வெள்ளி, 19 டிசம்பர், 2008

நாங்கள் தகர்ப்போம் காரணம் நாங்கள் வலிமையானவர்கள்

இளைஞர் இயக்கங்களும் எழுச்சியும்-4
ஏ.பாக்கியம்

நாங்கள் தகர்ப்போம் காரணம் நாங்கள் வலிமையானவர்கள் என்ற கோப வார்த்தைகள் 1860ஆம் ஆண்டு ருஷ்ய இளைஞர்களின் கொந்தளிப்பின் வெளிப்பாடு. இருப்பதை தகர்ப்பது, தனிநபர் படுகொலைகள் போன்றவற்றின் அடித்தளமாக இருந்த நிஹிலிசத்தை நியாயப்படுத்த வெளிவந்த தந்தையும் மகனும் என்ற நாவலில் இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான வெளிப்பாடுகள் ஏராளம். இந்த நாவல் இளைஞர்களை எழுச்சி கொள்ளச்செய்தது. புதிய மாற்றங்களுக்கு மார்க்கம் தெளிவாக தெரியவில்லை என்றாலும் அழுகி நாற்றமெடுத்த சமூகத்தை பொறுத்துக்கொள்ள முடியாத கோபம்தான் இந்த வார்த்தைகள். எந்தவொரு சமூக அரசியல் மாற்றங்களுக்கும், ஜனநாயக போராட்டங்களுக்கும், முன்தேவையாக இளைஞர்களின் ஆயுதம் தாங்கிய எழுச்சியும், தனிநபர் சாகசங்களும், அமைந்துள்ளன என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இளம் பிரான்ஸ் ஜெர்மனியும், இத்தாலியும் தேசத்திற்கும், தேசிய அரசிற்குமான போராட்டத்தில் இருந்தபோது, பிரான்ஸ் முடியாட்சிக்கு முடிவுகட்டும் போராட்டத்தை மும்முரமாக நடத்திக்கொண்டிருந்தது . பிரான்சின் முடியாட்சியின் மாபெரும் மகுடமாக திகழ்ந்த நெப்போலியன் 1815இ-ல் வாட்டர்லு என்ற இடத்தில் மண்டியிட்டான். இத்தோல்வியே முடியாட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமைந்தது . அடுத்தடுத்து சில மன்னர்கள் மகுடம் தரிப்பதும், துறப்பதுமாக இருந்தனார். இந்த வரிசையில் பத்தாம் சார்லஸ் குடிமக்களுக்கு பல சட்டரீதியான உரிமைகளை அளிக்கும் வாக்குறுதிகளுடன் பதவியேற்றான். சில ஆண்டுகள் அந்த உரிமைகளும் வழங்கப்பட்டன. ஆனாலும் காலம் செல்லச் செல்ல அதிகார மமதை கொண்டு மக்களின் உரிமைகளை பறிக்க ஆரம்பித்தான்.

1830-ஆம் ஆண்டு நான்கு தடைச்சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தான். இதனால் பத்திரிக்கை சுதந்திரம் தடைசெய்யப்பட்டது. 75 சத மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. கீழ்சபை கலைக்கப்பட்டது. நீதித்துறை அதிகாரம் குறைக்கப்பட்டது. அரசியல் ஜனநாயக உணர்வில் ஊறித்திளைக்க விரும்பிய பிரான்ஸ் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் இத்தடைச்சட்டங்கள் கோபக்கனலை மூட்டி பெருந்தீயாக பற்றி எரியச்செய்தது. 1830இ-ல் ஜூலை 27,28,29 ஆகிய மூன்று நாட்களும் பாரிஸ் கலவரப்பூமியாக காட்சியளித்தது. பாரிசின் தெருக்கள் கலவரத்தாலும். ஆர்ப்பாட்டத்தாலும், தடையரண்களாலும், போலீஸ் அடக்குமுறைகளாலும் அமர்க்களப்பட்டது. இளைஞர்கள் தெருக்களில் திரள்வதும், போலீசுடன் மோதுவது-மாக இருந்தனர். அரசியல் அமைப்புகளில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக அணி திரண்டனர். மேற்கண்ட மூன்று நாட்களையும் வரலாற்றில் புகழ் பெற்ற மூன்று நாட்கள் என்று அழைத்தனர். 1830இல் பிரெஞ்ச் நாட்டு உளவுத்துறை கீழ்க்கண்டவாறு குறிப்புகளை எழுதியது: 1830-களில் ரகசியமாக செயல்பட்ட அனைத்து அரசியல் குழுக்களுக்கும் தலைமை ஏற்றது இளைய தலைமுறையாகும் என்றனர்

அரசியல் களம் மட்டுமல்ல, நாடகம் , ஓவியம், இசை என அனைத்திலும் பழைய சிந்தனைக்கு எதிராக இளையதலைமுறை கிளர்ந்தெழுந்தது . விக்டர்ஹியூகோவின் ஹெர்னானி என்ற நாடகம் 1830 இல் பாரிசில் அரங்கேற்றப்பட்டது. சமூகத்தால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு தண்டனைக்கு ஆளான ஒரு இளைஞனைபற்றிய நாடகம் இது. பிரெஞ்ச் நாட்டின் இளைஞர்களை இந்த நாடகம் கட்டி இழுத்தது என்றால் மிகையாகாது. இந்த நாடகம் எரிகிறதீயில் எண்ணெய் ஊற்றுவதாக இருந்தது .

எழுச்சிபெற்ற இளைஞர்கள் மாற்றத்தை விரும்பினர். முடியாட்சி முறையின் அனைத்து அம்சங்களையும் தூக்கி எறியவேண்டும் என்றனர். நெருக்கடிகளை உருவாக்கும் முதலாளித்துவ தொழில் முறையைக்கூட எதிர்த்தனர். கற்பனாவாத சமூகமாற்றத்தை கனவு கண்டனர். ஆனால் மாற்றம் நிகழ்ந்தது. மன்னனின் மகுடம் பறிக்கப்பட்டு பத்தாம் சார்லஸ் பந்தாடப்பட்டான். புதிய மன்னன் லூயிபிலிப் புதிய சலுகைகள் மற்றும் குடியாட்சி உரிமைகள் வழங்கி ஆலியனிஸ்ட்டுகளுடன் (பிரெஞ்ச் புரட்சி காலத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை போற்றுகிறவர்கள்) இணைந்து பதவியேற்றான். இந்த அரசிற்கு ஜூலை முடியரசு அல்லது முதலாளித்துவ குடியரசுஎன்ற செல்லப்பெயர்களும் உண்டு. 1830இ-ல் நடைபெற்ற இந்த புரட்சிக்கும், ஆட்சி மாற்றத்திற்கும், புதிய சலுகைகளுக்கும் நடுநாயகமாக இளைஞர்கள் இருந்தனர். இவர்களை இளம் பிரான்ஸ் அல்லது 1830 தலைமுறை (சீனாவில் தற்போதைய இளைஞர்களை பறவைக்கூடு தலைமுறை என்று குறிப்பிடுவதுபோல்) என்று அழைத்தனர்.

1848 வர்க்கப்போரில் வாலிபர்கள்

1848இல் லூயிபிலிப் மன்னனின் அடக்கு-முறைகளும், முதலாளித்துவ நெருக்கடிகளும் அதிகமாயின. முதலாளிகள் தேர்தல் சீர்திருத்தம் வேண்டும் என்று கோரினர். சோஷலிஸ்ட் தலைவர்கள் தொழிலாளர் குடியரசுவேண்டும் என்று கோரினர். இருவேறு வர்க்கத்தின் மோதலால் பாரிஸ் நகரம் மீண்டும் போர்க்களமாக மாறியது. 8 க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்போராட்டம் பரவியது. ஆட்சியாளர்கள் அதிர்ந்தனர். பலர் ஆட்டம் கண்டனர். அடக்குமுறைகளை ஏவினர். பாரிசில் பாட்டாளிவார்க்கப்படையும் , நேஷனல் கார்ட் என்று சொல்லக்கூடிய முதலாளித்துவ அரசின் தேசியப்படைகளும் மோதிக்கொண்டனர். இதில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர். எழுச்சி நசுக்கப்பட்டது. இக்கால போராட்டங்களையே மார்க்சும், எங்கெல்சும் பிரான்சின் வர்க்கப் போராட்டங்கள் என்று பதிவு செய்துள்ளனர்.

பிரெஞ்ச் நாட்டு இளைய தலைமுறையை பற்றி எழுதுகிறபோது 1866இல் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: பாரிஸ் மாணவர்கள் குழப்பமான சூழலிலும், அவர்களது உரிமைகள் பறிபோகிற சூழலிலும் கூட தொழிலாளர் பக்கமே நின்றுள்ளனர் என்பது முக்கியமானது என்று மார்க்ஸ் எழுதுகிறார். 1865_-66ல் பாரிசில் அகடமி கல்லூரி மாணவர்களின் எழுச்சியையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை பற்றியும் எழுதும்போது இக்கருத்தை வெளியிடுகிறார். இளம் இத்தாலியை போன்று இளம் பிரான்ஸ் ஒரே அமைப்பாக செயல்படவில்லை. பல அமைப்புகளாகவும் , பல கருத்தோட்டங்களை கொண்டதாகவும் அமைந்-திருந்தது. மூன்றுவிதமான முக்கிய பிரிவுகள் இளம் தலைமுறையினரிடம் காணப்பட்டது.

அனைத்து குடியரசுகளையும் தூக்கியெறிய வேண்டும், முதலாளித்துவ தொழில்மயம் கூடாது என்று கோரியவர்கள் இளம் குடியரசுவாதிகளாக அணிதிரண்டனர். கற்பனாவாத சோஷலிசத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் இரண்டாவது பிரிவில் அணிதிரண்டனர். மூன்றாவது வகை இளைஞர்கள் பண்பாட்டுத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்து-வதுதான் முதல்பணி என்று அணிதிரண்டனர். பல்வேறு கருத்துக்கள், அமைப்புகளுடன் களம் கண்டது பாரிஸ். எனவேதான் 19ஆம் நுற்றாண்டில் உலகின் தலைநகராக பிரான்ஸ் இருந்தது என்றபெஞ்சமின் பிராங்ளின் கூற்று பொருத்தமாக உள்ளது. 1789இல் நடைபெற்ற பிரெஞ்ச் புரட்சியில் ஜேக்கோபியன்கள் இயக்கத்தில் கணிசமாக இளைஞர்கள் இருந்தனர். 1830இல் முடியாட்சிக்கு எதிரான போராட்டத்தில் இளையதலைமுறை முக்கிய பங்காற்றியது. 1848லும், 1865-66 மற்றும் 1872இல் பாரிஸ் கம்யூன் எழுச்சியிலும், இளைய தலைமுறை இளம் தொழிலாளர்களாக உழைக்கும் வர்க்கம் பக்கம் நின்றது. பிரெஞ்சு சமூக பரிணாமத்தில் இளையதலைமுறை தனது இருத்தலை உரிய முறையில் வெளிப்படுத்தியுள்ளது.
இளம் அயர்லாந்து
அயர்லாந்தே ! அயர்லாந்தே!
இது,
சிறிய புரட்சியல்ல,!
அடக்குவோரை எதிர்த்த மரணப்போராட்டம்
கொலைகாரர்களுக்கும், உரிமையாளாகளுக்கும் இடையிலான போர்!
அயர்லாந்தே
உனது நிலம் வெட்டி சரிக்கப்படுகிறது!
வீணாக்கி, சிதைக்கப்படுகிறது
தியாகிகள்
சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே நின்று போராடுகின்றனர்.
இவர்களெல்லாம், இளைஞர்கள்,
நமக்கு கிடைத்த விலை மதிக்க முடியாத பரிசுகள்
அவர்களது கண்கள் நெருப்பு ஜுவாலைகளை கக்குகின்றது
காதுகள் தேசப்பற்றை ரீங்காரமிடுகிறது.

இது மேடைப்பேச்சோ, கவிதை வரிகளோ அல்ல. 1848இல் அயர்லாந்தில், ஏற்பட்ட எழுச்சியைப்பற்றி தி நேஷன் என்ற பத்திரிக்கையின் தலையங்கம். இந்த வரிகளுக்கு பின்னால் இளம் அயர்லாந்து அமைப்பின் தியாகமும், அயர்லாந்து மக்களின் வீரம் செறிந்த போராட்டமும் அடங்கியிருக்கிறது. 1842 முதல் 1860 வரை அயர்லாந்தின் போராட்டக்களத்தை இளம் அயர்லாந்து தன் வசப்படுத்தியிருந்தது என்றால் மிகையாகாது.

பிரான்ஸ் முடியாட்சிக்கு எதிராக எழுச்சி -ற்றபோது அயர்லாந்து இங்கிலாந்தின் அத்துமீறிய ஆக்கிரமிப்புக்கு எதிராக அணி திரண்டது. அயர்லாந்தில் 150 ஆண்டு நீடித்து இருந்த கிராம்வெல் வம்ச ஆட்சி பிரிட்டிஷாரை பரவலாக குடியமர்த்தியது. இதன் தொடர்ச்சியாக 1800இல் இங்கிலாந்து அரசு ஒரு இணைப்புச்சட்டத்தின் அயர்லாந்து சட்டமன்றத்தை கலைத்து இங்கிலாந்துடன் இணைத்துக் கொண்டது. அயர்லாந்தின் பொருளாதாரத்தை கடுமையாக சுரண்டியது. கத்தோலிக்க மதத்தின் உள் விவகாரத்தில் தலையிட்டது. இதனால் எதிர்ப்பும் எழுச்சியும் ஏற்பட்டது .

1803இல் இராபர்ட் எம்மட் என்ற இளைஞன் ஐரிஷ் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி டப்ளின் நகரில் எழுச்சியை ஏற்படுத்தினான். போராட்டம் முறியடிக்கப்பட்டு, இராபர்ட் எம்மட் கைது செய்யப்பட்டு பொது இடத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டது. 1808 டேனியல் ஓ கன்னல் என்ற இளைஞன் கத்தோலிக்க சங்கத்தை உருவாக்கி 1829இல் பிரிட்டிஷ் சட்டமன்றத்திற்கு தேர்வு பெற்றான். பிரிட்டிஷ் சட்டமன்றம் செல்லும் அயர்லாந்து உறுப்பினர்களுக்கு தலைமையேற்றான். பிரிட்டிஷ் ஆட்சியை சட்டப்படி முடிவுக்கு கொண்டுவரவேண்டும் . அயர்லாந்திற்கு சுயாட்சி வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். இவ்வமைப்பில் ஒரு பகுதியினர் அயர்லாந்திற்கு முழுசுதந்திரம் என்று கோரினர். இதை ஏற்கமறுத்ததால், 1840இல் இதிலிருந்த இளைஞர்கள் வெளியேறி 1842இல் இளம் அயர்லாந்து என்ற அமைப்பை உருவாக்கினர்.

இளம் அயர்லாந்து அமைப்பில் ஓ பிரையன், மெகர், டேவிஸ், டஃபீ, மைக்கேல், தில்லான் போன்ற 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தலைமை ஏற்றனர். இவர்கள் நகர்புறத்தைச் சேர்ந்தவர்கள். கத்தோலிக்க, பிராட்டஸ்டன்ட் என இருமதத்தையும் சேர்ந்தவாகள்.
இங்கிலாந்திடமிருந்து முழுமையாக விடுதலை பெறுவது, இங்கிலாந்துடன் உறவுகளை துண்டிப்பது. இதற்கு ஆயுதம் தாங்கி போராடுவது என முடிவு செய்தனர். 1845 முதல் 49 வரைஏற்பட்ட அயர்லாந்தின் பஞ்சம் உலகையே உரையச்செய்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்காவிற்கு குடியேறினர். இந்த நெருக்கடிக்கு காரணமான இங்கிலாந்தை எதிர்த்து இளம் அயர்லாந்தினர் ஆயுதம் ஏந்தி போராடினர்.


கருத்துகள் இல்லை: