செவ்வாய், 11 அக்டோபர், 2011

ஆம்... என்னால் முடியும்! வழிகாட்டுகிறது கியூபா கல்விமுறை

அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கல்விக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்விகூட கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கியூபாவில் தொடர்ந்து உயர்கல்வியையும் அனைவருக்கும் கிடைக்கும் ஒன்றாக மாற்றியுள்ளனர். இதுதான் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள இடதுசாரி அரசுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.


கியூபா சின்னஞ்சிறு நாடு. ஆனால் அதுபட்ட துயரமோ மாபெரிது. ஸ்பெயின் நாட்டின் காலனியாக இருநூறு ஆண்டுகள் இருந்த நிலையில், ஜோஸ் மார்டி தலைமையில் புரட்சி மூலம் 1902-ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டது. துவண்டுவிடாமல் உலக வல்லரசை எதிர்கொள்ளும் துணிவு மிக்க நாடு. அமெரிக்கா தொடுத்த நெருக்கடிகளுக்கு அடிபணியாது நிமிர்ந்து நிற்கும் நாடு. ஐம்பது ஆண்டுகட்கு மேலாக பொருளாதார முற்றுகையிட்டும் அடிபணியாதது மட்டுமின்றி, நேரிடையாகப் போரிட்டும் அமெரிக்கா வெற்றி பெற இயலாது ஒதுங்கிக் கொண்டுள்ளது கியூபா மக்களது வீரத்திற்கும், அதன் ஒப்பற்ற தலைவர்களது சீரிய தலைமைக்கும் சான்றாகும். பொம்மை அரசுகளை அமெரிக்கா, கியூபா மக்கள் மீது திணித்தது. பாடிஸ்டா என்ற கொடுங்கோலன் ஆட்சியில் மக்கள் பட்ட துயர் சொல்லி மாளாது.

கல்வியைத் தனியார்க்கு தாரை வார்த்தது மட்டுமின்றி, அரசுக் கல்விக்கூடங்கள் புறக்கணிக்கப்பட்டன. இது தானே நம் நாட்டில் இன்றைய நிலை. இருநூறு ஆண்டுகட்கு மேலான ஹவானா பல்கலைக் கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டு, அவ்விடத்தில் ஹெலிகாப்டர் தளத்தை நிறுவினான் பாடிஸ்டா. சுதந்திர தாகம் எடுத்த கியூபா மக்களால் சே குவேரா வழிகாட்டுதலில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சி வழியே 1959-ஆம் ஆண்டில் மக்களாட்சி நிறுவப்பட்டது.

புரட்சி அரசு கல்வி சீர்திருத்தத்திற்கு முதலிடம் கொடுத்தது. அருட்தந்தை ஜோஸ் அகஸ்டின் கபல்லரோவும் அவரது சீடர் அருட்தந்தை பெலிக்ஸ் வரேலாவும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே கியூபக் கல்வி முறையையொட்டி பல திட்டங்களைத் தீட்டியிருந்தனர். அவற்றையும், பாலோ ப்ரையரே வகுத்த தர்க்கவழிக் கல்விமுறையையும் ஒருங்கிணைத்து புதிய கியூபக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டது. எழுத்தறிவு இயக்கத்தின் மூலம், இரண்டே ஆண்டுகளில் அனைவரும் கற்றவர் என்ற நிலையை உருவாக்கி, யுனெஸ்கோவின் சான்றிதழும் பெற்று உலக சாதனை படைத்தது புரட்சி அரசு.

Yo, so puedo ( yes I can)  என்ற ப்ரையரேயின் கோஷத்தை முன்வைத்து படித்தவர் அனைவரும் நாடு முழுவதும் சென்று கல்வி பரப்பினர். வெறும் படிக்கத் தெரிவதுடன் சிந்தித்துக் கற்கவும், வினா எழுப்பவும், வினாக்களுக்கு விடைகாணவும் அறியும் வகையில் இவ்வெழுத்தறிவு இயக்கம் நடைபெற்றது. இதற்காகப் பல நூல்கள் வெளியிடப்பட்டன. இயக்கத்தில் பங்குபெற்றோர் ஒவ்வொருவரும் கையில் லாந்தரும், புத்தகப் பையையும் எடுத்துக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றியதை உலக நாடுகள் பலவும் பாராட்டின.

கியூபாவின் முயற்சி 11 மொழிகளில் யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டது இத்திட்டத்தின் சீர்மையைக் காட்டுகின்றது. நாமும் அறிவொளி இயக்கம் தொடங்கி அரைகுறையாகக் கைவிட்டு, தொடங்கிய நிலைக்கே சென்றதை நினைவு கூருவது அவசியம் . வளர்ந்த நாடுகளான நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளும் கியூபா எழுத்தறிவு முறையை அறிமுகப்படுத்தின என்பது வரலாறு. குறைந்த விலையில் நூல்கள் வெளியிட்டும் , ஊர் தோறும் நூலகங்கள் அமைத்தும், ஆண்டு தோறும் நூற்சந்தை நடத்தியும், அவற்றையொட்டி சர்வதேசக் கல்விக் கருத்தரங்குகள் நடத்தியும், எழுத்தறிவு இயக்கம் தொய்வு அடையாமல் சிறந்தோங்க வழி செய்யப்பட்டது. அந்நாட்டிலுள்ள ஐந்து அரசுத் தொலைகாட்சிகளில் இரண்டு கல்விக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டன. இவ்வியக்கம் நடைபெறும்பொழுது ஜான் கென்னடி தனது பன்றி வளைகுடாப் போரைத் தொடங்கினார் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பாடிஸ்டாவால் இடிக்கப்பட்ட ஹவானா பல்கலைக்கழகம் புதுப்பிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு பல்கலைக் கழகம், ஒரு மருத்துவப் பள்ளி என்று தொடங்கப் பெற்று, உயர்கல்வியும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. Universalation of university Education என்று அழைக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பல்லாயிரம் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டு தம் நாட்டிற்குடுமின்றி,உலகம்முழுவதும்இலவச மருத்துவ சேவையில் ஈடுபடச் செய்தமை மிக உயர்ந்த மனித நேயச் செயல் என்றால் மிகையாகாது.


விடுதலையின் வழிகாட்டியாகவும் , விடுதலையைத் தக்க வைக்கவும் கல்வி தேவையாதலால், தொடர்ந்து மிகச்சிறந்தகல்வியைகியூபாமக்களுக்கு வழங்குவது புரட்சி அரசின் தலையாய பணியென்று பிடல் காஸ்ட்ரோ கூறியதை நினைவு கூர வேண்டும்

4 கருத்துகள்:

ஜெயசீலன் சொன்னது…

அருமையான் பதிவு... இங்க உள்ள அரசியல்(வாதி)வியாதிகளுக்கு இதெல்லாம் தெரியுமா தோழா..??

விடுதலை சொன்னது…

நிச்சயமாக தெரியும் தோழா அவர்களுக்கு பிரச்சனை என்வேன்றால் ஏழைகள் எல்லாம் உயர்கல்வி பெறக்கூடாது என்றநோக்கம்தான் காரணம்.

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

பெயரில்லா சொன்னது…

\\அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கல்விக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்விகூட கேள்விக்குறியாகியுள்ள\\

காமெடிக்கு ஒரு அளவே இல்லையா... கொஞ்சம் வெளி நாடு சென்றவர்களிடம் அங்கு உள்ள கல்வி முறை பற்றி கொஞ்சம் கேட்டு பாருங்கள்.

ஐரோப்பிக கல்வி முறையோடு க்யூபாவின் கல்வி முறையை ஒப்பிடும் உங்களை நினைக்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது....

விடுதலை சொன்னது…

உங்கள் அறியாமையை நினைத்துதான் எனக்கு கவலையாக உள்ளது இனையத்தில் இருக்கும்போது சும்மா இருக்காமல் உலகில் கல்வியில் சிறந்து விளங்கும் நாடு எது என்று தேடிப்பார்க்கலாமே கியூபாதான் 100 சதவிதம் இலவச கல்வி அளிக்கிறது. கல்வியில் சிறந்து விளங்குகிறது.

Cuba tops the class in UN development report

Cuba's education index is equal highest in the world, along with Australia, Finland, Denmark and New Zealand. Cuba's education index is 0.993 of a possible score of 1.