திங்கள், 8 நவம்பர், 2010

பராக், பராக் சொல்ல பாதந்தாங்கிகள் அல்ல கம்யூனிஸ்டுகள்!

கறுப்பை

என்று சிவப்பு வெறுத்தது?

இருட்டை விரட்டு
வெளிச்சம் வரும் என்கிறது கறுப்பு.

அகலை ஏற்று

வெளிச்சம் வரும் என்கிறது சிவப்பு.

மூடத்தனத்தை விரட்டு என கறுப்பும்

சுரண்டலை ஒழி என சிவப்பும் போராடுகிறது.



இந்திய கறுப்பானாலும்

ஆப்பிரிக்க கறுப்பானாலும்

பாதித்தால் - முதல் கொதிப்படைவது

சிவப்பு தான்.

ஆப்பிரிக்க இருள்சிறையில் கிடந்த

கறுப்பு நிலாவுக்கு

வெளிச்சம் தேடி

இந்தியாவெங்கும் திரண்டது சிவப்பு.



கறுப்புக்கரங்களின் உழைப்பைச் சுரண்டும்

முதலாளித்துவச் சுரண்டலை

எதிர்த்த வர்க்கச் சிவப்பு

அமெரிக்க கறுப்பை வெறுக்கிறதாம்!

வர்ணமானாலும்

வர்க்கமானாலும்

அது உழைக்கும் வர்க்கத்திற்கு

பொது எதிரி என்றால்

சிவப்பு என்றும் ஏற்காது.

அதை விரட்டும் வரை ஓயாது.



விதேசி வர்த்தகத்தை விரட்ட

சுதேசிக் கப்பலோட்டியதால்

பல ஆண்டு செக்கை இழுத்தார்

கதராடை அணிந்த வ.உ.சிதம்பரனார்.

சுதேசிகளை விரட்ட

கதராடை அணிந்த கனவான்கள்

வெள்ளை மாளிகை கிழிக்கும் செக்கிற்காக

விதேசிகளை

மண்டியிட்டு வரவேற்கிறார்கள்.



தியாகத்தின் திருவுருவா

வெள்ளைமாளிகை?

அதன் கறுப்புப்பிரதிநிதி

என்ன காந்தியவாதியா?

அத்தனை முறை “பராக்” சொல்லியும்

வர்த்தகம் என்ற பெயரில்

வந்தவனை உள்ளே விட்டு

ஆட்சியை இழந்தவன் இந்தியன்.

மீண்டும் பராக் ஒபாமாவை

வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறான்.

சில்லரை பிரச்சனையென

ஒதுங்கிவிட முடியாத நிலையில்

அமெரிக்க வர்த்தகர்களுடன்

சில்லரை வர்த்தகத்தை

வளைக்க வருகிறார் பராக் ஒபாமா.



இந்திய அரசாங்கம்

வாலாட்டி நிற்பதால்

தன் பாதுகாப்பிற்கு

படையாட்கள் மட்டுமின்றி

நாய்களையும் அழைத்து வருகிறார் ஒபாமா.

இந்திய நாய்களைக் கூட

நம்ப மறுப்பவருக்கு

இந்திய நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு.

பெருமை பொங்கும் செய்தி இது !



அமெரிக்காவின்

ஐந்து மடங்கு வர்த்தகம் அதிகரிக்க

அனைத்து ஏற்பாட்டோடு இந்தியா கிளம்பிய

பராக் ஒபாமாவிற்கு

பராக் சொல்லும் பாதந்தாங்கிகளல்ல:

சிவப்பு கொடியேந்தும் கம்யூனிஸ்டுகள்.



இந்தியாவைச் சுரண்ட

வெள்ளையர் வந்தாலும்

கறுப்பர் வந்தாலும்

சிவப்பு என்றும் அனுமதிக்காது.

அதன் சினமும், கொதிப்பும் குறையாது.

- ப.கவிதா குமார்

கருத்துகள் இல்லை: