ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

அழுவதற்கான பாடல் அல்ல...


ஜீவானந்தம் பேசினால் மேடை அதிரும். இரத்தம் சூடேறும். குழப்பத்தோடும் அதிருப்தியோடும் வந்தவர்கள் சிந்தனைத் தெளிவோடும் முறுக்கேறிய நரம்போடும் வெளி யேறுவார்கள். இப்படி மூத்த தோழர்கள் சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார்கள்.

நான் பிறந்த ஊரான சுசீந்திரத்தில் அவர் பேசியதை சிறுவனாக இருந்த போது கேட்ட ஞாபகம் மிகமிக மங்கலாக நெஞ்சில் நிழலாடுகிறது. அது வும் ஒரே ஒரு முறை. இப்போது அவ ரது பாடல்களை மறுவாசிப்பு செய் கிறபோது கம்பீரமான குரலில் அவர் என்முன் பாடுவது போன்ற உணர்ச்சி மேலிடுகிறது. உள்ளத்தில் ஒளி உண்டாயின் வார்த்தையில் ஒளி உண்டாகும் என்பது எவ்வளவு மெய்! உழைக்கும் வர்க்கத்தின் மீது இவர் கொண்ட பற்றுக்கும் பாசத்துக்கும் அளவே இல்லை.

உழைக்கும் மக்கள் வேதனை களை ஜீவா அடுக்கும்போது அட டாவோ... அடடா!

“காலுக்குச் செருப்புமில்லை

கால்வயிற்றுக் கூழுமில்லை

பாழுக் குழைத்தோ மடா - என் தோழனே

பசையற்றுப் போனோ மடா...”

எனத் தொடங்கும் 40 வரிப்பாடல் 1935 கோவை ஸ்டேன்ஸ் மில் போராட்ட களத்தில் பிறந்தது. காலை 5 மணிக்கு பாடலை எழுதி ஆறு மணிக்கு ஆலை வாயிலில் கம்பீர மான குரலில் பாடினார் ஜீவா. அப் பாடல் தமிழகம் முழுவதும் உழைப் பாளி மக்களின் உதிரத்தோடு கலந்தது.

அப்பாடலில் ஓரிடத்தில் கூறு வார்;

“கோணல் மாணல் திட்டங்களால்

கோடிக் கோடியாய் குவித்தே

வீணர்சிலர் கொழுக்கக் கண்டால் - என் தோழனே

வெஞ்சினம் பொங்குதடா!”

இப்போதும் இந்த வரிகள் ஜீவத்துடிப்போடு நாட்டு நடப்பை படம் பிடித்துக்காட்டுகின்றதே!

“பாலின்றிப் பிள்ளை அழும்

பட்டினியால் தாய் அழுவாள்

வேலையின்றி நாம் அழுவோம் - என் தோழனே

வீடு முச்சூடும் அழும்”

காட்சிச் சித்தரிப்பு என்பது எல்லாக் கவிஞர்களுக்கும் கைவந்து விடுவதில்லை. ஜீவாவின் இந்தச் சித்தரிப்பு சமூக யதார்த்தம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

அதுமட்டுமல்ல பண்டிதத் தமி ழில் சொல்லி தன் மேதமையை காட் டாமல்; பழகு தமிழில் பாடியதுதான் ஜீவாவின் தனித்துவம். அதனால்தான் “பசையற்றுப் போனோமடா” என மக்கள் மொழியில் அவரால் நெஞ் சைத் தொட முடிந்தது. “வீடு முச் சூடும் அழும்” என நாஞ்சில் நாட்டு சொல் வழக்கை பாடலில் ஏற்றி வீடு முழுக்க அழுவதை காட்சிப்படுத்தி யது மட்டுமல்ல; தன் சொந்த மண் வழக்கிற்கு இலக்கிய மகுடமும் சூட்டிவிட்டார்.

இப்பாடலை அப்போது கோவை இராமதாஸ் இசையமைத்துப்பாட இசைத்தட்டாக வெளிவந்தது என் பது உவப்பான செய்தி. ராஜாஜி கலந்து கொண்ட கூட்டத்தில் கே.பி. சுந்தராம்பாள் இசைமழை பொழிந்து கொண்டிருந்தபோது கூட்டம் மொத்தமாக குரல் கொடுத்து இராம தாசை இப்பாடலைப் பாடச் சொல்லி கேட்டு மகிழ்ந்தது என்றால் பாருங்கள்!

தா. பாண்டியன் இப்பாடல் குறித்து கூறுகிறார்: “அந்தப் பாடலை பலர் பல ராகங்களில் பாடுகிறார்கள். ஆனால் கோவை இராமதாஸ்தான் பாடலின் பொருளோடு கலந்து உணர்ச்சியோடு, அழுகுரலில் ஆனால் கம்பீரமான வெண்கலத் தொனியில் பாடியிருந்தார். எனவே கேட்டோர் கண்களில் நீர் வழிந்ததில் வியப்பே இல்லை. ஏனெனில் அவரது பாட்டில் சோகம், வீரம் கலந்திருந் தது. பல முறை கேட்டு அழுதிருக்கி றேன். ஆனால் அழுவதற்காக எழுதப் பட்ட பாடல் அல்ல அது. இறுதியில் ஒன்றுபட்டுப் போர் புரிந்து உயர்த் திடில் செங்கொடியை இன்றுடன் தீருமடா இம்சை முறைகள் எல்லாம், என முழங்கி எழ வைத்த பாடல் அது.” ஆம். அதுவே உண்மை. இந்தப் பாடலைக் கேட்டுத்தான் வ.ரா.மனம் நெகிழ்ந்து ஜீவா முழுக்க முழுக்க இனி கவிஞராக மாறவேண்டும் எனக் கோரினார்.

சோஷலிசம், தொழிலாளி வர்க்க சிந்தனைகள் ஊறித்ததும்பும் 48 பாடல்களும், கட்சி, புரட்சி என நேரடியாகப் பேசும் 12 பாடல்களும் மீண்டும் மீண்டும் இன்றும் தொழி லாளி வர்க்கம் பாட வேண்டிய பாடல்களே. ஜீவாவின் பாடல்கள் காலாவதியானவை அல்ல. இன்றும் கால ஓட்டத்தின் சுருதியே அவை.

பணத்திமிருக்கு பணியாத நா ஜீவாவின் பேனா. அவர் பணத்திமிர் பற்றி எழுதுகிறார்:

“யானைபோற் கொழுத்தமேனி

இடர் செய்யும் நச்சு நெஞ்சு

பூனை போல் திருட்டு எண்ணம்

பொய்புலை நிறைந்த வாழ்வு

ஏனையோர் குடிகெடுக்கும்

எத்தனம் பொழுதுபோக்கு

பானைபோல் வயிறு கொண்ட

பணத்திமிர் வீழ்க! வீழ்க!

சுரண்டல் மனிதர்களின் குணங் களை எவ்வளவு கூர்மையாக காட்சிப் படுத்தி உருவகப்படுத்தி உணர்ச்சி யூட்டி காறி உமிழ்ந்துள்ளார். அருமை! அருமை!

ஆயினும் அவர் அறிவார்; வெற் றுக் கோஷங்களோ, வறட்டு பேச்சு களோ, முரட்டு செயல்களோ பிரச்ச னைக்குத் தீர்வாகாது. எனவே வெறுமே உணர்ச்சிகளை கொம்பு சீவிவிட்டு அரசியல் பண்ணுவதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. அவர் உண்மையான சமூக அக்கறை யாளர். சமதர்மமே தீர்வு என உறுதி யாக நம்பினார். பாடினார்.

“மக்களில் உழைப்பவர்க்கே யாவையும் என்போம் நாங்கள்

மற்றவரையும் உழைக்கச் செய்குவ மென்போம்

பக்கவாதச் சொத்துரிமை தன்னை ஒழிப்போம் - உலகில்

பாட்டாளி ஆட்சி தன்னைக் கொண்டு செழிப்போம்”

‘பக்கவாத சொத்துரிமை’ என்ற சொல்லில் முதலாளித்துவ சொத் துரிமையின் அங்க லட்ச ணத்தை விவரித்ததுடன் அதை ஒழிப் பதே இறுதித் தீர்வு என்கிறார்.

இந்த தீர்க்கப் பார்வையையே அவர் பிரச்சாரம் செய்தார். ஒவ் வொரு பாடலும் காரணகாரியத்தோடு தான் முகிழ்த்தது. புதுப்புதுச் செய்தி களைக் கூறியது. “கோடிக்கால் பூத மடா” என அவர் எப்படிக் கூறினார்? ஏன் கூறினார்?

ஜீவா

3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தோழர் ஜீவாவின் பே ச்சுக்கள் எழுத்துக்கள் என்றுமே.. ரசிக்ககூடியவை..
///“காலுக்குச் செருப்புமில்லை

கால்வயிற்றுக் கூழுமில்லை

பாழுக் குழைத்தோ மடா - என் தோழனே

பசையற்றுப் போனோ மடா...”///

இந்த பாடலை இப்போதுதான் முதல் முதலாக படிக்கிறேன்.. நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

பகிர்வுக்கு நன்றியுங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

விடுதலை சொன்னது…

நன்பர் சௌந்தர்

நன்பர் ம.தி.சுதா


தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி