை வெளிப்டுத்துவார்கள் அதை நாம் அலட்சிய படுத்தாமல் அவரை நல்ல மனநலமருத்துவரிடம் அழைத்து செல்வது சிறந்த வழிறையாகும்.

மனநோய் என்றால் என்ன?

மனநோய் என்பது ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல. இதற்குள் பல வகையான நோய்கள் உள்ளடங்குகின்றன. இந்த மனநோய்க்கு வயது பால், பொருளாதாரம், இனம் என்று எந்த வேறுபாடும் கிடையாது. எவரையும் எந்த நேரமும் இது தாக்கக் கூடும். சிந்தனையிலும், நடத்தையிலும் பெரும் குழப்பத்தை இது ஏற்படுத்தும். இதன் காரணமாக சாதாரண வாழ்க்கையில் பெரும் குழப்பங்கள் உருவாகும்.

மனநோய்க்கான காரணங்கள் பல உள்ளன. பொதுவாக மூளையில் ஏற்படும் இரசாயன சமனின்மையே இந்த மனநோய்க்கான காரணமாக இருக்கலாம் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். வாழ்க்கையில் திடீரென்று ஏற்படுகின்ற அழுத்தங்கள், மரபணுக்கள் என்பன இந்த இரசாயன சமநிலையில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கலாம்.

மனநோய்க்கான அறிகுறிகள் என்ன?

காரண காரியம் எதுவும் இல்லாமல் அழுவதும், சிரிப்பதும், தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல், தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பது, தடால் தடால் என்று ஒரு விசயத்தை விட்டு இன்னொரு விசயத்திற்குத் தாவுவது, அதீத பயம் கவலை, என்ன வென்று விபரித்து சொல்ல முடியாத எண்ணங்கள், தற்கொலை செய்வதற்கான எண்ணம் ஏற்படுதல், அன்றாட நடவடிக்கைகளில் செயல்பட முடியாத நிலை, உணவு உண்ணுதலிலும், உறக்கம் கொள்வதிலும் சிக்கல் என்பன மனநோய்க்கான சில அறிகுறிகளாகும்.

மனபதட்டம் அல்லது மனஅமுக்கம் (Depression ) என்றால் என்ன?

மூளையில் நரம்புகளுக்கிடையேயான செய்திகளை பரிமாற்றுவதற்கு காரணமான இரசாயனப் செயல்பாடுகளின் சமநிலை சீர்குலைகின்றது. இரசாயனப் செயல்பாடுகளின் அளவு குறைய செய்திகளின் செறிவு குறைகின்றது. இதனால் நரம்பு மண்டலம் பூரணமாக செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் சோர்ந்து போய் இருப்பார். பெரும் கவலை அவருக்கு இருக்கும். இது ஒரு நாள் இரண்டு நாளில் மாறக்கூடிய கவலை அல்ல. மருத்துவ உதவி பெற வேண்டிய மனநோய்.

பொழுது போக்கு, பாலியல், வேலை எதிலும் நாட்டம் இருக்காது. எந்த விசயமும் இவர்களுக்கு சந்தோசத்தை தராது. முன்பு மகிழ்ச்சியை தந்த காட்சிகள், பொருட்கள், பாடல்கள் எல்லாம் அதன் ஜீவனை இழந்து விட்டதாகத் தோன்றும். எதற்கும் பிரயோசனம் இல்லாத ஆள் தான் என்ற நினைப்பு அடிக்கடி வரும். தற்கொலை எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். பின்னர் எப்படி தான் தற்கொலை செய்து கொள்வது என்று கற்பனை செய்ய தொடங்குவார்கள்.

மனசிதைவு ( Schizophrenia ) என்றால் என்ன?

தாழ்வு மனப்பான்மை அளவுக்கும் அதிகமாக இருக்கும். ஒருவரின் சிந்தனை, பேச்சு, உணர்ச்சி, நடத்தை யில் எல்லாம் குழப்பம் இருக்கும். உலகம் இவருக்கு ஒரு பயமுறுத்துகின்ற இடமாகவும், குழப்பமான இடமாகவும் தோன்றும்.

உண்மைக்குப் புறம்பான எண்ணங்கள் இவர்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும். மேல் வீட்டில் இருக்கின்றவர் தன்னைக் கொல்ல சதி செய்கின்றார்’ என்று திடீரெனக் கூறுவார்கள். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவர் சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்? மேல் வீட்டில் இருப்பவர் தன்னைக் கொல்ல ஒரு அணுகுண்டு தயாரித்துக் கொண்டு இருப்பதாக இன்னொரு கதை சொல்வார்கள். இதையும் நீங்கள் நம்பாவிட்டால், ‘அப்துல் கலாம் கூட நேற்று அந்த வீட்டுக்கு வந்து போனார்’ என்று அடித்துக் கூறுவார்கள். அல்லது ‘இந்த தபால்காரர் என்னுடைய குழந்தை கடத்துவதற்குத் தான் ஒவ்வொரு நாளும் வந்து நோட்டம் பார்க்கின்றார்” என்று சந்தேகப்படுவார்கள். ஏன் அப்படி சந்தேகிக்கின்றீர்கள்? என்று கேட்டால், ‘அதான் தபால்காரர் தோளில் ஒரு பையோடு திரிகின்றாரே’ என்பார்கள்.

இவர்களுக்கு மட்டும் ஒரு குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். சில சமயம் இவர்களுக்கு மட்டும் உருவங்கள் தெரியும். இந்த உருவங்கள் இவர்களோடு பேசும் இவ்வாறு உருவங்கள் பேசும் பேசும் போது மற்றவர்களுக்கு கேட்காது. தங்களோடு மட்டுமே உருவங்கள் பேசுகின்றன என்று இவர்கள் கூறுவார்கள்.

சிலர் ஏதோ வாசைன வீசுகின்றது என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மட்டும் எப்போதும் ஏதோ வாசைன வீசிக்கொண்டிருக்கும். அந்த வாசைன வேறு எவருக்கும் மணக்காது. தான் உண்மையில் வேறு ஆள் என்று சிலர் நம்பத்தொடங்குவார்கள். நம்புவது மட்டுமல்ல செயல்படவும் தொடங்கி விடுவார்கள். “ நான் தான் ஜன்ஸ்டின்” என்று கோப்பை. கொப்பரைகளுடன் ஒருவர் புறப்பட்டு விடுவார்.

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாராவது மனநோயாளராக இருந்தால் அவருக்கு உதவ முற்படுங்கள். கண்டிப்பாக அவருக்கு மருத்துவ உதவி தேவை. ஆரம்பத்திலேயே இதை குணப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் அதிகம். முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நவின மருத்துவமுறைகள் வந்துள்ளன அதன்மூலம் எளிதாக குணப்படுத்த முடியயும் மனநோயின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் மேற்கண்ட மனநோய் ஏற்பட்டுத்தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் உறுதியாக கூறமுடியாது ஆனால் மனநோய் ஒரு அடிப்படை ஊக்கியாக இருக்கும் என்பதையும் மறக்க கூடாது