திங்கள், 16 ஜூன், 2014

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்

சிரியா, உக்ரைன் விவகாரங்களை தொடர்ந்து மீண்டும் கடந்த சில நாட்களாக இராக்கில் நடக்கும் பயங்கர மோதல்கள் உலகம் முழுவதும் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்துள்ளன.கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, மனிதகுல நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்று என போற்றப்படும் இராக்கில் அமைதி இல்லை; போர், மேலும் போர், குண்டுவெடிப்புகள், மீண்டும் உள்நாட்டுப் போர்... ரத்தவெள்ளத்தில் ஆயிரமாயிரமாய் அப்பாவிகள் இரையாவது தொடர் கதையாக மாறியிருக்கிறது.மீண்டும் இதோ, இராக்கில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கும், அதற்கெதிராக செயல்படத் துவங்கியுள்ள - மிகப்பெரும் பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ள ஒரு அமைப்புக்கும் இடையில் மிகப் பெரும் மோதல் - கலவரம் வெடித்துள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், இராக்கின் தற்போதைய அரசாங்கமும், அதை எதிர்த்து பயங்கர வன்முறையை துவக்கியுள்ள அமைப்பும் - இரண்டுமே அமெரிக்காவின் கைக்கூலிகள் என்பதுதான்.

‘நியூ ஈஸ்டர்ன் அவுட்லுக் ஜர்னல்’ என்ற ஏடு மிக விரிவான ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது: ‘சிரியாவை மொத்தமாக கபளீகரம் செய்ய பெரும் முயற்சியில் இருக்கிற அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் முன்னோட்டமாக பல நாடுகளில் உள்நாட்டுப் போர்களை தூண்டிவிட திட்டமிட்டுள்ளது. 

அதில் முக்கியமான நாடு இராக். சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிய பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டு அவர்கள் மிகப் பெரும் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இவர்களுக்கு அமெரிக்காவும், அதன் கைக்கூலிகளான துருக்கி, சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் பல்லாயிரம் கோடி டாலர்களையும் மிகப் பெருமளவில் ஆயுதங்களையும் வாரி வழங்கி வருகின்றன. பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை சிரியாவுக்குள் அனுப்பிய ஏகாதிபத்திய சக்திகள் படிப்படியாக அந்தக் குழுக்களையும் ஒன்றிணைத்து மிகப் பெரும் பயங்கரவாத ராணுவமாக - அமெரிக்காவின் சொல்படி எந்த நேரத்திலும், எந்த நாட்டிற்குள்ளும் புகுந்து ரத்தவெறியாட்டத்தை நடத்தக்கூடிய கூலிப்படையாக - மாற்றுவதில் தற்போது வெற்றி பெற்றுள்ளன. அப்படி உருவாகியிருக்கும் படைதான் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் சிரியா (ஐஎஸ்ஐஎஸ்)’.

கடந்த 2007ம் ஆண்டே சர்வதேச அரசியல் நோக்கர்களில் ஒருவரான செய்மவ்ர் ஹெர்ஷ் என்பவர் எழுதிய ஒரு விரிவான கட்டுரையையும் மேற்கண்ட நியூ ஈஸ்டர்ன் அவுட்லுக் ஜர்னல் ஏடு வெளியிட்டிருக்கிறது.மத்திய கிழக்கு - வளைகுடா நாடுகள் உள்ளிட்ட எண்ணெய் வள பூமியில் நிரந்தரமாக மோதலை நீடிக்கச் செய்ய ஒரு விரிவான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாக ஈரான், சிரியா, லெபனான் போன்ற நாடுகளை - ஏற்கெனவே இராக்கை கைப்பற்றியிருப்பது போல - முழுமையாக கபளீகரம் செய்வதுதான் இத்திட்டத்தின் இலக்கு. இதற்காக ஒவ்வொரு முறையும் மேற்கத்திய நாடுகளின் ராணுவப் படைகளை அங்கு முதலிலேயே அனுப்புவது என்பதற்கு மாறாக, இந்த நாடுகளிலெல்லாம் எந்த நேரமும் ஊடுருவி பெரும் கலகங்களையும், வன்முறைகளையும் நடத்துவதற்கேற்றாற்போல் ஒரு படையை உருவாக்க திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.

ஏற்கெனவே, இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் தன்சொல்படி கேட்ட பயங்கரவாத கைக்கூலி கும்பல்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விரிவான ராணுவப் பயிற்சியும், கேட்கும் போதெல்லாம் கைநிறையப் பணமும், அதிநவீன ஆயுதங்களும் அளித்து தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.இந்த கும்பல்களுக்கு துருக்கி, சவுதி அரேபியா போன்ற பாதுகாப்பான சொர்க்கங்கள் ஏற்கெனவே தயாராக காத்திருக்கின்றன. துருக்கியின் எல்லையை பயன்படுத்தி, இராக், ஈரான், லெபனான் போன்ற நாடுகளுக்கு இந்த கும்பல்களால் எளிதாக ஊடுருவ முடியும்.செய்மவ்ர் ஹெர்ஷ், குறிப்பிட்ட இந்த விபரங்களின் தொகுப்புதான், இன்றைக்கு இராக்கில் பெரும் வன்முறையை அரங்கேற்றி வருகிற ஐஎஸ்ஐஎஸ் எனும் அமெரிக்க ஆதரவு பயங்கரவாத கூலிப்படை.இதில் இருப்பவர்கள், பல பத்தாண்டுகளுக்கு முன்பே ஆப்கனில் பின்லேடனை ஊட்டி வளர்த்த அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் பல நாட்டு பிரிவினர்தான்.

இராக்கில் சதாம் உசேனை வீழ்த்துவதற்காக, அந்நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய்க் காரணம் கூறி 2003ம் ஆண்டு படையெடுத்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். மனித குலத்தால் வெறுக்கப்பட்ட இந்த கொடிய போரில் கிட்டத்தட்ட 6 லட்சம் இராக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் ஊடகங்கள் அந்த உண்மைகளை மறைத்தன.கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இராக்கில் அமெரிக்கப் படைகள் நேரடியாக கோலோச்சின. பெயருக்கு கைக்கூலி அரசாங்கங்களும் அமைந்தன. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன், இராக்கில் தற்போது உள்ள பாதுகாப்புப் படைக்கு மட்டும் 22 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது.

அதே நேரத்தில் மேற்படி பயங்கரவாத கூலிப்படைக்கு அமெரிக்காவின் நாசகர உளவு ஸ்தாபனமான சிஐஏ, பல்லாயிரம் கோடி டாலர் நிதியைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது.இராக் அரசுப் படைகளுக்கு கடந்த ஏப்ரலில் அமெரிக்கா எப்16 ரகத்தில் 36 போர் விமானங்களை அளித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் மிகப் பெருமளவில் எந்திரத் துப்பாக்கிகளையும் வழங்கியுள்ளது. 11 மில்லியன் ரவுண்டுகள் சுடும் அளவிற்கு வெடிமருந்துகளை அளித்துள்ளது.அரசுப் படைகளுக்கு எதிராக நிற்கும் கூலிப்படைக்கும் இதைவிட அதிகமாக ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது.பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற கதைதான்.இதோ இப்போது அமெரிக்கப் படைகள், பாரசீக வளைகுடாவிற்கு புறப்பட்டுவிட்டன. இராக் உள்ளிட்ட வளைகுடா பிரதேசத்தின் அளவற்ற எண்ணெய் வளத்திற்காக, ரத்த ஆறுகளை உற்பத்தி செய்கிறது அமெரிக்கா.
                                                                                                                                                                                                 - எஸ்.பி.ராஜேந்திரன்

திங்கள், 21 ஜனவரி, 2013

லஞ்சம் கொடு, கொள்ளை அடி, நாட்டை அடிமைப்படுத்து


இந்திய நிறுவனமாகிய ஜிஎம்ஆர் வசமிருந்த, 500 மில்லியன் டாலர் மதிப்புடைய மாலே சர்வதேச விமான நிலையத்தை, மாலத்தீவு அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுவிட்டது. டிசம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவுக்குள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள் என்று மாலத்தீவு அரசு நவம்பர் 27-ஆம் தேதி  சொன்னது. அதேபோல செய்தும்விட்டது.
 ஜிஎம்ஆர் நிறுவனம் மாலத்தீவு அரசுடன் 2010-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி, மாலே சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, பராமரித்து 25 ஆண்டுகளுக்கு அதில் கிடைக்கும் வருவாயைப் பெறலாம். ஆனால் இந்த ஒப்பந்தம்,  மாலத்தீவு அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் சாதகமாக இல்லை என்பதால், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது மாலத்தீவு அரசு.
 "இந்தியாவில் இதே ஜிஎம்ஆர் நிர்வகிக்கும் புதுதில்லி சர்வதேச விமான நிலையத்தின் வருவாயில் இந்திய அரசு 45 விழுக்காடு பெறுகிறது. ஆனால், மாலத்தீவு அரசுக்கு 1 விழுக்காடு மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு பயணியிடமும் வசூலிக்கப்படும் விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் 25 டாலர் மிக அதிகம். மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. நிகழாண்டில் மட்டுமே இக்கட்டணம் மூலம் 7 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. எந்த வகையிலும் மாலத்தீவு அரசுக்குப் பயன் கிடைக்காவிட்டால் எதற்காக தனியார்வசம் எங்கள் விமான நிலையம் இருக்க வேண்டும்?' என்கின்றது மாலத்தீவு அரசு.
 மாலத்தீவு மிகச் சிறிய நாடு. ஆனால், அவர்களால் ஒரு இந்திய நிறுவனத்தை ஒரு வார காலத்தில் வெளியேற்ற முடிகிறது. இதை இந்தியாவில் நம்மால் செய்திருக்க முடியுமா?
 இந்தியாவில் நாற்கரச் சாலைகளை அமைத்துள்ள தனியார் நிறுவனங்கள் பல இடங்களில் டோல்கேட் அமைத்துக் கட்டணம் வசூலிக்கின்றன. எந்தெந்தப் பகுதிகளில், இவர்கள் செலவழித்த முதலீட்டையும், அதற்குரிய நியாயமான லாபத்தையும் மீட்டெடுத்தனர் என்று கணக்கிட்டு, நாற்கரச் சாலைகளை அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள முடியும். ""கட்டு - உரிமைகொள் - செயல்படுத்து - ஒப்படை'' (பி.ஓ.ஓ.டி) என்ற அடிப்படையில்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் ஒப்பந்தப்படி முறையான சாலைப் பராமரிப்புகூடக் கிடையாது. ஆனாலும் மக்கள் நலன் கருதி இவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்திய அரசினால் முடியுமா?
 பிரான்ஸ் மிகச் சிறிய நாடு. அந்த நாட்டில் தேனிரும்பு தொழிற்கூடம் வைத்துள்ள இந்திய வம்சாவளித் தொழிலதிபர் மிட்டல், பிரெஞ்சு அரசுக்கு உறுதி கூறியபடி சில நூறு பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவில்லை என்பதற்காகவும், தொழிற்சாலை விதிமுறைகளை மீறியதற்காகவும் ""ஒழுங்காக இருந்தால் இரு, இல்லையேல் வெளியேறு'' என்று கூறிவிட்டது பிரெஞ்சு அரசு. இப்போது அந்நாட்டுடன் மிட்டல்  சமாதானம் பேசி, ""உடன்படிக்கையில் உள்ளபடி நடந்து கொள்கிறேன்'' என்று உறுதி கூறியிருக்கிறார்.
 ஆனால், உலகமயம், தாராளமயமாக்கல் என்கிற பெயரில் இந்தியாவில் இன்று நடப்பதென்ன? வோடஃபோன் நிறுவனம் வெளிநாட்டில் பங்குகளை விற்றதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பை நம்மால் பெற முடியவில்லை. போபால் விஷவாயு வழக்கில் இன்றளவும் கார்பைடு நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் பெற்றுத்தர முடியவில்லை. அந்தத் தொழிற்சாலையில் இருக்கும் விஷக்கழிவான சயனைடை அப்புறப்படுத்த முடியவில்லை. இந்திய மக்கள் பணம் ரூ.25 கோடி செலவிட்டு சயனைடு குப்பையை அள்ள நினைத்தாலும் முடியவில்லை.
 இந்நிலையில் அன்னிய நேரடி முதலீட்டை சில்லறை வணிகம் உள்பட அனைத்துத் துறைகளிலும் அனுமதித்துவிட்டோம். குறிப்பாக, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவது சில்லறை வணிகத்தைவிட மிக ஆபத்தானது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தும் அரசு கவலைப்படவில்லை.
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தில் வெற்றி பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன்வசப்படுத்த வால்மார்ட் நிறுவனம் ரூ.125 கோடி செலவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இப்போது குரல் எழுப்புகின்றன. இது பொய் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே -பல "தியாகங்கள்' செய்திருக்கும்போது, இந்தியாவில் மிகப்பெரும் சந்தையை வளைத்துக் கொழிக்கப்போகும் வால்மார்ட், தனது சில்லறை வணிகத்துக்காகச் சில்லறையைச் சிதறவிடாதா என்ன!
 உள்ளே நுழைவதற்கே லஞ்சம் கொடுத்து வருவார்கள் என்றால், இவர்கள் மத்திய அரசு சொல்லும் எந்த நிபந்தனைகளைப் பின்பற்றுவார்கள், எந்த வேலைவாய்ப்புகளை உறுதி செய்வார்கள்? விவசாயிகளும் நுகர்வோரும் பயன்பெறுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது மாநில அரசின் விருப்பம் என்கிறார்கள். இந்த நிறுவனங்கள், முதலீட்டுக்காக அனுமதிக்கப்பட்ட விதிகளை மீறின அல்லது கடைப்பிடிக்கவில்லை என்று பொறுப்பாக்குவது யாருடைய வேலை? மத்திய அரசினுடையதா? மாநில அரசினுடையதா? 30% உள்நாட்டு கொள்முதல் கடப்பாட்டை இந்திய அளவில் இந்நிறுவனம் கணக்கு காட்டுமா? அல்லது மாநில அளவிலா? எதுவுமே தெளிவில்லை. ஆனால், கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. இப்போதே 3 மில்லியன் டாலர் இறக்கியுள்ளது வால்மார்ட் என்கிறார்கள்.
 அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்குள் வருவதிலோ, பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே செயல்படுவதிலோ தவறில்லை. அரசு, மக்கள் நலனில் அக்கறையுடன் கண்காணிப்பு அமைப்புகளை முறையாகச் செயல்பட அனுமதிக்குமானால், தவறுகள் தட்டிக்கேட்கப்பட்டு அவ்வப்போது தடுக்கப்படுமானால், அது நிச்சயமாக நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாலே போன்ற குட்டித் தீவுக்கு இருக்கும் தேசநலனிலான அக்கறையும் துணிவும் சர்வ வல்லமை படைத்த இந்திய அரசுக்கு இல்லாமல் இருக்கிறதே, அதுதான் நமது பிரச்னை.
 பொருளாதார தாராளமயம் என்பது லஞ்சமும், ஊழலும், முறைகேடுகளும் தாராளமயமாக்கப்படுவதன் மறுபெயராகி விட்டதுதான் நமது பிரச்னை. இதை யார் யாரிடம் சொல்லித் திருத்துவது?