புதன், 17 ஆகஸ்ட், 2011

முழுகும்அமெரிக்கா திருந்தாத இந்தியா

தர நிர்ணய வரலாற்றில் முதல்முறை யாக அமெரிக்க அரசாங்கத்தின் கடன் தரம்மிக உயர்ந்த AAA நிலையிலிருந்து AA+ என ஒரு படி கீழிறக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் என்ற தர நிர்ணய நிறுவனம் இதைச் செய்திருக்கிறது. (அமெரிக்கா வில் 2008ல் திவாலான பல கம்பெனி களுக்கு, அதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை உயர்நிலை தரச்சான்று வழங்கி, அதனால் சந்திசிரித்த நிறுவனமே இது என்பது தனிக்கதை) அமெரிக்க அரசின் கடன் அளவு 14.3 டிரில்லியன் (இலட்சம் கோடி) டாலர் அளவினைத் தாண்டிய நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சிக் கும், எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சிக் கும் இடையில் சட்டப்பூர்வமான கடன் உச்சவரம்பினை உயர்த்துவது குறித்த சர்ச்சை நடந்துகொண்டிருக்கும் நிலை யில்தான் இந்தக் கீழிறக்கம் நடை பெற்றிருக்கிறது. இதையடுத்து, அமெரிக் காவில் மட்டுமல்லாது இந்தியா உட்பட உலக முழுவதுமுள்ள பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. முதலில் அமெரிக்கக் கதையினைப் பார்ப்போம்.

சர்ச்சையும் சமரசமும்!

அமெரிக்காவின் கடன் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே வருவது ஒன்றும் புதியதல்ல. 1917ம் ஆண்டில் அரசாங்கக் கடனுக்கான உச்சவரம்பு குறித்து ஒரு சட்டம் இயற்றப்பட்டது. சுமார் 43 பில்லியன் (4300 கோடி) டாலரில் தொடங்கிய அந்த உச்சவரம்பு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வந்தது. 1980களில் பெரு மளவு வரிக்குறைப்பு செய்ததன் விளை வாக, ரீகன் ஆட்சிக்கால முடிவில் கடன் 3 டிரில்லியன் (3 இலட்சம் கோடி) டாலரைத் தொடும் நிலைக்குச் சென்றது. நவீன-தாராளவாதக் கொள்கைகள் காரணமாக தொடர்ந்த வரிக்குறைப்பு 2010 பிப்ரவரியில் இந்த நிலையினை உருவாக்கியிருக்கிறது. வரி வருமானத் திற்குப் பதிலாக கடன் வாங்குவது அர சுக்கு வழக்கமாக மாறியது. அக்டோபரில் தொடங்கி மறு ஆண்டு செப்டம்பரில் முடியும் அமெரிக்கப் பட்ஜெட்டில் சென்ற ஆண்டில் அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக் கீடுகள் தீர்ந்துவிட்ட நிலையில், இவ் வாண்டு ஆகஸ்ட் 2க்குள் கடன் வரம்பு உயர்த்தப்படாமல், தனது ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டது. இப்பின்னணியில் தான் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கு மிடையில் சர்ச்சை முற்றியது. இறுதியில் 2 டிரில்லியன் (இலட்சம்கோடி) டாலர் கடன் அளவினை உயர்த்துவது என்றும், 3 டிரில்லியன் (இலட்சம் கோடி) டாலர் அரசுச்செலவினங்களைக் குறைப்பது எனவும் இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு சமரசம் ஏற்பட்டது. இந்த பரஸ் பர சமரசம் குறித்து சிலர் அமெரிக்காவில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். இது ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை.

பாதிப்பு யாருக்கு?

கடன் உயராமல் இருப்பதற்கு, ஒன்று வரி விதிக்க வேண்டும் அல்லது செல வினங்களை குறைக்க வேண்டும். வரியை உயர்த்துவதற்குக் குடியரசுக்கட்சி தயாராக இல்லை. செலவினங்களைக் குறைப்பதற்கு ஜனநாயகக் கட்சி தயாராக இல்லை. ஆனாலும் இறுதியில் குடி யரசுக்கட்சியே வெற்றிபெற்றது. அரசுச் செலவுகள் வெட்டப்படுவதில் பெரும் பகுதி மருத்துவ உதவி, உணவுக்கூப்பன், கல்வி மானியங்கள், வேலையின்மைக் கால இழப்பீடுகள் போன்ற சமூகப் பாது காப்புத்திட்டங்களே. எனவே இயல்பாக ஏழை எளிய மக்களின் வாழ்நிலை யினை மிகவும் பாதிக்கும் சமரசமே இது. வாஷிங்டன் போஸ்ட் - ஏ.பி.சி நடத்திய கருத்துக்கணிப்பில் வரிகளை உயர்த்த வேண்டும் என 72 சதவீத மக்களும், உயர்த்தக்கூடாது என 27 சதவீதத்தின ரும் கூறியிருக்கிறார்கள். வரி உயர்வை எதிர்ப்பவர்கள் செல்வந்தர்கள். இருப்பி னும் சமரசம் என்ற பெயரில், ஏழைகளின் நலன்களை காவு கொடுப்பதென ஒபாமா முடிவு செய்துவிட்டார். வளர்ச்சியடைந்த பல நாடுகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீத அதிகச்செலவு கொண்ட அமெ ரிக்க மருத்துவத்துறையில் செயல்படும் பகாசுர மருந்துக்கம்பெனிகள், நிதி நிறுவனங்கள் பலவும் இந்த முடிவினை நிர்ப்பந்தித்தவர்களில் முக்கியமானவை. கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களின் வருமானம் 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மறுபுறத் தில் உழைக்கும் மக்களின் வருமானம் 12 சதவீதம் குறைந்திருக்கிறது. வேலையின் மை அதிகரித்து வருகிறது. ஆனாலும், இதுதான் சரியான முடிவு என சிலர் வாதிட்டு வருவது துரதிருஷ்டமே.

மாற்று வழிகள்

இந்த 1917 சட்டத்தில் கடன் வரம்பு, சதவீத அடிப்படையில் அல்லாமல், தொகை அடிப்படையில் குறிப்பிடப்பட் டுள்ளது. இது ஒரு தேவையற்ற சட்டம். இதில் இரண்டு ஓட்டைகள் உள்ளன. ஒன்று, ஒவ்வொரு ஆண்டும் நிதிப்பற்றாக் குறை உயரும்போது கடன் தொகையின் அளவு உயரும். இரண்டாவது, அரசின் வரி வருமானம் உயர்ந்தாலும் கூட, அர சின் செலவுகள் உயரும் நிலையில் கடன் தொகையின் அளவும் உயரத்தானே செய்யும்? தொகை அளவில் உச்சவரம்பு என்பதற்கு ஏதாவது பொருள் உண்டா? ஐரோப்பிய நாடுகளிலும், நமது நாட்டிலும் நிதிப்பற்றாக்குறை (=அரசுக்கடன் உச்ச வரம்பு) மொத்த உள்நாட்டு வருமானத் தில் (ழுனுஞ) இத்தனை சதவீதம் என்று தான் குறிப்பிடப்படுகிறது. நம் நாட்டில் நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாக (குசுக்ஷஆ) சட்டத்தில் நிதிப்பற்றாக்குறை 6 சதவீதம் என உச்சவரம்பு இடப்பட்டிருக் கிறது. அந்த ழுனுஞ சதவீத அடிப்படையில் பார்த்தால், இன்று அமெரிக்காவின் கடன் 100 சதவீதத்திற்கு மேல் எகிறிவிட்டது. (அதாவது ழுனுஞ 14.53 டிரில்லியன் டாலர், கடன் அளவு 14.58 டிரில்லியன் டாலர்). 1945க்கும் 1950க்கும் இடைப்பட்ட காலத்தில் அது 120 சதவீதம் வரையிலும் கூட சென்றிருக்கிறது. இன்றைய நிலை மையும் ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல, அப்படியானால், இன்று ஏன் அது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியது?

ஒபாமா அரசிற்கு மாற்று வழிகள் இல் லாமல் இல்லை. ஒன்று வரிகளை உயர்த் தியிருக்க முடியும். அல்லது டாலர் கரன் சியினை அச்சடித்திருக்க முடியும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் - இல் இருக்கும் அரசுக்கடன் பத் திரங்களின் மதிப்பு 1.7 டிரில்லியன் டாலர். இதற்கு இணையாக கரன்சியினை அச்சடித்தால் அது கடன் என்ற கணக் கில் வராது. வரம்பிற்கு அதிகமாக 1.5 டிரில்லி யன் டாலரே அதிகம் இருக்கும் நிலை யில், கடனை எளிதில் சமாளித்திருக்க முடியும். ஆபிரகாம் லிங்கன் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுப்போர் காரணமாக பொருளாதார மந்தம் ஏற்பட்ட நிலையில் அவர் டாலர் நோட்டுக்களை அச்சடித் துத்தான் நிலைமையினைச் சமாளித் தார். அன்று அந்த அரசு அடித்த டாலர் கரன்சிக்கு கிடைத்த ‘கிரீன் பேக்’ (ழுசநநn க்ஷயஉம) என்ற பெயர்தான் இன்றுவரையி லும் நீடிக்கிறது. இன்று பணவீக்கம் மிகக் குறைந்த நிலையில் இருக்கும்போது இதைச்செய்வதில் தடையேதுமில்லை. ஆனால், ஒபாமாவிற்கு ஏன் இந்தத் தயக்கம்?

ஒபாமா என்ற தனி நபரின் நடத்தை சம்பந்தப்பட்ட விஷயமாக இதைப் பார்ப்பதில் பயனில்லை. அமெரிக்காவின் இரண்டு கட்சிகளும் ஆளும் வர்க்கங் களின் பிரதிநிதிகளே என்பதை இங்கு மறக்கக்கூடாது. அமெரிக்காவின் முதலா ளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பான அம்சமாகவே ஒபாமா இதைப்பார்க்கிறார். சென்ற ஆண்டு பட்ஜெட்டில் வரிகளை உயர்த்தக்கூடாது என்று குடியரசுக்கட்சி வைத்த கோரிக் கையினை ஒபாமா ஏற்றுக்கொண்டார். இவ்வாண்டு கடன் வரம்பு உயர்விற்கு அவர்கள் உடன்படுவார்கள் என்ற நம்பிக் கையில் அவர் அதைச்செய்தார். ஆனால் குடியரசுக்கட்சியினர் வரி குறித்த வாக்குறுதியினைப் பெற்றுக்கொண்டு, இப்போது சமூகப்பாதுகாப்புத் திட்டச் செலவுகளைக் குறைப்பதற்கும் நிர்ப்பந் தித்திருக்கிறார்கள். 2008 நெருக்கடி நிலைமையினையொட்டி அன்று திவால் நிலையிலிருந்த நிதி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி டாலருக்கு மேல் நிவாரணம் அளித்த பின்னணியில் தான் மொத்தக்கடன் அளவு உயர்ந்தது என்ற பேருண்மை யினையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். இன்று ஏழை எளிய மக்களுக்குக் கிடைத்துவரும் சமூகப்பாதுகாப்பின் மீது கைவைக்கும் நிலைமைக்குச் சென்றி ருக்கின்றனர். தங்களது ஊதாரித்தனத் தினால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் பழிவாங்கும் வஞ்சகம் என்பதைத் தவிர இது வேறென்ன?

மூன்று வகை பாதிப்பு!

இந்த சமரச ஒப்பந்தத்தின் விளை வாக, அமெரிக்க சமூகம், அமெரிக்க அர சியல், உலகப்பொருளாதாரம் என மூன்று தளங்களில் பாதிப்புகள் அமையும். ஒன்று, அமெரிக்க சமூகத்தில் மக்களின் வருமான பகிர்மானத்தில் ஒரு கடுமை யான பின்னடைவு ஏற்படும். சமூகப்பாது காப்புத்திட்டங்கள் வெட்டிச்சுருக்கப்படு கிறபோது அதற்கான செலவுகளை பய னாளிகள் ஏற்கும் நிலைமை ஏற்படும். அவர்களது செலவுகள்கூடும். மறுபுறத் தில் கல்வி, மருத்துவம், இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் செயல்படும் நிறு வனங்களின் கொள்ளை லாபம் அதிகரிக் கும். 1929ம் ஆண்டில்,அமெரிக்காவின் 1 சதவீத மேட்டுக்குடியினரின் வருமானம் 23 சதவீதமாக இருந்தது. இதுவே 1980களில் 9 சதவீதமாகக் குறைந்தது. அதாவது, உழைப்பாளி மக்களின் எழுச் சியின் விளைவாக 50 ஆண்டுகளில் மிகப்பெரும் செல்வந்தர்களிடமிருந்து 14 சதவீத வருமானம் சாமானிய மக்களின் கைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் 2001ல் அந்த 1 சதவீத மேல்தட்டு வருமானம் 23 சதவீதமாக மாறியது. அதாவது, நிதி மூலதனத்தின் நிர்ப்பந்தங்களின் பின்னணியில் அம லாக்கப்பட்ட நவீன-தாராளவாதக் கொள் கைகளின் காரணமாக 14 சதவீதம் மீண் டும் சாமானியர்களிடமிருந்து தட்டிப்பறிக் கப்பட்டுவிட்டது. இந்த சமரச ஒப்பந்தம் உள்நாட்டில் மக்களின் வாங்கும் சக்தியி னைக் குறைக்கும். அதனால் ஏற்படும் பின்னடைவு, பொருளாதார மந்தம், உற்பத்திக்குறைவு, வேலையின்மை ஆகியவற்றினை மேலும் விரிவுபடுத்தும்.

இரண்டாவது, அமெரிக்க அரசியல் தீவிரமாக வலதுசாரித் திசைக்குள் செலுத்தப்படுகிறது. நிதி மூலதனம் அரசின் நலத்திட்டங்களை எப்போதும் ஏற்பதில்லை. சோவியத் யூனியன் காலத்தில் ஏழைகளுக்கு ஆதரவானவர் கள் போன்று வேடம் தேவைப்பட்ட காலம் மறைந்துவிட்டதால், இப்போது அதி தீவிர வலதுசாரித் திசைக்கு அமெரிக்க அரசி யல் திட்டமிட்டுத் திருப்பப்படுகிறது.

மூன்றாவது, உலகப்பொருளாதார மந்தத்தினை இது மேலும் ஆழப்படுத் தும், தென்னை மரத்தில் தேள் கொட்டி னால் பனை மரத்திற்கு நெரி கட்டுமா என சம்பந்தமில்லாத இரண்டு சம்பவங்கள் குறித்து வேடிக்கையாய் பேசுவார்கள். ஆனால், இன்று நிதி மூலதனம் அத்த கைய சம்பந்தத்தினை உலகம் முழுவ தும் ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நெருக்கடி உடனடியாக உலக நெருக்கடி யாக மாறுகிறது. அதாவது அமெரிக்கா தனது நெருக்கடியினை உலக நெருக்கடி யாக்கும் வல்லமை பெற்றுள்ளது.

நமக்கு பாதிப்பு இல்லையா?

அமெரிக்க நெருக்கடியால் இந்தியா விற்கு பாதிப்பு இல்லை என்று நமது நிதி அமைச்சரும், பிரதமரும் கூறிவருகிறார் கள். ஆனால், இந்தியப் பங்குச்சந்தைச் சரிவு அதைப் பொய்யாக்கியிருக்கிறது. 2008ம் ஆண்டில் பிரதமர், நிதி அமைச்சர் சிதம்பரம், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா ஆகிய மூவரும் மூன்று குரலில் பேசினர். ஏற்றுமதி நெருக் கடிக்குப் பின்னர் சோர்ந்து போனார்கள். பின்பு எல்லாரும் சேர்ந்து நிதித்துறை யில் எவ்விதப்பாதிப்பும் இல்லை என பெருமை பொங்க கூறினார்கள். அவர் களது ஆசை, ஆர்வம், முயற்சி அனைத் தையும் மீறி இடதுசாரி கட்சிகளும் நிதித் துறைத் தொழிற்சங்கங்களும் நிதித்துறை சீர்திருத்தங்களை செய்யவிடாமல் தடுத் ததால்தான் அது சாத்தியமானது என் பதை மட்டும் அவர்கள் சொல்ல மறுத்த னர். மீண்டும் அவர்கள் நிதித்துறை சீர் திருத்தங்களை செய்வதற்கு கச்சைகட்டி நிற்கிறார்கள் என்பது தான் வெட்கக்கேடு. அமெரிக்காவில் ஏற்படும் கிராக்கி மந்தம் உலக வர்த்தகத்தினை பாதிக்கும், நமது ஏற்றுமதியினைப் பாதிக்கும் என்பதெல் லாம் நாம் அறிந்ததே. சென்ற முறை நாம் சந்தித்த நெருக்கடிகளை அவ்வளவு விரைவில் மறக்கமுடியுமா? 2008 உலக நெருக்கடியிலிருந்தே நாம் இன்னும் மீளவில்லை. இப்போதாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா?

இ.எம்.ஜோசப்

(ஆதாரம் : சீத்தாராம் யெச்சூரி கட்டுரை (ஹிந்துஸ்தான் டைம்ஸ் 9.8.11)
பிரபாத் பட்நாயக் கட்டுரை(மேக்ரோ ஸ்கேன் 5.8.11) நோம் சோம்ஸ்கி உரை (இணையதளம்) மற்றும் பிற இணையதள தகவல்கள்.

1 கருத்து:

Unknown சொன்னது…

கெட்டவன் நெடுகாலம் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை