திங்கள், 11 அக்டோபர், 2010

பணம் இல்லாமல் எதுவும் நடக்காது அரசு அலுவலகங்கள் குறித்து உச்சநீதிமன்றம் வேதனை


“பணம் இல்லாமல் எதுவும் நடக்காது” என்ற நிலை அரசு அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் குறிப்பாக வருமான வரித்துறை, விற்பனை வரித்துறை, கலால் வரித்துறை ஆகிய துறைகளில் லஞ்சம் அதிகரித்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை ஆய்வாளர் மோகன்லால் சர்மா ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் இந்த கருத்தை தெரிவித்தனர்.

நாட்டில் லஞ்சத்திற்கு எந்த கட்டுப்பாடும் இல்லாதது மிகவும் துரதிருஷ்டவசமானது. வருமான வரித்துறை, விற்பனை வரித்துறை, கலால் வரித்துறை போன்ற துறைகளில் பணமின்றி எதுவும் நடக்காது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மார்க்கண்டேய கட்சு, வி.எஸ்.தாகூர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் கருத்து தெரிவித்தது. வருமான வரி ஆய்வாளர் மோகன்லால் சர்மா வருமான வரி கணக்கிட்டு முறையீடு செய்ய ரூ.10ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. ஆனால் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது. இதை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள் “ஒவ்வொரு விசயத்திற்கும் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை ஏன் அரசாங்கம் சட்டப்பூர்வமாக அறிவித்துவிடக்கூடாது. இதை செய்ய ரூ.2500 என்று எழுதிப் போட்டுவிட்டால் பொது மக்கள் லஞ்சம் கொடுக்க ஏதுவாக இருக்கும். தேவையற்ற பேரங்கள் குறையும்” என்று வேதனையோடும், கிண்டலாகவும் குறிப்பிட்டனர்.

“அரசு அதிகாரிகள் பாவம் ஏழைகள். பணவீக்கத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. அதனால்தான் லஞ்சம் வாங்குகிறார்கள் போலும்” என்றும் நீதிபதிகள் கிண்டலாகக் கூறினர். இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கல்வி நிலையங்களிலேயே ஒழுக்க நெறிகளை போதிக்க வேண்டும். அப்போதுதான் லஞ்சத்தை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

வேறொரு வழக்கில் வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரான பொழுது நீதிபதிகள் “இத்தகைய லஞ்சப் பேர்வழிகளுக்காக வேணுகோபால் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இத்தகையவர்களுக்காக உங்களைப் போன்ற தகுதிபடைத்தவர்கள் ஆஜராகக்கூடாது. காந்தி கூட ஒரு வழக்கறிஞர்தான். ஆனால் இத்தகைய நபர்களுக்காக அவர் ஒருபோதும் ஆஜரானதில்லை” என்று நீதிபதி மார்க்கண்டேய கட்சு கூறினார்.

அப்போது வழக்கறிஞர் வேணுகோபால் குறுக்கிட்டு “மாண்புமிகு நீதிபதி அவர்களே, இத்தகைய முடிவெடுத்தால் என்னுடைய பெரும்பான்மை வாடிக்கையாளர்களை நான் இழக்க வேண்டி யதுதான்” என்று வேடிக் கையாக குறிப்பிட்டார். நீதிமன்ற வளாகம் முழுவதும் சிரிப்பலை ஏற்பட்டது. எனினும் வழக்கறிஞர் வேணு கோபால், நீதிபதிகள் கூறிய ஆலோசனையை தாம் கவனத்தில் கொள்வதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: