அண்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஏப்ரல், 2011

கருணாநிதியால் களங்கப்பட்ட கறுப்பு- சிவப்பு!


கேரள- தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத் தேர்தல் களம் குறித்து எழுதும்போது, ஆளும் கட்சியான திமுகவின ரால், பெருமளவு வாக்காளர்களுக்கு லஞ்சம் தரப்பட்டது குறித்தும், ஒருகாலத்தில், மாநில சுயாட்சி, சுயமரியாதை குறித்தெல்லாம் பேசிய அந்தக் கட்சி, தேர்தலில் எப்படியா வது வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே கார ணத்திற்காக இந்த அளவிற்கு, இறங்கியது குறித்தும் விரிவாக எழுதியிருந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த திமுகவின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் எம்.பி, “மஞ்சள் பார்வையாக மாறிய சிவப்புப் பார்வை” என்ற தலைப்பில் முரசொலி ஏட்டில் (18.4.11) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை மனம்போனபடி திட்டித் தீர்த்துள்ளார்.

திமுக, தேர்தல் களத்தில் தனது சாத னைகளை எல்லாம் எடுத்துக்கூறி, மக்கள் மன்றத்தில் வாக்குக் கேட்டதாக தனது கட்டு ரையைத் துவக்கியுள்ளார். திமுக அரசின் சாதனையை வெளிநாட்டு ஏடுகள் பாராட் டும் வண்ணம், பல்வேறு மகிழுந்து நிறுவனங் கள் அமையப் பெற்றதாக கூறியுள்ளார். அவ் வாறு அமைந்த மகிழுந்து நிறுவனங்களில், தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதிக்கப் பட்டதா? இந்தப் பிரச்சனையில் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அடிக்கடி கூறிக் கொள்ளும் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, தொழிலாளர்களின் பக்கம் நின் றதா? அல்லது பன்னாட்டு நிறுவனங் களுக்கு நடைபாவாடை விரித்ததா? என் பதையும் இளங்கோவன் சேர்த்துக் கூறி யிருக்கலாம்.

வெளிநாட்டு ஏடுகள் பாராட்டுவது இருக்கட்டும்; திமுக அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைத்த தமிழ்நாட்டு ஏடுகள் மீது சாதிய முத்திரை குத்தப்பட்டு, எந்த அளவிற்கு புழுதிவாரி தூற்றப்பட்டது என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.

சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்பதாக இருந்தால், தேர்தல் ஆணை யமே திக்குமுக்காடிப் போகும் அளவிற்கு, தமிழகம் முழுவதும் பணவெள்ளத்தைப் பாய விட்டது ஏன்? ‘மத்திய - மாநில அதிகாரங் களைப் பயன்படுத்தி, எங்களால் எந்த அள விற்கு கொள்ளையடிக்க முடிந்துள்ளது பாருங்கள்’, என்ற சாதனையையும் எடுத் துக் காட்டத்தானா?

ஆதிக்க சக்திகளை அடியோடு வேர றுக்க தந்தை பெரியார் இயக்கம் கண்டார் என்று இளங்கோவன் கூறுகிறார். ஆனால், திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில், அதி முக ஆட்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் கள் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல் லப்பட்ட காட்சியை, “ஞாபகம் வருதே” என்று அடிக்கடி ஒளிபரப்பியதே... இது யாரை திருப்திப்படுத்த என்பதை விளக்குவாரா? ‘தத்துவ மேதை’ டி.கே.சீனிவாசனின் புதல்வர்.

தத்துவ மேதை டி.கே.சீனிவாசனுக்கு, திமுகவில் என்ன மரியாதை தரப்பட்டது என்பதையும், கனிமொழியின் மகன் ஆதித் யாவுடன் கிரிக்கெட் விளையாடி சில அமைச் சர்கள் “காக்கா” பிடிக்க முயல்வதாக ஆனந்தவிகடன் எழுதியதையும் சேர்த்து நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிய வில்லை.

கேரளத்தில் கே.ஆர்.கௌரிக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக கண்ணீர் வடிக் கிறார், இளங்கோவன். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை எந்த வொரு முடிவாக இருந்தாலும் அது கட்சி யின் அனைத்து நிலைகளிலும் முறையாக விவாதித்தே எடுக்கப்படும். திமுகவைப் போல மத்திய அரசிலிருந்து விலகுவதாக உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி முடிவெடுப்பது, அந்த முடிவை, மு.க.அழகிரி, தயாநிதி மாறன் என்று முதல்வர் குடும்பத்து உறுப்பினர்கள் மட்டுமே பேரம்பேசி முடித்து, அந்த முடிவை கைவிடுவது என்ற நடை முறையெல்லாம் இல்லை.

மாநிலம் கடந்து எப்போதோ நடந்ததற்கு இப்போது வருத்தப்படும் இளங்கோவன், சென்னை மயிலாப்பூரில், கட்டிய மனைவி யையே ஏமாற்றிய கே.வி.தங்கபாலு குறித் தும், ஒரு சில வார்த்தைகள் கூறியிருக்கலாம்.

கொள்கைவாதிகளான இடதுசாரி களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்கிறார், இளங்கோவன். இவர் வருத்தப்படும் அள விற்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் அவ சர நிலை காலத்தில், அதை எதிர்த்து நின்ற கட்சியான திமுக, காங்கிரசிடம் இந்த அள விற்கு தெண்டனிட்டு கேட்ட இடங்களை கொடுக்கிற அளவிற்கு, பணிந்துபோகும் அளவுக்கு என்ன நடந்தது? என்பதுதான் புரியாத புதிராக, அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாக இருக்கிறது.

பிரகாஷூம், பிருந்தாவும் அரசியல் வானில் திகழ்வதை திமுக விமர்சித்த தில்லை என்று அழகாக முடிச்சவிழ்க்கிறார், இளங்கோவன். தோழர் பிரகாஷ்காரத், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படிக் கும் போதே மாணவர் இயக்கத்தால் ஈர்க் கப்பட்டு, பொதுவாழ்க்கைக்கு வந்து, தனது உழைப்பால் பொதுச்செயலாளராக உயர்ந் தவர். அதேபோல தோழர் பிருந்தாவும் மாணவப் பருவத்திலிருந்தே இயக்கத்தில் இணைந்து முன்னேறியவர். இயக்கத்தில் இணைந்த இவர்கள், இல்வாழ்விலும் இணைந்தனர். தயாநிதிமாறனைப் போன்று, ஒரு சில நாட்களிலேயே எம்.பி.யாகி, மத்திய அமைச்சர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டவர் கள் அல்ல!

தோழர் உமாநாத், அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் படிக்கிற காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, கட்சி யில் இணைந்து சிறைவாசத்தையும், சித்ர வதைகளையும் இன்முகத்தோடு ஏற்று, போராட்டக் களங்களுக்கு தலைமையேற்று, தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தவர்.

தோழர் பாப்பா உமாநாத், குழந்தைப் பருவத்திலேயே, பொன்மலைப் போராளி களுக்கு உதவி, அவர்களால் அன்போடு “பாப்பா” என்றழைக்கப்பட்டு, அதுவே அவ ரது பெயராகவும் மாறியது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தனது தாயின் முகத்தைக் கூட பார்க்க, கட்சியி லிருந்து விலகுவதாக எழுதிக்கொடுத்தால் அனுமதிப்பதாகவும் சிறை நிர்வாகம் கூறிய நிபந்தனையை ஏற்க மறுத்து தியாகம் செய்தவர். அவரும் பல ஆண்டுகள் சிறை யில் இருந்தவர். இருவரும் இல்லறத்திலும், இயக்க நல்லறத்திலும் இணைந்து நின்றனர். கட்சியிலேயே அவர் இல்லை என்று அறி விக்கப்பட்ட மு.க.அழகிரியைப் போன்று, அமைச்சர் பதவியை அடைந்தவர்கள் அல்ல! தோழர் உ.வாசுகியும், கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து படிப்படியாக உழைத்து முன்னேறியவர்தான்.

இதையெல்லாம் குடும்ப அரசியல் என்று திமுக ஒருபோதும் கூறமுடியாது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, குடும்பத்தோடு கட்சியில் இருப்பது என்பது, போராட்டங்களில் பங்கேற்பதற்கே அன்றி, பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அல்ல!

முதல்வர் குடும்பத்தில் மட்டுமின்றி, அமைச்சர்களின் வாரிசுகள் பலரும் களத் தில் இறக்கப்பட்டுள்ளனரே, இது முற் போக்கு வாதமா? ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன், வீரபாண்டியார் மற்றும் அவ ரது மகன், டி.ஆர்.பாலுவின் மகன், தூத் துக்குடி பெரியசாமியின் மகள், ஈரோடு பெரியசாமியின் மகன், நெல்லை மேயர் சுப் பிரமணியனின் மகன் என்று பல இடங் களிலும் வாரிசுகள் களமிறக்கப்பட்டிருப்பது, முதல்வர் குடும்ப ஆதிக்கம் கண்ணை உறுத்தக்கூடாது என்பதற்காகத்தானா?

அவரவர் தொழில் துவங்கி, அதில் முன் னேறினால் அது ஆதிக்கமல்ல; என்று வாதி டுகிறார், இளங்கோவன். தொழில் துவங்கி முன்னேறுவது ஆதிக்கம் என்று யாரும் கூற மாட்டார்கள். ஆனால், உதயநிதி ஸ்டா லின், தயாநிதி அழகிரி போன்றவர்கள், இந்த வயதிலேயே பலநூறு கோடி முதலீடு செய்து படமெடுக்கிறார்களே... வேறு யாரையும் படமெடுக்க விடாமல் தடுக்கி றார்களே... இந்தப் பணம் எங்கிருந்து வந்தது; அரசு அதிகாரம் தவறாக பயன்படுத் தப்படவில்லையா? என்ற கேள்வி எழாமல் போகாது.

பூமாலையாக துவங்கிய சன் டி.வி., இன்றைக்கு, அகலக்கால் பரப்பி, உலக ளாவிய நிறுவனமாக உயர்ந்திருக்கிறதே... அது தொழில் திறமை மட்டும்தானா? அப் படியென்றால், ராயல் கேபிள் விஷனுக்கும், சுமங்கலி கேபிள் விஷனுக்கும் போட்டி எதற்காக? கொலை வரை போனதே, அது வும் “தொழில்” திறமைதானா?

திமுகவின் கொள்கைப் பரப்புச் செய லாளர் ஆ.ராசா, திகார் சிறையில் அடைக் கப்பட்டது, இந்தி எதிர்ப்புப் போரிலா? ஆலய நுழைவுப் போரிலா? திரைப்படக் கலைஞர்கள் வடிவேலு, குஷ்பு போன்றவர் களை நம்பி, திமுக பிரச்சாரத்தில் இறங்கிய நிலை கண்டு, தமிழருவி மணியன் போன் றவர்கள் வருத்தப்பட்டனர். ஆனால், இளங் கோவன் போன்றவர்களுக்கு இந்த நிலை உண்மையிலேயே வருத்தமளிக்கவில் லையா?

பொதுவுடைமைக் கட்சியினர், தங்களுக் குப் பின்னடைவு என்றால், சோரம் போகவும் தயங்க மாட்டார்கள் என்று இளங்கோவன் கூறியுள்ளார். பாஜக, காங்கிரஸ் தலைமை யிலான கூட்டணி அரசுகள் என்று பதவிக் காக மாறி, மாறி சோரம் போனது யார்? பாஜ கவுடன் சேர்ந்ததன் மூலம் கொள்கையைக் குழிதோண்டிப் புதைத்தது யார்? திமுகவில் யார் அமைச்சராக வேண்டும் என்பதைக் கூட நீரா ராடியா போன்ற அதிகாரத் தரகர் களும், அம்பானி போன்ற பெருமுதலாளி களும் அல்லவா, தீர்மானிக்கிறார்கள்... இதை வீரம் என்கிறாரா, இளங்கோவன்?

சிவப்புப் பார்வை மஞ்சளாக மாற வில்லை. மாறாக, கறுப்பு- சிவப்புதான் இன் றைக்கு களங்கப்பட்டு நிற்கிறது. பதவி பறிபோய்விடும் என்பதற்காக பதறுபவர்கள் அல்ல, கம்யூனிஸ்டுகள். தோல்வி பயத்தில் தேர்தல் ஆணையத்தையே கடித்துக் குத றிக் கொண்டிருப்பவர்கள், யார் என்பதை உலகறியும்.

மதுரை சொக்கன்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

அன்பழகனின் கேள்விகளுக்கு அண்ணாவின் பதில்கள்









அது என்னமோ தெரியவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடர்கள் நடக்கும் காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் விலைவாசி உயர்வைப் பற்றி பேசினாலே நிதியமைச்சர் அன்பழகன் மிகவும் பதட்டமடைந்து விடுகிறார். இது அவரது சுபாவத்திற்கு மாறுபட்ட ஒன்று.

எந்தச் சூழ்நிலையிலும் ஆழ்ந்த சிந்தனையோடு அமைதியாக உட் கார்ந்திருப்பதே அவருடைய வாடிக்கை.

கடந்த 3, 4 கூட்டத் தொடர்களில் அவருடைய இந்த சுபாவத்திற்கு மாறு பட்ட பேச்சுக்களை பத்திரிகை படிப்ப வர்கள் அறிய முடியும்.

தமிழகத்தில் விலைவாசி மிக உயர்ந்திருக்கிறதே என்றால், அதற்கு என்ன காரணம் என்று நீங்களே கண்டு பிடித்துச் சொல்லுங்கள் என்கிறார். அப்புறம் அதற்கும் ஒருபடி மேலே போய் கேரளாவிலும், மேற்குவங்கத்தி லும் விலைவாசி ஏறவில்லையா என் கிறார். அதற்கப்புறம், உச்சிக்கே போய், சம்பளம் கூடினால் விலைவாசி கூடும் என்கிறார். பொருளாதார சூத் திரத்தில் இது தவிர்க்க முடியாத தென்று ஒரே போடாகப்போடுகிறார்.

தமிழகத்தில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். சட்டமன்ற, நாடாளுமன்ற அனுபவமிக்கவர். இப்போது தமிழகத்தின் நிதியமைச்சராக இருப்ப வரும்கூட.

நீக்கமற நிறைந்திருக்கிற விலை வாசி உயர்வைப் பற்றி எதிர்க்கட்சியினர் பேசினால், அவர்களுடைய கருத்தை உள்வாங்கி, உணர்ந்து பேச வேண்டும். ஆனால், ஒரு அடிமையிடம் ஆண்டான் பேசுவது போன்ற தொனியிலேயே நிதியமைச்சர் அன்ப ழகனின் பேச்சுக்கள் உள்ளன.

இப்படி ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் பேசுவது தொன்றுதொட்டு வரும் பழக்கம் போலும்.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய காலத்தில் விலைவாசி உயர்வை பற்றி பேசுகின்ற போது, அன்றைய காங்கிரஸ் சட்டமன்றத்தின் நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் பேசிவரும் பேச்சுக்களையே உதாரண மாக்கி அறிஞர் அண்ணா அவர்கள் தனக்கே உரிய பாணியில் பதில் கூறி யிருக்கிறார்.

அண்ணாவின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் அன்பழகன் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. அவர் பேசுகின்ற எந்தவொரு தலைப்பிலான பேச்சானாலும் அதில் அண்ணாவின் பெயரை குறிப்பிட ஒருபோதும் மறந்தாரில்லை. எனவே, அன்பழகன் விருப்பப்படியே அவருடைய கேள்விகளுக்கு அண்ணா அவர்கள் 6.8.1961ல் எழுதிய 156ம் எண்ணிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சில விபரங்களை அன்பழகன் பார்வைக்கு சமர்ப்பிக் கிறோம்.

“மந்திரி கனம் சுப்பிரமணியம் அவர்கள் இந்தாண்டு வரவு - செலவு திட்டத்தை பிரரேபித்து பேசுகையில் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு சென்னை மாநிலத்தில்தான் 2500 கிராமங்களுக்கு மின்சார வசதி தரப்பட்டிருக்கிறது என்று.

உண்மைதான். கிராமங்களுக்கு மின்சார ஒளி தரப்பட்டிருப்பதினா லேயே நாட்டு மக்களின் பொது வருவாய் அதிகரித்து, கஷ்டங்கள் நீங்கி, வாழ்வு கிடைத்துவிட்டதா என்றால் இல்லையே. மின்சார ஒளி கிராமங்களுக்கு மிக அவசியமாக தேவை யான வசதிகளில் ஒன்று. ஆனால், அது மட்டுமா மக்களின் தேவை?

ஒரு ரூபாய் வைத்திருக்கிறான் ஒருவன். அவனுக்கு பசி கடுமையாக இருக்கிறது. அவன் தனது பசியை நீக்க அந்த ரூபாயைக் கொண்டு உண வுப் பண்டம் வாங்குவானா அல்லது வீட்டிலே கொளுத்தி வைத்தால் கம் மென்று மணக்கும் என்று கருதி ஊது பத்தி வாங்குவானா? ஊதுபத்தி வாங் குவேன் என்கிறார் சுப்பிரமணியம். மனிதனே சோறின்றி சாகும்போது அந்த மனிதனுக்கு மருந்தும், கல்வியும் தருகிறேன் என்று கூறிக்கொண்டிருக்கிறார் சுப்பிரமணியம்.

கூலி உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்பட்டுள்ளன. ஆனால், அதைவிட அதிகளவில் விலைகள் ஏறிவிட்டிருக் கின்றன.

உலகெங்குமே விலைவாசி ஏற்றம் இருக்கிறது. இங்கு மட்டுமல்ல என்று வாதாடி பொறுப்பை தட்டிக்கழித்து விட முனைகின்றனர்.....................

இப்படி போகிறது பெருந்தகை அண்ணாவின் நீண்ட கடிதம்.

அண்ணா அவர்கள் 1961ல் சொன்னதைத்தான் இந்த 2011ல் தமிழக இடதுசாரிகள் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

விலைவாசி உயர்ந்திருக்கிறதென்றால் பாண்டி பஜாரைப் போய் பார் என்றார் முதலமைச்சர். வெங்காய விலை யைப் பற்றி கேள்வி எழுப்பினால் பெரியாரிடம் போய் கேள் என்றார் அதே முதலமைச்சர். அதே முதலமைச்சரிட மும், நிதியமைச்சரிடமும் இடதுசாரி கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும் கேட்பது விலைகள் விஷம் போல் ஏறியிருக்கிறது; அதற்கு ஏற்றாற்போல் உழைத்துப் பிழைக்க அடிப்படை மூலமான மின்சாரமோ தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டு காலமாக தடைபட்டுக் கிடக்கிறது.

அண்ணாவினுடைய அற்புதமான இன்னொரு உவமானம் உண்டு. அதா வது, வேகாத சோற்றை வெள்ளித் தட்டில் வைத்தென்ன பயன்? என்பது. அதுபோல, நீங்கள் கொடுக்கக்கூடிய இலவசங்கள் இன்றைக்கு இருக்கின் றன. ஆகவேதான், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்க அடிப்படையான திட்டங்களை தீட்டுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.

அதாவது, வேருக்கு நீர் பாய்ச்சுங்கள் என்கிறோம் நாங்கள். நீங்களோ இலைக்கு பன்னீர் தெளித்துக் கொண் டிருக்கிறீர்கள். - இதுவும் அண்ணா வின் உவமானம் தான்.

அன்பழகனார் புரிந்துகொள் வாரா?


-இரா.ஜோதிராம்

திங்கள், 3 ஜனவரி, 2011

திமுக : மிசா முதல் ஸ்பெக்ட்ரம் வரை

இந்திய வரலாற்றில் 2010ம் ஆண்டு ஒரு ஊழல் நிறைந்த ஆண்டாகவே எதிர்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்தப்படும். காமன் வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல், பூனா, கொல்கத்தா உள் ளிட்ட பல்வேறு இடங்களில் ராணுவத்திற்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு ஊழல், இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் வெளிவந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊழல் கொடிகட்டி பறக்கிறது. இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த ஊழல்கள் குறித்த செய்திகள் ஊடகங் களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் - திமுக, திரிணாமுல் கட்சி கள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்ட ணியின் ஆட்சி இந்திய நாட்டின் ஏழை-எளிய மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. மாறாக பன்னாட்டு முதலாளிகளுக்கும் அம்பானி, டாடா போன்ற பெரு முத லாளிகளுக்குமே சேவை செய்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சில்லரை ஊழல்கள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், தாராளமய சந்தைப்பொருளாதாரம் தீவிரமாக அமல் படுத்தப்பட்ட பிறகு, ஊழல் என்பது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றப்பட் டிருக்கிறது.

மன்மோகன் சிங் ஒரு பொருளாதார நிபுணர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் ஏழை, எளிய இந்திய மக்களின் பிரதமராக இல்லை. மாறாக முதலாளிகளின் சேவகராகவே செயல்படுகிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச் சரவையில் தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட கேந்திரமான இலாகாக்களை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை டாடா, அம்பானி போன்ற பெருமுதலாளிகளே தீர்மானிக்கிறார்கள். திமுக தலைவர் கலைஞர் “நான்தான் ராசாவுக்கு தொலைத் தொடர்புத்துறையை மீண்டும் பெற்றுக் கொடுத்தேன்” என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் பெருமுதலாளிகளே தங்களது தேவைக்காக அவருக்கு அந்தத்துறையை மீண்டும் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

தயாநிதிமாறன் தங்களுக்கு ஒத்துவரமாட் டார் என்பதால் ஆ. ராசாவை தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பொறுப்புக்கு பெருமுதலாளிகள் கொண்டுவந்தார்கள் என்பதை நீரா ராடியா உரையாடல் டேப் தெளிவாக்கியுள்ளது. இதை திமுக எந்த வகையிலும் மறுக்கமுடியாது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, ஆ.ராசா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங் களவையிலும், “அனைத்தும் பிரதமருக்கு தெரிந்துதான் நடந்தது” என்று ஓங்கி கூறி னார். அப்போது அவையிலிருந்த பிரதமர், வாய் மூடி மவுனியாக இருந்தார். ஆனால் தில்லி யில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் “மறைப்பதற்கு என் னிடம் எதுவும் இல்லை” என்று சாதிக்கிறார். ஆ.ராசா மீது வழக்கு தொடர 16 மாத காலம் எடுத்துக் கொண்டது ஏன் என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியபோதும், பிரதமரின் அறிவுரைகளையே ஆ.ராசா மீறியுள்ளார் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய போதும் பிரதமர் மன்மோகன் சிங் மவுனத்தையே பதிலாகத் தந்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பங்கிற்கு ஊழல் ஒழிப்புக்கு ஐந்து அம்சத்திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்தகைய திட்டங்களை அறிவிப்பது காங் கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல; 20 அம்ச திட்டம், 10 அம்ச திட்டம், 5 அம்ச திட்டம் என்று காங்கிரஸ் அறிவித்த திட்டங்களைக் கேட்டு கேட்டு மக்களுக்கு புளித்துப் போய் விட்டது. எதையுமே அவர்கள் நிறைவேற்றிய தில்லை.

ஆ.ராசா எந்தத் தவறுமே செய்யவில்லை என்று திமுக தலைவர் கலைஞர் சாதித்து வந்தார். இனி வேறு வழியேயில்லை என்ற நிலையில்தான் அவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். “நான் ஒரு வழக்கறிஞர், சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்று ராசா ஜம்பமாக கூறி னார். முதல் நாள் அவரிடம் எட்டு மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ள னர். இரண்டாவது நாள் ஐந்து மணி நேரத்திற் கும் மேலாக விசார ணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாள் ஆ.ராசா தன்னுடன் ஒரு மருத்துவரையும் கூடவே அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவரை பக்கத்தில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு விசாரணை நடந்துள்ளது எனத் தெரிகிறது. அவரிடமும், நீரா ராடியாவிடமும் மீண்டும் சிபிஐ விசார ணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

மத்திய தணிக்கை துறை அதிகாரியின் 77 பக்க அறிக்கையில் ஆ.ராசா மீது 25க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட் டுள்ளன. இதுதவிர, நீரா ராடியா உரையாடல் அடங்கிய டேப்பில் பல்வேறு விவரங்கள் உள்ளன. இதுகுறித்தெல்லாம் ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது - அவருக்கு அடிப்படையில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் ஆ.ராசா எந்தத் தவறுமே செய்யவில்லை என்று திமுக பிரச்சாரம் துவக்கியிருப்பது வியப்பாக உள்ளது.

‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ஒளி பரப்பான ஒரு நேர்காணலில் இந்தியாவின் புகழ்பெற்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான கிரண் பேடியிடம் “ஹர்ஷத் மேத்தா, கார்பரேட் முதலாளி சத்யம் ராமலிங்க ராஜூ ஆகியோரை கைது செய்த பிறகே சிபிஐ அவர்களிடம் விசாரணை நடத்தியது. ஆனால் ஆ.ராசா, நீரா ராடியா போன்றவர் களை கைது செய்யாமல் விசாரணை நடத்தி யது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கிரண் பேடி “ நீங்கள் ஒன் றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ள சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதுவும் சுயேட்சையாக இயங்கு பவை அல்ல. அவை அனைத்தும் அரசுக்கு கட்டுப்பட்டவை. அரசு என்ன கருதுகிறதோ அதன்படியே வழக்கு விசாரணை நடத்தப் படும். இந்த வழக்கும் அப்படித்தான்” என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுக்கு மட்டும் தொடர்பு இல்லை. இந்தியாவின் பெரு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள் இதில் லாபம் பெற்றிருக்கிறார்கள். ஹவாலா மூலம் பல நாடுகளில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. திமுகவை மட்டும் சுட்டிக் காட்டி காங்கிரஸ் கட்சி விலகிக்கொள்ள முடியாது. ஊழலின் முழு பரிணாமும் வெளியே வரவேண்டுமானால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே ஒரே வழி. ஆனால் இதற்கு காங்கிரஸ்-திமுக கூட் டணி அரசு மறுத்து வருகிறது. பொது கணக்குக்குழு முன்பு ஆஜ ராகத் தயார் என பிரதமர் தாமாக முன்வந்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவர் நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மறுப்பது ஏன் என்ற மர்மம்தான் புரியவில்லை.

அவசரநிலைக் காலத்தில் ஜனநாயக உரிமைகளுக்காக போராடி, திமுகவைச் சேர்ந்த பலரும் சிறை சென்றார்கள். சிலர் அடிஉதை பட்டார்கள். சாத்தூர் பாலகிருஷ் ணன், சிட்டிபாபு போன்றவர்கள் சிறையி லேயே மரணமடைந்தனர். அவசரநிலைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்தவர்களின் பெயருக்கு முன்னால் ‘மிசா’ என்ற அடைமொழி கொடுத்து பெருமையாக அழைத்தது திமுக. ஆனால் இன்றைக்கு திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவின் பெயருக்கு முன்னால் ‘ஸ்பெக்ட்ரம்’ ராசா என்று ஊடகங் கள் அடைமொழி கொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திமுக தேசிய கட்சியாக மாறி விட்டது என்று கூறப்பட்டதன் பொருள் இதுதான்.

திமுகவைப் பொறுத்தவரை ஊழல் குற்றச்சாட்டுக்களை எப்போதும் அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. வீராணம் ஏரி ஊழல், சர்க்காரியா கமிஷனால் கண்டறியப் பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் என எதையும் திமுக ஒத்துக் கொண்டதில்லை. இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் விசயத்திலும் அதே நிலைபாட்டையே மேற்கொள்கிறார்கள்.

நாட்டின் கஜானாவுக்கு வந்து சேர்ந் திருக்க வேண்டிய ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறையாடப்பட்டுள்ளது. ஆனால் இது இழப்புதானே தவிர ஊழல் அல்ல என்கிறார்கள். திமுக இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள முடியாமல், நியாயப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது. ஆ.ராசா ஒரு தலித் என்பதாலேயே இந்த குற்றச்சாட்டு எழுந்துள் ளதாக சொல்லி சமாளிக்கப் பார்த்தார்கள். அது முடியாமல் போய்விட்டது. இத்தகைய ஒரு பெரிய ஊழலை ஒருவர் செய்திருக்க முடி யாது என்று அடுத்து கூறினார்கள். யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இவர் களாவது வெளிப்படுத்தலாம் அல்லவா?

நாட்டின் பணம்,கொள்ளையடிக்கப்பட் டிருக்கிறது. ஆனால் திமுகவும், காங்கிரசும் இது ஏதோ அவர்களது கூட்டணி சம்பந்தப் பட்ட பிரச்சனை என்பதுபோல, உறவில் விரிசல் இல்லை, கூட்டணி பலமாக உள்ளது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்கள் மேற்கொண்ட அணுகுமுறை யைத்தான் ஆ.ராசாவும் பின்பற்றினார் என்று சாமர்த்தியமாக வாதிடுகிறார்கள். அமைச்சர் துரைமுருகன் கரூரில் இந்த கருத்தைத்தான் வெளியிட்டுள்ளார். தயாநிதி மாறனும் இதே கொள்கையைத்தான் பின்பற்றினார் என்றும் அவர் கூறினார். இதுகுறித்தெல்லாம் தயாநிதி மாறன் வாய்திறக்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை?

மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அனை வரையும் கண்டறிந்து சட்டப்பூர்வ நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அரசு கஜானாவுக்கு வந்திருக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாயை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

திமுகவை அண்ணா அவர்கள் துவக்கும் போது, இந்த கட்சி சாமானியர்களுக்காகவும், குப்பன்களுக்காகவும், சுப்பன்களுக்காகவும் துவக்கப்பட்டுள்ளது என்றும், பஞ்சை பராரி களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் இது என்றும் கூறினார். ஆனால் இன்றைக்கு திமுக என்பது டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு சேவை செய்யும் கட்சியாக மாறிவிட்டது. மாநில சுயாட்சி கேட்ட அந்த கட்சி, மத்திய அதிகாரத்திற்கு சென்றவுடன் மாநில சுயாட்சிகளுக்காக போராடவில்லை. மாறாக அனைத்து துறைகளிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் வலுவான இலாகாக்களை பெற்று, அதன் மூலம் பெருமுதலாளி களுக் கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் சேவகம் செய்து வருகிறது. என்னதான் வாய் சாதுர் யத்தால் தப்பிக்க முயன்றாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் கறையிலிருந்து திமுக தப்பமுடியாது.

டி.கே.ரங்கராஜன் எம்.பி

செவ்வாய், 6 ஜனவரி, 2009

அண்ணா அன்று சொன்னது இன்றைக்கும் பொருந்துகிறது!

தமிழகத்தில் 1967ல் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு வலுவானதொரு கூட்டணி அமைந்தது ஒரு காரணம்.

அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் விலை வாசி உயர்வு அலங்கோலங்களைக் கண் டித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் அவரவ ருக்கு உரிய பாணியில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் முதல் மாநிலந்தழுவிய மறியல் வரை நடத்திய வரலாறுகளைத் தமிழகம் அறியும்.

இன்றைக்கு; அதேபோன்றதொரு விலை வாசி உயர்வைத் தமிழக மக்கள் சந்தித்து சிக் கித் திணறி; சின்னாபின்னமாகிக் கொண்டி ருப்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை.

இதோ :- உதாரணத்திற்கு ஒன்றிரண்டு பொருட்களின் விலைகள்:-

சென்ற ஆண்டு ரூ.280க்கு விற்ற சமை யல் எரிவாயுவின் தற்போதைய விலைரூ.340/-

கடந்த ஒரு ஆண்டு காலத்தில் ரூ.18, ரூ.19க்கு விற்ற ஒரு கிலோ கர்நாடகப் பொன்னி அரிசியின் இன்றைய விலை ரூ.30/

ரூ.12, ரூ.13க்கு விற்ற செல்லப்பொன்னி ரூ.20.

ரூ.10, ரூ.11க்கு விற்ற ஐ.ஆர்.8, ஐ.ஆர்.20 அரிசிகளின் விலையோ ரூ.19, ரூ.20.

ரூ.60 முதல் 70க்குள்ளிருந்த ஒரு லிட்டர் சுத்தமான நல்லெண்ணையின் இன்றைய விலை ரூ.130/-

ரூ.25 முதல் ரூ.30க்குள்ளிருந்த 1 கிலோ மிளகாய் வத்தலின் இன்றைய விலை ரூ.80/-

ரூ.20 முதல் ரூ.25க்குள்ளிருந்த 1 கிலோ புளியின் இன்றைய விலை ரூ.48/-

ரூ.20 முதல் 25க்குள்ளிருந்த பருப்பு வகைகளின் இன்றைய விலை ரூ.50/-

1 லிட்டர் 12 ரூபாய்க்கு விற்ற பால் விலை தற்போது ரூ.20.

ரூ.3க்கு விற்ற 1 படி உப்பு இன்றைக்கு ரூ.10

ரூ.5க்கு கிடைத்த 1 சலவை சோப்பின் இன்றைய விலை ரூ.10/-

ரூ.9க்கு கிடைத்த 1 குளியல் சோப்பின் இன்றைய விலை ரூ.16/-

ரூ.3 அல்லது ரூ.4க்கு கிடைத்த 1/4 கிலோ கத்தரிக்காயின் விலை இன்றைக்கு ரூ.10/-

1 கிலோ 6 ரூபாய்க்கு விற்ற முட்டைக் கோஸின் இன்றைய விலை ரூ.22/-

1 கிலோ 5 ரூபாய்க்கு விற்ற பீட்ரூட்டின் இன்றைய விலை ரூ.15/-

1 கிலோ 20 ரூபாய்க்கு விற்ற பாகற்காய், அவரைக்காய், பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளின் இன்றைய விலை ரூ.40/- 

இப்படி இராமாயணத்து அனுமாரின் வால் நீண்டு கொண்டே போவது போல் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தமிழகத்தில் உயர்ந்து கொண்டே போகிறது.

இதையெல்லாம் ஈடுகட்டத்தான் ரேச னில் 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்குப் போடு கிறோம் என்கிறார் தமிழக முதல்வர்.

1 கிலோ அரிசியை வாங்கி அதனைப் பட் டைத் தீட்ட 1 கிலோவிற்கு 1 ரூபாய் கொடுத்தா லும் ரேசன் அரிசியின் மணமே அலாதிதான்.

அந்த மணத்தைப் பொறுத்துக் கொண்டு சாப்பிடவும் ஒரு தனியான மன உறுதியும் தேவை. மேலும், 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வாங்கினா லும், அதற்குரிய குழம்பு வைத்துச் சாப்பிட மேலும் 99 ரூபாய் தேவைப்படுகிறது என்பதற்கு அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலைப் பார்த்தாலே புரியும்.

விலைவாசி உயர்வைப் பற்றி அன்றைக்கே பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கே உரிய அழகு தமிழில் கவிதை எழுதி தமிழக மக்களைத் திரட்டியுள்ளார்.

இதோ; அந்த கவிதை

புளி மிளகாய் தனியா! - இதற்கு

ஏழரை நாட்டு சனியா?

விலை குறைவது எப்போ? - இதை

விளக்கிச் சொன்னால் தப்போ?

மிளகாய் தனியா கூடி - வெளி

நாட்டுக்குப் போனதோ ஓடி?

புளியும் மலடியாச்சோ? - காய்த்துப்

பழுக்க மறந்து போச்சோ?

குழம்பின் மீது ஆவல் - வைக்கக் 

கூடாதென்றே மூவர்

அழும்பு எண்ணம் தானோ? - இந்த

அவல நிலையும் ஏனோ?

மக்களின் மீது வெறுப்பா? - இந்த

மூன்றுக்கும் இப்போ சிரிப்பா?


தீக்கதிரில் தமிழக அரசைப் பற்றி எவ்வித விமர்சனமும், கருத்தும் வெளியிடப்பட்டாலும் அதை மறுத்து தனது பாணியில் காவியக் கதைகள் சொல்லி முரசொலியில் மடல் தீட்டும் முதல்வர் நிச்சயம் இதற்கு மறுப்புச் சொல்லமாட்டார் என்று நம்புவோம்.

ஏனெனில், அன்றைக்கு அண்ணா சொன்ன கவிதை இன்றைக்கும் பொருந்து கிறது அல்லவா?

இரா.ஜோதிராம்