திங்கள், 14 ஜூலை, 2008

இந்தியப் பிரதமருக்கு ஒரு சாமானியனின் கடிதம்

மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு, இந்தியா எனும் மகத்தான தேசத்தின் பிரதமாரான உங்களுக்கு ஒரு சாமானிய இந்தியப் பிரஜையின் வணக்கங்கள். பல மதங்கள், பல இனங்கள் சேர்ந்து கட்டிய பூமாலையான நமது இந்தியாவில் வாழும் தேச பக்தன் என்பதே எனக்கு பெருமைதான். ஆனாலும் சமீப காலமாக நீங்கள் நடந்து கொள்ளும் விதம் என்னை சங்கடப் படுத்துகிறது. மகாத்மா காந்தி படுகொலையில் ஆரம்பித்து இந்திய தேசத்தின் அமைதியை, அதன் ஒற்றுமையை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று குவித்து, பிணங்களின் மீது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பா.ஜா.க வை கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அதன் “இந்தியா ஒளிர்கிறது” என்ற பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து வென்றீர்கள்.

உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் மீதான அதிருப்தியை இருந்தாலும் இந்திய மதச்சார்பின்மை தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்று இடதுசாரிகளும் உங்களுக்கு ஆதரவு தந்தார்கள். அதன் பிறகு உங்கள் தலைமையிலான அரசு இடதுசாரிகளின் ஆலோசனைகளை ஏற்று மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் “உணவுக்கு வேலைத் திட்டம்”, “கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம்”, “தகவல் அறியும் உரிமை” என சரியான பார்வையில் தான் ஒடிக் கொண்டிருந்தது. உங்கள் செயல்பாடுகளுக்கு அவ்வப்போது விமரிசனம் தந்துகொண்டிருந்த இடதுசாரிகளும் மக்கள் சார்பான நிலைப்பாடுகளையே தந்து வந்தார்கள்.

உண்மையை சொல்லவேண்டுமானால் நீங்கள் சரியான பாதையில் செல்வதற்க்கே அவர்களின் எச்சரிக்கைகள்தானே காரணம்? அன்புக்குரிய பிரதமர் அவர்களே நாங்கள் வாங்கிகொண்டிருந்த

1/2 லிட்டர் பாலின் விலை 3.50 ரூபாயிளுருந்து 10.00 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

காய் சேர்ப்பது உடலுக்கு நல்லது என்று எனக்கு மருத்துவர் தினமும் அறிவுறுத்துகிறார். காய்-கரிகளோ பனை மரத்தில் காய்க்க ஆரம்பித்தது போல கைக்கு எட்டாமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றிர்க்கும் பணவீக்கம்தான் காரணம் என்று சொல்லுகிறார்கள். உங்களுக்கு தெரியாததில்லை. இந்தியாவில் புதிதாக 23,000 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள். (அமெரிக்க அளவுகோள்படி ரூ. நான்கு கோடி வைத்திருப்பவர்கள் ,இதில் அவர்களது வீட்டு மதிப்பு சேராது) ஏற்கனவே இந்தியாவில் ஒரு லட்சம் கோட்டீஸ்வரர்கள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. மறுபுறத்தில் ஒரு

நாளைக்கு ரூ. 40க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 35 கோடி பேரும்,

ரூ. 20 குறைவான ஊதியம் பெறுபர்கள் 70 கோடி பேரும் உள்ளனர். ஒரு நாளைக்கு ரூ 100 வருமானமுள்ள குடும்பமே இப்படி தள்ளாடும் என்றால் ஒரு நாளைக்கு வெறும் இருபது ரூபாயில் குடும்பம் தள்ளும் மக்களின் நிலை?இப்போது நீங்கள் அணுசக்தி உடன்பாட்டுக்கு காட்டும் இந்த உறுதிப் பாட்டை "பெட்ரோல் விலை உயர்வின் மீதோ" அல்லது "விலைவாசி உயர்வின் மீதோ" காட்டியிருந்தால் நாங்கள் சந்தோசப் பட்டிருப்போம்.இத்தனைக்கு

பிறக்கும் "நான் எங்கள் மீது கரிசனம் காட்டுங்கள்" என்று கெஞ்சுவதர்க்காக இந்தக் கடிதத்தை எழுதவில்லை.டாக்டர்.ஏ.கோபால கிருஷ்ணன் - இந்திய அணுசக்தி விஞ்ஞானி கூறுகிறார். நாட்டின் எரிசக்தியை நமது நாட்டில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு அமைத்துக்க் கொள்ளுவது முக்கியமானது என்று கூறுகிறார், நமது நாட்டுக்கு தெரிந்த தொழில் நுட்பத்தில் அதனை அமைத்துக் கொள்ளுவதே சிறந்தது என்றும் கூறுகிறார்.

அவர் சொல்லுவது போலவே 2006இல் 33 ஜிகாவாட்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு அமைக்கப் பட்ட நீர் மின் உற்பத்தி நிலையாங்களை போல கூடுதலாக, மேலும் 55 ஆயிரம் மெகா வாட் நேபாளம் மற்றும் பூடானி லிருந்து நாம் இறக்குமதி செய்து நீர் மின் உற்பத்தியை அதிகப் படுத்துவதன் மூலமாக நம் தேவையை பூர்த்தி செய்யலாமே?

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால், அணு ஈனுலை களை வாங்குவதற்காக, அமெரிக்க நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா அளித்திட வேண்டும். அதில் பாதியளவு மட்டும் செலவு செய்து, நம்முடைய எரிசக்திக் கொள்ளளவை அதிகரிக்க முடியுமில்லையா? அதோடு சேர்த்து ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கும் ஆறுகளையும் கட்டுப்படுத்தலாமே ?இந்தியாவில் நிலக்கரி இருப்பு அபரிமிதமான அளவில் இருப்பதைக் திட்ட கமிசன் கண்டறிந்திருக்கிறது. இத்தனை கணக்கில் எடுத்துக்கொண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கலாமே ?

நம்மிடம் இந்த ஒப்பந்தம் போட துடிக்கும் அமெரிக்கா, தன்னுடைய சொந்த நாட்டில், கடந்த முப்பதாண்டுகளில் ஓர் அணு ஈனுலையைக் கூட நிறுவிடவில்லை என்பது உங்களுக்கு தெரியாததில்லை? .

பின் ஏன் நாம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக இந்த ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?இன்றைய சூழலில், பல்துருவ உலகக் கோட்பாட்டை நோக்கிய சர்வதேச உறவுகள் அமைவதுதான் நமக்கு சாதகமாக அமையும். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் விரும்பும் படி அதனை ஓர் ‘ஒருதுருவ உலகக் கோட்பாடாக’ மாற்றி அமைக்க முயற்சிக்கிறது,

உலக நாடுகளை தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர காய் நகர்த்துகிறது. நீங்கள் நமது தேசத்தை அதற்க்கு பலியிடுகிறீர்கள். வளரும் நாடுகளின் தலைவனாக கடந்த காலங்களில் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து செயல்பட்டு வந்த இந்தியா, உங்கள் தலைமையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்துகொண்டு, ‘ஒருதுருவ உலகக் கோட்பாட்டைத் திணித்தால், உலக அரசியலில் நமக்கு இருக்கும் தனித்தன்மை கரைந்து காணாமல் போய்விடும். இது இடதுசாரிகளின் நியாமான கோரிக்கை.இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவிற்கு, இராணுவம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையிலும் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கும் ,

நம்முடைய அற்ப அளவிலான வள ஆதாரங்களையும் பெருமளவிற்கு வற்ற வைத்துவிடும் உண்மைதானே? இந்தியா என்ற வளம் மிகுந்த தேசத்தில் வாழ்வில் பசையற்றுப் போய் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும். நாட்டின் வீதிகளில் கண்ணீர் துளிகளோடு பசியால் குழந்தைகள் பலர் மாண்டு விழுந்த போதும். வேலையின்மை, அறியாமை, வறுமை போன்ற கொடுமையான வியாதிகளால் இந்திய தேசம் பீடிக்கப் பட்டிருந்த போதும், கசியாத உங்கள் கண்கள், சிந்திக்காத உங்கள் இதயம் விலை வாசி பணவீக்கம் பற்றி இப்போது மட்டும் என்ன செய்யப்போகிறது.மாண்பு மிகுந்த பிரதமர் அவர்களே, குறைந்த பட்சம் உயர்ந்த பதவிக்கான அந்த மான்பினையாவது காப்பாற்றுங்கள்,மதர்ச்சார்பின்மை வேண்டும், சகோதரத்துவம் வேண்டும் என்றுதான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள், இடதுசாரிகளும் அதற்காகத்தான் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் இன்று ஏகாதிபத்தியத்தின் கால்களில் நமது சுதந்திர செயல்பாடுகளை காவு கொடுக்கிறீர்கள். அதோடு சகோதரத்துவத்தையும் குழிதோண்டி புதைத்து மீண்டும் மதவெறியர்களை அரியணை அமர்த்தும் விதமாக நடந்துகொள்ளுகிறீர்கள்.மீண்டும் சொல்லுகிறேன் இந்தக் கடிதம் கருணை வேண்டிப் போடப்பட்ட மனுவல்ல, "நாளைய இந்தியா உங்களை 'துரோகி' என்று தூற்றும்" அதிலிருந்து பிழைக்க முயலுங்கள் என எச்சரிக்கத்தான் எழுதுகிறேன். குதிரை பேரங்களும், கத்தை நோட்டுகளும் இன்று சில அரசியல் ஆதாயங்களை தந்து, எம்.பி எண்ணிக்கையை உயர்த்தி உங்கள் அரசை நிலைக்க செய்யலாம், ஆனால் நாளைய வரலாறில் உங்கள் மீதான பழி என்றைக்கும் .அகலாது

-சிந்தன்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

yes... funny thoughts :)