செவ்வாய், 7 செப்டம்பர், 2010

பிரதமர் கடைசியில் வாய்திறந்து பேசிவிட்டார்

அணுவிபத்து பொறுப்பு மசோதா- தார்மீகச் சீரழிவு

பிரதமர் கடைசியில் வாய்திறந்து பேசிவிட்டார். விலைவாசி உயர்வுக்கு எதிராக சாமானிய மக்களை அரசு பாது காக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம். இது வழக்கமான நடைமுறைகளை மீறி நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது பிரதமர் தலையிட்டு ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. காஷ்மீரில் நிலவும் பயங் கரமான சூழ்நிலை, போபால் விஷவாயு பிரச்சனை - இப்படி நாட்டின் நலன் சார்ந்த பிரச்சனைகள் பலவும் விவாதிக் கப்பட்டன. இதில் எதிலும் பிரதமர் தலையிட்டுப் பேசவில்லை. இப்படி இத்தனை பிரச்சனைகளிலும் மவுனம் சாதித்த பிரதமர், அணுவிபத்துப் பொறுப்பு மசோதாவில் மட்டும் தலையிட்டுப் பேசி யிருக்கிறார். அரசின் உண்மையான நோக் கங்களும், முன்னுரிமைகளும் எத்தகைய தெனப் புரிந்துகொள்வதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு. அது மட்டுமல்ல, பிற பிரச்சனைகளில் அவரது மவுனத்தின் மகத்துவத்தினைப் புரிந்துகொள்ளவும் இது உதவும்.

அமெரிக்க நலன்களுக்காகப் பேசுகிற வன் என்ற குற்றச்சாட்டு தனக்கு ஒன்றும் புதியதல்ல எனவும், 1992 பட்ஜெட் விவாதத்தின் போதே இத்தகைய குற்றச் சாட்டுக்கள் எழுந்தன எனவும் பிரதமர் கூறினார். ஆனால் அவர் தொடங்கி வைத்த அந்த சீர்திருத்தங்கள் காரண மாக இன்று “புத்துயிர் கொண்ட, வலிமை பொருந்திய இந்தியா” உருவாகியிருக்கி றது எனவும், அதேபோன்று அணுமின் சக்தி விஷயத்திலும் இருபது ஆண்டு கள் கழித்து இந்தியா உயரப்போகிறது எனவும் மார்தட்டிக் கொண்டார்.

புத்துயிரும், வலிமையும் யாருக்கு?

இந்தியாவின் இன்றைய மொத்த உற் பத்தி (ஜி.டி.பி) மதிப்பில், நான்கில் ஒரு பங்கு, டாலர் பில்லியனர்கள் (சுமார் ரூ.4600 கோடி சொத்து மதிப்புள்ளவர்கள்) 52 பேர்கள் கைகளில் இருக்கிறது. மறு புறத்தில், 77 சதவீத இந்திய மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20 கூட செலவழிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூறு கின்றன. இது நாம் அறிந்ததே. ஆனால், இன்று இதே விஷயத்தினை காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க பொதுச் செயலாளர் ஒருவர் அப்பட்டமாகப் பேசி யிருப்பதுதான் சுவையானது.

1992ல் தொடங்கப்பட்ட நவீன - தாராளவாதச் சீர்திருத்தங்கள், ஏழை - பணக்காரர் இடைவெளியினை அதிகரிக் கும் என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான். “நமது நாட்டில் நாம் தொடங்கியிருக்கும் சீர்திருத்தங்கள் காரணமாக” “ஏழை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை” எழுந்துள்ளது என 1995ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் கூறியதும் நமக்கு நினைவிருக்கிறது. அதாவது, சீர்திருத்தங்கள் அமலான 3 வருடங்களிலேயே அதனுடைய முக விலாசம் தெரிந்துவிட்டது என்பதுதானே இதற்கு பொருள்?

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தியப் பொருளாதாரக் கழகத்தின் மாநாட்டில், மன்மோகன் சிங் என்ன கூறினார்? ஒவ்வொரு ஆண்டும் வறு மை குறையும் அளவு, சீர்திருத்தங்களுக்கு முன்பு எந்த அளவில் இருந்ததோ, அதே அளவில்தான் இருக்கிறது என்று கூறி னார். வறுமை குறைப்பிற்கு சீர்திருத்தங் கள் உதவவில்லை என்பதற்கான ஒப்பு தல் வாக்குமூலம்தானே இது? இதுதான் புத்துயிரும் வலிமையும் பொருந்திய பாரதம் உருவாகும் இலட்சணமா?

எடுக்கப்பட்டதும் கொடுக்கப்பட்டதும்!

ஆம் ஆத்மி (சாமானிய மனிதன்) குறித்து வாய் கிழியப் பேசினாலும், ஏழை-பணக்காரர் இடைவெளியினை அதிகரிப்பதுதான் நவீன - தாராளவாதக் கொள்கைகளின் நோக்கமே என்பது மிகவும் தெளிவாகிப் போனதொன்று. ஒளிரும் இந்தியாவிற்கு எவ்வளவு கொடுக்கப்பட்டதோ, அவை அனைத் தும் துயருறும் இந்தியாவிலிருந்து எடுக் கப்பட்டதேயாகும். இன்று அணுவிபத்து மசோதாவிலும், அமெரிக்கக் கம்பெனி களுக்கும் அவர்களது இந்திய இளைய பங்காளிகளுக்கும் அணுவர்த்தகத்தில் உதவும் நிலையினையே அரசு மேற் கொண்டு வருகிறது.

40 ஆயிரம் மெகா வாட் அணுமின் உற் பத்தி செய்யப்படும் என பிரதமர் அறி வித்திருக்கிறார். அனல் மின்சாரம், புனல் மின்சாரம் தவிர வேறு பல வகைகளிலும் மின் உற்பத்தி செய்யலாம். ஆனால், இவ் வளவு மெகாவாட் அணுமின் உற்பத்தி செய்வதற்கு, மற்ற வகை மின்சாரங்களை விட அணுமின்சார உற்பத்திக்கு ரூ.3 லட்சம் கோடி அதிகமாக தேவைப்படும். இது தான் இந்தக் கம்பெனிகளுக்கு இலா பமாக மாறவிருக்கும் தொகை. இந்தத் தொகையினை வைத்து, 100 படுக்கை கள் கொண்ட 20 ஆயிரம் மருத்துவ மனைகள் கட்டமுடியும். 100 மாணவர்கள் கொண்ட 2.5 இலட்சம் நவோதயா பள்ளி களை உருவாக்க முடியும். அப்படி யெனில், அமெரிக்கர்களுக்கு அதிகபட்ச இலாபமா அல்லது சாமானிய இந்தியர் களுக்கு குறைந்தபட்ச நிவாரணமா என் பதுதானே இன்று எழும் கேள்வி? அர சின் பதில் என்னவோ, துரதிருஷ்டவச மாக, அமெரிக்கர்களுக்குச் சாதகமான தாகவே உள்ளது.

ஆளும் வர்க்கங்களே காரணம்!

அணுவிபத்து எதுவும் நடக்கக் கூடாது என்றுதான் எவருமே நினைப் பார்கள். ஆனால் நடந்துவிட்டால் என்ன என்பதுதான் பிரச்சனை. எனவேதான், அணுமின் உலை சப்ளை செய்யும் கம் பெனிகளுக்கும், அணுமின் உற்பத்தி செய் யும் கம்பெனிகளுக்கும் நஷ்ட ஈட்டிற்கான பொறுப்பினை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. போபால் விஷ வாயுப் பிரச்சனையில் பேசிய உள்துறை அமைச்சர், கடந்த 26 ஆண்டு காலமாக இத்தகைய சூழ்நிலையினை எதிர் கொள்ள சரியான கண்காணிப்போ, முன் னெச்சரிக்கையோ இல்லை; நாடாளு மன்றமும், நிர்வாகமும் இதைச் செய்யத் தவறிவிட்டன என்ற குற்ற உணர்வுடன் பேசுவதாகத் தெரிவித்தார். எனவே, இதற்குப் பொருத்தமான பொறுப்புச் சட்டங்கள் இல்லாததற்கு, இந்நாட்டின் அரசியல் வர்க்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று பேசினார். இவ்வாறு அரசியல் வர்க்கம் என்று பொதுவாகப் பேசித் தப்பித்துக் கொள்ள முடியாது. இதற்கு முழுப்பொறுப்பும் ஆட்சியில் இருந்த ஆளும் வர்க்கங்களையே சாரும். காங்கிரசும், பாஜகவும்தான் பொறுப்பேற்க வேண்டும். இப்போது இந்த அணுவிபத்து பொறுப்பு மசோதாவில் கூட இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படு வதைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்தே உண்மையைப் புரிந்து கொள்ள முடி கிறதல்லவா?

இடதுசாரிகளின் தொடர்ந்த எதிர்ப்பு?

இவர்களது குற்றங்களை அம்பலப் படுத்தும் வேலையைத்தான் நான் மாநி லங்களவையில் செய்தேன். 1984ல் இருந்து இடதுசாரிகள் இந்தப் பிரச்ச னையை தொடர்ந்து எழுப்பி வருகிறார் கள். துரதிருஷ்டவசமாக, ஆம் ஆத்மி யின் இப்பிரச்சனையை இந்தக் கனவான் கள் காது கொடுத்துக் கேட்கவில்லை. இன்று யூனியன் கார்பைடு கம்பெனியை வாங்கியிருக்கும் டவ் கெமிக்கல்ஸ் கம் பெனியைப் பொறுப்பாக்க வேண்டும் என்ற இடதுசாரிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இப்போது, சரியான சட்டப் பாதுகாப்பு இல்லை யென்றால், போபால் விஷவாயு விபத்தில் நடந்ததைவிட அணுவிபத்தில் மோச மான நிலைமை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எச்சரித் திருக்கிறது

மாற்று அரசியல் பாதை!

உலகின் பல நாடுகள் அனுபவத்தி லிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கின் றன. எனவே நிவாரணத்திற்கான குறைந் தபட்சத் தொகையைத்தான் அவை நிர் ணயித்திருக்கின்றன. ஆனால், நாம் அதிக பட்சத் தொகையை நிர்ணயம் செய்கி றோம். ஒரு பெரும் அணுவிபத்தில் உச்ச பட்ச பொறுப்பு என்று பேசுவதற்கு ஏதா வது பொருள் உண்டா? இந்தக் கோரிக் கையை ஏற்றுக் கொள்ளாத இந்திய ஆளும் வர்க்கங்கள், அமெரிக்கக் கம் பெனிகளின் இலாபத்திற்காக சாமானிய இந்திய மக்களின் நலன்களைக் காவு கொடுக்கத் தீர்மானித்துவிட்டார்கள் என் பதைத் தவிர இதற்கு வேறு ஏதாவது விளக்கம் உண்டா? காங்கிரசும், பாஜக வும் நவீன-தாராளவாதக் கொள்கைக ளில் இணைந்து நிற்கும்போது, இதற்கு மாற்றான அரசியல் பாதை அவசிய மாகிறது.

எங்களது எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்! துளி அளவிலான “புத் துயிர் பாரதத்தையும்”, கடல் அளவிலான “துயருறும் பாரதத்தையும்” வேறுபடுத்திப் பார்க்கும் சக்தி அணுவிபத்திற்கு கிடை யாது. அதற்காகவாவது எங்களது எச்சரிக் கையினை ஏற்றுக் கொள்ளுங்கள்!

நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ்

31-8-2010)-சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,

கட்டுரை சுருக்கம் - இ.எம்.ஜோசப்

1 கருத்து:

விவாதகளம்... சொன்னது…

http://letsdebate1.blogspot.com/2010/09/blog-post_5890.html

மேற்கண்ட கட்டுரையில் நீங்கள் இன்று பதிந்திருந்த கருத்துக்கு எனது பதில். உங்கள் பார்வைக்காக இங்கும் பதியப்படுகிறது.

தோழமையுடன்,
சுரேஷ்
============================================

விவாதகளம்... said...
தோழர் விடுதலை,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இந்தப் பதிவில் உங்கள் கட்சியின் மீது சுட்டிக்காட்டப் பட்டிருக்கும் மையமான விமர்சனத்தைப் படித்தீர்களா? அது உங்களுக்குப் புரிந்ததா? அவ்விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் இவ்வளவுதானா?

ஆம். என்பது உங்கள் பதில் என்றால் உங்கள் மீது பரிதாபம்தான் வருகிறது. நான் ஒருபோதும் உங்களைத் தவறாக கருதமாட்டேன். ஏனெனில், உங்கள் கட்சியின் போலித்தனமான அரசியல் நிலைப்பாடுகள்தான் உங்களை பதில் சொல்லமுடியாமல் முடக்கியிருக்கிறது என்பதை நான் அறிவேன்.

கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதனால், உங்கள் கட்சி இதுபோன்ற விமர்சனங்களிலிருந்து காப்பாற்றப்படுவதாக நினைத்துக் கொள்கிறீர்களா?

சிந்தியுங்கள். உங்களிடமிருந்து எப்பாடுபட்டாவது ஒரு சரியான பதிலைப் பெறவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அரசியல் ரீதியாக அம்பலப்பட்டுக் கிடக்கும் போது பதில் என்று ஏதாவது சொல்லி மீண்டுவரவேண்டியது உங்களது கடமை. உங்கள் அரசியலின் வண்டவாளங்கள் இப்படி பொதுவெளியில் நாறிக்கொண்டிருக்கும் போது கூட உங்கள் கடமையை நீங்கள் தவறவிடுகிறீர்கள் என்றால் என்ன சொல்ல?

தயவு செய்து பரிசீலியுங்கள். பிறகு பதிலளியுங்கள். நன்றி!


September 8, 2010 9:22 AM