வெள்ளி, 26 டிசம்பர், 2008

ஜோதிடம் என்பது என்ன? எது?

-பெரியார் ஈ.வே.ரா.

பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து பிறக்கும் காலமா? அப்படிப்பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலைவெளியாகி, நிலத்தில்பட்டு, கால்நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது, கால் தலை ஆகிய எல் லாம் மருத்துவச்சி கையில் விழுந்த காலமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்தநேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒருபுறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும், அந்த நேரத்தை சரியாக எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? குழந்தை கீழே விழுந்ததும், அது உயிருடன் இருக்கிறதா, இல்லையா? ஆணா, பெண்ணா போன்றவைகளைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியிலிருக்கும் ஆண் களிடம் சொல்லச் சிறிது நேரமாவது செல் லும்; அந்தச் சேதியைக் கேட்டவன் நேரத் தைக் குறிக்க அங்கேயே அவனுக்கு கடிகாரம் வேண்டும்; அந்தக்கடிகாரம் சரியான மணிகாட்டுவதா என்று தெரிய வேண்டும்; கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கத்திலுள்ள கடிகாரம் அதுவுமில்லாவிட் டால், உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும், பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒருபுறமிருக்க, அந்த நேரத்தால் பலன் சொல்லுவதானால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன் கள் எவ்வளவு இருக்கக்கூடும்’ மற்ற ஜீவன் களை எல்லாம் தள்ளிவிட்டு, வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக்கொண்டாலும், உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார் கள் என்ற கணக்குப்படி பார்ப்போமானால், சென்னை முதலிய பட்டணங்களின் சாதா ரண அனுபவங்களின்படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 226666 குழந்தைகள் பிறப்பதாகக் கணக்கு ஏற்படுகின்றது.

33 கோடி கொண்ட இந்தியாவுக்கு மாத் திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்துக்கு சுமார் 33 குழந்தைகள் வீதம் பிறக்கின்றதாகக் கணக்கு. ஆகவே, இந்த 33 குழந்தை களுக்குமாவது சாதகப்பலன் ஒத்திருக்க முடியுமா? இவைகளுக்கு சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா?

நிமிஷக் கணக்கே இப்படி அதாவது நிமி ஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்பதாக இருக் கும்போது, சோதிடம் சொல்லுவதற்குப் போது மான காலமாகிய ஒரு லக்கினம், நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்?

சாதாரணமாய், ஒரு சாதகமென்பது வருடம், மாதம், தேதி, கிழமை, மணி, அந்த சமயத்தில் லக்கினம், நட்சத்திரம் ஆகியவை களைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக, பிரமாதி வருடம், புரட்டாசி மாதம் புதன் கிழமை காலை சுமார் 10 மணிக்கு, விருச்சிக லக்கினத்தில், அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு சோதிடனிடம் கொடுத்துவிட்டால் இதன் பேரில் சோதிடம் சொல்லக்கூடும். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5-1/2 நாழிகை உடையதாகும். ஒரு மணிக்கு 2-1/2 நாழிகை, இந்த நேரத்திற்கும் அதாவது 176 நிமிட நேரத்திற்குள் உலகத்திலே 20160 குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க, மேலும் இந்த லக்கினத்தில் நடப்பன, பறப் பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக் கண்ணாடிப்பூச்சி முதல்யானை வரை யிலுள்ள உயிர்களின் குழந்தைகள் பலகோ டிக்கு மேல் பிறந்திருக்க வேண்டும்.

இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப்பட்ட கணக்குப் படிக்கு 4158 குழந்தைகள் பிறந்திருக்க வேண் டும். ஆகவே, அன்றைய தினம் அந்த விருச் சிக லக்கினத்தில் பிறந்த காரணத்திற்காக மேற்படி 4158 பேருக்கும் வாழ்க்கையில் ஒரே விதமான பலனாய்ப் பலன் அனுபவமிருக்க முடியுமா? அந்தப்படி இருக்கின்றதா?

தவிர, இந்தப் பலன் அனுபவங்கள் மனித னுக்குத் தானாக ஏற்படுவதா? அல்லது, இரட்சிக்கிற கடவுள்களின் தன்மையால் ஏற்படுவதா? அல்லது முன் பிறவியில் செய்த கருமத்தின் பலனாய்ப் பலன் ஏற்படுவதா? அல்லது, விதியின் பயனாய்ப் பலன் ஏற் படுவதா?

இந்நான்கிலும் மனிதனுக்குப் பலன் அவனது சொந்த இஷ்டத்தால், செய்கையால் தற்சம்பவமாய் ஏற்படுமானால் மேல்காட்டிய வைகளில் அது தவிர மற்றவைகள் மூன்றும் அடிபட்டுப் போகும். கிரகங்களின் தன்மை யால் ஏற்படும் என்றால் இதைத்தவிர, மற்ற மூன்றும் அடிபட்டுப்போகும். முன்ஜென்ம கர்மத்தின்படி என்றால் இது தவிர, மற்ற மூன்றும் அடிபட்டுப் போகும். ஆகவே மனித னுடைய அனுபவ பலனுக்கு இவற்றுள் எதா வது ஒன்றுதான் காரணமாய் இருக்க முடி யுமே தவிர. இந்நான்கும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருக்க முடியாது. இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும், இன்னின்ன காலத்தில் இன்னின்ன கிரகங் கள் இன்னின்ன கிரகங்களை பார்ப்பதாலும் இந்த சாதகன் இன்ன இன்ன காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரியான பிறந்த காலத்தை கண்டுபிடிக்கப்பட்ட சாதகன் ஒருவனுக்கு சரியான கெட்டிக்காரச் சோதிடன் ஒருவன் பலன் சொல்லுகிறான் என்பதாக வைத்துக் கொள்வோம்.

இவற்றுள் இந்த சாதகன் இன்ன வேளை யில் இன்னாரைக் கொன்று ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால், அந்த கொல்லப் பட்டவனுடைய சாதகத்திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தால் ஒழிய, ஒரு கால மும் பலன் சரியாக இருக்க முடியாது. இந்த இரண்டு சாதகர்களுடைய பலனும் இருவ ருக்கும் தெரிந்துவிட்டதாகவே வைத்துக் கொண்டாலும், இவர்கள் எந்தக்காரணத்தைக் கொண்டாவது தப்பித்துக்கொள்ள முடியுமா என்றால் ஒரு காலமும் முடியாது. ஏனெனில் தப்பித்துக் கொண்டால் சோதிடம் பொய்யாகி விடும். ஒரு சமயம் தப்பிக்கொள்வதாகவே வைத்துக்கொண்டால் அந்த இருவர்கள் சாதகத்திலும் அந்த முடிவும் இருக்கும்.

அப்படி இருக்குமானால், இந்த விஷயத் தை அவர்கள் இருவரும் தெரிந்து ஜாக்கிர தையாய் இருந்தாலும், தெரியாமல் கவலை யற்று அஜாக்கிரதையாயிருந்தாலும் இவ்விரு வருக்கும் கொலையும் சிறைவாசமும் கிடைக்க முடியவே முடியாது என்பதிலும் சந்தேகமில்லை. ஏனெனில் சாதகத்தில் ஏற்கெனவே இருக்கின்றபடி நடந்துதானே தீரும்!

இதற்குச் சாந்தி, தோஷ பரிகாரம் என்ப வைகள் செய்வதன் மூலமாவது ஏதாவது பலனை மாற்றிவிட முடியுமா என்பதையும் யோசிக்கலாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்பதால் இன்ன கெடுதி யான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும், இன்ன கிரகதேவ தைக்கு இத்தனை நாள் அர்ச்சனை செய்தால் நிவர்த்தியாகும் என்று சோதிடன் சொல்வா னானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனை மூலமாகவோ அந்தக் கிரகங் களை அந்தக் காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா? அல்லது, அவைகள் மாறுமா என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திரமல்லாமல், இம்மாதிரி சாந்தியோ, பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண் டாமா? அப்படிக்கில்லாத பட்சம், எந்தவித சாந்தியாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் சோதிடம் பொய்யென்றே ஆகிவிடும்.

முடிவாக, எந்தக் காரணத்தைக் கொண் டாவது சோதிடம் உண்மை என்றாகி விட் டால், எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா? சாதகப்பலன் படி நடவடிக்கை நடந்தால் அதற்கு சாதகன் மீது குற்றம் சொல்வது மடமையும் யோக்கிய தைப் பொறுப்பற்ற தன்மையும் ஆகாதா? ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் இழப்பு ஏற்படும் என்று இருந்தால், அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்கு திருட் டுத் தொழிலில் பொருள் லாபம் கிடைக்கும் என்று சாதகப்பலன் இருந்துதான் ஆக வேண்டும். அதுமாத்திரமல்லாமல், திருட்டுக் கொடுத்தவனுக்குப் பணம் கொடுத்து யார் நஷ்டமடைந்தார்களோ, அவர்கள் சாதகத் திலும் இன்ன காலத்தில் இன்னாருக்கு பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடையவேண்டும் என்று இருந்தே ஆகவேண்டும். ஆகவே இந்த படி யெல்லாம் சோதிட உண்மை இருந்துவிட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜென்ம வினைப்பயன் எங்கே? இவைகளுக்கு வேலை ஏது? என்பதைபற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

you are doing excellent work in eradicating false belief. Proceed in behalf of other rationalists. We are very greatful to your work. Thank you.

விடுதலை சொன்னது…

தங்கள் கருத்துக்கும் தங்கள் வருகைக்கும் நன்றி

Sathish Kumar KM சொன்னது…

super appu