புதன், 7 செப்டம்பர், 2011

இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம்


இயற்கை அழகு கொஞ்சும் சிங்காரபூமி இலங்கை. அதன் ஆட்சியாளர்களோ அதை ரணகள பூமியாக்கிவிட்டார்கள். இன்று அதைப்பார்க்கும்போது உலகத்து மனிதநேய வாதிகள் எல்லாம் தம்முன் தேக்கி வைத்துச் சிந்திய ஒற்றைக் கண்ணீர்த்துளியாய்த் தெரிகிறது. அந்த அளவுக்கு அங்கே தமிழர் களின் நிலை பரிதாபமாக உள்ளது.


2009 மே மாதத்தில் அங்கே நடந்த இறுதிகட்டப்போரில் அப்பாவித் தமிழர்கள்-சிவிலியன் மக்கள் - பல்லாயிரம்பேர் மாண்டு போனார்கள். ஐ.நா. சபை அமைத்த குழுவின் அறிக்கைப்படியே குறைந்தபட்சம் நாற்பதாயிரம் பேர் இலங்கை ராணுவத்தின் குண்டு களுக்கு இரையானார்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சுக்கு பல்லாயிரம் அப்பாவி ஜப்பானியர்கள் பலியானார்கள். அதற்குப்பிறகு இவ்வளவு அதிகமாகப் பொதுமக்கள் மாண்டது இலங் கையில்தான் நடந்தது. பதுங்குக்குழி வெட் டிய உழைப்பாளர்கள் அதிலேயே புதைந்த தையும், பச்சிளங்குழந்தைகளின் உடல்கள் சிதறிச்சின்னாபின்னமாகி மரக்கிளைகளில் தொங்கியதையும் அந்த அறிக்கை விவரிக் கிறது. பொது அமைப்பாகிய செஞ்சிலுவைச் சங்கத்தாரும் தாக்கப்பட்டார்கள். காயமடைந் தவர்களுக்கு சிகிச்சை தாராமல் சாகடிக்கும் படி விடப்பட்டார்கள். அதுவும் படுகொலை தான்.

அதை யெல்லாம் படிக்கப்படிக்க நமது நெஞ்சம் வேதனையால் விம்முகிறது. எந்தக் காலத்து யுத்தத்திலும் இருதரப்பும் சில வரை முறைகளை நிர்ணயித்துக்கொண்டிருந்தன. மதுரையை எரிக்க அக்னியை ஏவிய கண்ண கியும், “பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டு தீத்தரத்தார் பக்கமே சேர்க” என்றாள். இந்த நவீன காலத்திலோ அத்த கைய போர் நெறிமுறை ஏதுமின்றி பெண் களையும் குழந்தைகளையும்கூட கொன்று குவித்தது இலங்கை ராணுவம். அதனால் தான் இது போர்க்குற்றம், மனிதகுலம் மீதான குற்றம் என்று சரியாகவே சொன்னது ஐ.நா. குழுவின் அந்த அறிக்கை.

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை யில் நடத்திய சிறப்பு மாநாடும் அதனால்தான் கீழ்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. “இலங்கையில் இறுதிக்கட்டப்போரின்போது ராஜபக்சே தலைமையிலான அரசினுடைய ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும் சர்வதேச தரமுள்ள, மக்களுக்கு நம் பிக்கையூட்டக்கூடிய, ஒரு சுயேட்சையான நேர்மையான விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிடவேண்டும். ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடு என்ற முறையிலும், ஐ.நா.வின் மனித உரிமை சாசனத்தை உயர்த்திப்பிடிக் கும் வகையிலும் இந்த விசாரணை அமைய வேண்டும்.”

விசாரணை என்ற பெயரில் கண்துடைப்பு நாடகம் ஒன்றை இலங்கை ஆட்சியாளர்கள், அரங்கேற்றிவிடக்கூடும் என்பதை மார்க் சிஸ்ட் கட்சி உணர்ந்திருக்கிறது. அதனால் தான் வெறும் விசாரணை என்று கேட்காமல், அது எத்தகையதாக இருக்க வேண்டும் என் பதையும் சேர்த்து வலியுறுத்தியுள்ளது. “சர்வ தேசத்தரமுள்ள” விசாரணைவேண்டும். “ஐ.நா.வின் மனித உரிமை சாசனத்தை உயர்த் திப்பிடிக்கும் வகையிலான” விசாரணை வேண்டும். அதுவரை மார்க்சியவாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும், மனச்சாட்சி யுள்ள அனைவரும் விடப்போவதில்லை என் பதை இலங்கை ஆட்சியாளர்கள், உணர்ந் திருக்கட்டும்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத் தில் தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக இலங் கை ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார் கள். ஆனால், அந்த வெற்றி எனப்பட்டதன் ஊடே புலிகளுக்குச் சம்பந்தமேயில்லாத ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதையும், தப்பிய தமிழர்கள் தங்களது சொந்த பூமியிலேயே, அகதிகளாக வாழ்வதையும் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளமறுக்கிறார்கள். தமிழ்ப்பகுதியை ஏதோ வெல்லப்பட்ட அந்நியதேசம்போல கருதுகிறார்கள். அங்கிருந்த தமிழர்களை ஏதோ வெல்லப்பட்ட அந்நிய நாட்டினர் போலக் கருதுகிறார்கள். அதுவெல்லாம் தம் தேசம், அவர்கள் எல்லாம் தம் குடிமக்கள் என் கிற உணர்வே இல்லை. அந்த ஆட்சியாளர் களுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டுத் தீர் மானம் சுட்டிக்காட்டுகிற இந்த உண்மையை நோக்குங்கள்-”ராணுவத்தினரால் கையகப் படுத்தப்பட்ட நிலங்கள் மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. தமிழ் மக்கள் வசித்த பகுதிகளில் ராணுவத்தினர் மற்றும் சிங்கள மக்கள் குடியேற்றம் குறித்து மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது”

இதுதான் கொடுமை. இலங்கை என்பது சிங்களர்கள், தமிழர்கள் எனும் இருதேசிய இன மக்களைக் கொண்ட ஒரு நாடு. இந்த யதார்த்தத்தை அங்கீகரிக்காமல் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கிற காரணத்தால் அவர்களது வாக்குகளைப் பெற அவர்கள் மத்தியில் இனவெறி அரசியலை ஊக்குவித் தார்கள் முதலாளித்துவ அரசியல்வாதிகள். அதன்காரணமாகத் தமிழர்களின் நியாயமான உரிமைகளை மறுப்பது, அவர்களை ஒடுக்கு வது என்பது ஆரம்பானது. அது இப்போது அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் போக்கிற்கு கொண்டு சென்றுள்ளது. யுத்தத்தால் அனாதைகளான தமிழர்கள்பா லும் கருணை காட்டாத கொடூர சித்தத்திற்கு வழிவகுத்துள்ளது.

மனிதநேயமுள்ள எந்த உலக மாந்தரும் இந்த அநீதியை ஏற்றுக் கொள்ள மாட்டார். யுத்தத்தில் வெற்றி பெற்றதாலேயே சொந்த வாழ்விட உரிமையை மறுக்கும் அநியாயத்தை ஒருநாளும் ஏற்க முடியாது. மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டுத் தீர்மானம் கச்சிதமாக, கறாராகக் கூறியுள்ளது- “ஆயுத மோதலினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களது சொந்த வாழ்விடங்களில் முழுமையாக மீள் குடிய மர்த்தப்பட வேண்டும்.”

இலங்கையில் தமிழ் மக்கள் நடத்திய சகல போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணம் என்ன? அங்கே இருப்பது இரண்டே இரண்டு மொழிவழி தேசிய இன மக்கள். ஆனால், சிறுபான்மையோர் என்கிற ஒரே கார ணத்தால் தமிழின மக்களுக்குச் சம உரிமை மறுக்கப்பட்டது. இருப்பவை இரண்டே இரண்டு மொழிகள். ஆனால், சிங்களம் மட் டுமே ஆட்சி மொழி எனச் சொல்லி தமிழைப் புறக்கணித்தார்கள். அரசமைப்பில், அரசு நிர்வாகத்தில், நீதித்துறையில், காவல்துறை யில், ராணுவத்தில் என்று சகல துறைகளி லும் தமிழர்களுக்கு உரிய இடம் தரப்படவில் லை. தமிழர்கள் வெம்பி வெம்பிச் செத்தார்கள், வெதும்பி வெதும்பிக் குமைந்தார்கள். இதற் கெல்லாம் உச்சமென நாடாளுமன்ற ஜனநா யக முறையும் ஒழித்துக்கட்டப்பட்டு ஜனாதி பதி ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டது. கதை முடிந்தது. ஜனாதிபதி எனும் ஒற்றை நப ரின் கையில் சகல அதிகாரமும்! அவரோ மக் களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இயல்பாகவே மக்களில் பெரும்பான்மையான சிங்களர்களின் நலனை மட்டுமே அவர் பிரதி பலிப்பார்! இப்படிச் சிறுபான்மைத் தமிழர் களைத் தொடர்ந்து ஒடுக்கி வந்ததுதான் அங்கு எழுந்த சகல பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம்.

இதன் பொருள் தமிழர்கள் பக்கம் தவறே இல்லை என்பதல்ல. குறிப்பாக, தமிழர்களுக் குத் தனி நாடு ஒன்றே தீர்வு எனும் விடு தலைப் புலிகளின் நிலைபாடும் சரி, அதற்கு அவர்கள் கடைப்பிடித்த சில வழிமுறைகளும் சரி, அதிலும் சக போராளிக் குழுக்களை கொன்று குவித்ததும் சரி, அவற்றின் உச்ச மாக ராஜீவ்காந்தியின் உயிரைப் பறித்ததும் சரி தமிழர்களின் உரிமைப் போருக்கு எந்த நன் மையும் செய்யவில்லை. மாறாக, அனுதாபமாக இருந்தவர்களையும், ஆதரவுக் கரம் நீட்டியவர் களையும் கூட அசூயைப் பட வைத்தது. மார்க் சிஸ்ட் கட்சி புலிகளின் இந்தப் போக்கை ஒருநாளும் ஏற்றதில்லை. ஆனால், அதற் காக இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை அது புறந்தள்ளியதுமில் லை. விடுதலைப்புலிகள் மட்டுமே இலங் கைத்தமிழர்கள் இல்லையே. புலிகள் ஒரு சில ஆயிரம் பேர் என்றால், அப்பாவித் தமிழர் கள் லட்சக்கணக்கானோர் ஆயிற்றே! அவர் களது வாழ்வுரிமைக்காக குரல் கொடுப்பது கம்யூனிஸ்டுகளின் இயல்பான குணமாக இருந்தது.

இலங்கைப்பிரச்சனை துவங்கி காலம் தொட்டும், அது 1983ல் விஸ்வரூபம் எடுத்த போதும் அவர்களுக்காக ஓங்காரக்குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சி. அன்றைக்கு எழுதப்பட்ட உணர்ச்சிகரமான பிரசுரங்களை யும், வீதிதோறும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங் களையும் இந்த கட்டுரை ஆசிரியர் நினைத் துப் பார்க்கிறார். மார்க்சிஸ்டுகள் அனைவரின் நெஞ்சிலும் அது பசுமையாக இருக்கிறது.

ஆனால், அவ்வளவு ஆவேசத்திற்கு மத்தியிலும் நடப்பு உண்மைகளையும், காரிய சாத்தியமான தீர்வுகளையும் மார்க்சிஸ்ட் கட்சி மறந்துவிடவில்லை. ஒன்றுபட்ட இலங் கைக்குள் தமிழ் பேசும் பகுதிகளுக்கு மாநில சுயாட்சி என்பதே நிலையான தீர்வாக இருக் கும் என்று அது மனப்பூர்வமாக நம்பியது. அதையே தயக்கமின்றி பரிந்துரைத்தது. ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கிட் டத்தட்ட அந்த நிலைபாட்டுக்கு நெருங்கி வந்ததால் அதை ஆதரிக்கவும் செய்தது. இந்த நிலைபாட்டை சில கட்சிகள் அன்று விமர் சித்தன. இலங்கையை உடைப்பது ஒன்றே ஒரே தீர்வு என்று பிரமாதமாகப் பேசினார்கள்.

இன்று நிலைமை என்ன?

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெற் றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அதன் தலைவர் சம்பந்தம் 27.7.2011 அன்று இப்படிக் குறிப்பிட்டார் - “ஆட்சி அதிகாரம் பகிர்ந்த ளிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பொருளாதார, பண்பாட்டுச் செயல்பாடுகள் பேணப்பட வேண்டும் என்ற செய்தியை இந்தத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன”. இலங்கை பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் என்ன பேசினார்? தாங்கள் கோரு வது மாநில சுயாட்சியே, அதைப் பெற்றுத்தர இந்தியா தங்களுக்கு உதவவேண்டும் என்றார்.

வாழ்வின் சகல கொடுமைகளையும் அநீதிகளையும் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய பிரச்சனைக்கு நிலையான தீர்வு என்னவாக இருக்கமுடியும் என்பது பற்றி ஒரு நிதானமான முடிவுக்கு வந் திருக்கிறார்கள். இந்த வேளையில் “தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு” என்று மீண்டும் இந்தியா விலிருந்து பேசுவது ஒரு திரைப்படத்தில் வந்த வசனம்போல “இப்படியே உசுப்பேத்தி உடம்ப புண்ணாக்கிட்டாங்களே” எனும் வேலையாகப் போய்விடும். இந்தத் தகாத வேலையை மார்க்சிஸ்ட் கட்சி அன்றும் செய்யவில்லை, இன்றும் செய்யாது.

ஆகவே, அதனுடைய மாநாட்டுத் தீர்மா னம், இலங்கைப் பிரச்சனைக்கான நிரந்தர அரசியல் தீர்வாக மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதையே தொடர்ந்து வலியுறுத்தியது. அது பொத்தாம் பொதுவான தும் அல்ல. மிக அருமையான திட்டவட்ட மான கூறுகளைக் கொண்டது. அவை

1. “இலங்கையில் தமிழ் மக்கள் வசிக் கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங் களை இணைத்து கூடுதல் அதிகாரங் களைக் கொண்ட மாநில சுயாட்சி வழங் கப்பட வேண்டும்.”

2. “தமிழ்மொழியும் ஆட்சிமொழியாக்கப் பட வேண்டும்”

3. “இலங்கையில் இருந்து வந்த நாடா ளுமன்ற ஜனநாயக முறை மாற்றப்பட்டு அதிபராட்சி கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், கூட்டாட்சியில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் நீர்த்துப்போகச் செய்யப் பட்டுள்ளது. உண்மையான கூட்டாட்சி முறை செயல்படுத்தப்படவேண்டும்”

4. “அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளி லும் தமிழர்களையும் பணியில் அமர்த்த வேண்டும். அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் அனைத்து அம்சங் களும் நீக்கப்படவேண்டும்”.

இந்த நியாயமான கோரிக்கைகளுக்காக இலங்கைத் தமிழர்கள் நிச்சயம் போராடுவார் கள். இவற்றுக்காகப் போராடும்போது “எங் களது தேசத்தை உடைக்கப் பார்க்கிறார்கள்” என்று இலங்கை ஆட்சியாளர்களால் உலக நாடுகளிடம் புகார் கூற முடியாது, நீலிக்கண் ணீர் வடிக்க முடியாது.

ஒவ்வொரு நாட்டு மனித உரிமைப் போராளியும் இலங்கைத் தமிழர்களுக்காகத் தயக்கமின்றிப் போராட முன்வருவார்.

இந்தியத் தமிழர்களாகிய நமக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. எந்தவொரு நாட்டில் சிறுப ான்மை தேசிய இனம் ஒடுக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்போம். இலங்கைத் தமிழர்கள் நமது சொந்த பந்தங்கள், தொப்புள் கொடி உறவுகள். அவர்களுக்காக இன்னும் உணர்வுப்பூர்வமாகக் குரல்கொடுப்போம். குறிப்பாக, நமது இந்திய அரசை நமது இந்த உணர்வை எதிரொலிக்கவைப்போம்.

காங்கிரஸ் ஆட்சி வினோதமானது. பக்கத்து நாடு என்பதால் இலங்கை அரசுக்கு விதவிதமாக உதவிசெய்கிறோம் என்கிறது.

ஆனால் அந்தப் பக்கத்து நாட்டு அரசின் தமிழர் விரோதப் போக்கால் தனது சொந்த நாட்டு தமிழகத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சனை கள் வருகின்றன என்பதை அழுத்தமாகச் சொல்ல அதற்கு மனமில்லை. காந்திஜி பிறந்த பூமி இது. எங்கேயோ இருக்கும் தென் னாப்பிரிக்க இந்தியர்களுக்காகப் போராடியவர் அவர். அவரது பெயரைச் சொல்லிக் கொண்டு கட்சியும் ஆட்சியும் நடத்துகிறவர்கள் பக்கத் தில் இருக்கும் நாட்டில் நடக்கும் அநியாயத் தைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றால் காந்திஜிக்குத் துரோகம் இழைக்கிறார்கள் என்று பொருள்.

ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டார்களே எனும் மனக்காயம் காங்கிரஸ் தலைவர்க ளுக்கு இருக்கலாம். அந்தப் படுகொலையை மார்க்சிஸ்ட் கட்சி அன்றும் இன்றும் கண் டிக்கிறது. ஆனால் அதைச் செய்தது தமிழ்க் குழுவே தவிர, மொத்த இலங்கைத் தமிழர்கள் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. அதையே சொல்லிக் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தலையிட மறுப் பது அநியாயம். அக்கிரமம். இந்திய அரசு ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல. பலப்பல கோடி இந்தியர்களுக்குச் சொந்தம், ஏழே கால் கோடி தமிழர்களுக்குச் சொந்தம். நமது வரிப்பணத்தாலும் தான் இந்திய அரசு நடக் கிறது. “இந்திய அரசே! இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நியாய உணர்வோடு தலை யிடு, அழுத்தமாகத் தலையிடு” எனச் சொல்ல நமக்கு சகல உரிமையும் உண்டு.

அதனால் தான் மார்க்சிஸ்ட் கட்சி மாநாட் டுத் தீர்மானம் கூறுகிறது- “இலங்கைத் தமிழ் மக்களின் துயரம் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு மக்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற முறையில் இலங் கைத் தமிழர் பிரச்சனைக்குத் தகுந்த அரசி யல் தீர்வு காண உதவ வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. எனவே, இந்தியா தனது ராஜீய உறவைப் பயன்படுத்தி இலங் கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் இந்தத் தெளி வான, நியாயமான, நிலைபாடுகளை இந்திய அரசுக்குத் தெரிவிக்கத்தான், இது விஷயத் தில் கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கும் அதை எழுப்பத்தான் இன்று (செப்.7) தில்லி யில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையிலிருந்து தனி ரயிலே போயிருக் கிறது. ஆயிரக்கணக்கான தோழர்கள் போயி ருக்கிறார்கள். இது வெறும் தமிழர்களின் பிரச்சனை அல்ல, சகல இந்தியர்களின் பிரச் சனை என்பதை உணர்த்தும் வகையில் பல மாநிலத்து தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேச இருக்கிறார்கள். இதற்கு செவி சாய்க்காமல் இந்திய அரசால் இருக்க முடியுமா?
இவ்வளவு கஷ்டத்திலும் இலங்கைத் தமிழர்களுக்கு இதோவொரு நம்பிக்கை நட்சத்திரம் தெரிகிறது. நட்சத்திரத்தின் வழி சென்று தான் இயேசுவை அடையாளங் கண்டார்கள் ஞானிகள் என்று பைபிள் கூறும். அது உண்மையோ, கற்பிதமோ? ஆனால் இது நிஜம். இந்த சிவப்பு நட்சத்திரத்தின் வழியில் நடந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு நிச்சயம்.
அருணன்




கருத்துகள் இல்லை: