திங்கள், 4 ஜூலை, 2011

எழுத்தாளரின் கடமை எது?

எழுத்தாளன் என்றால் - ஒரு உயர்ந்த லட்சியம் கொண்டவனாய், ஒரு வெறி கொண்டவனாய்,

மக்கள் கூட்டத்தின் மேல் மனிதா பிமானம் மிக்கவனாய், மக்கள் மீது அன்பு கொண்டு, கருணை கொண்டு, இரக்கம் கொண்டு-

மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் எனப்பாடுபட உறுதி பூண்டு பேனா பிடிப்பவனே உண்மையான எழுத்தாளன்.

இந்த நாடு இன்று பணத்தை, பகட்டை, விளம்பரத்தைப் பஜனை செய்கிற நேரத்திலே, வஞ்சிக்கப் பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத் தைச் சிறிதளவாவது உயர்த்தப் பாடு படுவேன் என்று உறுதி கொள்ப வனே உண்மையான எழுத்தாளன்.

இந்த நாட்டில் உடல் லெப்ரஸி யைவிட உள்ளத்தில் ஊடுருவியுள்ள லெப்ரஸிதான் அதிகம். அதனைப் போக்கப் பாடுபட வேண்டும் எழுத் தாளர்கள்.

ஆனால் போலி எழுத்தாளர்கள்- ‘பத்திரிகைகாரர்கள் காசு கொடுக் கிறார்கள்; அதனால் அவர்கள் கேட் பதை எழுதுகிறேன்’ என்றும், ‘வாச கர்கள் விரும்புகிறார்கள்-அதனால் அவர்கள் கேட்பதைத் தருகிறேன்’ என்றும் கூறுகின்றனர். இவர்கள் எழுத்துக் கூலிகளே; எழுத்தாளர்கள் அல்ல.

இவர்களெல்லாம் படித்தவர்கள்; மெத்தப்படித்தவர்கள். என்ன படித்தவர்கள்? வேதம் படித்தவர்கள்! உயர்குலத்தில் பிறந்தவர்கள்!

“ஜில்லென்றிருந்தது... ஏர்க்கண்டி ஷன் அறை, இருட்டு, ஜிகினா-மெத்தை” என்றெல்லாம் பெரும்பா லான மக்களின் வாழ்க்கையில் எவையெவையெல்லாம் இல் லையோ அவற்றையெல்லாம் படம் பிடித்துக் காண்பிப்பது-

சினிமாவில் உள்ளது போலவே மன விவகாரங்களின் வெளிப்பாடு களாக, கனவுகளாகக் கதைகளைப் படைக்கின்றனர்.

இந்த எழுத்து வியாபாரிகள் சதை விவகாரங்களைக் கதைகளாக்கி மலிவான ரசனைக்குத் தீனி போடு கின்றனர்!

இவ்வாறில்லாமல் வாழ்க்கை யைக் கவனித்து எழுதுங்கள். உங்க ளைச் சுற்றியுள்ள பகுதி மக்களைக் கவனியுங்கள்; அவர்களது பிரச்ச னைகளை, ஆசாபாசங்களை, நிறை -குறைகளை, தேவை-திருப்திகளை தங்களது கற்பனையோடு கலந்து எழுதுங்கள்.

நாடு விடுதலை பெறுமுன் நான் நினைப்பதுண்டு: “இங்கு நாட்டு விடுதலைக்குப்பின் தேனும் பாலும் பாயும்” என்று. ஆனால் அந்தோ! பச்சைத் தண்ணீர்கூடப் பகிர்ந்து பாயவில்லையே! முன்னர் கூறியபடி வளர்ச்சியிருந்தும் சமமான பங்கில் வளர்ச்சி, பயன் தரவில்லை.

இந்த நாடு விடுதலை பெற்ற பின்பு நாடு போகிற போக்கைக் கண்டு சீறி எழுந்தவர் நண்பர் ஜெயகாந்தன்.

வஞ்சிக்கப்பட்டவர்களின் சார் பாக, புறக்கணிக்கப்பட்டவர்களின் சார்பாக, வாயில்லா ஜீவன்களின் சார்பாகக் குரல் கொடுத்தவர் ஜெய காந்தன்.

நாங்கள் ஆரம்பத்திலிருந்து எங் களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க் கையைக் கூர்ந்து கவனித்து சிறு பத்தி ரிகைகளில்தான் எழுத ஆரம்பித் தோம். நான் புதுக்கோட்டையி லிருந்து வெளிவந்த தாய்நாடு, அணி கலன், பொன்னி போன்ற சிறு பத்தி ரிகைகளில்தான் முதலில் எழுதி னேன்.

நண்பர் ஜெயகாந்தன் சரஸ்வதி யில்தான் ஆரம்பத்தில் எழுதினார்.

எழுதத் தொடங்கிய உடனேயே ‘பெரிய பத்திரிகை’களில் எழுத வில்லை.

இதைப் போன்றே நீங்கள் உங்க ளூர் பகுதியிலிருந்து வெளிவரும் சாதாரண, சிறிய பத்திரிகைகளில் எழுதுங்கள்; பயிற்சி பெறுங்கள்; ஆற்றல் வளர்ந்துவிட்டால், தானே தேடி வருவார்கள். ஆனால் அப் போது உங்களது கொள்கைகளில் விட்டுக் கொடுத்து விடாதீர்கள். நல்ல கதை, நல்ல செய்தி என நீங்கள் உறுதியாக நம்பினால் மாற்ற, திருத்த, இடந்தராதீர்கள்.

தரம் என்பது உங்கள் எழுத்தில் தான் உள்ளது; அந்தப் பத்திரிகை களில் இல்லை.

இங்கே தங்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசியல்வாதிகளை-தங்க ளுக்கு பணி செய்யத் தேர்ந்தெடுக் கப்பட்ட பணியாளர்களைத் தெய்வ மென மதித்துப் பூஜிக்கும் மந்தை மனப் பான்மை மக்களிடம் பரவிக் கிடக்கிறது; இது அறியாமையின் விளைவு.

எழுத்தாளன் என்பவன் ஒரு போர் வீரனுமாவான். அவன் சமுதா யத்தில் நிலவும் தீமைகளைச் சாடப் பிறந்தவன். வஞ்சிக்கப்பட்டவர்கள் சார்பில்-புறக்கணிக்கப்பட்டவர் களின் சார்பில்-ஒடுக்கப்பட்டவர் களின் சார்பில் -வாயில்லா ஜீவன் களின் சார்பில் பேசக்கூடியவன்!

எனவே எழுத்தாளர்களே! உங் கள் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனி யுங்கள். அவர்களது அடிப்படைப் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ள முயற்சியெடுத்துக் கொள்ளுங்கள். இந்த அடிப்படைப் பிரச்சனை களுக்கு மூலகாரணங்கள் என்ன வென்று ஆராய்ந்து பாருங்கள். இவைதான் உங்கள் கதைகளுக்கு மூலப் பொருளாக இருக்க வேண் டும். வாழ்க்கையைவிட-மனிதர் களைவிட கதைக்கு மூலப்பொருள் வேறு எதுவும் இருக்க முடியாது. இது அனுபவத்தின் வழியாக வர வேண்டும். நீங்கள் கண்டு-கேட்டு-பழகிய மனிதர்களின் வாழ்க்கையை-இன்ப-துன்பங்களை உள்ளபடியே ஏற்றுக் கொண்டு உங்களது கற்பனை ஆற்றலையும் கலந்து சிறு கதைக ளாக-கவிதைகளாக-நாவல்களாக-நாடகங்களாகப் படைக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.

நல்ல சமுதாயத்தை உருவாக்குகிற கடமை நமக்கு இருக்கிறது. அத்த கைய சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம் என்று நாம் கங்கணம் கட்டிக் கொள்வோம். சுரண்டல் பேர்வழிகளுக்கு எச்சரிக்கை விடு வோம். நாட்டு மக்களுக்கு அவர் களை அம்பலப்படுத்துவோம். இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் உணவு வேண்டும். உடை வேண்டும்-கூரை வேண்டும்-வேலை வேண்டும்.

“வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு

வாழும் மனிதருக்கெல்லாம்

பயிற்றிப் பல கல்விதந்து இந்தப் பாரினை

உயர்த்திட வேண்டும்”

என்று பாரதி தந்த கடமையை நிறைவேற்றும் பணி உங்களுக்கும் இருக்கிறது-எனக்கும் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.


எழுத்தாளர் கடமை எது? என்ற வினாவுக்கு விடை அளிப்பது போல் எழுத்தாளர் அகிலன் அவர்கள் 23.4.80ல் வேலூரில் ‘ரூசா’ நடத்திய தமிழ் எழுத்தாளர் மாநாட்டுத்துவக்க விழா உரை அமைந்துள்ளது. அதன் ஒரு பகுதி “புதிய விழிப்பு” நூலிலிருந்து இங்கே தரப்படுகிறது.

கருத்துகள் இல்லை: