மனித உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனித உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஜூலை, 2011

அடிமையின் பயம் முதலாளியின் மூலதனம்


ஒரு புத்தகம் என்பது உள்ளதை உள்ளபடி சொல்வதுதான். இருந்தாலும் அதில் சில வாசிக்கும் போதே உடலுக்குள் வேதியல் மாற்றங்களையும்-சிந்தனையில் மாற்றங்களையும் வரவழைக்கும். அப்படி சிந்தனையிலும் மாற்றத்தை உருவாக்கி, உடற்கூறிலும் சில அதிர்வுகளை உருவாக்கியது பிரெடரிக் டக்ளசின் சுயசரிதை. இந்நூல் அமெரிக்காவின் பண்ணை அடிமைத்தனம் பற்றிய புரிதலையும் நாடுகள் எதுவாயினும் வர்க்கங்களின் குணம் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதையும் மெய்ப்பிக்கின்றது.
பிரெடரிக் டக்ளஸ் பண்ணை அடிமையின் சோகங்களை அனுபவித்ததை கண்ணால் கண்டதை அற்புதமாக விவரிக் கின்றார். தன்னுடைய ஒவ்வொரு உரிமையாளரும் எப்படிப் பட்டவர்கள் - அவர்கள் வேலை வாங்கும் விதம், வழங்கும் தண்டனைகள்... என்று படிக்கும் பொழுது உடல் அதிர்கின்றது.
டக்ளசின் பாட்டியின் மரணம் அதனால் ஏற்படும் ஏக்கம் ஒரு அடிமையின் மரணம் கண்டும் காணமல் போவதை தத்ரூபமாக கண்முன் நிறுத்துகின்றது.
அடிமைகளுக்கு கொடுக்கப் படும் தண்டனைகளை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ஒரு மாற்றுத் திறனாளிப் பெண் அடிமையை அடித்து ரத்தம் ஒழுக விளாசி கொடுஞ்செயல் செய்து விட்டு,பைபிளில் வரும் விவிலியத்தின் வாசகங்களைப் படித்து, கடவுளிடம் பாவ மன்னிப்பு பெறுவது என ஒவ்வொரு பக்கமும் தாண்டும் போது நமக்குள் ஏற்படும் உணர்வுகள் ஏராளம்.
தன்னுடைய வாழ்வின் அனைத்து விஷயங்களையும் தீர்மானிக்கும் எஜமானர்கள் - எதற்கு? ஏன்? மற்றவர்களுக்கு விற்கப்படுகின்றோம் என்பது கூட தெரியாமல், ஊர் மாறும் அடிமைகள்; செய்யும் வேலை களுக்கு கிடைக்கும் அற்ப உணவு, அதை சாப்பிடக் கூட முடியாமல் வாங்கும் அடியின் வலி, உடலின் ரணம் என பல பக்கங்களில் சோகம் கவ்வுகின்றது.
காட்டில் கிடைக்கும் வேரை (Roots) கையில் வைத்திருந்தால் எஜமானர்கள் அடித்து உதைக்க மாட்டார்கள் எனும் மூடநம்பிக்கை இருந்தது அது எப்படி மறைந்தது என்பது விவரிக்கப்படுகின்றது.
டக்ளஸ் தன் முதலாளி கொவே (மிக கொடியவன்) என்பவரை ஒரு கட்டத்தில் திருப்பி அடிக்கிறார். அதாவது முதலாளிக்கு ரத்தம் வரும் வரை. அதன் பிறகு அம் முதலாளி டக்ளஸ் மீது கை வைப்பது நிறுத்தப்பட்டது. இந்த விஷயத்தைப் படிக்கும் போது கீழத் தஞ்சை மாவட்டத்தில் பண்ணை அடிமைகளை ஒருங்கிணைக்கும் போது, தோழர் பி. சீனிவாசராவ் ‘‘அடித்தால் திருப்பி அடி’’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு அத்தி யாயத்தில் டக்ளஸ் சொல்கிறார். “அடிமையின் பயம் - முதலாளியின் மூலதனம்’’ எவ்வளவு ஆழமான அர்த்தம் பொதிந்த வார்த்தை. இரு வர்க்கங்களை அடையாளம் காட்டும் அற்புத வாசகம்.
ஒவ்வொரு ஆண்டும் அடிமைகளுக்கு வழங்கப்படும் விடுமுறையைப்பற்றி டக்ளஸ் அற்புதமாக சித்தரிக்கின்றார். அதாவது முதலாளிகள் ஆண்டு முழுவதும் வழங்கும் தண்டனைகள் அனைத்தையும் மறக்க, அதனால் அவர்கள் மீது ஏற்படும் கோபங் களை தணிக்கவும், விடுமுறை முழுவதும் மது அருந்த வைத்து, கேளிக்கைகளில் தள்ளி எப்போதும் அடிமை எனும் சிந்தனையை மேலோங்க வைத்து, மீண்டும் வேலைக்கு வரவழைப்பது எனும் சதித்திட்டம் தான் விடுமுறை. அதாவது, அது ஓர் ஏமாற்று வித்தை உடல் மற்றும் உளவியல் ரீதியாக மீண்டும் அடிமைச் சிந்தனையை உறுதிப்படுத்துவது ஆகும்.
ஓர் அடிமையை எஜமானர் எதற்காக வேண்டுமானாலும் அடிக்கலாம். தான் எதிர்பார்த்த அளவுக்கு வேலையைச் செய்யவில்லை என்றாலோ அல்லது சொன்ன கட்டளையை உடனடியாக செய்து முடிக்கவில்லை - பெண்களாக இருந்தால் இச்சைகளுக்கு உட்படவில்லை என்பதோ மன்னிக்க முடியாத குற்றங்கள். மரண அடி தான். அடிபட்ட பிறகும் ரத்தம் கொட்டினாலும் சொன்ன வேலையை முடிக்க வேண்டும். டக்ளஸ் படிக்க கற்றுக் கொண்டதை விவரிக்கும்போது, ஓர் அடிமையானவன் கல்வி அதுவும் அடிப்படைக் கல்வி கற்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பது புலப்படுகின்றது. அப்படி தான் கற்றுக் கொண்டதை மற்றவர்க்கு கற்றுத் தருவது என்பது எவ்வளவு மகத்துவமானது - அப்பணியை அப்பொழுதே டக்ளஸ் செய்திருக்கின்றார். அறிவொளியை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்த நாட்கள் தான் டக்ளசின் உன்னதமான நாட்கள் என குறிப்பிடுகின்றார்.
அடிமைகளை விற்க - வாங்க எனும் தொழிலுக்கு தரகர்கள் இருந்தார்கள். அவர்கள் புது அடிமைகளை விற்க முற்படும் போது அடிமைகளின் உடற்கூறின் பாகங்கள் நன்றாக உள்ளதா, செயல்படும் நிலையில் இருக்கின்றதா என்பதைப் பார்த்து அவர்களின் உடல் பாகங்களை அசைக்க ஆட்டச் சொல்லி வாங்குவார்களாம். கிராமப் புறங்களில் மாடு வாங்கும் போது, சந்தையில் மாட்டின் அங்கங்களை பார்த்து வாங்குவது போல் அடிமைகள் விற்கப்பட்டு வாங்குவார்களாம். விலங்கைவிடக் கீழ் நிலையில் மனிதன் இருந்ததை நினைக்கும் போது உள்ளம் கனக்கின்றது. ஒரு கட்டத்தில் தான் தப்பித்து அடிமை விலங்கை முறித்துக் கொள்ள வேண்டும் எனும் முடிவெடுக்கும் டக்ளஸ் இறுதியாக ஒரு முதலாளியிடம் ரிவிட் (ஸிவீஸ்மீt) அடிக்கும் தொழிலைக் கற்றுக் கொள்கிறார். கடுமையான உழைப்பு.
நல்ல வருமானம் கிடைத்த போதும் அனைத்தும் முதலாளிக்கே சொந்தம். ஏனென்றால், அடிமையின் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமல்ல. அடிமையே அவருக்கு சொந்தமல்லவா!
வருமானம் போனால் போகட்டும். ஆனால் வாழ்க்கையில் மாற்றம் பெற வேண்டுமானால், எனக்கு நானே உரிமையாளராக வேண்டும். அதாவது விடுதலை பெற வேண்டும் என்று டக்ளஸ் சொல்லும் போது கல்மனம் படைத்தவர்கள் கூட உருகிவிடுவார்கள்.
இந்த சுயசரிதை எழுதுவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவர் தப்பித்து விடுலையாகின்றார். அப்படி தப்பித்துச் செல்வதற்கு யார் உதவி செய்தார்கள் என்பதைக்கூட அவர் காட்டிக் கொடுக்கவில்லை. எவ்வளவு வைராக்கியம்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க நாட்டில் இருந்த நிறவெறி இன்றும் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றது என்பதை நினைக்கும் போது அன்று நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை யோசிக்க முடிகின்றது. வேறு ஒரு மொழியில் வந்த ஒரு பொக்கிஷத்தை தாய் மொழியில் அதன் ஆழம் மற்றும் தன்மை மாறாமல் மொழி பெயர்த்து அளிப்பது அற்புதமான கலை. எப்போதும் அதை நிதானத்துடன் சுவை மாறாமல் தமிழ் வாசகர்களுக்கு அளித்து வரும் இரா. நடராசன் டக்ளஸ் வாழ்க்கை வரலாற்றை வாசகர்கள் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் மொழிபெயர்த்துள்ளார்.
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவி வரும் விதவிதமான தீண்டாமைக் கொடுமைகள் அதில் மக்கள் படும் அவதிகள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகள் என்று இன்னும் நவீன அடிமைகளாக நமது வர்க்கம் நடத்தப்படும் வேளையில், இந்நூலை அதிகமான மக்களிடத்தில் கொண்டு சென்றால் கொடுமைகளுக்கு எதிரான ஒரு புதிய எழுச்சியை உருவாக்கிட முடியும். இனியும் எங்கும் கொடுமைகள் நிகழும் போது தடுத்திடப் பெரும் படையை அமைத்திடவும் இந்நூல் உதவும்.
கிராமப்புற உழைப்பாளி மக்களும் நகர்ப்புற தொழிலாளர்களும் இன்றைய உலக மய சூழலில் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுள்ளனர். 8 மணி நேர வேலை கனவாகி வருகின்றது. அப்படிப்பட்ட நேரத்தில் இந்நூல் பரவலாகக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
அழகான வடிவமைப்பு எழுத்துப் பிழையில்லாமல் இருப்பது மொழிபெயர்ப்பின் ஆழம் மற்றும் எளிமை சோர்வில்லாமல் வாசிக்க வைக்கின்றது. மக்களின் தேவையைக் கருதி அதிகம் எடுத்துச் செல்லப்பட வேண்டிய சிறந்த புத்தகம். ஒரு கறுப்பு அடிமையின் சுயசரிதை.
                                                                                                                                                                               என்.சிவகுரு

செவ்வாய், 5 ஜூலை, 2011

ஜார்ஜ் புஷ்சையும், பாரக் ஒபாமா வையும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது?

லிபியாவின் ஜனாதிபதி மும்மர் கடாபியை கைது செய்து கூண்டில் ஏற்றுமாறு சர்வதேச குற் றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கடந்த வாரம் வெள் ளிக்கிழமை வாரண்ட் பிறப்பித்தது. கடாபியின் மகன் செய்ப் அல் - இஸ்லாம் மற்றும் லிபியா வின் உளவுத்துறை தலைவர் அப்துல்லா அல்- சென்யூசி ஆகியோருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தது.

“மனிதநேயத்திற்கு எதிராக கொடிய குற்றங் கள் புரிந்த போர்க்குற்றவாளிகள் இவர்கள்” என்று குற்றம் சாட்டி, வாரண்ட் பிறப்பித்துள்ளது தி ஹேக் நகரில் உள்ள இந்த நீதிமன்றம்.

உண்மையில், தனது நாட்டில் போராட்டத் தில் ஈடுபடும் கிளர்ச்சிக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், நேட்டோ படைகள் தனது நாட்டை சல்லடை யாக துளைத்து வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என் றும் லிபிய ஜனாதிபதி கடாபி வேண்டுகோள் விடுத்த மறுநாளே, அவரை சர்வதேச போர்க்குற்றவாளி என்று மேற்படி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

லிபியாவின் எண்ணெய் வளத்தை முழுமை யாக கைப்பற்றும் நோக்கத்தோடு, அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கடாபியின் அரசை ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு அமெ ரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அந்நாட்டின் மீது கொடிய யுத்தத்தை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் அமெரிக்கா வுக்கு இணையாக ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளான பிரிட்டனும், பிரான்சும் நாசகரப் படைகளை அனுப்பி தாக்குதலை தீவிரப்படுத்தி யுள்ளன. இந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக் கானோர் பலியாகியுள்ளனர். அதுகுறித்த உண்மை விபரங்களை உலகிற்கு சொல்லாமல் மேற்கத்திய ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. கடாபியின் உயிரைப் பறிக்கும் எண்ணத்துடன் அவரது மாளிகையின் மீது தொடர்ந்து நேட்டோ போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி வருகின்றன. அவரது மகனையும், 3 பேரக் குழந்தைகளையும் சில வாரங்களுக்கு முன்பு குண்டுவீசி கொன்றொழித்தது நேட்டோ படை.

படுகொலைகள் புரிந்து வரும் நேட்டோ படைகளை விட்டுவிட்டு, தாக்குதலுக்கு உள் ளாகியிருக்கும் கடாபியை குற்றவாளி என்று அறிவித்திருப்பதன் மூலம், சர்வதேச குற்ற வியல் நீதிமன்றத்தின் உண்மை முகத்தை அறி யலாம்.

1999ம் ஆண்டு மார்ச் 24ம்தேதி யுகோஸ்லே வியாவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் படைகளை கொண்ட நேட்டோ ராணுவத்தினர் கொடூரமான யுத் தத்தை துவக்கினர்; அந்நாட்டைத் துண்டாட முயற்சித்த அல்பேனிய தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி, கொசோவா பிரதேசத்தில் ரணகளத்தை ஏற்படுத்தினர்; அதையொட்டி யுள்ள செர்பியாவிலும் குண்டுமழை பொழிந்த னர்; பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அழிந்தனர். இறுதியில், எந்த யுகோஸ்லேவியா சல்லடையாக துளைக்கப்பட்டதோ, அந்த யுகோஸ்லேவியாவின் ஜனாதிபதி ஸ்லோ போடன் மிலோசெவிக்கை போர்க் குற்றவாளி என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறி வித்தது. அவர் நாடு கடத்தப்பட்டார். தி ஹேக் நகரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலேயே மர்ம மான முறையில் உயிரிழந்தார்.

தாங்கள் கைப்பற்றத் துடிக்கும் நாடுகளைத் தாக்குவது; அந்த நாடுகளின் தலைவர்களை திட்டமிட்டு போர்க்குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றத்தின் பெயரால் அறிவிப்பது; நீதிமன் றமே சொல்லிவிட்டதால் அவரை கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டுமென்று உலக அளவில் கருத்தை உருவாக்குவது; சம்பந்தப் பட்ட நாடுகளை கபளீகரம் செய்வது என வர லாற்றில் அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தி யங்களின் குற்றங்கள் தொடர்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு சூடான் ஜனாதி பதி அல் பஷீருக்கும் இவர்கள் வாரண்ட் பிறப் பித்தார்கள்.

சர்வதேச நீதிமன்றம் என்ற பெயரில் நடை பெறும் இந்த அட்டூழியத்தை சீனா, ரஷ்யா, ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்க நாடு கள், மத்திய கிழக்கு நாடுகள் என உலகின் அனைத்துப் பகுதி நாடுகளும் கடுமையாக எதிர்க்கின்றன.

உள்நாட்டில் போராட்டத்தை ஒடுக்கினார் என்ற குற்றச்சாட்டிற்காக கடாபியை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது சரியென்றால், அண் டை நாடான பாலஸ்தீனத்தில் அனுதினமும் அப்பாவி மக்களை குண்டுவீசிக் கொல்கிறதே அந்த இஸ்ரேலின் பிரதமரை எந்த நீதிமன்றத் தில் நிறுத்துவது?




பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உல கம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் கொடிய யுத்தங்களை நடத்தி, சுமார் இரண்டேகால் லட் சம் மக்களை அழித்தொழித்த அமெரிக்க ஜனா திபதிகள் ஜார்ஜ் புஷ்சையும், பாரக் ஒபாமா வையும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது?

ஞாயிறு, 26 ஜூன், 2011

கசக்கப் படும் பூக்கள்..!


அதிகார வெறிபிடித்து 
ஆயுதங்கள் குவித்து 
ஆட்களைக் கொன்று 
இரத்த ஆறு ஓடிடவா .. எங்கள் 
உயிரில் உதித்த 
உதிரத்தில்உருவான
ஆசை அரும்புகளை
அன்பின் மொட்டுக்களை 
இளம் பிஞ்சுகளை .. உங்களின் 
இரக்கமற்ற போரில் 
நாடு பிடிக்கும் ஜோரில் 
நசுங்கும் வாழ்க்கையால் 
பார்வைக் குருடராய் 
பணயம்..வைத்தோமே..!
பிணங்களின் குவியலிலே
பாசம் மற்ந்து 
பரபரப்பாய் உயிர் குடிக்க,
போர்க்களத்தில் ......எங்களின் 
உயிர்ப் பூக்கள்..
அலைந்து திரிந்து 
சுமப்பது ....
உலகம் அறிய, 
உண்மை உணர
உறவை வளர்க்க . 
புத்தகம் அல்லவே.!.உங்களின் 
உயிர் குடிக்கும் 
ஆயுதப் படையில் .
பலியாடாய் பவனி வரும்
பாலகன் நெஞ்சில் 
பாசமும், நேசமும் துளிர்க்குமா..?..உங்கள் 
நாடு பிடிக்கும் 
ஆசைக்கு தீனி போடவோ 
.. நாங்கள் எம் வாரிசை 
கருப்பைக்குள் வைத்து
பொத்தி பாதுகாத்து 
பாரமின்றி சுமந்தது ..!
எம் மக்வு...
துப்பாக்கி சுமக்கவோ?..உங்களின் 
அநியாய குழி பறிப்பில் 
போர்க் களத்தில், 
ஆயுத வியாபாரத்தில் 
அக்கிரமாய் கொழுத்து 
ஆதாயம் கண்டது யார்?
உங்களின் டாலர் குவியலில்
உங்களின் எண்ணெய் கிடங்குகளில்
மணப்பது.. 
ஈராக் குழந்தைகளின் குருதியா? 
இலங்கை மலர்களின்..சுவாசமா?
சோமாலிய சிசுக்களின் சதையா




                 உலகில் குழ்ந்தைகளைப் பயன்படுத்தும் நாடுகள்
உலகம் முழுவதும் இராணுவமும், எல்லைத்தகராறும், சண்டைகளும் போர்களும் நடந்து கொண்டே இருக்கின்றன. இராணுவத்தில் பெரியவர்கள் மட்டுமல்ல, சிறார்களும் இருக்கிறார்கள், அதுவும் 7 வயதுக்கு குறைவாய் உள்ள பாலகர்களும்..! 50 நாடுகள் குழந்தைகளை இராணுவத்தில் சேர்த்து போரில் ஈடுபட வைத்துள்ளனர். பெரியவர்களை வைத்து பராமரிப்பதைவிட, குழந்தைகளை கையாள்வது எளிது..! குறைந்த பொருளாதார செலவு..! குழந்தைகள் கவலையே படாமல், விளையாட்டாய் உயிர் குடிப்பார்கள்..! 2007 ம் ஆண்டு கணக்குப்படி, 3 ,00 ,000 குழந்தைகள் போரில் ஈடுபடுத்தப் படுகின்றனர்

புதன், 11 மே, 2011

நோம் சாம்ஸ்கி :ஒரு மனசாட்சி உள்ள அமெரிக்கரின் குரல்

பின்லேடன் கொலை என்பது திட்டமிட்ட ஒரு படுகொலை என்பதும், அடிப்படையான சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்களை அப்பட்டமாக மீறிய செயல் என்பதும் தெளிவானது. எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல் இருந்த ஒருவரை சுமார் 80 கமாண்டோக்கள் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் அவ ரது மனைவி ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் சட்டத்திற்கு குறைந்த பட்ச மரியாதையாவது தரப்பட வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்கள் நீதியின் முன்பு விசாரணைக்கு நிறுத் தப்பட வேண்டும். 2002 ஏப்ரலில் அமெரிக்க உளவுத் துறையான எப்பிஐ-யின் தலைவர் ராபர்ட் முல்லர் தீவிரமான புலன் விசாரணைக்கு பின்பு, அமெரிக்க இரட்டை கோபுரங் கள் மீதான தாக்குதல் ஆப்கானிஸ் தானில் திட்டமிடப்பட்டது என்றும், யுஏஇ மற்றும் ஜெர்மனியிலிருந்து செயல்படுத்தப்பட்டது என்று நம்புவ தாக மட்டுமே கூறினார்.

இதற்கு 8 மாதங்களுக்கு முன்பே, ஆப்கானிஸ்தானில்தான் பின்லே டன் தங்கியிருப்பதாக ஆதாரத்துடன் தகவல் அளித்தால், அவரை ஒப்ப டைப்பதாக தாலிபான்கள் வெளிப் படையாகவே தெரிவித்தனர். ஏப்ரல் 2002ல் நம்மால் நம்பப்பட்ட ஒரு விஷயம் குறித்து அப்போது எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனால், பாரக் ஒபாமா தன்னுடைய வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் மிகவும் சாதாரணமாக பொய் சொல்கிறார், “2001 செப்டம்பர் 9ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின் லேடன்தான் காரணம் என்பதை நாம் உடனடியாக தெரிந்து கொண்டோம்” என்று.

அபோதாபாத்தில் பின்லேடனை ஒளித்து வைத்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஒரு பகுதியினர் குறித்து வாஷிங்டனின் கோபம் பற்றி ஊடகங்களில் பெருமளவு விவாதிக் கப்படுகிறது. ஆனால், அதே நேரத் தில் தங்களது நாட்டுக்குள் அமெ ரிக்க படையினர் அத்துமீறி நுழைந்து ஒரு அரசியல் படுகொலையை நிகழ் த்தியிருப்பது குறித்து பாகிஸ்தானின் கோபம் பற்றி யாரும் கவலைப்படு வதாக தெரியவில்லை. அமெரிக்கா வுக்கு எதிரான ஆவேசம் என்பது பாகிஸ்தானில் ஏற்கெனவே பெரு மளவு அதிகரித்துள்ளது. இப்போது நடந்துள்ள செயல் அதை மேலும் அதிகமாக்கும். பின்லேடனின் உடலை கடலில் தூக்கி எறிந்தது குறித்து ஆத்திரமும் கோபமும் முஸ்லிம் உலகத்தில் ஏற்பட்டுள்ளது.

இராக் நாட்டைச் சேர்ந்த கமாண்டோ படையினர் ஜார்ஜ் டபிள்யு புஷ் வீட்டுக்குள் புகுந்து, அவரை சுட்டுக் கொன்று, உடலை தூக்கி அட் லாண்டா கடலில் வீசிவிட்டு போனால் நாம் எவ்வாறு இதை எதிர்கொள் வோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். சர்ச்சைக்கு இடமின்றி பின்லேடனின் குற்றம் சித்தரிக்கப்படுகிறது.

கியூப விமானத்தை குண்டு வைத்து தகர்த்த போட்ச், புளோரிடா வில் அமைதியாக மரணமடைய அனுமதிக்கப்பட்டிருக்கிறார். துறை முக பயங்கரவாதத்தில் தொடர்பு டையவர்களும், இதுமாதிரியே நடத் தப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்கா அத்துமீறி நடத்திய படுகொலைகள் குறித்து புஷ்சின் கவனத்திற்கு யாருமே கொண்டு வரவில்லை போலிருக் கிறது.

ஜெர்னிமோ திட்டம் என்ற பெய ரில் நிகழ்த்தப்பட்ட செயலின்மூலம் ஏகாதிபத்திய ஆதிக்க மனநிலை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. மேற்கத்திய சமூகம் முழுவதும் பின் லேடன் மரணம் பெருமளவு கொண் டாடப்படுகிறது. ஆனால், அதே நேரத் தில் அமெரிக்காவால் நடத்தப்பட்ட முந்தைய மரணங்கள் புனிதப்படுத் தப்படுகின்றன.

சுருக்கமாக சொல்வதானால் இவ் விஷயத்தில் அடிப்படையான, எளி மையான உண்மைகள் வெளிப்படை யாக தெரிவிக்கப்படுவதுமில்லை; மதிக்கப்படுவதுமில்லை என்பது தான் உண்மை.

நோம் சாம்ஸ்கி எழுதிய கட்டுரையின் சில பகுதிகள்

கட்டுரையாளர்: எம்ஐடி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், சமூக அரசியல் விஷயங்கள் குறித்து ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியவர்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

இதுதான் அமெரிக்கா


மனித உரிமை குறித்து உலக நாடுகளுக்கு வாய் கிழிய வகுப்பெடுக்குகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஆனால் பிற நாட்டு மக்களை புழுக்களாய், புன்மைப் பூச்சிகளாய் கருதுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவை தாஜா செய்ய எந்த அளவுக்கும் இறங்குகிறது. ஆனால், இந்திய மக்கள் என்றாலே அமெரிக்க நிர்வாகத்திற்கு இளக்காரம்தான்.

இதற்கு சமீபத்திய உதாரணம்தான் அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கணுக்காலில் கண்காணிப்புக் கருவியை பொருத்தி இழிவு படுத்தியுள்ள நிகழ்வாகும். அமெரிக்காவில் படிக்கலாம் என்று ஆசைகாட்டி விளம்பரங்கள் இந்தியாவில் செய்யப்படுகின்றன. இதை நம்பி அமெரிக்கா செல்லும் பல மாணவர்கள் ஏமாறு கின்றனர்.

கலிபோர்னியாவில் உள்ள டிரை-வேலி பல்கலைக்கழகத்தில் அமெரிக்கப் போலீசார் சோதனை நடத்தியபோது அங்குள்ள மாணவர் களுக்கு போலி விசா வழங்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். இதற்கு எந்தவகையிலும் மாணவர்கள் பொறுப்பல்ல. போலி ஏஜெண்டு களால் இவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 1,555 பேர் இவ்வாறு போலி விசாவில் படித்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பல் கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. நியாய உணர்ச்சியின் அடிப்படையில் அந்த மாணவர்கள் பயில மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய அமெரிக்க நிர்வாகம், மாணவர்களை ஒரு முகாமில் அடைத்து சித்ரவதை செய்து வருகிறது. உச்சகட்டக் கொடுமையாக மாணவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க கணுக்காலில் நிர்ப்பந்தமாக கண்காணிப்புக் கருவி பொருத்தியுள்ளனர். பெருந்தொகை கொடுத்தவர்களை ஜாமீனில் விடுவித்துவிட்டு, முடியாதவர்களை இவ்வாறு கொடுமைப்படுத்துகின்றனர்.

அமெரிக்காவில் பயிலச்சென்ற இந்திய மாணவர்கள் மட்டுமின்றி தலைவர்களும் கூட அவமானத்திலிருந்து தப்புவதில்லை. முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் துவங்கி, முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே.அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், திரைக்கலைஞர்கள் கமல்ஹாசன், ஷாருக்கான், மம்முட்டி போன்றவர்களும் அமெரிக்க விமான நிலையங்களில் சோதனை என்ற பெயரில் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். அண் மையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரும் கூட இவ்வாறு இழிவுபடுத்தப்பட்டார்.

வழக்கம்போல இந்திய அயல்துறை அமைச் சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்திய மாணவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளதை கண்டிப்பதாக கூறியுள்ளார். ஆனால் இது போதாது. கடுமை யான வார்த்தைகளால் அமெரிக்க அதிகாரி களின் இழிசெயலை கண்டிக்க வேண்டும். அமெரிக்க தூதரை அழைத்து இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் மற்றும் கல்வி கிடைத்திட உரிய ஏற்பாடுகளை இந்திய அரசு செய்ய வேண்டும்.

இந்தியாவில் அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு இத்தகைய இழிவு ஏற்பட்டிருந்தால் அமெரிக்கா எந்த அளவுக்கு கோபமடைந்திருக்குமோ அதே கோபத்தை இப்போது இந்தியாவின் சார்பில் வெளிப்படுத்த வேண்டும். முதலில் இந்தியா என்பது அமெரிக்காவின் காலனி நாடு அல்ல என்ற உணர்வு ஆட்சியாளர்களுக்கு வர வேண்டும்