திங்கள், 29 ஆகஸ்ட், 2011

அரசியல் முதலாளித்துவம்!

பல ஆண்டுகளுக்கு முன் சமூகவியல் என்ற ஒன்று உருவாவதற்கு காரணமாக இருந்த மேக்ஸ் வீபர் என்ற மேதை அரசியல் முதலாளித்துவம் என்ற ஒரு சொல்லைத் தன்னுடைய புத்தகத்திலே கையாண்டிருந்தார். அதாவது கார்ல் மார்க்ஸ் மூலதனம் எழுதிய காலத்துக்குப் பிறகு கையாண்ட சொல். இந்த மேக்ஸ் வீபர் என்பவரும் ஒரு ஜெர்மானியர்.

இவரது அரசியல் முதலாளித்துவம் பல ஆண்டுகள் ஆய்வு செய்யப்படாமலேயே இருந்திருக்கிறது. மேக்ஸ் வீபரும்கூட இந்த அரசியல் முதலாளித்துவம் பற்றி ஒரு சிறு வரையறையாகத்தான் கையாண்டிருந்தார். ஆனால், இந்தக் கருத்து இப்பொழுது உலகில் பிரபலமடைய ஆரம்பித்துவிட்டது.

பெரும்பாலும் கோட்பாட்டுவியலாளர்கள் எதிர்காலத்தில் நடக்கப் போவதை அனுமானித்து கருத்துகளை உருவாக்கிக் கோடிட்டு காட்டியிருப்பார்கள். அந்த வகையில்தான் இந்தச் சொல்லையும் இன்று சமூக அறிவியல் ஆராய்ச்சியில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

மேக்ஸ் வீபர் அரசியல் முதலாளித்துவம் என்ற சொல்லுக்கு எல்லையில்லா அளவுக்கு அரசாங்கப் பதவியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி எந்தத் தொழிலும் செய்யாமல் பணம் சம்பாதிப்பது; அதைத் தொடர்ந்து அரசியலில் குற்றம்புரிவது, கலகம் விளைவிப்பது இவைகளைப் பயன்படுத்தி அரசியலிலும், ஆட்சியிலும் நிர்வாகத்திலும் ஒரு புதுமுறைமையை உருவாக்கி விடுவது என்று விளக்கமளித்துள்ளார்.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற உலகமயமான பொருளாதாரமும் எல்லையில்லா ஊழலால் வீழப் போவது வெகுதூரத்தில் இல்லை.

 அரசியல் முதலாளித்துவம் பற்றி உலகில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இதேபோன்ற ஓர் ஆராய்ச்சியை நடத்தினால், எப்படி ஒன்றுமில்லாதவர்கள் அரசியலுக்குள் புகுந்து, ஆட்சியைப் பிடித்ததற்குப் பிறகு மிகப்பெரிய அளவுக்குப் பணம் சம்பாதித்தனர் என்பதை உலகுக்கு அம்பலப்படுத்திவிடலாம்.

அரசியலிலும், பதவியிலும் தங்களைத் தக்க வைக்க எப்படிப்பட்ட கலகங்களையும், அராஜகங்களையும் கட்டவிழ்த்து, ஊழல் மூலம் புகுத்தி புதிய அரசியலை உருவாக்கினர் என்பதையும் ஆராய வேண்டும்.

நம் நாட்டில் உள்ள சமூக விஞ்ஞானப் பேராசிரியர்கள் இப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வது இல்லை. ஏனென்றால், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பார்த்து மிரட்சியில்தான் இருக்கிறார்கள்.

ஆனால், இந்தப் பணியை மேற்கத்திய நாடுகளில் இந்திய அரசியல், சமூகம் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்யும் இளம் சமூக விஞ்ஞானிகள் ஆரம்பித்துவிட்டனர். ஏனென்றால், இந்தியாவில் சமீபகாலத்தில் புதிய வணிகத்தை அரசியலில் நம் கட்சித் தலைவர்கள் ஆரம்பித்து, சில குறிப்பிட்ட வர்க்கம், சில குடும்பங்களை அரசியல் மூலம் மிகப்பெரிய செல்வந்தர்களாக்கி விட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த சாதனை அரசியல் அமைப்புகளை நிறுவி, அவைகளை மக்கள் மத்தியில் நிலைநாட்ட பல யுக்திகளைக் கையாண்டு தொடர்ந்து மக்களைத் தங்கள் வயப்படுத்தி ஓட்டு வங்கிகளாக வைத்து ஆட்சியைப் பிடித்து மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டிவிட்டார்கள்.

ஈட்டிய வருமானத்தின் மூலம் மக்களை விலைபேசி ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு ஒரு புதிய அரசியல் பொருளாதாரத்தை ஏற்படுத்த முனைந்தனர்.

இதன் மூலம் நாடாளுமன்ற மக்களாட்சி என்ற அமைப்பையே அடியோடு சாய்க்க எண்ணினர். இதற்கு அவர்களுக்குக் கிடைத்த காரணிகள் இரண்டு. ஒன்று, மக்களின் அறியாமை. இரண்டு, ஊடகங்களின் வலிமை.

பாவம், இவர்கள் மக்களாட்சியின் தன்மையை, வலிமையை, சக்தியைக் குறைத்து எடைபோட்டுவிட்டனர். இதனால்தான் சமூக பொருளாதார மாற்றத்துக்காக புதிய கருத்துகளை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் மத்தியதர வர்க்கத்தையும் அறிவு ஜீவிகளையும்கூட விலைக்கு வாங்கி அவர்கள் மூலமும் தங்களைத் தக்க வைக்க முனைந்தனர்.

ஆனால், இன்று மக்களாட்சியின் மாண்பு என்ன என்பதை இந்த அரசியல் முதலாளிகளுக்கு மக்கள் காண்பித்துவிட்டார்கள். மக்கள் சமூக மருத்துவர்களாக மாறி மரணத்தை நோக்கிச் சென்ற ஆளுகையைத் தங்களின் விரல் நுனியால் பொத்தானை அழுத்தி உயிர் பிழைக்க வைத்துவிட்டார்கள்.
உலகமயமான பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின் இந்த ஊழல் செயல்பாடு மக்களாட்சியையே தூக்கி விழுங்கும் சூழலுக்கு உருவெடுத்துவிட்டது.

அரசியல் முதலாளித்துவம் என்பது அரசாங்கம், ஆளுகை, நிர்வாகம், ஜனநாயகம் ஆகியவைகளைத் தகர்க்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக நம் நாட்டில் சமூக மூலதனம் என்பது மக்களாட்சிக்கு உதவிகரமாக இருந்ததால் அதிகாரத்தை மக்கள் கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அரசுசாரா சமூக அமைப்புகள் ஆதரவளித்திடவும் ஊடகங்களின் திறம்பட்ட செயல்பாடும் மக்களாட்சியில் உள்ள சில நற்கூறுகளைச் செயல்பட ஆவன செய்து விட்டனர். இதன் விளைவாக, நம் உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் செயல்பட்டு அதன் தனித்தன்மையைக் காட்டிவிட்டன.

இந்தியாவில் ஆளுகை அமைப்புகள் சீரழியத் தொடங்கும் காலத்தில் மூன்று நிறுவனங்கள் அதாவது, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம். இந்த மூன்றும் மக்களாட்சியைப் பாதுகாக்கும் அரணாகச் செயல்பட ஆரம்பித்தன. ஆனால், இன்று குடியரசுத் தலைவர் அலுவலகச் செயல்பாடு இந்தச் சூழலை மாற்றக்கூடியதாக இல்லை என்பதை கே.ஆர். நாராயனண், சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன் காலங்களுடன் ஒப்பிடும்போது அனுமானிக்க முடிகிறது.

தேர்தல் ஆணையம் சேஷன் காலத்தில் ஆரம்பித்து இன்றுள்ள குரேஷி காலம்வரை தொய்வில்லாமல் மக்களாட்சியைப் பாதுகாப்பதில், வலுப்படுத்துவதில் தன் சேவையைச் செய்து வருகிறது.

அதேபோல் உச்ச நீதிமன்றம் பி.என். பகவதி, வி.ஆர். கிருஷ்ணய்யர் காலத்தில் ஆரம்பித்து இன்றுவரை தொய்வின்றி மக்களாட்சியைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மத்திய அரசின் நிறுவனங்களையே தன் கட்டுப்பாட்டில் செயல்பட வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இதுவரை அரசியலில் மக்களின் அறியாமையையும் ஏழ்மையையும் வைத்து அரசியல் நடத்தி சொத்துச் சேர்த்து மக்கள் மத்தியில் சாதனை நாயகனாக செயல்பட்ட தலைவர்களைப் பற்றிய கட்டுரைகள் புத்தகங்கள் வெளியாக இருக்கின்றன.

விக்கி லீக், புதிய யுக்தியைக் கையாண்டு உலக அரசாங்கச் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்த மாதிரி, நம் நாட்டுத் தலைவர்களின் சொத்துகள், தொழில்கள், முதலீடுகள், வெளிநாட்டு வணிகங்கள், உள்நாட்டு வணிகங்கள் இவைகளையெல்லாம் தொகுக்க ஆரம்பித்துவிட்டனர்.

மேற்கத்திய நாடுகளில் இந்தியாவின் அரசியல் பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள். விக்கி லீக் உபயோகப்படுத்திய அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டனர். அரசாங்கத்துக்கும், துப்புத்துலக்கு நிறுவனங்களுக்கும் இனிமேல் ஆதாரங்கள் தரப்போவது இந்த புதிய சமூக விஞ்ஞானிகள்தான்.

இன்று நம் நாட்டில் தாங்களே சூட்டிக்கொண்ட பட்டங்களோடு பகட்டாக பவனி வந்து கட்சிக்காரர்கள் மத்தியிலும், பாமர மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய தலைவர்களாகக் காட்சியளித்தவர்களின் மோசமான வரலாறுகள் எதிர்காலத்தில் வெளிவரப் போகிறது.

இதற்கு இன்று முதல்நிலையில் விக்கிலீக் தலைவர் வழிகாட்டிவிட்டார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆளுகையையும் சரிசெய்ய உலகில் படித்த நல்ல இளைஞர்களில் பலர் ஊடகங்களுக்குள்ளும் புகுந்துவிட்டனர். இந்தப் பணியால் பொய் பிரசாரத்துக்காகவும், அரசியல் வணிகத்துக்காகவும் உருவாக்கப்பட்ட ஊடகங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கப் போகின்றன.

நம் நாட்டில் நம் தலைவர்களின் தலைமைப் பண்பை உருவகப்படுத்தி, உச்சத்துக்குக் கொண்டு சென்று மக்களை ஒரு மாயையில் சிக்க வைத்து, பிழைத்தவர்களின் முகத்திரையைக் கிழிக்க விக்கிலீக் தலைவர்கள்போல் பலர் புறப்பட்டு விட்டனர்.

இவர்கள் கொண்டு வரும் கருத்துகள், கட்டுரைகள், புத்தகங்கள் சமூகத்தில் இன்று போலித் தலைவர்களின் போலி வரலாற்றை உடைத்தெறியப் போகிறது.

இதுவரை மக்களாட்சியில் சர்வாதிகாரிகளாக இருந்த நம் அரசியல்வாதிகளுக்கு இப்போதுதான் மக்களாட்சியில் நியாயத்துக்குப் புறம்பாக நடந்தால் நாம் நிச்சயமாக தப்பிக்க முடியாது என்ற சிந்தனை வந்துள்ளது. இனிமேல் தவறாகப் பணம் சேர்த்து வெளிநாடுகளில் பதுக்கலாம் என்று இருந்த எண்ணத்துக்கும் அடிவிழுந்து விட்டது.

இனிமேலாவது நம் தலைவர்கள் போலி அரசியலிலிருந்து உண்மை அரசியலுக்கு வரவேண்டும், கொள்ளையடிக்கும் அரசியலிலிருந்து கொள்கை அரசியலுக்கு வரவேண்டும், மாயை அரசியலிலிருந்து மக்கள் அரசியலுக்கு வரவேண்டும், குழப்பத்துக்கான அரசியலைவிட்டு தெளிவான அரசியலுக்கு வரவேண்டும், கலக அரசியலிலிருந்து அமைதி அரசியலுக்கு வரவேண்டும், கலாசார ஒழுங்கீன அரசியலிலிருந்து பக்குவமான கலாசாரம் சார்ந்த அரசியலுக்கு வரவேண்டும்.

இல்லையேல், நம் மக்களாட்சி அவர்களுக்குத் தகுந்த இடத்தைக் காண்பித்துவிடும். இன்று நம் கட்சிகள் அனைத்தும் பதவியில் ஆட்சியில் இருப்பது கொள்கையாலோ, தலைவராலோ, சாதனையாலோ, வலிவாலோ, ஆற்றலாலோ அல்ல, எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால்தான் என்பது நாடறிந்த உண்மை.

எனவே, நம் அரசியல் கட்சிகள் புதிய தடத்தில் கால்பதிக்க ஆரம்பிப்பது இந்திய நாட்டுக்கும், மக்களாட்சிக்கும், இந்திய அரசியலுக்கும் நல்லதாக அமையும். அரசியல் முதலாளித்துவம் என்பது இனிமேல் நம் அரசியலில் எடுபடாது. அது மட்டுமல்ல, மக்கள் விழித்துக் கொண்டார்கள்.

அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணம் என்பது ஒன்று அரசியலில் சம்பாதித்தது அல்லது சம்பாதிக்கப்போவது என்று புரிந்துகொண்டார்கள். எனவே, மக்களின் அரசியல் செயல்பாடுகள் என்பது மாறுபட்டதாகத்தான் இனிமேல் இருக்கும். மாற வேண்டியது நம் கட்சிகளும், அவற்றின் அரசியலும்தான்.

க. பழனித்துரை
நன்றி தினமணி

கருத்துகள் இல்லை: