வெள்ளி, 20 ஜனவரி, 2012

உலகம் அணுமின் சக்தியை நாடுவது விருப்பத்தால் அல்ல

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிற்கு வடகிழக்கில் ரிக்டர் அளவுகோலில் 9.1 அளவிற்கு நிலநடுக்கம் சென்ற மார்ச் 11 அன்று கடலுக்கடியில் ஏற்பட்டது. இந்த மிகக்கடுமையான நிலநடுக்கத்தால் புகுஷிமா டெய்ச்சி அணுமின் நிலையம் பாதிப்புக்குள்ளானது. அந்நிலையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த 3 உலைகளும் தானாகவே செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன. அம் மின்நிலையத்தில் இருந்த 6 உலைகளில் 3 பராமரிப்புப் பணிக்காக ஏற் கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ராட்சஷ சுனாமியால் செயல்பாட்டில் இருந்த 3 அணுஉலைகளின் குளிர்விப் பான்கள் செயலிழந்தன. குளிர்விப்பான் களுக்கு சென்ற மின்சாரத்திற்கு தடை ஏற் பட்ட தாலும்,பேக்கப் பேட்டரிகள் செயல் படாததாலும்,அவசர டீசல் மின்னாக்கிகள் நீரில் மூழ்கியதாலும்,இதர சில காரணங் களாலும் குளிர்விப்பான்கள் செயலிழந்தன.

அணுஉலையை குளிர்விக்கும் அமைப்பு பாதுகாப்பானதாக இருந்திருந்தால், அவசர கால மின்னாக்கிகளும் போதிய அளவு உயர மான இடத்தில் இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது.முற்றிலும் தவிர்க் கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு புகுஷிமா அருகில் உள்ள ஒனகாவில் உள்ள டொகொகூ மின் நிறுவனத்திற்கு சொந்தமான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அணு மின் நிலையத்தின் குளிர்விப்பான் அமைப்பு கள் கடல்மட்டத்தில் இருந்து உயரமான இடத்தில் இருந்ததால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை.சுனாமியால் வீடுகளை இழந்த ஒனகாவா மக்கள் மூன்று மாதம் வரை அம்மின் நிலைய உடற்பயிற்சிக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர் என்பது சிறப்புச் செய்தியாகும்.

சர்வதேச அணுசக்தி முகமையால், விபத்து நடப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்பு சுட்டிக்காட்டப்பட்டிருந்த குறைபாடுகளை, அந்நிலையத்தின் உரிமையாளரான டோக்கியோ எலக்ட்டிரிக் பவர் கார்ப்பரேசன் சரி செய்திருந்தால் இவ்விபத்து ஏற்பட்டிருக் காது.அலட்சியமாக இருந்த டெப்கோ நிறுவனமும்,முறையான கண்காணிப்பை செய்யாத அரசுமே இவ்விபத்திற்கு காரணம்.

புகுஷிமா விபத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் அணுஉலைகள் மூடப்படுவதாக கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்கு மாறானது.

ஜெர்மனி 2022 க்குள் தனது அணு உலைகள் அனைத்தையும் படிப்படியாக மூடப்போவதாக அறிவித்துள்ளது. தற்போது இயங்கிவரும் அணு உலைகளின் செயல் பாட்டுக் காலம் முடிந்த உடன் அவற்றிற்குப் பதிலாக புதிய அணுமின் நிலையங்கள் தொடங்கப்படாது என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

செர்னோபில் விபத்துக்குப்பிறகு கருத்துக் கணிப்பு நடத்தி, அணு உலைகளை இத்தாலி மூடியது.புதிதாக அணுஉலை தொடங்கிட மீண்டும் கருத்துக்கணிப்பை அண்மையில் நடத்தியது.அதில் பெருவாரியான மக்கள் அணு உலைகள் மீண்டும் வேண்டாம் என வாக்களித்தனர். இருப்பினும், இத்தாலி தனது தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் அல்பேனியாவில் அணுமின்நிலையத்தை அமைத்து அங்கிருந்து மின்சாரத்தை பெற உடன்பாடு கண்டுள்ளது. அணுமின்சாரம் வேண்டும், ஆனால் அணு உலையை தங்கள் நாட்டில் அமைக்கக்கூடாது என்பது தான் இத்தாலியின் நிலை.

ஜப்பான் அணுக் கொள்கையை மாற்றப் போவதாக அறிவித்தது.இருப்பினும் அணு மின் உற்பத்தியை அது முற்றிலும் நிறுத்து வதாக அறிவிக்கவில்லை. புகுஷிமா விபத் தையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில உலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி யுள்ளன. புதிதாக 16 அணுஉலைகள் கட்டப் படும் என ஜப்பான் சென்ற மாதம் அறிவித்துள் ளது. அணு உலைகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை குறைப்பதற்காகவும், பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அணு உலைகள், அவற்றின் ஆயுட்காலமான 40 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் தடுப் பதற்காக ஜப்பான் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர உள்ளது.உள்ளூர் மக்களின் ஒப்புதலுடன் தான் புதிய அணு உலைகள் தொடங்கப்படும் என்றும் ஜப்பான் கூறியுள் ளது. இது எதிர்காலத்தில் பல புதிய அணு உலைகளை தொடங்க உதவும் என ஜப்பான் கருதுகிறது.

அணுஉலைகளின் பாதுகாப்பைப் பற்றிய அச்சம் பரவலாக இருந்த போதிலும், இதர உலக நாடுகள் அணுசக்தியை ஆக்கப்பூர்வ மாக பயன்படுத்தும் கொள்கை நிலையி லிருந்து மாறவில்லை.45 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் அணுமின் சக்தி தங்களுக்கு அவசியம் என கருதுகின்றன.உலகம் முழு வதும் தற்பொழுது 60 க்கும் மேற்பட்ட அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவின் அணுக்கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என புகுஷிமா விபத்துக் குப் பிறகு திட்டவட்டமாக அறிவித்தார்.

புஷ்ஷரில் கட்டப்பட்ட தனது முதல் அணுமின் நிலையத்தில் ஈரான் மின் உற்பத்தியை துவக்கியுள்ளது. குஷ்ஷிஸ்தான் பிரதேசத்தில் டார்கோவின் என்ற இடத்தில் 360 மெகாவாட் திறன் கொண்ட அணு உலையை ஈரான் கட்டிவருகிறது.அடுத்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்சாரத்தை அணுசக்தி மூலம் உற்பத்தி செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது. இதற்காக 19 அணுஉலைகளை கட்டிட திட்டமிட்டுள்ளது.

சீனா 2011 மார்ச் அன்று பாதுகாப்பு நட வடிக்கையாக அனைத்து புதிய அணு உலை களுக்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.பின்னர் மார்ச் 26 அன்று தனது புதிய அணுமின்திட்டப் பணிகள் அனைத்தும் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்தது.

சீன சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள நியூக்ளியர் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் தியான் சுஜியா “அணுமின் திட்டங்கள் கைவிடப்படாது. சீனா 2020க்குள் 66 அணு உலைகளை புதிதாக கட்ட உள்ளது. இதன் மூலம் 66 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

மேலும்,சீனா நான்காவது தலைமுறை அணுஉலைகளை கட்ட திட்டமிட்டு வருகிறது.இது முழுக்க முழுக்க சீன தொழில் நுட்பமாகும். இதில் ஹீலியம் வாயு குளிர்விப்பானாக பயன்படும். இந்த அணுஉலையின் குண்டங்கள் மிக அதிகமான வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டதாகும். விபத்து ஏற்பட்டாலும் குளிர்விப்பான்கள் அவசியம் இல்லை எனக் கூறப்படுகிறது.1600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நூற்றுக்கணக்கான மணிநேரத்திற்கு அணுஉலையின் குண்டம் இருந்தாலும்,அதன் உள்ளே உள்ள முலாம் பூசப்பட்ட யுரேனிய எரிபொருள் உருளைகளுக்கு எந்த பாதிப்பும் வராது எனக்கூறப்படுகிறது. இத்தகைய நான்காவது தலைமுறை அணுஉலையின் மாதிரியை 2003 ஆம் ஆண்டு சீனா உருவாக்கியது. பரிச்சார்த்த முறையில் செயல்பட்டுவரும் அந்த உலை 100 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகிறது.

ரஷ்யா இப்பொழுது 23200 மெகாவாட் மின்சாரத்தை அணுசக்திமூலம் உற்பத்தி செய்கிறது. அதை 2020 க்குள் 43300 மெகா வாட் அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்பொழுது நாட்டின் மொத்த மின் உற்பத்தி யில் 16.6 விழுக்காட்டை அணுமின்சக்தி மூலம் பெறுகிறது.அதை 2016க்குள் 18.6 விழுக்காடாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. 2011டிசம்பர் 13 ஆம் தேதி முதல் ககாலி னின்-4 என்ற புதிய அணு உலை செயல் படத் தொடங்கியுள்ளது. அது 950 மெகாவாட் திறன் கொண்ட வி-320 என்ற மாடலில் அமைந்த விவிஇஆர்1000 வகை அணு உலையாகும் .ரஷ்யாவில் செயல்படும் 33 வது அணு உலை என்ற பெருமையை பெற்றுள்ளது.அதை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பிரதமர் புடின், ரஷ்யாவில் மேலும் 10 அணு உலைகள் கட்டப்படுவதாக அறிவித் தார்.ரஷ்யாவில் மட்டுமின்றி பல்வேறு நாடு களிலும் அணுஉலைகளை ரஷ்ய நிறுவனம் கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.2011 வரை 21 அணு உலைகளைக் கட்ட ரஷ்யா ஒப்பந் தம் போட்டுள்ளதாக புடின் கூறினார். அணுசக்தி மறுமலர்ச்சி பெற்றுள்ளதாகவும் பகர்ந்தார்.

தைவான் அரசும் அணுமின் திட்டங்கள் கைவிடப்படாது என 15.3.11 அன்று அறிவித் தது. புதிதாக கட்டப்பட்டு வரும் நான்காவது அணு உலையின் கட்டுமானப்பணிகள் தொட ரும் என தைவான் உறுதிபட கூறியுள்ளது.

தென்கொரியா தனது மின் உற்பத்தியில் 35 விழுக்காட்டை அணுமின் நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்கிறது.2024க்குள் மேலும் 35 அணு மின்நிலையங்களை உரு வாக்கத் திட்டமிட்டுள்ளது.தற்பொழுது புதி தாக ஒரு உலை செயல்பட தொடங்கியுள் ளது.இதன் மூலம் 2024 ல் தென்கொரியாவின் மொத்த மின் உற்பத்தியில் 50 விழுக்காடு அளவிற்கு அணுமின்சாரம் இருக்கும்.

ஐக்கிய அரபு எமிரேட் “டிசம்பர் 2009 ல் தென்கொரியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத் தின் அடிப்படையில் கட்டப்பட்டுவரும் 1000 மெகாவாட் திறன் கொண்ட 4 அணு உலைகளின் கட்டுமானப்பணிகள் தொடரும்’’என அறிவித்துள்ளது.

வியட்நாம், தனது நாட்டில் 2020 க்குள் ஜப்பான் மற்றும் ரஷ்யா உதவியோடு 8 அணு மின்நிலையங்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்தோனேசியா புதிய நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அணுமின் நிலையங் களை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

மலேஷியா புகுஷிமா விபத்துப்பற்றிய முழு விபரங்களும் வந்த உடன் அணுமின் திட்டம் தொடங்குவது பற்றி முடிவு செய்யப் படுமென அறிவித்துள்ளது.

ஜோர்டான், 2035 க்குள் தனது மின் தேவையில் 60 விழுக்காட்டை அணுமின் நிலையம் மூலம் பெறும் வகையில் அணுமின் திட்டங்கள் செயல்படுத்துப்படும் என அறிவித்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவின் மின்துறை அமைச்சர் டீப்புவா பீட்டர்ஸ் 26.5.11 அன்று அணுமின் திட்டங்கள் தொடரும் என அறிவித்தார். 6 புதிய அணுமின் நிலையங் களை 2030க்குள் உருவாக்கிட தென்ஆப் பிரிக்கா அரசு 2011 மார்ச் இறுதியில் அனுமதி வழங்கியது.

கென்யா 3 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நிலையங்களை கெய்ரோவிலிருந்து 50 கி.மீ தொலைவில் அமைக்க திட்டமிட்டுள்ளது.சர்வதேச அணு சக்தி முகமை 31.3.11 அன்று அனுமதி வழங்கி யுள்ளது.

ரஷ்ய உதவியுடன் அணுமின் திட்டம் தொடங்கிட நைஜீரியா-ரஷ்யா இடையே 2011 ஜூலை 26-28 தேதிகளில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.விரைவில் உடன்பாடு நிறைவு பெற உள்ளது.

புகுஷிமா விபத்தோ உள்நாட்டு அரசியல் மாற்றங்களோ அணுமின் திட்டப்பணிகளை பாதிக்காது என எகிப்து அறிவித்துள்ளது.

புகுஷிமா விபத்திற்குப்பிறகு அணுமின் திட்டங்கள் தொடரும் என தென்அமெரிக்க நாடான சிலி அறிவித்துள்ளது.அமெரிக்கா, அர்ஜெண்டினா, பிரான்ஸ் உடன் அணுமின் திட்டங்களுக்காக உடன்பாடு கண்டுள்ளது.

இந்நிலையில் தான் 2020 ல் 20ஆயிரம் மெகாவாட்டும்,2050 ல் 2 லட்சம் மெகாவாட் டும் மின் உற்பத்தியை அணுமின் நிலையங் கள் மூலம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள தாக நமது இந்திய அரசும் அறிவித்துள்ளது.

அடர்த்தியான,தொடர்ச்சியான மின் சாரத்தை உற்பத்தி செய்ய உதவிடவல்ல புதுப் பிக்கத்தக்க மாற்று எரிசக்தி கிடைக்கின்ற வரையில், அணுசக்தியை மின்சாரத்திற்காக பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் பல நாடுகள் உள்ளன.எனவே தான் உலகின் பல நாடுகள் புகுஷிமா விபத்துக்குப் பிறகும் கூட அணுமின் நிலையங்கள் அமைத்திட திட்டமிட்டு வருகின்றன.

உலகம் அணுமின் சக்தியை நாடுவது விருப்பத்தால் அல்ல காலத்தின் கட்டாயத்தால் தான். உரிய மாற்றை காணும் வரை நாமும் அணுசக்தியை கைவிட்டு விடமுடியாது. செர்னோபில், புகுஷிமா போன்ற விபத்துகளிலிருந்து படிப்பினை களை கற்று பாதுகாப்பாக அணுசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தேவை.

டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத்

கருத்துகள் இல்லை: