ஞாயிறு, 13 மார்ச், 2011

என்றும் பொருந்தும் மார்க்ஸின் கோட்பாடுகள்


மார்க்ஸ் கல்வி கற்ற பள்ளியில் இறுதி வகுப்பில் ஒவ்வொரு மாணவரும் தனது எதிர் கால இலக்கு என்ன என்பது குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். தனது 17வது வயதில் எதிர்கால இலக்கு குறித்து மார்க்சின் கட்டுரை அவரது சிந்தனையை வெளிப்படுத் துவது மட்டுமல்ல; ஒவ்வொரு பொதுவுடைமைப் போராளியும் கற்க வேண்டிய வழி காட்டுதல் எனில் மிகை அல்ல.

இன்னல்களுக்கிடையே

இரும்பு போன்ற உறுதி

“ஒருவன் தனக்காக மட்டுமே வாழ்ந்தால் ஒரு வேளை புகழ்வாய்ந்தவனாகவோ அல்லது சிறந்த கல்விமானாகவோ ஆகலாம். ஆனால் அவன் ஒரு முழுமையான சிறந்த மனிதனாக ஆகவே முடியாது.”

எவன் மிகவும் மகிழ்ச்சிக்குரிய மனிதன்?

“எவன் ஒருவன் மிக அதிகமானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறானோ, அவன்தான் மிகவும் மகிழ்ச்சிக்குரியவன் என்பதை அனு பவம் கூறுகிறது”

ஆகவே வாழ்வின் இலக்கு என்ன?

“மனித குலத்திற்காக பணியாற்று. இந்த வாழ்வு ரோஜா மலர்ப்பாதை அல்ல. முட்கள் நிறைந்த பாதை! நாம் மனித குலத்தின் நன் மைக்காக பணியாற்றுவது என முடிவு செய்து விட்டால் எந்தஒரு துன்பமும் நம்மை நிலை குலைய வைக்காது. ஏனெனில் இந்த தியாகங் கள் மனித குலத்தின் நன்மைக்காக!”

தனது 17ம் வயதில் எழுதிய இந்த வாசகங்கள் மார்க்சின் வாழ்நாள் முழுவதும் அவ ருக்கு மன உறுதியை அளித்தன. ஏனெனில் தனது சொந்த வாழ்வில் அவர் சந்திக்காத இன்னலே இல்லை எனலாம். ஒவ்வொரு தேசமும் அது பிரஷ்யாவின் சர்வாதிகார ஆட்சியாக இருந்தாலும் பிரான்சின் குடியரசாக இருந்தாலும், மார்க்சை நாடு கடத்தின. முத லாளித்துவ அரசுகளும், பத்திரிகைகளும் அவதூறு பொழிந்தன. மார்க்சின் மகத்தான படைப்பான “மூலதனம்” வெளியிடப்பட்ட பொழுது அதனை விமர்சித்தால் கூட மார்க்சின் புகழ் பரவி விடும் என அஞ்சிய அவர்கள் ‘அமைதி சதியில்’ ஈடுபட்டனர். வறுமை மார்க்ஸ் குடும்பத்தை வாட்டியது. எனினும் அவர் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்காக உழைத்தார். “கோடிக் கணக்கான உழைப்பாளிகளின் மகிழ்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்ததால் எந்த ஒரு துன்பமும் அவரிடம் ஒரு சிறு ஊசலாட்டத்தைக் கூட ஏற்படுத்த முடியவில்லை!

மார்க்சின் கோட்பாடுகள்

இன்றும் பொருந்துமா?


மார்க்ஸ் மறைந்து 128 ஆண்டுகள் கடந்து விட்டன.

“128 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மார்க்சின் கருத்துக்கள் இன்று பொருத்தமற்ற வையாகிவிட்டன”

“முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத் திக்கொள்வதில் வெற்றிபெற்று விடுகிறது. எனவே மார்க்சின் கருத்துக்கள் தோல்வி அடைந்துவிட்டன”

இவையெல்லாம் இன்று முதலாளித்துவ வாதிகளால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும். இவை உண்மை அல்ல! மார்க்சின் ஆய்வு குறிப்பாக அவரது “மூலதனம்” முத லாளித்துவ உற்பத்தி முறை குறித்து மிக ஆழ மாக ஆய்வு செய்யப்பட்டதாகும். முதலாளித் துவம் பற்றி மார்க்ஸ் முன்வைத்த அடிப்ப டைக்கோட்பாடுகள் இன்றளவும் பொருந்து கின்றன. முதலாளித்துவத்தின் உற்பத்தி முறையில் உள்ள வடிவம் மாறலாம். தொழில் நுட்பப் புரட்சி வந்திருக்கலாம். இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தில் முறைசாராத்தன்மை உருவாகியிருக்கலாம். தொழில் மூலதனத்தோடு நிதி மூலதனமும் சமூகப் பொருளாதாரத்தில் முன்வந்திருக்க லாம். இந்த நிதி மூலதனம் இரத்தக்காட்டேரி போல வெறிகொண்டு அலையலாம். ஆனால் இவையெல்லாம் கூட இலாப வெறிக்காகவே முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டது. எனவே மார்க்சின் அடிப்படைக்கோட்பாடு இன்றளவும் பொருந்துகின்ற ஒன்றுதான்.

முதலாளித்துவமும் கொடிய வறுமையும் பிரிக்க முடியாதவை

முதலாளித்துவம் உற்பத்தியைப் புரட்சிகர மாக முன்னேற்றியது. ஆனால் அதன் பலன் கள் ஒரு சிலரின் கைகளில் குவிந்தன என் றார் மார்க்ஸ். எனவே அபரிமிதமான செல்வம் ஒரு சிலரிடத்திலும் மறுபுறத்தில் அபரிமித மான வறுமை உழைப்பாளிகளிடமும் உருவா கியது என துல்லியமாக எடுத்துரைத்தார் மார்க்ஸ். ஏன்இவ்வாறு நிகழ்கிறது என்ப தையும் தோலுரித்துக் காட்டினார்.

அமெரிக்காவில் 90 சதவீதமாக உள்ள அமெரிக்க உழைப்பாளிகளின் வருமானம் 1979-2006ம் ஆண்டுகளுக்கிடையே 15 சதவீதம் உயர்ந்தது. ஆனால் வசதி படைத்த மேல்மட்ட 1 சதவீத செல்வந்தர்களின் வருமா னமோ 144 சதவீதம் உயர்ந்தது. அதுவும் மிக உயரத்தில் உள்ள 0.1 சதவீதம் செல்வந்தர் களின் வருமானம் 324 சதவீதம் உயர்ந்தது.

ஒரு அமெரிக்கத் தொழிலாளியின் ஊதி யம் 1989-2007ம் ஆண்டுகளிடையே 10 சத வீதம் உயர்ந்தது எனில், முதன்மை அதிகாரி களின் ஊதியம் இதே காலகட்டத்தில் 167 சதவீதம் உயர்ந்தது. எனவே 40 மில்லியன் அமெரிக்க மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளனர் எனும் செய்தி ஆச்சரியமற்ற ஒன்று தான். உலகின் செல்வம் அமெரிக்காவில் குவி கிறது எனில் அமெரிக்காவிற்குள் அச்செல் வம் மிகச்சிலரின் கைகளில் குவிந்துள்ளது. உலக முதலாளித்துவத்தின் தலைமையகத் தில் இதுதான் இன்றைய நிலை! முதலாளித் துவத்தின் அதிநவீன தொழில்நுட்பங்களும் புதிய உற்பத்தி சாதனங்களும் செல்வத்தை ஒரு சிலரின் கைகளில் சேர்வதை மாற்ற வில்லை. மார்க்ஸ் கூறியது இன்றும் உண் மையே என்பதை பறைசாற்றுகிறது.

இதே நிலைதான் இந்தியாவிலும்! ஒரு புறத்தில் 77 சதவீதம் மக்கள் அதாவது 84 கோடி பேரின் ஒருநாள் வருமானம் ரூ.20க்கும் கீழே! ஆனால் மறுபுறத்தில் அம்பானி குழு மம், டாடா குழுமம், சன் குழுமம் என பில்லிய னர்களிடம் செல்வம் தஞ்சமடைவதும் தங்கு தடையின்றி தொடர்கிறது. இவர்களுக்காக அரசின் கொள்கைகளும் வளைந்து கொடுக் கின்றன என்பதை அலைக்கற்றை ஊழல் தெளிவாக வெளிப்படுத்தியது. எனவே மார்க் சின் கோட்பாடு அமெரிக்காவிற்கும் சரி, இந்தி யாவிற்கும் சரி இன்றும் பொருந்துகின்ற உண்மையாகவே உள்ளது.

முதலாளித்துவ உற்பத்தி சமூக நன்மைக் காக நடப்பது இல்லை. சமூக திட்டமிடலுக்கு அங்கு இடமில்லை. அதன் நோக்கம் முதலா ளியின் லாபம் மட்டுமே! எனவே உற்பத்தி மிதமிஞ்சிப்போவதும், உற்பத்தி வீழ்ச்சியும், அதன் விளைவாக நிகழும் நெருக்கடியும் முதலாளித்துவத்தின் பிரிக்க முடியாத அம்சங்கள் என்றார் மார்க்ஸ். உலகப் பொருளா தாரத்தில் நிலவும் இன்றைய கடும் நெருக்கடி மார்க்சின் கூற்று சரியானது என்பதையே நிரூபிக்கிறது.

முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத் திக்கொள்ள எது வேண்டுமானாலும் செய்யும். குறிப்பாக முதலாளித்துவம் தனது காலத் திற்கு முந்தைய உற்பத்தி முறைகளை கபளீ கரம் செய்தே உருவாகிறது என்றார் மார்க்ஸ். அதனை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு துவாரத்திலும் இரத்தமும் அழுக் கும் பீறிட முதலாளித்துவம் உருவாகிறது”. இன்று இந்திய விவசாயத்துறையில் கால் பதித்துள்ள முதலாளித்துவம் விவசாயிகளை எந்த நிலைக்குத் தள்ளுகிறது என்பது நமது கண்கள் முன்பு நிகழும் உண்மைகள். ஒரு புறத்தில் கடந்த 11 ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகள் தமது உயிரை மாய்த்துள் ளனர். அதாவது 30 நிமிடங்களுக்கு ஒரு விவ சாயி மரணத்தை தழுவிக்கொண்டார். மற் றொருபுறத்தில் இந்தியாவின் கனிம வளங் களை கொள்ளையடித்திட முதலாளித்துவம், ஆதிவாசி மக்களை வனங்களிலிருந்து விரட்ட முனைகிறது. முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் மத்திய அரசோ, வீழ்ந்துவரும் விவ சாயத்தை பாதுகாத்திட அக்கறை கொள்ளத் தயாராக இல்லை. இந்திய மக்களில் 60 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து இருக் கும் சூழலில் இந்திய முதலாளித்துவம் விவசா யத்துறையில் தனது வர்க்க அதிகாரத்தை நிலைநாட்டிட விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் மரணத்தின் விளிம் பிற்கே துரத்துகிறது. இங்கும் மார்க்சின் ஆய்வு சரியானதே என்பது தெளிவாகிறது.

மார்க்சின் கோட்பாடுகள் வறட்டுச்சூத்திரம் அல்ல!

இவ்வாறு மார்க்சின் பல கோட்பாடுகள் அடிப்படையில் இன்றும் சரியானதே என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம் மார்க்சின் கோட்பாடுகள் வறட்டுச் சூத்திரங் கள் அல்ல என்பதில் பொதுவுடைமைப் போராளிகள் தெளிவாக உள்ளனர். தற்கால பரிணாமங்களையும் கணக்கிட்டு, தேவை யான செழுமைப்படுத்துதலையும் அமலாக் கிட அவர்கள் தயங்குவது இல்லை.

இந்திய தொழிலாளி வர்க்கத்தில் உருவா கியுள்ள முறைசாராத் தன்மை மார்க்ஸ் காலத் தில் இல்லை. அதே போல மார்க்ஸ் காலத் தில் நிதி மூலதனத்தின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தன. லெனின் காலத்தில் இது வளர்ந் தது. அதனை லெனின் தனது ஆய்விற்கு உட்படுத்தினார். எனினும் கடந்த 30 ஆண்டு களில் நிதி மூலதனம் ஒரு பிராங்கஸ்டின் உருவில் இரத்தக்காட்டேரி போல பரிணமித் துள்ளது. இதுபோன்ற பல மாற்றங்களை பொதுவுடைமைப் போராளிகள் உள்வாங்கி யுள்ளனர். இந்த மாற்றங்களை ஆய்வு செய் திடக்கூட மார்க்சின் கோட்பாடுகள்தான் அடித்தளமாக விளங்குகின்றன.

தனது உற்ற நண்பரின் கல்லறை அரு கில் அஞ்சலி உரையாற்றிய ஏங்கெல்ஸ் ‘மார்க்சின் பெயர் காலம் கடந்து நிற்கும். அவ ரது படைப்புகளும் காலத்தால் அழியாமல் நிற்கும்’ என்றார். மார்க்சின் கோட்பாடுகள் நேற்று உண்மையாக இருந்தன. இன்றும் உண்மையாக இருக்கின்றன. முதலாளித் துவம் உள்ள நாள் வரை அவை உண்மையா கவே இருக்கும். ஏனெனில் மார்க்சின் கோட் பாடுகள் ஒரு விஞ்ஞானம். விஞ்ஞானம் செழுமைப்படும். ஆனால் மறுதலிக்கப் படுவது இல்லை.

-அ.அன்வர் உசேன்

2 கருத்துகள்:

ஜெகதீஸ்வரன்.இரா சொன்னது…

கட்டுரை மிக அருமை.
மூலதனம் பற்றிய தமிழ் மின் புத்தகங்கள் இருந்தால் மின்னஞ்சல் செய்யுங்கள்.

லால் சலாம்.

Unknown சொன்னது…

கட்டுரைக்கு நன்றி நண்பரே!!