சனி, 10 ஜனவரி, 2009

உலகில் பாதிப்பேரை பட்டினி போடும் அபாயம்!

தற்போது ஏற்பட்டுள்ள முதலாளித்துவ சுனாமியால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வரும்வேளையில், வருங்காலம் குறித்த ஆய்வறிக்கைகள் இருக்கும் கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையையும் பறித்துவிடும் வகையில் அமைந்துள்ளன. இனிதான் இந்தியா எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரியும். ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ள ஊக்கத்திட்டம் பலன் தருமா, இல்லையா என்பதெல்லாம் இன்னும் கேள்விக்குறிகளாகவே உள்ளன. ஏற்றுமதித்துறையில் மட்டும் ஒருகோடிப் பேர் வேலையிழப்பார்கள் என்ற அறிவிப்புகள் அபாயச்சங்கிலியைப் பிடித்து இழுக்க முயற்சிக்கின்றன.

அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியானது உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த நெருக்கடி இந்தியாவைத் தாக்காமல் தடுக்க, வரும் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கப் போவதாக பிரதமர் மன்மோகன்சிங் சென்னையில் நடந்த கூட்டத்தில் அறிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மற்றும் ஸ்டான்போர்டு ஆகிய பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தருகின்றன. ‘சயின்ஸ்’ என்ற பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வளரும் நாடுகளில் உள்ள வெப்பநிலை இந்த நூற்றாண்டின் இறுதியில் 90 மடங்கு அளவுக்கு அதிகரிக்கப் போகிறது. இதில் இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே இருக்கும் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் விவசாயத்துறை எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றோடு புதிய சிக்கல்களும் முன்னுக்கு வருகின்றன என்று ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பெரும் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளில் விளைச்சலும் குறைவதால் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டை அந்நாடுகள் சந்திக்கவுள்ளன.

வெப்பநிலை அதிகமாகக் காணப்படும் நாடுகளில் மட்டுமே தற்போது 300 கோடி மக்கள் உள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்த மக்கள் தொகை இரண்டு மடங்காகிவிடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அதிகரிக்கும்வேளையில், விவசாய விளைச்சல் குறைவதால் 600 கோடி மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். நீர் ஆதாரங்கள் சுருங்குவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பிரச்சனை பூதாகரமானதாகவே இருக்கும். உணவுத்தட்டுப்பாடு இந்த நாட்டு மக்களின் பிரதான பிரச்சனையாக மாறப்போகிறது.

வெப்பநிலை அதிகமாகக் காணப்படும் நாடுகளில் அரிசி மற்றும் மக்காச்சோளத்தை அதிகமாக உட்கொள்கிறார்கள். வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க இவற்றின் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்படும். 20 முதல் 40 சதவீதம் வரை விளைச்சலில் வீழ்ச்சி ஏற்படும் என்று ஆய்வுக்குழுவின் தலைவரும், வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசியருமான டேவிட் பாடிஸ்டி தெரிவித்துள்ளார். மண்ணிலுள்ள ஈரப்பதத்தை விரைவிலேயே வெப்பம் உறிஞ்சி விடுவதால் பயிர்களின் வளர்ச்சியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வடக்குப்பகுதிவரை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பூமியில் வாழ்பவர்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள் உணவுத்தட்டுப்பாட்டால் அவதிப்படப் போகிறார்கள்.

இதற்கு பிரதான காரணமாகக் கூறப்படும் வெப்பமயமாதல் பிரச்சனையில் மற்ற நாடுகளோடு ஒத்துழைக்க அமெரிக்கா தொடர்ந்து மறுத்து

வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிடிவாதம் மனித குலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகி வருகிறது.

கருத்துகள் இல்லை: