வெள்ளி, 23 டிசம்பர், 2011

தடயம் :சுறுக்கு என்று பாயும் சாதி

நாலுபேரும் மடியை அவுத்து வெத்திலை பாக்கு போட ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட அந்தப்படிக்கே செய்து முடிக்கிறதுன்னு தீர்மானமாகிப்போச்சி. ஊருக்குள்ள வலுவான சம்சாரிகள் இங்கே உட்கார்ந்திருக்கிற நாலே நாலுபேர்தான். இதுகளுக்குள்ளே ஒரு ஒத்துமை. ஒரு கட்டு திட்டுன்னு வச்சி ஒரு அமைவோட இருந்தா கிழக்குத் தெருக்காரங்க ஆட்டமும் வச்சிருக்கிற சங்கமும் எம்மாத்திரம்?

மூணு தேறம் வயித்துக்கு திங்கவும் உடுத்திக்கிட குண்டித்துணிக்கும் நம்மகிட்டெ கையேந்துற பயல்கள் இப்பொ என்ன வெறப்பா திரியுறான். தலையில லேஞ்சி கட்டுறதென்ன கால்ல கிறீச்சி மிதியடி போட்டு லாத்துறதென்ன பயமத்துப் போச்சுங்கிறேன்.
காட்டுல வேல விட்டும் விடுமுன்னே டவுனுக்கு பொதுக்கூட்டம் போகணும்ங்கிறான். பேரணிங்கிறான் ஆர்ப்பாட்டம்ங்கிறான் டேஙப்பா ஆட்டம் கொஞ்சமா? அட இந்த பொட்டெ சிரிக்கி பிள்ளெக! நண்டுஞ்சிண்டுகளை கூட்டிவந்து ஒப்புக்கு கணக்குகாட்டி கும்புட்டு கூத்தாடி கூலி வாங்கிட்டுப் போனவ, இப்பொ பிள்ளைகளை பள்ளிக்கூடம் காலேஜ்ன்னு அனுப்பிட்டு இவளும் இன்னக்கி நான் லீவுங்கிறாள். என்னன்னு கேட்டா நாளைக்கு மேதினம் தோசைக்கு நனையப்போட்டு ஆட்டி வைக்கணும்ங்கிறா.
அவங்க வீட்டுக் கூரையில அவங்களுக்குள்ள ஒருத்தனையொருத்தன் பிடிக்காம தீவச்சுக்கிட்டு நம்மள கை நீட்டுறான். அவங்க சங்கம் வச்சது பிடிக்காம நாமதான் தீவச்சோமாம். தெக்குள்ள பயக கூரை எரியும்போது வடக்குட்டுப் பயகளோட செருப்பும் துண்டும் பொடிமட்டை மொதக்கொண்டு அங்கே கிடந்த தடயம் இருந்திருக்கு. இந்தப் பக்கம் அந்தப் பயல்களோட நடமாட்ட தடயங்கள் கிடந்திருக்கு. பாத்திருக்காங்க. என்னடான்னா நாமதான்னு சாதிக்கிறாங்களே படவா!
விசுக்குன்னு போலீஸ் கோர்ட்டுன்னு படியேறிர்ராங்க. இதுக்கெல்லாம் கை கொடுக்கிறது அவங்க பன்னிகள் வளத்து துட்டு துக்காணின்னு பண்ட் சேக்கிறதுதான். பன்னிகளுக்குத்தான் அதுக இரைபாடுகளுக்கு நாம மெனக்கிட வேண்டியதில்லை. அதுகளா 'மந்தை' க் காட்டுல மேய்ஞ்சி சாக்கடை சலதாரையில புரண்டு உருண்டு வதவதன்னு குட்டிகளைப் போட்டு பயகளுக்கு வருமானத்தை கொடுத்து உதவுது.
அவங்களை ஒடுக்கணும்ன்னா நாமளும் பண்ட் சேக்கணும். பன்னி வளப்புல இறங்கீற வேண்டியதான். அருவமில்லாம அது பாட்டுக்க திரியட்டும். தொறட்டு இல்லே. கொண்டு வந்து விடுறதோட சரி. நாம நம்ம பாடு சோலிகளைப் பாக்கலாம்.
தொரைச்சாமி நாக்கெரு தெக்காட்டுக்கும், கரையா நாக்கெரு கீகாட்டுக்கும், வடக்குட்டும் மேற்கிட்டும் வரதாழ்வாரும் போத்தி நாயுண்டும், சரியாவுள சாதிப் பன்னி எங்கே வாங்கலாம்ன்னு அலைஞ்சி விசாரிச்சிட்டு வந்தாங்க. பன்னிகள்லயே வத்தலக்குண்டு பன்னிதான் ரொம்ப ஒசத்தியாம். இனப்பெருக்கம் அந்த மாதிரி எங்கேயும் கிடையாதுங்கிறாங்க. ஒரு ஈத்து வகைய்யா ஈண்டதுன்னா ஒரு குடும்பத்துக்கான மொத்த நல்லது பொல்லதுகளும் நடத்தி முடிச்சிரலாமாம்.
தாம்சமே கூடாதுன்னு நாலு பேரும் ஒரே நா ராத்திரியில வத்தலக்குண்டுக்கு நடந்தே வந்து சேந்தாங்க. அங்கேயும் சுத்தோ சுத்துன்னு சுத்தி கடைசியில் வியாபாரி பன்னி மாடசாமித் தேவர் வீட்டை கண்டுபிடிச்சி நல்ல சினைப்பன்னி ஒண்ணு விலையப்பத்தி கவலையில்ல உடனடியா வேணும்ன்னு மன்றாடி கேட்டு நின்னாங்க.
தேவரு நாலு பேரையும் மேலேயும் கீழேயும் பாத்தாரு. போட்டிருக்கிற கதர் சட்டைக்கும் வாங்க வந்த வியாபாரத்துக்கும் சம்பந்தமில்லாமயிருந்தது. அதுவும் ஊரு விருதுபட்டிக்கு தெற்கேயிருந்து வர்றதா வேற சொல்றாங்கன்னு ரொம்ப நேரம் யோசிச்சார்.
பிறகு கெத்து விடாம "ஹ்ர்ம்ம்... சரி! பெரும்பாலும் நான் வெளியூருக்கு உருப்படிகளை கொடுக்கிறதில்லே. ஊரைவிட்டு சீதேவி போயிரும்ன்னு நெனப்பேன். எங்க ஊர் பன்னிகன்னா அவ்வள பேர் போனது. மணப்பாறை மாடு, ஊத்துக்குளி வெண்ணெ, தாமிரபரணி தண்ணி, வத்தலக்குண்டு பன்னி. நல்லது. நம்பி வந்துட்டீங்க இப்பொ போயிட்டு சாயுங் காலமா வாங்க. எம்பேரு சொல்றாப்புல ஒரு உருப்படி கொடுத்து விடுறேன்னு அனுப்பிச்சு வச்சார்.
அவங்க அந்தப்பக்கம் நகரவும் தேவர் வேட்டியை வரிஞ்சு கட்டுனார். இன்னக்கி தூங்கி முழிச்ச நேரம் நல்ல நேரம். நம்ம குல தெய்வந்தான் இவங்களை அனுப்பிச்சி வச்சிருக்குன்னு திசை பாத்து தரை மண்ணள்ளி நெத்தியில பூசுனார். தேவர் வீட்டுல ரொம்பத் தவங்குன நாள்ப்பட்ட பன்னி ஒண்ணு சாகமாட்டாம கிடந்தது. பல ஈத்து ஈண்ட கிழட்டுப் பன்னி.. ஈத்து முறிஞ்சு எதுக்கும் ஆகாம அறுத்துப் போட்டாலும் கறியை வாங்க நாதி கிடையாது. அவ்வள வங்கிழடு. அதுக்கு போக காலம் பிறந்திருச்சி.
இருக்கிற கழி தண்ணியெல்லாம் சட்டி சட்டியா அதுக்கு முன்னாடி குடிக்க வச்சார். ஒவ்வொரு பலகாரக் கடையிலயும் அள்ளிவந்த மிச்ச சூத்தக்காயி, எச்ச இலைன்னு கொண்டுவந்து தினசரி சலவன் பன்னிகளுக்குத் தான் வெப்பாரு. இன்னக்கி கிழடுக்கு முன்னாடி வந்து கொட்டுனாரு. அவ்வளவு பதவலையும் தின்னு குடிச்ச பன்னி நல்லா யானைக்குட்டி உயரத்துல எழுந்திருச்சி நின்னது. வயிறு பொம்முன்னு பொடச்சி எட்டு எடுத்து வெக்கெ மாட்டாம கிறங்கி கிறங்கி நடந்தது.
தேவரு ஓடிப்போய் சம்சாரிகளை கூட்டி வந்து காண்பிச்சார். நாலு பேருக்கும் ரொம்ப திருப்தியாயிருந்தது. ஒருத்தருக்கொருத்தர் நாடிய நாடிய வெட்டி குசுகுசுன்னு பேசுனாங்க. எப்படிக் குறைச்சுப் பாத்தாலும் வயித்துல பத்துக்குட்டிக்கு குறையாம இருக்கும்ன்னார் கரையா நாக்கெரு. அதென்ன அப்படிச் சொல்லிப்புட்டெ ஒரு டஜணுக்கு கூடத்தான் சொல்லலாமேயொழிய குறைச்சி மதிக்க முடியாதுன்னார் தொரைச்சாமி நாக்கெரு. அட நீ ஒண்ணு இப்படித்தான் வெள்ளாமை செஞ்சி வரவு-செலவு பாத்திருப்பே ஒன்றரை டசன் குட்டி ஓடுற ஓட்டத்துல இருக்குமப்பான்னு போத்தி நாக்கெரு சொல்ல, ஒரே குதூகலமாகிப் போனாங்க.
நேரமாக ஆக அத்தாவுத்தியா நிக்கிற பன்னியை விட தேவருக்குத்தான் வயிறு ரொம்ப கலங்குனது. குலை பட்டினியாக் கிடந்தது திட்டமில்லாமத் தின்னு சட்டி சட்டியா கழி தண்ணியக் குடிச்சிருக்கு. செமிக்காம செய்யாம வயித்தால பிடுங்கீருச்சுன்னா! குட்டு வெளிப்பட்டிருமே.
"மொதலாளி வாங்குறாப்புலயிருந்தா ரூபாய கொடுத்திட்டு உருப்படிய தூக்குங்க. இல்லேன்னா கொஞ்ச நேரத்துல வேற வியாபாரிக வர்றாங்க அவங்க நூறு ஐநூறு கூட கொடுத்தா மாறிருவேன் ஆமா"
அவ்வளவுதான் இவங்க தடபுடலா ருபாயை எண்ணிக் கொடுத்ததும் பன்னியை கிளப்புனாங்க. தேவரு பதட்டமா ஓடிப்போயி "முதலாளி அயிட்டம் நிறை மாத்தச் சூலி. இப்பொ ஈனுமோ பிறகு ஈனுமோ! பிடிச்சு தூக்கிட்டு போறதுதான் சரி. ஒரு லட்சம் பெறுமான மொதுலு பாத்துக்குங்க.
அதுவுஞ்சரிதான்னு பின்னாடி ரெண்டு பேரும் முன்னாடி ரெண்டு பேரும் தூக்கி தோள்ல வச்சு கிளம்பிட்டாங்க.
கனம்ன்னா கனம் செமக்கனமாயிருந்தது. சும்மாதானா ஒரு பன்னியை கொண்டு போயி பண்ணையா பெருக்கி லட்சக்கணக்குல சம்பாத்யம் பண்ணி எதிரியை சந்திக்கிறது!
ஒரு மைல் தொலைவுதான் சுமந்து வந்திருக்காங்க. பின்னாடி சுமந்த ரெண்டுபேர் மேலயும் பன்னி சத சதன்னு பேல ஆரம்பிச்சது. முதுகிலிருந்து குதிகால் வரைக்கும் நனைச்சு விட்டிருச்சி நனைச்சி. வீச்சம்ன்னா வீச்சம் இன்ன மட்டுமின்னுல்லே. சுமை தான் கடுமையா மே மூச்சு கீ மூச்சு வாங்குதுன்னா உடுப்புக தொப்பு தொப்பாப் போச்சி. நாத்தம் வேற குடலைப் புரட்டுது. சே. பெரிய ஜீன்றமாப் போச்சே!
இந்த ரெண்டு பேரும் முன்னாடி சுமக்கிறவங்களைப் பாத்தாங்க. சுமை தாங்க மாட்டமத்தான் அலப்பறைப்படுறாங்களே யொழிய இந்த மோசமில்லை. ஙொப்பனோலி நாம மட்டும் பைத்தியாரங்களா பின்னாடி சுமந்து சீரழிய அவங்களுந்தானே வரிக் கொடுத்தான்?
"ஏய் இந்தாங்கப்பா நீங்க கொஞ்சம் பின்னாடி பிடிங்க. நாங்க முன்னாடி வந்து கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிடறோம்ன்னு மாத்திக்கிட்டாங்க. பன்னிக்கு வயிறு காலியாக காலியாக கழிச்சலோட காத்தும பர்ர்ர்... பர்ர்ர்ன்னு வெளியேறுனது. "பய புள்ளைகளை நல்லாக் குளுப்பாட்டுது" முன்னாடி போறவங்களுக்கு பின்னாடி சீப்படுறவங்களை நெனச்சி ஏகச் சந்தோசம்.
விடிய விடியச் சுமந்து தன்னால அலுத்து சலுத்து இருப்பிடத்துல கொண்டு வந்து போட்டாகளோ இல்லையோ காத்துப்பிடுங்குன லாரி டயர் டியூப் மாதிரி பன்னி கொடேர்ன்னு விழுந்து கிடந்தது. உசிரு போக ஆத்த மாட்டாம உர்ர் உர்ர்ன்னது. "மாப்ளெ நாக்கெரே... மாப்ளெ நாக்கெரோய்! குட்டிக ஒன்றரை டசனுக்கு குறையாம ஓடுற ஓட்டத்திலெ இருக்கும்ன்னீரு வரும்போது குட்டிய ஒழுக விட்டுட்டீரோ"
போத்தி நாக்கெரை கரையா நாக்கெரு கேலி பண்ணுனார். இவரு பெரிய யோக்கியர் அரண்மனை கணக்குப் பிள்ளை மாதிரி எடுத்தவுடனே பத்துக்குட்டிக்கு குறையாதுன்னு இவன்தானே கணிச்சான் பக்கத்திலிருக்கிறவர்கிட்டெ முணுமுணுத்தார் கரையா நாக்கெரு. ஒருத்தருக்கொருத்தர் பேசவும் பாக்கவும் சகிக்கலை. நாலு பேரும் கரேர்ன்னு நனைஞ்ச கதர்சட்டை உடுப்புகளோட நாலு மூலைக்கும் மூஞ்சியை திருப்பிக்கிட்டு போனாங்க.
அதுக்குப்பிறகு தான் விவகாரமே ஆரம்பிச்சது.
தேவர் வீட்டுல ஆத்தமாட்டாம கிடந்த பன்னி மந்தையில வந்து விழுகவும் பக்கத்து தோட்டக் கால்ள பயிர் பச்சைக வாசனையில நகண்டு போயி வாய் வக்கெ ஆரம்பிச்சது. போத்தி நாயுண்டுவுக்கு மந்தைத் தோட்டம் எட்டுக்குறுக்கம் விஸ்தீரணத்துல நிலக்கடலை போட்டிருந்தார். ஒரு நா விடிய பம்மல்ல வந்து தோட்டத்தைப் பாக்கும் போது நாயுண்டுகாரு விருள்தட்டிப் போய் நின்னுட்டாரு. கால்வாசிக்கு மேலே கடலைச் செடியை முண்டி முண்டி நாசக்காடு பண்ணி வெறுஞ்செடியாய் சாய்ச்சி வச்சிருந்தது பன்னி.
அன்னையிலிருந்து ராக்காவலுக்கு வர ஆரம்பிச்சார். தின்னு ருசிகண்ட பன்னி நிலையில நிக்கிமா? செடிகளுக்குள்ளே நுழைஞ்சி முண்டி உழப்பிக்கிட்டிருந்தது. பக்கத்துப் பொலி துரைச்சாமி நாக்கெரு தோட்டம் சீனிக்கிழங்கு வெள்ளாமை வச்சிருந்தாரு. ராத்திரியோட ராத்திரியா அப்படியே அணச்சி பத்திக் கொண்டுபோய் கிழங்குத் தோட்டத்துல கொண்டு போய் விட்டுப் போட்டு ஓடியாந்துட்டார் போத்தி.
வந்தா வந்த பக்கந்தான். நடக்கமாட்டாத பன்னி அங்கேயே ஜாகையை போட்டிருச்சி. சீனிக்கிழங்கு தின்ன பன்னி செவியறுத்தாலும் போகாதுங்கிற சொலவடை சும்மா ஆகுமோ?
கிழங்குக் கொடி ஒரு ஏக்கருக்கு மேலே பன்னி முண்டி நாசமாக்கிடந்ததை ஒருநாள் பார்த்த தொரைச்சாமி நாக்கெரு வயிறெரிஞ்சி போயி பன்னியை தேடிப்பிடிச்சு கல்லாலயே எறிஞ்சு ஆளில்லாத நேரம் பார்த்து பக்கத்து கடலை தோட்டத்துக்கு முடுக்குனாரு. மறுநாள் அவரு முறை பன்னி இங்குட்டும் அங்குட்டுமா அலைமோதி திரிஞ்சது.
அடுத்து அக்க பக்கமாத்தான் வரதாழ்வார் தோட்டமும் கரையா நாக்கெரு தோட்டமும். அங்கேயும் சேனைக்கிழங்கு சாகுபடி தரைப்புடலை, தக்காளி, கத்திரிக்காய் வகைகள் பாக்கப் பசேர்ன்னு நல்ல தண்ணியில விளைஞ்சு பசபசன்னு கண்ணுக்கெட்டுன தூரம் கிடந்தது.
மொத ரெண்டு புண்ணியவான்கள்ல யாரோ ஒருத்தர் எதுக்கு நாம அங்க விரட்ட அங்கிருந்து இங்கு விரட்ட கொஞ்சம் எட்டி தள்ளிக் கொண்டு போய் விட்டிரலான்னு ஒருநாள் மத்த ரெண்டு பேர் தோட்டப் பக்கமா பன்னியை கொண்டு சேத்துட்டாங்க. அங்கேயும் அந்த ரெண்டு பேரால இந்தப் பொலிக்கும் அந்தப் பொலிக்குமா தொறட்டுப்பட்ட பன்னி இப்பொ நாலா இடத்தையும் கண்டுக்கிட்டது. இப்பொ நாலு தோட்டத்திலயும் முறைபோட்டு வாய் வெக்கெ ஆரம்பிச்சது. ஆளரவம் தெரிஞ்சால் ஒதுங்கி ஓடைப்பக்கம் ஒளிஞ்சிக்கிடவும் பழகிக்கிட்டது.
இவங்க நாலு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்தாலும் விலகி விலகி போய்க்கிடறது. தோட்டங்கள்ல அழிம்பு கூடிக்கிட்டே போனது. ஒருதரைத்யொருத்தர் கறுவிக்கிட்டே அலையுறாங்க.
ரொம்ப நாளைக்குப்பிறகு இந்த நாலு சம்சாரிகளும் அன்னைக்கி ஒண்ணா கூட வேண்டிய கட்டாயமாகிப் போச்சு. பண்ட் சேர்த்து எதிரிகளை சந்திக்க கொண்டு வந்த பன்னி வேல்க்கம்புனால குத்துப்பட்டு மல்லாக்க செத்துக்கிடந்தது.
போத்தி நாக்கெரு தோட்டத்துல வச்சுதான் குத்திக்கொன்னு ஓடை வரைக்கும் இழுத்திட்டு வந்து போட்ட தடயம் இருந்தது.போத்தி நாக்கெருதான் குத்தவாளின்னு ருசிபிக்க இருந்த நேரம் மத்த மூணு பேரு தோட்டத்திலிருந்தும் இதே தடயம் ஓடை வரைக்கு கத்தி இழுத்திட்டு வந்த தடயங்க அச்சடிச்ச மாதிரி இருந்தது.
நாலு பேரும் ஓடை வரப்பு மேல இருந்த வேப்ப மரத்துக்கு கீழே வந்து உட்கார்ந்தாங்க. ஒருத்தரையொருத்தர் காக்கா மாதிரி கண்ணை சாய்ச்சி சாய்ச்சி பாத்தபண்டமா இருந்தாங்க.
ஒண்ணு போல மடியை அவுத்து வெத்திலை பாக்கு போட ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துக்குப்பிறகு போத்தி நாயுண்டுதான் எச்சிலைத் துப்பிட்டு பேச ஆரம்பிச்சார்.
"வர்ற வியாழக்கிழமை முத்துலாபுரத்துல கழுதைச்சந்தை நடக்குதாம். நல்ல சினைக் கழுதை ஒண்ணு பிடிச்சு பொதுவுல விட்டா என்ன?
குத்துப்பட்டுக்கிடந்த பன்னி நிலை முழிகுத்த ஆன்னு வாயை பிளந்தமட்டுல இவங்களைப் பார்த்துக்கிடந்தது.


நன்றி செம்மலர்
 எஸ்.லட்சுமணப்பெருமாள்

கருத்துகள் இல்லை: