வியாழன், 31 மார்ச், 2011

தி.மு.க தேர்தல் ஜாதகம்




பகுத்தறிவு பகலவனின் வாரிசுகளாகக் கூறிக் கொள்ளும் திமுகவினர் தேர்தல் பயம் காரணமாக பிரச்சார வாகனத்துக்கு தேங்காய் உடைத்து புறப்படுவதும், பரிகார பூசைகள் செய்ய புறப்படுவதும் சகஜமாகி விட்டதால் நாமும் ஒரு ஜோசியரை பிடித்து திமுக வின் தேர்தல் ஜாதகத்தை கணித்து பலன் சொல்லச் சொன்னோம். இனி ஜோதிட மாமணி கொங்கு மண்டல ஜோதிட சக்கரவர்த்தி பெருந்துறை பெருமாள் கூறுவதை அவர் வாயாலேயே கேட்போம்.

எதிர்க் கட்சிகள் பலமான கூட்டணி அமைத்தது திமுகவிற்கு ஜென்மச் சனி ஆரம்பமாகி விட்டதைக் காட்டுகிறது. சுயமரியாதைக் காரர்களான திமுகவினர் டெல்லிக்கு படை எடுத்து கேட்டதைக் கொடுத்து கூட்டணி அமைத்த நிகழ்வு இனிமேல் காங்கிரஸ் கையில் திமுக இல்லை என்றாகி விட்டது. தமிழகத்தில் 63 நாயன்மார்கள் என்று வர்ணிக்கப்பட்ட காங்கிரஸின் பல கோஷ்டி வேட்பாளர்கள் உள்குத்து காரணமாக வெற்றி பெறுவது சந்தேகமே. இந்நிலையில் திமுக ஆட்சி கூட்டணி ஆட்சியாவது அமைக்க வாய்ப்பு இருக்குமா? என்பது சந்தேகமே. இனி திமுக ஜாதகத்தை விரிவாகப் பார்ப்போம்.
முதலில் ஜாதகத்தில் பலமான எதிர்க் கட்சி கூட்டணி காரணத்தால் திமுகவுக்கு ஜென்மச் சனி பிடித்திருக்கிறது என்று கூறினோமே? சனியின் உக்கிரத்தை குருவின் இடத்தில் இருக்கும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டி வினியோகம் மூலமும், சுக்கிரன் இடத்தில் இருக்கும் இலவச ஒரு ரூபாய் அரிசி வினியோகம் மூலமும் சரி செய்து விடலாம் என்று திமுக நினைக்கிறது. ஆனால் சனி தனது இடத்தில் உள்ள 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு பிரம்மாஸ்த்திரத்தை ஏவியதால் திமுகவின் அனைத்து அஸத்திரிங்களையும் தவிடு பொடியாக்கி திமுகவை அனைத்தையும் இழந்து நிர்வாண கோலத்தில் இருக்கச் செய்து விட்டது. அதுதான் சனியின் மகத்துவம். மேலும் தேர்தல் கமிஷனர் மூலம் திருமங்கல பட்டுவாடாக்களை செயல் இழக்கும் முயற்சியில் சனி கிரகம் இறங்கியுள்ளது. சனி பகவானை திருநள்ளாறு சென்று வழிபட்டு பரிகார பூஜை செய்தால் எதிர்கால ஸ்பெக்ட்ரம் வழங்குகளிலுருந்து சற்று தப்பிக்கலாம்.

மருத்துவம், கலைஞர் காப்பீடு, போன்ற திட்டங்களை வைத்துள்ள புதன் கிரகத்தால் கரையேறி விடலாம் என்று திமுக நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் மற்ற கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள பிரச்சனைகளால் திமுகவின் கனவு ஓட்டை விழுந்த படகின் நிலைமையாகி விட்டது.சூரியனின் வீட்டில் உள்ள சினிமாத் துறையில் குடும்ப ஏக போகம் காரணமாக சினிமாத் தொழில் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. வல்லான். வகுப்பதே வாய்க்கால் என்ற நிலை சினிமாத் துறையில் ஏற்பட்டு விட்டதால் தமிழகத்தின் முன்னணி நட்சத்திரமான விஜய் படங்களுக்கே தியேட்டர் கிடைக்காத நிலை. சினிமா கதை வசனம் எழுதிய கலைஞரின் அரசியலுக்கு முடிவுரை எழுத சினிமாக்காரர்கள் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

செவ்வாய் வீட்டைப் பார்த்தோமானால் எப்படி இருந்த மந்திரிகள் இப்படி ஆகி விட்டார்களா என ஆச்சரியப்படத் தோன்றும். பத்து வருடத்துக்கு முன் உள்ள சொத்துக் கணக்கும் இப்போதுள்ள சொத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி. மக்களை முட்டாளாக்கி மந்திரிகள் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கி கல்வித் தந்தைகளாகி விட்டார்கள். ஓட்டு போடும்முன் மக்களுக்கு இது ஞாபகம் வராமல் இருக்க வேண்டுமானால் வைட்டமின் ‘ப’ வைத் தரவேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. மக்கள் பங்களிப்பில்லாமல் வளர்ச்சி இல்லை. வளர்ச்சியின் பயனாக வந்த அமிர்தத்தை சிலர் எடுத்து அருந்த, கஷ்டங்கள் துன்பங்கள் என விஷத்தை எங்களுக்கு அளிப்பதா என மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டதால் திமுக கூடாரம் குழப்பமடைந்துள்ளது.

சந்திரன் வீட்டிலிருந்து விலை வாசி உயர்வு திமுகவை மிரட்டிக் கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் மளிகைப் பொருள்கள் வாங்கி விட்டு 1000 ரூபாய் கொடுத்தால் மீதி ரூ. 200 மளிகைக் கடைக்காரர் கொடுப்பார். ஆனால் திமுக-காங்கிரஸ் பொருளாதார கொள்கை காரணமாக குண்டூசி முதல் அனைத்து சாமான்களும் விலை ஏறி விட்டது. திமுக ஆட்சியில் மளிகை வாங்கி விட்டு ரூ.1000 கொடுத்தால் மேலும் ரூ.300 கேட்கிறார் மளிகைக் கடைக்காரர். மக்கள் சேமிக்கும் நிலை மாறி மக்கள் கடனாளியாக திரியும் நிலை ஏற்பட்டு விட்டது. சாதாரண பொது மக்கள் எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ராகு வீட்டைப் பார்த்தால் குடும்ப அரசியல், வாரிசு அரசியல், மக்களை திமுக மிரட்டிக் கொண்டுள்ளதைக் காண முடிகிறது. ஒவ்வொரு மந்திரிகளின் வாரிசுகளும் மூத்த உறுப்பினர்களை ஏறி மிதித்து சீட் வாங்கி முன்னேறும் நிலை. கட்சி ஜனநாயகம் கேலிக்குரியதானதால் மக்கள் வேதனையுடன் இருப்பது திமுக கூட்டணிக்கு பாதகமே.

கேது வீட்டைப் பார்த்தோமானால் திமுக வின் ரியல் எஸ்டேட் வன்முறைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கொள்ளை, தலீத் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான நிலை ஆகியவற்றைப் பார்க்கலாம். தேர்தல் வந்தால் நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்த போது எங்களை மறந்தது ஏன்? என கேள்வி எழுப்பிக் கொண்டுள்ளனர்.

எனவே திமுக இந்த தேர்தலைப் பொறுத்தவரை ஐசியு-வில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளியின் நிலையில் இருப்பதை ஜாதகத்தில் காண முடிகிறது. ஏதாவது அதிசயம் நடந்தாலொழிய திமுக பிழைப்பது சந்தேகமே.

தீக்கதிர்


கருத்துகள் இல்லை: