ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

தென்னிந்தியாவை குலுக்கிய பத்து நாட்கள்

19- 7- 1928ல் தொடங்கி பத்து நாட் கள் நடைபெற்ற தென்னிந்திய ரயில்வேத் தொழிலாளர்கள் போராட்டத்தை “அந்த ஆண்டின் மிக முக்கிய நிகழ்ச்சி” என பிரிட்டிஷ் அரசு தன் அறிக்கையில் பதிவு செய்தது. “தென்னிந்தி யாவை குலுக்கிய பத்து நாட்கள்” என வரலாற்று ஏடுகள் பொறித்துக் கொண்டன.

1918 ஆம் ஆண்டில் நாகையில் ரயில்வேத் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் பக்கிரிசாமிப் பிள்ளை, வரத ராஜூலு நாயுடு, திருவிக போன்றோர் ரயில்வேத் தொழிலாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரை யாற்றி உணர்ச்சியை விசிறி விட்டு வந்தனர். 1919ல் மகாத்மா காந்தியும் ரயில்வேத் தொழிலாளர்களிடையே உரையாற்றினார். மதுரை, சேலம், போத்தனூர், திருச்சி என எங்கும் ரயில்வே தொழிலாளர் விழிப்புற்று வந்தனர்.

1927 பிப்ரவரி 12 ஆம் நாள் கரக்பூர் பிராந்தியத்தில் ரயில்வேத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். ரயில்வே நிர்வாகம் சில வாக்குறுதிகளை வீசி தற்காலிகமாக போராட்ட நெருப்பை ஊதி அணைத்தது. ஆயினும் நீறு பூத்த நெருப்பாக போராட்டம் கனன்று கொண்டே இருந்தது. நிர்வாகம் வஞ்சகமாக தன் வாக்குறு தியை மீறி 1700 தொழிலாளர்களின் வேலை யைப் பறித்து வீட்டுக்கு அனுப்பியது.

ஜடதாரி பாபா என்றழைக்கப்பட்ட கிரேன் மித்ரா, சிபநாத் பானர்ஜி மற்றும் கம்யூனிஸ்ட் தலை வர்கள் கோபன் சக்ரவர்த்தி, தாரணி கோஸ்வாமி ஆகியோர் இப் போராட்டத்துக்கு தலைமை யேற்றனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிர் இழந்தனர். பலர் காயமுற்றனர். ஆறு மாதம் நீடித்த இப்போராட்டம் கடும் அடக்கு முறையை சந்தித்தது. எனினும் அடக்கு முறை தொடர்ந்ததும் இழப்புகள் பெருகியதும் மக்கள் ஆதரவு கிடைக்காததும் ஆகிய காரணங்களால் 1928 பிப்ரவரி 10 ஆம் நாள் போராட்டம் விலக் கிக் கொள்ளப்பட்டது.

இந்தப் போராட்டத்தையொட்டி 1927 செப்டம்பர் 13 ஆம் நாள் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் எரிச்சலை, கோபத்தைக் கிளறியது. குறிப்பாக நாகையிலும், தென்னிந்தியாவிலும் நடைபெற்ற சகோதர ஆதரவு வேலை நிறுத்தங்கள் அவர் கள் கண்களை உறுத்தியது. எனவே தனது கழு குப் பார்வையை அங்கு கூர்மையாக பதிக்கத் துவங் கியது.

இது குறித்து அரசின் நிர்வாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளவைகள் முக்கியமானவை;

“தென்னிந்திய ரயில்வேயில் ஏற்பட்ட கொந்தளிப்பு 1927 இறுதியில் வேலை நிறுத்தம் வரு மென அச்சுறுத்தியது. விமர்சிக்கப்படும் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இது தெளிவாகி யது. சென்னை, கல்கத்தா நகரங்களிலிருந்து இரண்டு கம்யூனிஸ்டுகள் ஜனவரி 1928ல் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ரயில்வே சங்க மாநாட்டில் கலந்து கொண்டனர். மிதவாதிகளுடைய அறி வுரையைக் கேட்டு நடப்பதைவிட நேரடி நடவடிக்கையை ஆதரிப்பவரின் தலைமையைப் பின்பற்றவே டெலிகேட்டுகள் விழைந்தனர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது”

“ஜூன் மாதத்தில் நடந்த தொழிலாளர் சத்தி யாகிரகத்தைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத கதவடைப்பும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எண்ணற்ற தொழிலாளர் குழுக்கள் பொதுமக்க ளின் பரிவுணர்வை பெறவும், ரயில்வே ஊழியர் களின் மற்ற பிரிவிலுள்ள தீவிரவாதிகளின் ஆதரவைப் பெறவும் ரயில்வேயின் நாலா பக்கங்களிலும் அனுப்பப்பட்டனர். கலவரப் பகுதிகளில் சொற்பொழிவாற்றி ரயில்வே தொழிலாளர்களை ஊக்குவித்தவர்களில் இவ்விரண்டு கம்யூனிஸ்டுகளும் இருந்தனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. முகுந்த லால் சர்க்காரும், சிங்கார வேலருமே அவ்விரு வர் ஆவர்.

இந்த ரயில்வே போராட்டம் குறித்து தனது புகழ்பெற்ற “வங்கமும் விடுதலைப் போரும்” என்ற நூலில் கோபன் சக்ரவர்த்தி குறிப்பிடும்போது; மக்களிடம் போராட்டச் செய்தியை கொண்டு செல்வதில் சிங்காரவேலர் காட்டிய வழியே பிரதானமாக இருந்தது என்றும் அவரே உண் மையான தொழிலாளி வர்க்கத் தலைவராக இருந்தாரென்றும் பாராட்டுகிறார்.

3700 பேரை வேலை நீக்கம் செய்ய நாகை ரயில்வேயில் எடுக்கப்பட்ட முடிவு உடனடி யாக போராட்ட தீயை பற்றவைத்தது.

19-7- 1928 ல் போராட்டம் துவங்கியது. திருச்சி, சென்னை என தென்னிந்தியா முழுவதும் போராட்டம் பரவியது. பிரிட்டிஷ் அரசு அடக்கு முறையை ஏவிவிட்டது. 23.7.1928 அன்று முகுந்தலால் சர்க்காரும் , சிங்கார வேலரும் கைது செய்யப்பட்டனர். அவரது தொழிலாளர் பத்திரிகை அலுவலகம் சூறையாடப்பட்டது பெருமாள் என்ற தாழ்த்தப்பட்ட தொழிலாளி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

பெரியார் ரயில்வே போராட்டத்தை ஆத ரித்து பொதுக் கூட்டங்களில் பேசினார். 29 ஆம் தேதி அன்று தென்னிந்திய ரயில்வேத் தொழி லாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய ரயில்வேத் தொழிலாளர் வேலை நிறுத்தமும் நடைபெற்றது.

“ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் சதி” என வெள்ளைக்கார அரசு கூச்சலிட்டது; சதிவழக்கு புனைந்தது. அடக்குமுறை கோரத் தாண்டவம் ஆடி யது. அந்த காலகட்டத்தை பற்றி அரசாங்கத்தின் மாத மிருமுறை அறிக்கை கூறுகிற விவரம் வருமாறு;

“சிங்காரவேலுச் செட்டியாரையும், முகுந்தலால் சர்க்காரையும் கைது செய்து வழக்கு நடத்தியது, ஒரு அடக்கு முறை காலகட்டம் துவக்கப்பட் டிருப்பதற்கான அறிகுறி என சில பத்திரிகைகள் கருதுகின்றனர்.

அடக்கு முறை காரணமாக 10 நாட்களில் இப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. நீதிபதி லட்சுமணராவ் வழக்கை விசாரித்தார். மதுரை ஜார்ஜ் ஜோசப் (இவரைப் பற்றி வரலாற்று சுவடுகளில் ஏற்கெனவே பதிவு செய்துள் ளோம்) எஸ்.சத்திய மூர்த்தி, பிரிட்டிஷ் வழக்கறி ஞர் நியூ ஜண்ட் கிராண்ட், கே. எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், கோவை என். எஸ். ராமசாமி ஆகி யோர் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடி னார்கள். ஆயினும் சிங்கார வேலர், முகுந்தலால் சர்க்கார், டி. கிருஷ்ணசாமி உட்பட பலருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பெருமாள் என்ற தாழ்த்தப்பட்ட தொழிலாளி ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு கடத்தப் பட்டார். அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழர் ரயில்வேத் தொழிலாளி பெருமாள்தான். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோருக்கு பிறகு பெரும் தண்டனை பெற்றவர் இவரே.

மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக சிங்காரவேலர் தண்டனை குறைக்கப்பட்டு 1930ல் விடுதலை செய்யப்பட்டார். எனினும் பெருமாள் 1937 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ராஜாஜி தலையிடுகிற வரை அந்தமானிலேயே சிறைப் பட்டுக் கிடந்தார்.

இந்த ரயில்வே போராட்டம் மேலும் பல போராட்டங்கள் எழவும்; தொழிற்சங்கங்கள் உரு வாகவும் காரணமானது. சிங்காரவேலர் ஊக்க முடன் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக பேசியும்- எழுதியும் வரலானார்.

இந்த கொடுமையான தண்டனை வழங்கிய லட்சுமணராவின் பிரிட்டிஷ் விசுவாசத்தை கண்டு வெள்ளைக்கார அரசு அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி அளித்தது. பி அன்ட்சி ஆலை தொழிலாளர் பிரச்சனையின் நடுவராக நியமிக்கப்பட்டார். 1950 ல் சேலத்தில் கம்யூனிஸ்டுகள் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்ததும் இவரே. பிரிட்டிஷ் அரசோ, காங்கிரஸ் அரசோ எது வாயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகம் செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்கும் லட்சுமணராவ் பயன்பட்டார். ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர். நீதிமன்றத்தின் வர்க்கக் குணம் அது தானே !

தென்னிந்தியாவை குலுக்கிய அந்த பத்து நாட்களை பள்ளிக் கூட வரலாற்றில் சொல்லித் தர மாட்டார்கள். பாட்டாளி வர்க்க வரலாற்றை நாம்தான் தேடித்தேடி படிக்க வேண்டும். படிப்பினை பெற வேண்டும்.

1 கருத்து:

Sindhan R சொன்னது…

Follower வாய்ப்பு கொடுத்தால் இன்னும் வசதியாக இருக்கும்.