திங்கள், 5 செப்டம்பர், 2011

புரட்சியாளர்களை அவர் வெறுத்த போதும்...


லால் - பால் - லால் இப்படி விடுதலை போரில் மூன்று தலைவர்களை இணைத்தே குறிப்பிடுவது வழக்கம். லாலா லஜபதிராய் - பாலகங்காதர திலகர் - பிபின் சந்திரபால் ஆகிய மூவ ரும்தான் அவர்கள்.

பகத்சிங் வாழ்க்கை வரலாற்றை பேசுகின்ற யாரும் லாலா லஜபதி ராயை குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஏனெனில் லஜபதிராய் தாக்கப் பட்டதற்கு பழிவாங்கும் வகையில் தான் போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை பகத்சிங்கும் அவரது தோழர்களும் சுட்டுக் கொன்ற சம்பவம் நிகழ்ந்தது. ஆயினும், லஜபதிராய் குறித்து வரலாற்றில் அதிகம் அறியாதவராகவே நாம் உள்ளோம்.

1865ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பெரோஜ்பூர் மாவட்டத்தில் டோடி என்ற கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும், குலாம் தேவி என்பவ ருக்கும் மகனாக பிறந்தார். தந்தை வழி பாட்டனார் ஜைனமதத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். ஆனால், தந்தையோ உருது மொழி ஆசிரியர். இஸ்லாம் மீது மிகுந்த பற் றுக் கொண்டவர். தினசரி ஐந்து வேளை தொழுகை நடத்துபவர். இஸ்லாமுக்கு மதம் மாறவும் விரும்பியவர். ஆயினும், குடும்பச் சூழல் காரணமாக இந்துமதத் தைவிட்டு வெளியேறவில்லை. அதே சமயம் இஸ்லாமை பற்றி எப்போதும் பெருமையாய் பேசுவார். இப்படி ஒரு சமூக நல்லிணக்க சூழலில் வளர்ந்தவர் லாலா லஜபதி.

இவர் 6ம் வகுப்பு படிக்கும் போதே பணக்காரக் குடும்பத்தை சேர்ந்த ராதா தேவிக்கு கட்டாய மணமுடிக்கப்பட்டார். குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்புக்கு செல்ல தந்தை அனு மதிக்கவில்லை. ஆயினும், விடாமல் போராடி மேற்படிப்புக்குச் சென்றார். அதற்காக தன் மனைவியை அவர் பெற்றோர் இல்லத்திலேயே விட்டு விட்டார். சட்டப் படிப்பு படிக்கும் காலத்தில் அரசியல் ஈடுபாடு அவருக்கு அதிகரித்தது. தயானந்த சரஸ் வதி மூலம் ஆரியசமாஜத்தோடு இவருக்கு உறவு ஏற்பட்டது.

“எனது வாழ்க்கையை சமூக சீர்திருத்தத்திற்கும், கல்வியை பரப்பு வதற்கும், தேச விடுதலைக்கும் அர்ப்பணிப்பேன்” என ஆரியசமாஜக் கூட்டத்தில் பிரகடனம் செய்தார்.

ஹிசார் நகராட்சியில் வார்டு உறுப்பினராக லஜபதிராய் சிறிது காலம் செயல்பட்டார். முஸ்லிம்கள் அதிகம் உள்ள இந்த வார்டில் ஆரியச மாஜத்தை சார்ந்த லஜபதிராய் போட்டியின்றி மக்கள் ஆதரவோடு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உரைகள் அனல் கக்கும். மக்களை நெருப்பு பிழம் பாய் மாற்றும். அதைக்கண்டு பிரிட்டி ஷார் அஞ்சினர்.

இவர் சுதந்திரப் போருக்கு மக்களை திரட்ட இந்து நம்பிக்கையை பயன் படுத்தினார். அதே நேரத்தில் இந்து மதத்தை சீர்திருத்த வேண்டும், சாதி மற்றும் மூடத்தனங்களை வேரறுக்க வேண்டும், விதவை மறுமணம் வேண் டும், எல்லோரும் கல்வி பெற வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார். இவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மதன்மோகன் மாளவியா விடுத்த அழைப்பை ஏற்று போராட்டம் நடத் தியதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதுவும், நாடுகடத்தப்பட்டு மண் டேலா சிறையில் அடைக்கப்பட்டார். பஞ்சாப் சிங்கம் என இவரை மக்கள் அன்போடு அழைத்தனர். சுதந்திரத்தை யாசித்து பெற முடியாது. போராடித் தான் பெற வேண்டும். அதற்காக உயிர்த்தியாகத்திற்கும் தயங்கக்கூடாது என அவர் எப் போதும் கர்ஜனை செய்வார்.

பகத்சிங் தன்னை, விடுதலைப் போரில் வெகுவாக ஈர்த்த தலைவர் களில் லஜபதிராயை உயர்வாகக் குறிப்பிடுவார்.

இவர் பல நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக அமெரிக்க வரலாறு, உலக தலைவர்களின் வரலாறு ஆகியன அடங்கும். சிறையில் இருந்து விடு தலையடைந்ததும் மீண்டும் போர்க்களம் சென்றார். இவருடைய கட்டு ரைகள் மராத்தி மற்றும் உருது ஏடுக ளில் வெளியாகின. அவையும் மக்களை விடுதலை போருக்கு உசுப்பிவிட்டன.

1928ம் ஆண்டு அக்டோபர் 30ம் நாள் சைமன் கமிஷன் வருகையை எதிர்த்து வீதியில் இறங்கினார். லாகூ ரில் இவர் தலைமையில் ஊர்வலம் நடந்த போது பிரிட்டிஷார் போலீசை ஏவி கடுமையாக தாக்கினர். தடியடி யில் பெரும் காயமுற்றார். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு நவம்பர் 17ம் நாள் உயிர்நீத்தார்.

அவரை தடியால் தாக்கியபோதும் கொடி தாழ்த்தாமல், குரல் நடுங்காமல் முழக்கமிட்டார். “என்மீது விழுகின்ற ஒவ்வொரு லத்தி அடியும் பிரிட்டி ஷாரின் சவப்பெட்டியில் அறையப்படு கிற ஆணியாக இறங்கும்” என நெஞ்சை நிமிர்த்தி உரைத்தார். அச்சம் எப்போதும் அவரை ஆட் கொண்டதே இல்லை.

இவர் தடியடியில் இறந்ததாக பல வரலாற்று பதிவுகளில் தவறாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், தடிய டிக்கு பின் உடல் நலிவுற்று மருத்து வமனையில் சேர்க்கப்பட்ட போது மாரடைப்பு காரணமாகவே உயிர் பிரிந்தது.

“நாமெல்லாம் மதிக்கும் லாலாஜியை பிரிட்டிஷ் போலீஸ்கள் நடுத்தெருவில் கடுமையாக தாக்குகிறார்கள் என்றால் அதை எப்படி சகித்துக் கொள்ள முடியும். இது நமது சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள சவால். நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள இயலாதவர்களாகி விட் டோமா? லஜபதிராய் தாக்கப்பட் டதற்கு நாங்கள் பழிதீர்ப்போம்” இப்படித்தான் பகத்சிங்கும் அவரது சகாக்களும் வெடித்துக் கிளம்பினர்.

1928 டிசம்பர் 17 அன்று போலீஸ் அதிகாரி ஸ்காட்டை குறிவைத்து தமது புரட்சிவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், அந்த நேரத்தில் காவல்நிலையத்தில் இருந்து வெளிவந்தது ஸ்காட் அல்ல சாண்டர்ஸ். எனவே அவரை தவறு தலாகக் கொன்றுவிட்டனர். சாண்டர் ஸூக்கும் அந்த தாக்குதலில் பங்குண்டு. ஆனால், முதன்மை பங்கு ஸ்காட்டுகே.

லாலா லஜபதிராய் குறித்து சிவ வர்மா எழுதிய வரிகள் மிக முக்கியமானவை.

“லாலா லஜபதிராய் தனது கடைசிகாலத்தில் புரட்சியாளர் களை வெறுக்க ஆரம்பித்தார். பகத் சிங், சுகதேவ் ஆகியவர்களை தம்முடைய பங்களாவிற்குள்ளும் நுழைய விடவில்லை. காங்கிரசிலும் மோதிலால் நேருவுடன் கருத்து வேற்றுமை கொண்டிருந்தார். அவர் அன்றைக்கு காங்கிரசின் மதச்சார் பற்ற கொள்கைக்கு மாறாக மதவெ றிக்கு ஊக்கம் தர தொடங்கியிருந்தார். ஆனால், இவையெல்லாம் உள்நாட்டு பிரச்சனைகள். வெளி நாடுகளில் லாலா லஜபதிராயை நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவே மதித்தனர். ஆகவே, அவர் மீதான தடியடிப்பிரயோகம் நம்நாட்டின் மீதான தடியடிப்பிர யோகமே என்று பகத்சிங்கும் அவ ரது சகாக்களும் உறுதியாகக் கூறினர். எனவே தான் “அது (அந்த தடியடி) நம் வீரத்திற்கு விடப்பட்ட சவாலாகும். அந்த சவாலை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்” என்றனர். அவ்வாறே செய்து முடித்தனர்.”


தேச விடுதலை போரில் கருத்து வேறுபாடால் தங்களை ஏற்க மறுத்த வர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும், அதை ஏற்க இயலாது என வெகுண்டெழுந்த புரட்சியாளர்களின் பாரம்பரியம் இப்போது நினைத் தாலும் நமக்கு உணர்ச்சியூட்டுகிறது. அடக்குமுறையை எதிர்க்க எப்போதும், எங்கும் தயங்கக்கூடாது என்பதே வரலாறு நமக்கு சொல்லும் பாடம்.

கருத்துகள் இல்லை: