வெள்ளி, 15 ஏப்ரல், 2011

சார்லி சாப்ளினின் தலைசிறந்த பேச்சு வீடியோ


சார்லி சாப்ளின் 122 வது பிறந்த தினம் இன்று

“கிரேட் டிக்டேடர்” படத்தின் இறுதிக் காட்சியில், ஜனநாயகத்துக்கும் அமைதிக்கும் ஆதரவாகவும் – சர்வாதிகாரத்துக்கும் போருக்கும் எதிராகவும், மறக்க முடியாத ஒரு உரையை நிகழ்த்தியிருக்கிறார் சார்லி சாப்ளின். அதுதான் அவர் நடித்த முதல் ‘பேசும் படம்’ என்பதும், அதிலேயே உலகத்தை நோக்கி தான் பேச நினைத்ததையெல்லாம் பிரச்சார உரை போல நிகழ்த்திவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடால்ஃப் ஹிட்லர் ஒரு மாபெரும் வல்லரசின் தலைவராக இருந்தபோதே, அவருக்கு எதிராக, குறிப்பாக அவர் யூதருக்குச் செய்த அநீதிக்கு எதிராக, கலையுலகில் எழுப்பப்பட்ட ஒரே கண்டனக் குரல் இந்தப் படம் தான். ஹிட்லரும் சாப்ளினும் ஒரே வயதுக்காரர்கள். அதிலும் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள் – ஹிட்லர்: ஏப்ரல் 20 1889, சாப்ளின்: ஏப்ரல் 16 1889 – ஆக சாப்ளின் 4 நாட்கள் மூத்தவர்.

கலைஞர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியமானது, அவர்கள் அநீதிக்கும் தீமைக்கும் எதிராக எப்போதும் குரல் எழுப்பவேண்டும் என்பதற்கு சார்லி சாப்ளின் ஒரு பெரிய முன்னுதாரணம். இந்தப் படம் அமெரிக்காவில் வெளியாகி ஓராண்டுக்குப் பின்பே அந்த நாடு தனது நடுநிலையைக் கைவிட்டு ஜெர்மனிக்கு எதிராக இரண்டாம் உலகப் போரில் குதித்தது

இந்தப் படத்தில் ஹிட்லரைக் கோமாளியாகச் சித்தரிக்கும் ஏராளமான காட்சிகள் உண்டு குறிப்பாக, உலக உருண்டை வடிவிலான பலூனை வைத்து விளையாடி உடைக்கும் காட்சி. அந்த நகைச்சுவைக்குள் இருக்கும் கூர்மையான விமர்சனமே சார்லி சாப்ளின் என்னும் கலைஞனின் வலிமை. படத்தின் ஆரம்பத்தில் வரும் உலகப் போர்க் காட்சிகளும் நையாண்டி கலந்து முன்வைக்கப்பட்ட போருக்கு எதிரான விமர்சனமே.

அவரே திரைக்கதை எழுதி இயக்கிய இந்தப் படத்தில், ஹிட்லர் போல ஒரு சர்வாதிகாரியாகவும், ஒரு யூத சவரத் தொழிலாளியாகவும் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் சாப்ளின். இறுதியில் நடக்கும் ஒரு ஆள்மாறாட்டக் குழப்பத்தில், சவரம் செய்யும் யூதன் சர்வாதிகாரியின் வேடத்தில், உயர் அதிகாரிகளுக்கும் திரளான படைவீரர்களுக்கும் முன்னால், வானொலி மூலம் அனைத்துக் குடிமக்களும் நேரடி ஒலிபரப்பில் கேட்டுக்கொண்டிருக்க, உரை நிகழ்த்தும் காட்சியைப் பற்றியே நான் சொல்ல வந்தது

பிரச்சாரம் போல நேரடியாகக் கருத்துச் சொல்வது ஒரு நல்ல கலைவெளிப்பாடு அல்ல என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அவசியமானபோது கலைஞர்கள் பிரச்சார யுத்தியைக் கையில் எடுப்பது தவறல்ல என்று இந்தப் படத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறது.

சாப்ளின் என்னும் மகத்தான மக்கள் கலைஞன், திரைப்பட ஊடகத்தைப் பயன்படுத்தி, மனுக்குலத்தை நோக்கி நிகழ்த்திய உரையின் காணொளி :

5 கருத்துகள்:

வலிப்போக்கன் சொன்னது…

பலமுறை பார்த்து விட்டேன்.சலிக்கவில்லை.ஒரே குறை
அவர் பேசியதை தமிழில் மொழிமாற்றம்
செய்திருந்தால்.எனக்குஆங்கிலம் தெரியவில்லை.

பொன் மாலை பொழுது சொன்னது…

Nice one

விடுதலை சொன்னது…

இட்லரின் முக்கிய ஆயுதம் பேச்சு அதையே நல்ல எண்ணங்களையும் மக்கள் நலனுக்காகவும் பேச முடியும் என்பதை நிருபித்த பேச்சுதான் சாப்ளின்

விடுதலை சொன்னது…

வலிபோக்கன்
கக்கு - மாணிக்கம்

கருத்துக்கும்
வருகைக்கும் நன்றி

Jayadev Das சொன்னது…

சார்லி சாப்ளினைப் பற்றி எழுதியதற்கு நன்றி!!
\\ஆனால் அவசியமானபோது கலைஞர்கள் பிரச்சார யுத்தியைக் கையில் எடுப்பது தவறல்ல என்று இந்தப் படத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறது.\\ இது மிகவும் சரி. கலைஞர்கள் ஏன் பிரச்சாரம் செய்யக் கூடாது? யார் வேண்டுமானாலும் மக்களுக்கு நல்லது செய்யாலாமே!! ஏன் அரசியலிலும் ஈடுபடலாம். பிரச்சாரம், அரசியல் இவையொன்றும் தீண்டத் தகாத ஒன்றல்ல. ஆனால் சுயநலத்துக்காக இதை பயன்படுத்தக் கூடாது.