ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஒரு புத்தகத்தை முன்வைத்து விவாதம் அம்பலப்படுத்துகிறது... திசைதிருப்புகிறது...

உறுத்தும் நிஜங்களோடு நெஞ்சை உலுக்கும் புத்தகம் ஒன்றை நீங்கள் படிக்க வேண்டுமா? ஈக்வடார் - பனாமா - கொலம்பியா- இந்தோனேசியா- இராக்-ஈரான்-ஆப்கானிஸ்தான்-சவுதி அரேபியா என ஒவ்வொரு நாட்டிலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் நிகழ்ச்சிப் போக்குகளின் சூத்திரதாரி யார் என்பதை நீங்கள் அறிய வேண்டுமா? வளர்ச்சி பற்றிய பிரம் மாண்டமான உடுக்கை அடிப்புகளோடு நம்மிடையே உலா வரும் பொருளாதார நிபுணர்களின் உண்மை முகத்தை நீங்கள் அறிய வேண்டுமா? இன்று ஏகாதிபத்தியம் உலகை கபளீகரம் செய்ய பின்னும் சூழ்ச்சி வலைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமா? இப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்- நீங்கள் அவசியம் படித்தாக வேண்டும்: இன்றே படித்தாக வேண்டும் ஒரு புத்தகம். அதுதான், ஜான் பெர்க் கின்ஸ் எழுதியஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ .”


மேலே உள்ளவை 2007ம் ஆண்டு மே மாதம் முதல் நாள் தீக்கதிர் நாளேட்டில் ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய நூலுக்கு நான் எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி. இப்போது அதே ஆசிரியர் ‘அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு’ என்ற பெயரில் எழுதிய புத்தகம் வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

முந்தைய புத்தகம் போலவே இதுவும் அமெரிக்க பேரரசின் முகமூடிகளை கழட்டி குரூரமான நிஜமுகத்தை தரிசிக்க வைக்கிறது. இந்த புத்தகம் ஐந்து பாகங் களை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆசியா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய நான்கு பூமண்டல பகுதிகளிலும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய திரு விளையாடல்களையும், திருகுதாளங்க ளையும் முதல் நான்கு அத்தியாயங்கள் அம்பலப்படுத்துகின்றன.

“1997ம் ஆண்டு தென்கிழக்கு ஆசியா நச்சுப் புகை மூட்டத்தால் மூடப்பட்ட போது அது உலகெங்கும் தலைப்புச் செய்தியானது. இந்தோனேஷியாவில் காட்டுத் தீ கட்டுப்படுத்த முடியாத அளவு பற்றியெரிந்ததால் வந்த புகை. பொருளாதார அடியாட்களால் தூண்டப் பட்ட ஊழலின் விளைவு அது. பீகிகள், டியாக்குகள், மெலானிசியாக்கள், மற்ற இதர உள்ளூர் கலாச்சாரங்கள் ‘பொருளா தார அதிசயத்தின்’ இதர பலிகடாக்கள். அவர்களது நிலங்கள் திருடப்பட்டன. அவர்களது வாழ்க்கையும், பாரம்பரியமும் அழிக்கப்பட்டன. இந்த நவீன இனப்படு கொலையை மனிதர்கள் அனுபவிக்கும் துன்பத்தால் மட்டும் அளவிட்டுவிட முடியாது. அது மனிதகுல ஆன்மாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.” - என்று அவர் சொல்வது ஆழ்ந்த பொருள்மிக்கது.

அதுமட்டுமல்ல, அடுத்தவர்கள் துன் பத்திலும் கொள்ளையடிப்பதுதான் அமெ ரிக்கா என்பதை சுனாமியை பயன்படுத்தி அவர்கள் எப்படியெல்லாம் கொள்ளைய டித்தார்கள் என்ற அத்தியாயம் மூலம் தோலுரித்துக்காட்டுகிறார் பெர்க்கின்ஸ். குறிப்பாக, இந்தோனேசியாவில் காடு களை அழிப்பதற்கு எதிராக ஆசே தீவுக் கூட்ட மக்கள் தீவிரமுடன் போராடி வந் தார்கள். ஆனால், சுனாமியின் பாதிப்பால் அத்தீவுக் கூட்டம் துயரத்தில் தத்தளித்த போது இந்தோனேசிய ராணுவமும், பன்னாட்டு நிறுவனங்களும் அங்கே தீவிரமாக போராடிய போராளிகளை ஒழித்துக்கட்டவும், காடுகளை சூறை யாடவும், சுனாமி நிவாரணத்தை கேடய மாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட் டுகிறார். அதோடு இந்தோனேசியா ராணு வமே அந்நாட்டு நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்பட்ட கூலிப்படை யாகிவிட்டதை சித்தரிக்கிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் எப்படி யெல்லாம் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டது என்பதை இரண்டாவது பாகத்தில் பல சம்பவங்கள் மூலம் சாட்சியமளிக்கிறார். “1950 மற்றும் 60 களில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கியூபாவை தவிர வேறெங்கும் காலூன் றவே இல்லை” என்று கூறுகின்ற பெர்க் கின்ஸ். ஆயினும், அமெரிக்க கையாளாக மாறிப்போன ஆட்சியாளருக்கு எதிரான லத்தீன்அமெரிக்க மக்கள் பெற்ற வெற் றியை பட்டியலிடுகிறார். அது, அமெரிக் காவின் தோல்வி என சித்தரிக்கிறார். பொலிவியாவில் தண்ணீரே எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பதை சொல்லுகின்ற பகுதி சுவையானது மட்டுமல்ல, நாம் கற்றுக்கொள்ள வேண் டிய பாடமும்தான்.

தண்ணீரை காசு கொடுத்து வாங்கு வதன் மூலம், எதுவானாலும் விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதன் மூலம் முதலாளித்துவ முறைக்கு மக்களை பயிற்றுவிக்கமுடிகிறது என பன்னாட்டு நிறுவனம் கணித்தது எவ்வளவு நுட்ப மானது!. ஆயினும், பொலிவியா மக்கள் தண்ணீருக்காவும், தங்கள் விடுதலைக் காகவும் போராடி வென்றதை சரியாக பதிவு செய்கிறார்.

லத்தீன்அமெரிக்காவிலும் இன்னபிற நாடுகளிலும் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் - அது விமானவிபத்தாக இருக்கலாம் அல்லது வேறு எதாவது வகையில் இருக்கலாம் - அனைத்தும் அமெரிக்க உளவுத்துறையால் எவ்வளவு கனகச்சிதமாக நடத்தப்பட்டன என்ப தையும்; தேவைப்பட்ட இடங்களில் விலைமாதர்களை எப்படி பயன்படுத்தி னார்கள் என்பதையும்; ஊழலுக்கு உரம் போட்டு வளர்த்துவிட்டு, தனக்கு தேவைப்படும் போது அதையே அவர் களுக்கு எதிரான ஆயுதமாக பயன் படுத்தியதையும் படிக்கின்ற போது நமது நாட்டில் நடைபெறுகின்ற பல சம்பவங் கள் நினைவுக்கு வராமல் போகாது.

மத்திய கிழக்கில் எண்ணெய்க்காக நடந்த சதிவேலைகளை - எப்படி எகிப் தை அவர்கள் கட்டுப்படுத்தினார்கள் என்பதை அறிகின்ற போது நமக்கு அமெரிக்க அரசாங்கத்தின் மீது தீராக் கோபம் வரும். நாமும் பூகோள வரை படங்களை பார்த்திருக்கின்றோம். ஆனால், ஏகாதிபத்திய குள்ள நரிகள் ஒவ்வொரு நாட்டின் பூகோளத்தையும் துல்லியமாக ஆய்வு செய்து, அதன் பொருளாதார-கலாச்சார அம்சங்களை எடைபோட்டு, தங்களின் கொள்ளைக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என திட்டம் போடும் அத்தியாயத்தை ஒவ்வொருவரும் கட்டாயம் இரண்டு முறை படிக்க வேண்டும். ஏனெனில், ஏகாதிபத்தியத்தின் ஒவ்வொரு வார்த் தைக்கு பின்னாலும் அவர்களின் லாப வெறியும், ஆதிக்க வெறியும் வெட்கமற்று பல்லிளித்துக் கொண்டிருப்பதை அப் போது உணரமுடியும்.

வளர்ந்துவந்த முஸ்லிம் சகோதரத் துவத்தை குறித்த அவர்களின் பயம் வார்த் தைகளில் வெளிப்பட்டது. “நல்லது அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், அவர்களை வெல்ல வேண்டும், சமரசம் செய்து கொள்ள வேண்டும், விலைக்கு வாங்கிவிட வேண்டும், அழித்துவிட வேண்டும்” இதுதான் அமெரிக்க குள்ள நரிகளின் தாரகமந்திரமாக இருந்தது.

“எகிப்து முன்னர் ஐரோப்பாவுடன் இருந்தது”

“இப்போது”

“அது அமெரிக்காவின் மடியில் அமர்ந்திருக்கிறது” - என்ற எக்காளச் சிரிப்பின் பின்னால் வஞ்சகத்தனங்கள் வெட்டவெளிச்சமாய் வெளிப்படு கின்றன.

“அமெரிக்காவின் உன்னதமான ராணுவத்தளமாக ஆகியிருக்கும் ஒரு தீவில் மக்கள் எவரும் வாழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாது” என டிக்கோகார்சியா பற்றி அமெரிக்க அடியாட்கள் கொக்க ரித்ததை இந்நூல் பதிவுசெய்திருக்கிறது. இதைப் படித்து பதறாமல் இருக்க முடியுமா?.

தொண்டுநிறுவனங்கள், வளர்ச்சிக்கு உதவிசெய்வதாக இருக்கிறதா அல்லது வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு மக் களை ஆட்டுமந்தைகளாக்கும் ஆயு தமா? இந்த கேள்வி இந்நூலில் விதைக் கப்பட்டிருக்கிறது. ஒரு பகுதியில் தொண்டுநிறுவனங்களின் சித்து வேலை கள் குறித்து விபரங்கள் உள்ளன. மறுபுறம் தொண்டுநிறுவனங்களின் மூலமே பெரிய மாற்றங்களை சாதித்துவிடமுடியும் என் கிற மாயை இந்நூல் நெடுக விதைக் கப்பட்டுள்ளதுதான் மிகப்பெரிய ஆபத்து.

இந்நூல் பெர்க்கின்ஸின் முதல் நூலான ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ போன்றதாகவும் உள்ளது. ஆனாலும், முந்தைய நூலை போல மனச்சாட்சியின் உறுத்தலாக மனந்திறந்த உரையாடலாக இந்நூல் இருப்பதாகக் கூறமுடியாது. மாறாக, முந்தைய நூலின் தொடர்ச்சியாகவும், அதில் விடுபட்டுள்ளவைகளையும், எஞ்சியுள்ளவைகளையும், புதிய தகவல் களையும் கோர்த்து தருகின்ற முயற்சி யாகவும் அமைந்துள்ளது. அந்த வகை யில் இந்த நூலை பாராட்டலாம். ஆனால், முந்தைய நூலில் போகிற போக்கில் சொல்லப்பட்ட ‘மாற்றுவழி’ இந்தநூலில் தூக்கலாக மேலோங்கி வந்திருக்கிறது. அதிலும், ‘உலகை மாற்றுதல்’ என்ற கடைசி பாகம் மிகவும் நுட்பமாக பின்னப்பட்டுள்ளது.

பெர்க்கின்ஸ் இந்நூல் முழுக்க ஏகாதி பத்திய நாடுகளையும், கம்யூனிசத்தையும் ஒருசேர ஆதிக்கம் செலுத்தும் வல்ல ரசாகவே காட்டுகிறார். சீனாவை அமை தியான அரக்கன் என்கிறார். தலாய் லாமாவோடு கைகுலுக்குகிறார். உலக மக் கள் வறுமையிலும், சுற்றுச்சூழல் சீரழி விலும், வேலையின்மையிலும் சிக்கி சீர ழிவதை காட்டுகிறபோதே, அது முத லாளித்துவத்தின் உடன்பிறந்த வியாதி என்பதை காட்ட மறுக்கிறார். மாறாக, முத லாளித்துவத்தை கெட்ட முதலாளித் துவம், நல்ல முதலாளித்துவம் என பிரித் துப் பார்க்கிறார். பன்னாட்டு நிறுவனங் களைக் கூட மனித முகங்கொண்ட நிறு வனங்கள், அப்படி அல்லாதவை என கூறுபோட்டுப் பார்க்கிறார். மேலும், லாப வெறி கொண்ட நிறுவன அதிகார வர்க் கத்தால்தான் பிரச்சனை ஏற்படுகிறது. அவர்கள் திருந்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற மாயையையும் விதைக்கிறார். தொண்டு நிறுவனங்களை யும், அரசியலற்ற பொது அமைப்புகளை யும் முன்னிலைப்படுத்துகிறார்.

இதையெல்லாம் படிக்கின்ற போது சமீபத்தில் தில்லியில் கூடிய கம்யூ னிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச கூடுகையின் போது எச்சரித் தது மிகச் சரியானது. இன்றைக்கு ஏற் பட்டிருக்கின்ற நெருக்கடியும், துன்ப துய ரங்களும் முதலாளித்துவத்தின் உள் ளுறை விளைவுகள். ஆனால், அதை மூடி மறைத்து இது சில நிறுவனங்களின் பேராசை மற்றும் திறமையின்மை அல் லது தவறான நிர்வாகம். இவைதான் பிரச் சனையின் மூலகாரணம். எனவே, சில் லரை சீர்திருத்தங்கள் மூலம் பிரச்ச னையை சீர்செய்துவிடலாம் என ஏகாதி பத்திய ஆதரவு அறிவுஜீவிகள் செய்கிற பிரச்சாரம் தவறானது என்பது மட்டு மல்ல, திசைதிருப்புவதுமாகும் என அக் கூடுகை சரியாக படம்பிடித்தது. மேலும், சோசலிசம்தான் இறுதி மாற்று. இதற்கு வேறு மாற்று இல்லை என அக்கூடுகை பிரகடனம் செய்தது. இதனை நினை விற்கொள்ள வேண்டும். இந்நூல் அப் படிப்பட்ட சரியான புரிதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் குரூர முகத்தை அம்பலப்படுத்துகின்ற அதே வேளையில், மறைமுகமாக முத லாளித்துவத்திற்கு மேல் பூச்சுபூசி, வாசனை திரவியங்கள் தடவி மயக்கும் மோகினியாக மாற்றிவிட முடியும் என்கிற மயக்கமே இந்நூலின் பிரதான அடிச் சரடாக இருக்கிறது. எனவே, மிகுந்த அரசியல் விழிப்புணர்வுடன் இந்நூலை படிக்க வேண்டும், விமர்சிக்க வேண்டும். அப்போதுதான், தொழிலாளி வர்க்கம் தனது இலக்கை சரியாக எய்தமுடியும்.

சு.பொ.அகத்தியலிங்கம்


அமெரிக்கப் பேரரசின்

ரகசிய வரலாறு,

ஜான் பெர்க்கின்ஸ்

தமிழில்: அசோகன் முத்துசாமி,

பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை-18.

பக்கங்கள் 400, விலை ரூ.150/

4 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

pakirvukku nandri

பெயரில்லா சொன்னது…

இதையும் படிக்க வேண்டும்.

ஜோதிஜி சொன்னது…

நன்றி. பாரதி புத்தகாலயத்தின் மின் அஞ்சல் முகவரியை அனுப்பி வைக்க இயலுமா?

விடுதலை சொன்னது…

Email: thamizhbooks@gmail.com
website: www.thamizhbooks.com