சனி, 7 மே, 2011

‘ராசாவே குற்றவாளி’: கனிமொழி


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நடந்த ஒட்டுமொத்த சதிக்கும் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவே பொறுப்பு என்று சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழியின் வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கூறினார். மேலும், கனிமொழிக்கு எந்த பங்கும் இல்லை என்றும், அவர் பெண் என்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதா டினார்.

ரூ. 1லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறையாடப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சதிக் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா உள்பட 9 பேர் ஏற்கெனவே திஹார் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய குற்றப் புலனாய்வுத்துறை (சிபிஐ) தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமங்களை முறை கேடாக ஒதுக்கியதில் ஆ. ராசா லஞ்சம் பெறுவதற்கு கனி மொழி உடந்தையாக இருந்தார் என்றும், ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற உதவியதற்காக கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக பணம் பெறுவதில் உடந்தையாக இருந்தார் என்றும் சிபிஐ குற்றம் சாட்டியது. கலைஞர் டி.வி.யின் நிர் வாக இயக்குநர் சரத்குமார் மீதும் சிபிஐ குற்றம் சாட்டியது.

இந்தக் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் மே 6ம்தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு உத்தர விடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் வெள்ளியன்று தில்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜரானார். கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் ஆஜரானார். இதே வழக்கில் ஆஜராகுமாறு சம்மன் அனுப் பப்பட்டிருந்த சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் மொரானி உடல்நிலையை கார ணம் காட்டி ஆஜராகவில்லை.

நீதிமன்றத்தில் ஆஜரான கனி மொழியுடன் திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்பட திமுக எம்.பி.க்கள் பல ரும் வந்திருந்தனர்.

ஜாமீன் கோரி மனு

நீதிமன்றம் நடவடிக்கைகள் துவங்கிய உடனே, கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, இந்த ஊழலில் கனிமொழிக்கு எந்த பங்கும் இல்லை என்றும், எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி மனு ஒன்றை தாக்கல்செய்தார். இதைத் தொடர்ந்து கனிமொழிக்காக வாதாடிய அவர், கலைஞர் டி.வி. யில் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளே உள்ளன என்றும், அதன் அன்றாட நடவடிக்கை களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், கலைஞர் டி.வி.யின் இயக்குநர் குழுவில் அவர் இல்லை என்றும், அதன் எந்தவொரு கூட்டத்திலும் அவர் பங்கேற்றது இல்லை என்றும் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனி மொழிக்கு பங்கு இல்லை என கூறிய ராம் ஜெத்மலானி, ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக் கீடு செய்வதில் நடந்த ஒட்டு மொத்த சதியையும் மேற்கொண்டது முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாதான் என்றும் கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் கலைஞர் டி.வி.க்காக டைன மிக்ஸ் குழுமத்திடமிருந்து லஞ்சப் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ கூறியுள்ள குற்றச்சாட்டுகளை எடுத்துக் கொண்ட ராம் ஜெத் மலானி, இந்த லஞ்சப் பண பரி வர்த்தனையை ஆ.ராசா மேற்கொண்டார் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, இதில் கனி மொழியின் குற்றம் எதுவும் இல்லை என்றும், அந்தப் பணத்தை பெறுவதற்காக கலைஞர் டி.வி. நிர்வாகத்தின் சார்பில் கனி மொழி எந்த ஆவணத்திலும் கையெழுத்திட வில்லை என்றும் வாதிட்டார்.

மேலும், “கலைஞர் டி.வி. சேனலுக்கு ரூ.200 கோடி பணம், ராசாவின் முன்முயற்சியால் வந்து சேர்ந்தது என்றே வைத்துக் கொள்வோம். இதில் எனது குற்றம் என்ன இருக்கிறது? நான் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு தாரர் மட்டுமே” என்று கனி மொழி கேள்வி எழுப்புகிறார் என அவரது வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி நீதிமன்றத்தில் கூறினார்.

அதுமட்டுமின்றி, மேற்படி பணத்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக கலைஞர் டி.வி. நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முடிவுகளையும் எடுத்தது சரத் குமார்தான் என்று குற்றச் சாட்டை மொத்தமாக அவர் மீது தள்ளி விட்ட கனிமொழியின் வழக்கறிஞர், கருணாநிதியின் மகள் என்பதால் அவர் பழிவாங்கப்படுகிறார் என்றும் கூறினார். மேலும், சட்டத்திற்கு பணிந்து நடக்கும் ஒரு குடிமகள்; ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் என்ற முறை யிலும், அதைவிட ஒரு பெண் ணாக இருப்பதாலும் கனி மொழிக்கு ஜாமீன் வழங்க வேண் டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோர மாட்டேன் என்று வியாழனன்று தில்லியில் கனிமொழி செய்தியாளர்களி டம் பேட்டியளித்தபோது கூறியிருந்தார் என்பது நினைவு கூரத் தக்கது.

நாட்டையே உலுக்கியுள்ள மிகப் பெரிய ஊழல் வழக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முதன்மை குற்றவாளியை தொடர்ந்து முக்கிய குற்றவாளியாக பட்டியலிடப்பட்ட கனிமொழிக்கு ஆதரவாக வாதாடிய ராம் ஜெத்மலானி இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர்; அதைவிட வாஜ்பாய் தலைமை யில் பாஜக ஆட்சி நடந்த போது நாட்டின் சட்டத் துறை அமைச்சராக இருந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய் தார். அவர் சார்பில் அல்தாப் அகமது வாதாடினார்.

சிபிஐ எதிர்ப்பு

இந்நிலையில், கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ வழக்கறிஞர் யு.யு. லலித் ஆட்சேபம் தெரிவித்தார்.

முற்பகலிலும், பிற்பகலிலும் தொடர்ந்து நடைபெற்ற இந்த விசாரணையை சனிக்கிழமை வரை ஒத்திவைப்பதாக மாலை யில் நீதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, 2ஜி வழக்கில் கலைஞர் டி.வி., பங்குதாரர் கனிமொழி, அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரது ஜாமின் மனு மீதான தீர்ப்பு வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கனிமொழியும், சரத்குமாரும் 14ம் தேதி வரை தொடர்ந்து விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

(பிடிஐ, டைம்ஸ் ஆப் இந்தியா)

3 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

தகவலுக்கு நன்றி

விடுதலை சொன்னது…

2ஜி வழக்கில் கலைஞர் டி.வி., பங்குதாரர் கனிமொழி, அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரது ஜாமின் மனு மீதான தீர்ப்பு வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கனிமொழியும், சரத்குமாரும் 14ம் தேதி வரை தொடர்ந்து விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுதலை சொன்னது…

2ஜி வழக்கு விசாரணைக்காக , மே 14ம் தேதி வரை தினமும் கோர்ட்டில் ஆஜராகும் படி கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தினமும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு கனிமொழி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.