வியாழன், 10 நவம்பர், 2011

உங்களால் இதை நம்ப முடியுமா

வரும் எட்டாண்டுகளில் 28 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் நடப்பாண்டிலேயே துவங்கும் என்று கூறிய அவர், வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கு நவீன முறையில் பயிற்சிகள் தரப்படும்.

புதுமையான எண்ணங்களோடு அவர்கள் பணிகளில் ஈடுபடும் வகையில் தயார் செய்யப்படுவார்கள். விவசாயம், உற்பத்தித்துறை, கட்டுமானம், சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக, 1,075 கி.மீ. நீளமுள்ள புதிய ரயில்பாதையை உருவாக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதில் தொழில்நுட்ப வல்லுநர்களோடு, பெரிய இளைஞர் பட்டாளத்தை
யும் இறக்கிவிடப் போகிறார்கள். கட்டுமானத்துறை வல்லுநர்களாக அந்த இளைஞர்களை உருவாக்குவதே அரசின் திட்டமாகும். மேலும், இந்தத் திட்டத்தால் 3 ஆயிரத்து 500 கவுரவமாக வேலைகள் உருவாகப் போகிறது. இத்தனைக்கும் இப்பணியின் முதல் கட்டத்திலேயே இவ்வளவு வேலைகள் உருவாக்கப்படுகின்றன.

வெறும் உடலுழைப்பு மட்டுமல்லாமல், அறிவுசார்ந்த பணியாகவும் இவற்றில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சாவேஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.தொடரும் தேசிய மயம்
குறைவான தொழிலாளர்களை வைத்துக் கொண்டு சுரண்டும் பெரும் நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் நாட்டுடைமையாக்கும் வேலையை வெனிசுலா அரசு மேற்கொள்கிறது. தொலைத்தொடர்பு, கனிமம், பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகள் இப்படித்தான் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. அதேவகையில்தான் பிரிட்டனின் வெஸ்டே குழுமத்தைச் சேர்ந்த துணை நிறுவனமும், விவசாயப் பணிகளைச் செய்து கொண்டிருந்த நிறுவனமுமான அக்ரோ புளோராவை தேச உடைமையாக்கும் உத்தர வில் சாவேஸ் கையெழுத்திட்டுள்ளார். நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நடவ டிக்கை எடுக்கப்படுவதாக வைவ் தொலைக்காட்சி மூலம் மக்க ளுக்கு ஆற்றிய உரையில் தெரி வித்தார்.

இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக 2 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் இருந்தன. அரசின் நேரடி நிர்வாகத்திற்கு இந்த நிலங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய சாவேஸ், இது மக்களின் சொத்தாகும். ஒரு சிலரின் சொத்தாக மாற்றும் அவர்களது முயற்சி நீர்வழிகளையும் ஆறுகளையும் மாசுபடுத்தவே உதவும் என்று குறிப்பிட்டார். இந்த தேசமய நடவடிக்கையால் இறைச்சி விற்பனை அதிகரிக்கும். மாடு வைத்திருக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பயனடைவார்கள். அதைச் செய்ய தேசமய நடவடிக்கைதான் ஒரேவழி. அரசுத்தரப்பில் பேசியபோது நிறுவனத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் டாலர்கள் கேட்கிறார்கள். அதனால் வலுக்கட்டாயமாகத்தான் இந்த நிறுவனத்தை மக்களுக்கு சொந்தமாக்கியுள்ளோம் என்றார்.

“சமூக உற்பத்தி வர்த்தகம்”வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அடுத்த உத்தியாக சமூக உற்பத்தி வர்த்தகம் என்ற திட்டத்தையும் சாவேஸ் அறிவித்துள்ளார். அராகுவா மற்றும் கராபோபோ மாகாணங்களுக்கு இடையில் உள்ள டகாரிகுவாஸ் என்ற இடத்தில் இந்தத் திட்டத்தை வெனிசுலா அரசு அறிமுகப்படுத்துகிறது. இதற்காக 13 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் பத்து சமூக உற்பத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து அமைக்கிறார்கள். இது பற்றிப் பேசியுள்ள சாவேஸ், முதலாளித்துவவாதிகளின் கைகளில் இந்த நிலங்கள் திறமையாகப் பயன்படுத்தப்படவில்லை. மேலும் அவர்கள் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுத்தி வந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உணவில் தன்னிறைவு என்ற இலக்கையும் சேர்த்து அடையும் நோக்கத்தோடு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சாவேஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது வெனிசுலா மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளுக்கு இறக்குமதியையே நம்பி இருந்தனர். சாவேசின் முன்முயற்சிகள், தேசமய நடவடிக்கைகள் அந்த இறக்குமதியில் பெரும் அளவைக் குறைக்க உதவின. பதுக்கலை ஒழிக்கவே உணவுத்துறையில் செயல்படும் பெரும் நிறுவனங்களை அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களாக மாற்றி வருகிறோம் என்கிறார்கள் வெனிசுலா அரசு அதிகாரிகள்.

சே மிகவும் சரியாகவே சொன்னார். இது வெறும் வீடுகளைக் கட்டுவதல்ல, அல்லது தானியத்தையோ, ஆடைகளையோ உற்பத்தி செய்வதல்ல. அனைத்தையும் தாண்டி, புதிய ஆணை, புதிய பெண்ணை, புதிய சமூகத்தை உருவாக்குவதாகும் என்கிறார் சாவேஸ்.

கருத்துகள் இல்லை: