செவ்வாய், 23 நவம்பர், 2010

பெரும் வர்த்தகர்கள் - ஆளும் அரசியல்வாதிகள் - உயர் அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளை : டிச. 5-11 பிரச்சார இயக்கம்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல்



காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், கர் நாடகத்தில் எடியூரப்பா தலைமையி லான பாஜக அரசும் நடத்தியுள்ள வர லாறு காணாத ஊழல்கள் மூலம் இந்திய நாட்டின் ஏழை - எளிய மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடிய தாக்கு தலை எதிர்த்து, நாடு முழுவதும் டிசம்பர் 5 முதல் 11ம்தேதி வரை மாபெரும்

பிரச்சார இயக்கத்தில் ஈடுபடுமாறு அனைத்துக் கிளைகளுக்கும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழு அறைகூவல் விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு கூட்டம் நவம்பர் 19 - 21 தேதிகளில் தில்லியில் நடை பெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளி யிடப்பட்ட அறிக்கை வருமாறு -

வரலாறு காணாத ஊழல்

சமீப காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு மற்றும் கர்நாடகத்தில் எடியூரப்பா அரசின் மிகக் கடுமையான ஊழல்கள் என அதிகாரத்தின் உயர் மட்டங்களில் நடந்துள்ள மிகப்பெரும் ஊழல்கள் அம்பலமாகியிருப்பதால் இந்த நாடே கடும் அதிர்ச்சியில் ஆழ்ந் துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது, நவீன தாராளமய காலகட்டத்தில் பெரும் வர்த்தகர்கள் - அரசியல்வாதி கள் - அதிகாரிகள் இடையே ஏற்பட் டுள்ள தீய உறவிற்கு முதன்மையான எடுத்துக்காட்டாக இருக்கிறது. 2008 பிப்ரவரி மாதத்திலேயே, 2ஜி ஸ்பெக்ட் ரம் உரிமங்கள் ஒதுக்கீடு செய்வதில் இந்த நாட்டின் கருவூலத்திற்கு மிகப் பெரும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், மிகவும் சட்ட

விரோதமான முறையில் இதில் மிகப்பெரும் முறை கேடு நடந்துள்ளது என்றும் நாட்டு மக்களின் கவனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே கொண்டு வந் துள்ளது. இதில் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த ஆ. ராசாவின் பங்கு தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் காங்கிரஸ் தலைமையி லான அரசாங்கம் நடவடிக்கை மேற் கொள்ள மறுத்தது. தனது அரசாங்கத் தைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இத்தகைய மிகப்பெரும் ஊழலை, பிரதமர் அலட்சியப்படுத்தினார். மக்கள வைத் தேர்தல் முடிந்த பின்னரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையாகப் பதவியேற்ற பின்பும் இதே அணுகுமுறையே நீடித்தது.

தற்போது மத்திய தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு தொடர்பாக எழுப்பப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் உறுதி செய்துள் ளார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். ஆனால், மிக மிகப் பெரிய இந்த ஊழலுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அதனால் தான், இந்த ஊழல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் முழுமை யாக விசாரணை நடத்த நாடாளுமன் றக் கூட்டுக்குழு அமைக்க

வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவும் அரசு மறுத்து வருகிறது.

இதில் முக்கியப் பிரச்சனை என் னவென்றால், குற்றம் இழைத்தவர்கள் அனைவரும் நடவடிக்கைக்கு உள் ளாக்கப்பட வேண்டும் என்பதுதான். முன்னாள் அமைச்சர், ஊழல் அதி காரிகள், இவர்களுக்கு அனைத்துவித மான உதவிகளையும் செய்த கார்ப்ப ரேட் நிறுவனங்கள் என அனைவரும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இதில் முதல் நடவடிக்கை யாக, சட்ட விரோதமான முறையில் எந்த நிறுவனங்களெல்லாம் உரிமங் கள் பெற்றனவோ அவற்றின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண் டும். அதுமட்டுமின்றி, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) குறிப்பிட்டுள்ளதுபோல, விதி முறைகளைப் பூர்த்தி செய்யாத நிறு வனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங் களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், இதில் இழந்த வருமானத்தை ஈடுகட்டும் பொருட்டு புதிதாக ஏலம் நடத்தப்பட வேண்டும்.

இவற்றை எப்படி மேற்கொள்கிறார் கள் என்பதைப் பொறுத்தே பிரதமரை யும், அவரது அரசையும் மதிப்பீடு செய்ய முடியும்.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடு களில் நடந்த ஊழல்கள் தொடர்பாக வும் இந்த அரசு மேற்கொண்ட அணுகு முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை விசாரிப்பதற்கு எந்த அதி காரமும் இல்லாத ஒரு குழுவினை அரசு நியமித்

துள்ளது. மத்திய புல னாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் அம லாக்கப் பிரிவு உள்ளிட்ட இதர விசா ரணை அமைப்புகளை ஒருங்கி ணைத்து ஒரு கூட்டுக் குழுவை உட னடியாக அமைக்க வேண்டும். காமன் வெல்த் ஊழல்களில் தொடர்புள்ள அனைத்துக் குற்றவாளிகளும் முழு மையாக விசாரிக்கப்பட்டு நடவடிக் கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இந்த விசாரணையில், காமன்வெல்த் போட்டி அமைப்புக்குழு மட்டுமின்றி, இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்ட அனைத்துக் காண்ட் ராக்டுகள் மற்றும் பேரங்களை நடத்திய தில்லி மாநில அரசு, மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஆகியவையும் முழுமையாகக் கொண்டுவரப்பட வேண்டும்.

கர்நாடகத்தில் மிகப்பெரும் கொள்ளை - ஊழல்

போலி அரசாங்கத்தை நடத்துவதி லும், மிகப்பெரும் கொள்ளையர்களுக்கு உதவி செய்வதிலும், தானே முன் னின்று பொதுச் சொத்துக்களை சூறை யாடுவதிலும் கர்நாடகத்தில் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு “புதிய சாதனை” படைத்துள்ளது என்றே கூற லாம். சுரங்கக் கொள்ளைக் கும்பலைத் தனது அமைச்சரவையில் ஒரு பகுதி யாக வைத்திருக்கிற பாஜக அரசு, அனைத்து வடிவங்களிலான ஊழல் களுக்கும் தாயகமாக மாறி நிற்கிறது. முதலமைச்சரே, தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் சாதகமாக நடந்து கொண்டிருக்கிறார். தனக்கு முன் பிருந்த முதலமைச்சர்கள் இப்படியெல் லாம் செய்தார்கள் என்று தனது செயலை நியாயப்படுத்தவும் செய்கிறார். எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலி ருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளி யேறுவதைத் தவிர வேறு வழியில்லை. பெரும் வர்த்தகர்களுடனான தீய உறவைத் தழுவிக் கொள்வதிலும், எவ் விதக் கூச்ச நாச்சமுமின்றி மக்களின் சொத்துக்களைக் கூட்டுக் கொள்ளை யடிப்பதிலும் காங்கிரசிடமிருந்து எந்த விதத்திலும் பாஜக வேறுபட்டதல்ல என்பதை இது அப்பட்டமாகத் தெளிவு படுத்துகிறது.

ஊழலுக்கு எதிராக பிரச்சாரம்

ஒருபுறம் பெரும் வர்த்தக நிறு வனங்களும் காண்ட்ராக்டர்களும் தங் கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள கூட்டுச்சேர்ந்து கொள்ளையடிக்கிறார் கள்; மறுபுறம் ஆளும் அரசியல்வாதி களும் அதிகாரிகளும் இந்தக் கூட்டுக் கொள்ளையைத் தாங்களும் சேர்ந்து கொண்டு ஊக்கப்படுத்துகிறார்கள்; ஊழல் மலிந்த, மோசடி நிறைந்த முத லாளித்துவத்தைக் கட்டி வளர்க்கிறார் கள்; பொதுச் சொத்துக்களையும், பொது நிதிகளையும் தங்கள் நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி விடுகிறார்கள்; தங்கள் நலன் காப்பவர்களுக்குச் சாதகமாக அனைத்து விதிகளையும் மாற்றுகிறார் கள். இதுதான் புதிய தாராளமய உல கின் ராஜ்ஜியம். நவீன தாராளமயக் கொள்கைகளின் இந்த அதிகாரம் தற்போது பொது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நாசப்படுத்துகிறது; அசுத்தமாக்குகிறது; ஊழல்மயமாக் குகிறது.

இத்தகைய மிகப்பெரும் ஊழல்களும், இந்திய நாட்டின் கருவூலத்தையே மோசடி செய்வதும், பொது நிதிகளைக் கைமாற்றி விடுவதும் போன்ற நடவடிக்கைகள் இந்த நாட் டின் மக்கள் மீது, குறிப்பாக ஏழைகள் மீது நடத்தப்படுகிற கொடூரமான தாக்குதலாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் ஏற்பட்டுள்ள ரூ. 1.76 லட் சம் கோடி வருவாய் இழப்பும், இதே போன்ற இதர ஊழல்களில் இழந்த பணமும், அனைவருக்கும் பொது விநி யோக முறையை அமல்படுத்தப் பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டிய நிதியா கும்; கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தர வாதத் திட்டத்தை மேலும் விரிவுபடுத் தவும், பொது சுகாதாரத்தையும், பொது கல்வி முறையையும் மிகப்பெரும் அளவில் விரிவுபடுத்தவும் பயன்படுத் தப்பட்டிருக்க வேண்டிய நிதியாகும். எனவே, ஊழலுக்கு எதிராக ஒரு போரையே நடத்த வேண்டிய அள விற்கு மக்களை அணிதிரட்ட வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு, பெரும் வர்த்தகர்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரிகள் இடையேயான தீய கூட்டுக்கு எதிராக வும், வரலாறு காணாத ஊழல்களுக்கு எதிராகவும் நாடு தழுவிய தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஒரு வாரகால பிரச்சார இயக்கத்தில் நாடு முழுவதும் உள்ள கட்சியின் அனைத்துக் கிளைகளும் பங்கேற்க வேண்டு மென்று மத்தியக்குழு அழைப்பு விடுக்கிறது. இந்தப் பிரச்சாரத்தில் கூட்டங்கள், தர்ணாக்கள், பேரணிகள் எனப் பல்வேறு வடிவங்களிலும் கட்சி அணிகள் பெருவாரியாகத் திரண்டு, அரசின் உயர் மட்டங்களில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டும்; குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டிக்குமாறு முழக்கமிட வேண்டும்.

கருத்துகள் இல்லை: