வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

கோபுரம் :ஜீவாவும் குப்பை: கருணாநிதியும்
















பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும்!

சமீபத்தில் தோழர் ப. ஜீவானந்தத்தின் பேத்தி திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தியிருக்கும் ஒரு கருத்து நகைப்பை வரவழைத்தது. அவர் பேசும்போது, தனக்கும் தோழர் ப. ஜீவானந்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறித் தன்னைத் தோழர் ஜீவாவுக்கு நிகராக, தோழர் ஜீவாவின் தோழராக முதல்வர் கருணாநிதி நிலைநிறுத்த முயன்றிருப்பது அப்பட்டமான சரித்திரப் புரட்டு.

தொடர்பு என்றால் நெருங்கிய பழக்கமா? அல்லது அவரது வாழ்வுக்கும் இவரது வாழ்வுக்கும் ஒருமைப்பாடு உள்ளது போல் தோற்றமா? ஜீவா 1906-ம் ஆண்டு பிறந்தவர். இவரோ 1924-ம் ஆண்டு பிறந்தவர். வயது அளவில் 18 ஆண்டுகள் மூத்தவர் ஜீவா. அப்படியிருக்க பழக்கம் நெருங்கிய தொடர்பாக இருக்க வாய்ப்பில்லை. ஜீவாவுடைய வாழ்வுக்கும் கருணாநிதியின் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதுபோல் பேசியிருப்பதன் மூலம் எவ்வளவு பெரிய பொய்யை சர்வசாதாரணமாக அவிழ்த்துவிட முயல்கிறார் முதல்வர் கருணாநிதி.

இன்று இவர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும், இவர் நாவசைந்தால் அதில் வரும் அத்துணை வார்த்தைகளும், பத்திரிகைகளிலே அச்சேறுவதாலும், தனது குடும்பச் சொத்தாக இரண்டு தொலைக்காட்சிச் சேனல்களை வைத்துக் கொண்டிருப்பதாலும் இவர் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுமோ? இவர் கூறினால் நான்கும் மூன்றும் எட்டாகி விடுமா என்ன?

தோழர் ஜீவாவோ தியாகத்தின் இமயம். முதல்வர் கருணாநிதியோ குடும்பப்பாசம் என்கிற சுயநலத்தின் ஒட்டுமொத்த உருவம். பொது வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இருவருடைய வாழ்க்கையும் ஒன்று சேர்த்துப் பார்க்க முடியாத இரு வேறு துருவங்கள்.

இன்று ஜீவா இல்லை என்பதாலும், இன்றைய தலைமுறையினர் பலருக்கும் ஜீவாவைப் பற்றித் தெரியாது என்பதாலும் ஜீவாவுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறித் தன்னை ஜீவாவுடன் ஒப்பிட முதல்வர் கருணாநிதி துடிப்பது, பரங்கிமலை தன்னை இமயத்துடன் ஒப்பிட்டு மகிழ்வது போலல்லவா இருக்கிறது.

1927-ம் ஆண்டு மகாத்மா காந்தி, இலங்கை சுற்றுப் பயணம் செல்லும் முன், காரைக்குடி அருகே சிராவயல் என்ற கிராமத்தில் "காந்தி ஆசிரமம்' என்ற பெயரில் ஜீவா ஒரு ஆசிரமம் நடத்துவதாகக் கேள்விப்பட்டார். சுப்பிரமணிய சிவாவுடன் மகாத்மா காந்தி சிராவயலுக்கு விஜயம் செய்தார். ஆசிரமம் நடத்தி வரும் ஜீவாவிடம் ஆசிரமத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

காந்தியாரிடம், "சபர்மதி ஆசிரமத்தில் நோயால் அவதிப்பட்ட கன்றுக் குட்டியை விஷ ஊசி போட்டுக் கொன்றதாக ஒரு செய்தி சுதேசமித்திரனில் பார்த்தேன். தாங்கள்தான் அந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். அஹிம்சையே உருவான தாங்கள் அதைச் செய்யலாமா?' என மகாத்மாவிடம் ஜீவா கேள்வி கேட்டார். இப்படி ஒரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத மகாத்மா, ஜீவாவின் நேர்மையான, துணிச்சலான செயல்பாட்டால் கவரப்பட்டார். "இன்று நான் பரிசுத்தமான ஒரு மனிதரைச் சந்தித்தேன்' எனக் கூறினார் மகாத்மா.

அதற்குப் பிறகு தேசத்தைப் பற்றியே பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்த ஜீவாவைப் பற்றி, மகாத்மாவுக்கு ஒரு சந்தேகம்! முழுநேரத் தேசத்தொண்டு செய்கின்ற இவர் வசதி உள்ளவரா என்பதுதான் அந்தச் சந்தேகம்! எப்படிக் கேட்பது என ஒருவிதத் தயக்கம் மகாத்மாவுக்கு!

மகாத்மா, ஜீவாவிடம் "உங்களுக்குச் சொத்து அதிகம் இருக்கிறதா?' என்று கேட்டுவிட்டார். "நான் ஓர் எளியவன்' என்று சொல்ல ஜீவாவுக்கு ஏதோ ஓர் இனம்புரியாத கூச்சம். "இந்த இந்தியா தான் என் சொத்து' என்று பதிலளித்தார் ஜீவா.

மறுகணமே மகாத்மா, "இல்லை இல்லை, நீங்கள் தான் இந்த இந்தியாவுக்கே சொத்து' எனக் கூறி நெகிழ்ந்தார். இந்தியாவின் சொத்து என மகாத்மா பாராட்டினாரே அந்த ஜீவாவும் இந்தியாவின் சொத்தான ஸ்பெக்ட்ரத்தை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்று, தனது இரும்புப் பெட்டியை நிரப்பிய ஆட்சியின் தலைமகனான கருணாநிதியும் ஒன்றா? இவர் தன்னை ஜீவாவுடன் ஒப்பிடுவது எப்படிச் சரி?

ஒருசமயம் ஜனசக்தி அலுவலகத்தில் எழுத்துப் பணியில் மும்முரமாக இருந்த ஜீவாவைப் பார்க்க ஒரு பெண் வந்திருந்தார். ஜீவா இருக்கிறாரா? என அலுவலகப் பணியாளர்களிடம் கேட்க, அவரும் ஜீவா இருக்கிறார் என்று கூறி, அந்தப் பெண்மணியை ஜீவாவின் அறைக்கே அழைத்துச் சென்றார்.

எழுத்தில் முழு கவனத்துடன் இருந்த ஜீவா, அந்தப்பெண் வந்திருப்பதைக்கூட கவனிக்காமல் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதி முடித்தவுடன் ஜீவா இயல்பான பரிவுக்குரலுடன் "என்னம்மா வேண்டும்?' என்று கேட்டார்.

அந்தப் பெண்ணோ, "உங்களைத்தான் பார்க்க வந்தேன்' எனக் கூறினார்.

ஜீவாவோ, "நீ யாரம்மா?' எனக் கேட்டார்.

அந்தப் பெண் பதில் ஏதும் கூறாமல் கண்ணீர் மல்க ஜீவாவையே பார்த்துக்கொண்டு இருந்தார்.

ஜீவாவோ, "நான் என்னம்மா கேட்டுவிட்டேன்? நீ யார்?' என மறுபடியும் கேட்டவுடன் கண்ணீர்விட்ட அந்தப் பெண், ஒரு பேப்பரை எடுத்து, "என் தாத்தா பெயர் குலசேகரதாஸ், என் தாயின் பெயர் கண்ணம்மா' என்று எழுதி ஜீவாவிடம் கொடுத்தார்.

ஜீவாவின் கண்கள் குளமாகிவிட்டன. கண்ணாடியைக் கழற்றிவிட்டு தன் வேஷ்டியின் ஒரு முனையை கையில் எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டே அதே பேப்பரின் பின் பக்கத்தைத் திருப்பி "நீ தான் என் மகள் குமுதா' என்று எழுதி அந்தப் பெண்ணிடம் கொடுத்தாராம்.

நெடுநாள்கள் சிறையில் இருந்து, கட்சிக்காகப் பல மாநிலங்களுக்குச் சென்று, பல காலம் கழித்து சென்னை வந்த ஜீவாவுக்கு குழந்தையாக இருந்த தன் மகள் பெரிய பெண்ணாக ஆனது கூடத் தெரியாமல் இருந்தது என்பதுதான் உண்மை.

இப்படி நாட்டுக்காக உழைத்துத் தனது குடும்பத்தையே மறந்த ஜீவாவும், தனது குடும்பம் செல்வச் செழிப்புடன் எல்லா துறைகளையும் ஆக்கிரமித்துக் கொடிகட்டிப்பறக்கவும், நாட்டின் சொத்தை விற்றுத் தனது குடும்பச் சொத்தை அதிகரிக்கவும் பொதுவாழ்க்கையைப் பயன்படுத்தும் கருணாநிதியும் ஒன்றா?

1957-ல் வண்ணார்பேட்டை தொகுதியில் ஜீவா கம்யூனிஸ்ட் சார்பாகப் போட்டியிட்டபோது, ஜீவரத்தினம் என்ற ஒருவரை நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்த பெருமை தி.மு.க.வுக்கு உண்டு. தி.மு.க. முதன்முதலில் பங்கேற்ற தேர்தல் அது. அப்போதெல்லாம் 234 தொகுதிகளிலும் தி.மு.க. நிற்காது. வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு சில தொகுதிகளில் மட்டுமே நிற்கும். தி.மு.க. போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸýக்கு எதிரான சுயேச்சைகளை ஆதரிக்கும்.

அந்தச் சமயத்தில் ஜீவாவை எதிர்த்து வேட்பாளர் யாரையும் நிறுத்த வேண்டாம் என்று இடதுசாரி இயக்கத்தினர் கெஞ்சிக் கேட்டபோதும்கூட, அதைப் பொருள்படுத்தாமல், ஜீவரத்தினத்தை தி.மு.க. சார்பில் நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்தது தி.மு.க. ஜீவரத்தினத்தை வண்ணார்பேட்டை தொகுதியில் நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்ததில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. இன்று ஜீவாவைப் பற்றிப் பேச தி.மு.க.வுக்கும் கருணாநிதிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

மொழி வழி மாகாணம் பிரிக்கும்போது, விடுபட்ட தமிழ்பேசும் சில பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளத்தோடு இருந்தன. அதைத் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களில் தோழர் ஜீவாவும் முக்கியமானவர். பின் அந்தப் பகுதிகள் தமிழகத்தோடு சேர்க்கப்பட்டது. அதற்குப் பாராட்டுக் கூட்டம் காமராஜ் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. அப்போது காமராஜ் நாகர்கோவில் அருகேயுள்ள பூதப்பாண்டிக்குச் சென்று நிகழ்ச்சிக்குக் கூடவே அழைத்துச் செல்ல விரும்பி ஜீவாவின் வீட்டுக்குச் சென்றார்.

ஜீவா காமராஜை வரவேற்றார். தான் வந்த நோக்கத்தை காமராஜ் ஜீவாவிடம் கூறினார். ஜீவாவோ, ""இப்போது நான் உங்களுடன் வர இயலாது. சுமார் அரை மணி நேரமாவது ஆகும். நீங்கள் செல்லுங்கள். நான் பின்னாலே வந்து விடுவேன்'' என்று கூறினார்.

காமராஜ் விடுவதாக இல்லை. ஜீவா வராமல் இருந்துவிடக்கூடாது என்பதால், ""நான் அரைமணி நேரம் காத்திருக்கிறேன். இரண்டு பேரும் ஒன்றாகச் செல்வோம்'' எனக் கூறினார். ""இல்லை... இல்லை, அரை மணி நேரத்துக்கும் மேலே ஆகும். நீங்கள் போங்கள்'' என ஜீவா மறுக்கிறார்.

""என்ன காரணம்?'' என காமராஜ் கேட்க, அதற்கு ஜீவா, ""என்னிடம் இருப்பது இரண்டே இரண்டு உடைதான். ஒன்றை அணிந்து இருக்கிறேன். இன்னொன்றைத் துவைத்துக் காயப்போட்டு இருக்கிறேன். இன்றைக்குப் பார்த்து வெயில்கூட சரியாக அடிக்கவில்லை'' என வருத்தத்தோடு கூறினாராம். முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜின் விழிகளில் கண்ணீர் ததும்பியது என்று நேரில் பார்த்தவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த ஒப்பற்ற தியாகி ஜீவாவும் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் தனது குடும்பத்தினரை உயர்த்தி மகிழ்ந்திருக்கும் கருணாநிதியும் ஒன்றா?

சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட இயக்கத்தைச் சேர்ந்த தோழர் ஜீவாவுடன் தன்னை முதல்வர் கருணாநிதி ஒப்பிட்டுக் கொள்வதன் மூலம் சரித்திரப் புரட்டை அவிழ்த்துவிட முயல்கிறார். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியின் கதையாக அல்லவா இருக்கிறது இது.

நன்றிகள்
செ. குணசேகரன்
தினமணி

கருத்துகள் இல்லை: