திங்கள், 6 ஜூன், 2011

விக்கிலீக்ஸ்: சீனா தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை நடக்கவில்லை

ஜூன் 4, 1989 அன்று சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களை அந்நாட்டு ராணுவம் சுட்டுக்கொன்று விட்டதாக பரப்பப்பட்டது அண்டப்புளுகுதான் என்று விக்கிலீக்ஸ் கேபிள்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் கூடி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை அந்நிய மாணவர்கள் தூண்டிவிட்டார்கள் என்றும், அந்த அந்நிய மாணவர்களுக்கு சீன எதிர்ப்புச் சக்திகள் ஆதரவு இருந்தது என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தச் செய்திகளை மறைத்துவிட்டு, அந்தச் சதுக்கத்தில் ரத்தக்களறி ஏற்பட்டதாகவும், மூவாயிரத்துக்கும் குறையாத மாணவர்கள் சீன ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. அந்தச் செய்திகளை அப்படியே வெளியிட்டு பிரச்சாரத்தை இந்திய மண்ணிலும் தொடர இந்திய ஊடகங்கள் உதவின.

ஏகாதிபத்தியத்தின் பல்வேறு சட்டவிரோத வேலைகளை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ், தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை எதுவும் நடைபெறவில்லை என்பதை சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கேபிள்கள் மூலமாக நிரூபித்துள்ளது. பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து மூன்று கேபிள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 அதன் விபரங்கள் வருமாறு:

கிளர்ச்சி செய்து வந்த மாணவர்கள் தலைநகர் பெய்ஜிங்கின் மையப்பகுதியை வாரக்கணக்கில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சாலைகளுக்கு நடுவில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து நடைபெற்றால் தடை செய்திருந்தனர். அந்தத்தடைகளை யாரும் அகற்றி விடக்கூடாது என்பதற்காக ஆட்கள் மாறி, மாறி காவலுக்கு இருந்தனர். தியானன்மென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய மூவாயிரம் மாணவர்கள் காவல்துறையோ அல்லது ராணுவமோ உள்ளே நுழைய முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தனர். அதனால் வாரக்கணக்கில் தங்கள் போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளை மீறி காவல்துறையும், ராணுவமும் தியானன்மென் சதுக்கத்திற்குள் நுழைந்துவிட்டன.

மாணவர்களைக் கலைப்பதற்காக கண்ணீர்ப்புகைக் குண்டுகளை மட்டுமே ராணுவம் கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே ஆர்ப்பாட்டம் செய்து வந்த மாணவர்கள் கலைந்து சென்றனர். இதை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவரும், சீனாவை வெறுப்பேற்ற நோபல் பரிசு வழங்கப்பட்டவருமான லியு சியா வோபோ உறுதிப்படுத்தினார். அவ்வாறு அமைதியாகக் கலைந்து செல்லுமாறு அவரும் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதை, சிலி நாட்டுத் தூதுவரும் உறுதிப்படுத்துகிறார். மாணவர்கள் அனைவரும் அமைதியாக சதுக்கத்தின் தென் கிழக்கு மூலை வழியாக வெளியேறினர் என்கிறார் அவர்.

இந்த சம்பவம் நடந்தபோது பிபிசி செய்தி நிறுவனத்தின் செய்தியாளராகப் பணியாற்றிய ஜேம்ஸ் மில்ஸ், 2009 ஆம் ஆண்டில் தனது செய்தி தவறானது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். “தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை நடக்கவில்லை. உள்ளே நுழைந்த ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதற்குப்பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.” தியானன்மென் சதுக்கத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் நடந்த மற்றொரு சம்பவத்தில்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட நேர்ந்தது என்கிறார் அவர். சதுக்கத்திற்கான பாதையை அடைத்திருந்த கும்பலுடன் ராணுவமும், காவல்துறையும் மோத நேர்ந்தது. அப்போது, கண்ணீர்ப்புகைக்குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தியும் நிலைமை கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போதும்கூட, அந்தக்கும்பல் ஏற்படுத்தியிருந்த தடைகள்தான் அவர்களுக்கே பாதகமாக இருந்தது.

தியானன்மென் சம்பவத்தை நேரில் பார்த்த சிலி நாட்டுத்தூதுவர், சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவம் சுடவில்லை என்கிறார். மற்றொரு நாட்டின் தூதரும் இதை உறுதிப்படுத்தினார். அவர் சதுக்கத்தின் செஞ்சிலுவைச் சங்க கூடாரத்தில் நின்று பார்த்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், திடீரென்று ராணுவம் தோன்றியபோது நான் பயந்தேன். ஆனால் அங்கு துப்பாக்கிச்சூடு எதுவும் நடக்கவில்லை என்றார். அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைகளும், உட்கட்சி சுற்றுக்கு விடப்பட்ட குறிப்புகளும் இத்தகைய செய்திகளைத்தான் கூறுகின்றன.


இவ்வாறு விக்கிலீக்ஸ் கேபிள்கள் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் எவ்வாறெல்லாம் பொய்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதை விக்கிலீக்ஸ் பெரிய அளவில் தொடர்ந்து அம்பலப்படுத்தியுள்ளது.

(செய்தி ஆதாரம் : டெலிகிராப்(ஜூன் 4)

கருத்துகள் இல்லை: