சனி, 27 செப்டம்பர், 2008

குடியை ஒழிக்க சிறந்த வழி

பூரண மது விலக்கை அமுலாக்கிட பா.ம.க இயக்கம் நடத்திவருகிறது. ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிக்க சட்டம் கொண்டு வருவோமென பா.ம.க நிறுவனர் அறிவித்தும் வருகிறார். கடந்த காலத்தில் மது விலக்கு சட்டங்களால் கள்ளச் சாராயமும் ஊழலும் ஆறாக பெருக்கெடுத்தன. அரசியலில் சாராயவாதிகளின் பிடிமானமும் இறுகின.காலம் காலமாய் இருக்கும் விஷ சாராயத்தால் பார்வை இழப்புகளும் கை கால் முடங்கல்களும், மூளை பாதிப்பும், சாவுகளும் முன்னை விட அதிகரித்தன.
விஷ சாராய பாதிப்பு கள் இப்பொழுதும் தொடர்கிறது. இதற்கு அடிப்படையே வேறு.சட்டம் எதற்கு?குண்டர் சட்டமும், காவல் துறையின் தடியும், குடியை ஒழித்துவிடும் என்றால் அது என்றோ ஒழிந்து போயிருக்க வேண்டும். குடியை கெடுக்கும் குடிப் பழக் கத்தை ஒழிப்பதற்கு விஞ்ஞானரீதியான அணுகுமுறை தேவை.
முதலில் குடியை நாடவைக்கிற காரணங்களை அறிவதில் தெளிவுவேண்டும்.அடுத்து இந்தப் பிரச்சனைக்கும் சமூக, அரசியல், பொருளாதார நிலவரங்களுக்கும் உள்ள உறவு களை காணும் ஆற்றல் வேண்டும். வரலாற்று அனுபவங்களை மட்டுமல்ல; இன்று உலக நாடுகளில் உள்ள நிலவரங்களையும் அறிந்திருப்பது அவசியம்.
நமது நாட்டு நிலவரங்களை முற்றிலும் தெரிந்து அதற்கேற்ப பன்முக நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். நமது முன்னோர்கள் மதுவை போற் றும் பண்பாடு கொண்டிருந்தனர்.சங்க கால அவ்வையார் கள் குடித்து பாடி மகிழ்ந்ததை அவரே பாடலில் குறிப்பிடு கிறார். கள்ளை உடல் வலியைப் போக்கி உற்சாகம் தரும் பானம் என்ற வகையில் மக்கள் போற்றினர் . அதே நேரம் போதை யில் திளைக்கும் மொடாக் குடியின் ஆபத்தையும் அவர்கள் உணர்ந்திருந்த னர். கள்ளுண்ணாமை இயக்கம் வள்ளு வர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. கருத்தடை இல்லாத காலத்தில் சிசு பலி, துறவறம், புலனடக்கம் போன்ற கொடூர முறைகள் சமூக தர்மமாக ஆக்கப்பட்டது போல், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் அளவிற்கு போதையில் திளைப் பதை தடுக்க மது விலக்கை அறமாக ஆக்கும் நிலையும் அன்று இருந்தது.விஞ்ஞான யுகத்தில் 20 -ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் மதுபானங்களின் தாக்கத்தை அறிய விஞ்ஞானரீதியாக ஆய்வுகள் தொடங்கின. சாராயம் மற்றும் கள் போன்ற பொருட்களின் மருத்துவ குணங்களையும் அளவு மீறிய குடியின் கேடுகளையும் விஞ்ஞானம் அளந்துவிட்டது.
ஐக்கிய நாட்டு சபை தோன்றியபின் அதன் துணை அமைப்பாக இருக்கும் உலக சுகா தார நிறுவனம் எல்லா நாடுகளிலும் ஆய் வுகள் நடத்தி வருடா வருடம் விவரங் களை வெளியிடுகிறது. அதுமட்டுமல்ல மதுவால் உருவாகும் ஆரோக்கிய பிரச் சனை, சமூக பிரச்சனை, பாலியல் துன் புறுத்தல்கள் உட்பட பல வகை குற்றங் கள், வன்முறைகள், விபத்துக்கள், இவை கள் சம்பந்தமான புள்ளி விவரங்களை நாட்டிற்கு நாடு சேகரித்து, ஆய்வுகள், சர்ச்சைகள்,அதற்குமேல் உலக சுகாதார நிறுவனத்தின் சிபாரிசுகள் மலை போல் குவிந்து வருகின்றன.அந்த விவரங்கள் நமக்கு நமது நாட் டில் உள்ள குடியால் வரும் பிரச்சனை களையும் அதற்கான தீர்வுகளை எங்கி ருந்து தொடங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க நமக்கு உதவுகிறது.நம்மில் பலர் நம்புவது போல் நமது நாடு மொடாக் குடியர்கள் நிறைந்த நாடல்ல!உலக சுகாதார நிறுவன புள்ளி விவரப்படி நமது நாடு குடிப்பழக்கத்தால் கெட்டுவரும் நாடுகளின் பட்டியலில் இல்லை!
25-7-2007-ம் தேதிய ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை வெளியிட்ட செய்தியைப் பாருங்கள். குடி அளவு பட்டியலில் உள்ள 184 நாடுகளில் குடி அளவில் நாம் 154 வது இடத்தில் உள்ளோம். நபர் வாரி சராசரி கணக்குப்படி 0.86 லிட்டர் (அதாவது ஒரு லிட்டருக்கும் குறைவு)
குடி அளவில் முதல் 10 நாடுகள்
உகாண்டா-19 லிட்டர்,
லக்ஸ்ஸம்பர்க்-17.5
செக்- 16.2லிட்டர்,
அயர்லாந்து-14.5லிட்டர்
பிரான்ஸ்- 13.5 லிட்டர்,
ஜெர்மனி-12.9 லிட்டர்,
குரேஷியா12.7லிட்டர்,
ரஷ்யா-10.2 லிட்டர்.
ஆனால் உலக சுகாதார நிறுவனம் இந்திய நாட்டின் சாராய சராசரி அளவை குறிப்பிடுகிற பொழுது இன்னொரு மிக முக்கியமான விவரத்தை சேர்த்தே குறிப் பிடுகிறது. இந்தியர்களின் சராசரி சாராய அளவு 0.86 லிட்டர் என்பது தரமான சாராயத்தின் அளவாகும். இதில் உள்ளூர் அளவில் தயாரிக்கப்படும் தரமற்ற சாராயம் சேர்க்கப்படவில்லை. ஏழை மக்கள் அருந்தும் அந்த சாராயத்தின் அளவை கணக்கிட இயலவில்லை. இருந்தாலும் சாம்பிள் சர்வே மூலம் குத்து மதிப்பாக கணக்கிட்டு சேர்த்தால் சராசரி சாராய அருந்தல் அளவு 2.6 லிட்டர் ஆகும். அதாவது கள்ளச்சாராய அருந்தல் தரமான சாராய அருந்தலைப் போல் இரண்டு மடங்கு உள்ளது. (தரமான சாராயம் 0.86லிட்டர்+ விஷ சாராயம் 1.7லிட்டர்).தெளிவாக சொன்னால் 10 லிட்டருக்கு மேல் அருந்தும் ஐரோப்பியர்களை விட நமது நாட்டு உழைப்பாளிகளாக இருக் கும் ஏழைகளின் உடல் நலம் கள்ளச் சாராயத்தால் அதிகம் கெடுகிறது. சாராயம் அருந்தியதால் ஏற்படும் வன்முறைகள், விபத்துக்கள் மற்றவர்களை விட குறைவு என்றாலும் உழைப்பாளி மக்களின் உழைப்புத் திறன் மங்கிவிடுகிறது. கடுமையான உடலுழைப்பில் ஈடுபடுகிற தொழிலாளர் கள் மலம், சாக்கடை அள்ளுதல் போன்ற அருவருப்பான வேலைக்கு நிர்பந்திக்கப் பட்டவர்கள் தங்களது உடல் வலியை உணராமல் இருக்க மலிவான, தரமற்ற சாராயத்தை நாடுவதை பார்க்கிறோம். கள்ளச் சாராய சந்தை ஒழிப்பு கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளிகளை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் கள்ளச் சாராயத்திற்கு சந்தையில்லாமல் ஆக்குவது அரசின் கடமையாகும். ஆனால் ஏழ்மையை போக்காமல் கள்ளச் சாராய சந்தை ஒழியாது.
அடுத்து எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சாறாயத்திற்கு அடிமையானவர்களை மீட்க மருத்துவர்கள், உளவியல் நிபுணர்களை கொண்ட குழு செயல்பட அரசு நிதி ஒதுக்கவேண்டும். கடுமையான உழைப்பிற்கு வேலை நேரத்தை குறைக்க சட்டம் வேண்டும் சுகமான வாழ்விற்கேற்ற குறைந்தபட்ச கூலிக்கு சட்டம் வேண்டும். சங்கம் வைக்க உரிமை வேண்டும். ரெட்டணை போல துப்பாக்கி நீளக் கூடாது. தொழில் தாவாவில் காவல் துறை தலையிடக்கூடாது. உழுபவனுக்கு நிலம் கொடுத்து கிராமப்புற வறுமையை போக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் கள்ளச் சாராய சந்தையை மூட வழிகாண வேண்டும். மாதர் அமைப்பிற்கு காவல் துறை பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் ஊறல் பானைகளை உடைக்க உத்தர வாதம் வேண்டும். கள்ளச் சாராய சந்தை ஒழிப்பே துவக்கமாகும்.
கள் போன்ற பானங்களின் மருத்துவ குணத்தை ஆராய நிபுணர்கள் நியமித்து தர நிர்ணயம் உடனடியாக செய்ய அரசு முன்வர வேண்டும்.விஞ்ஞான ஆய்வின்படி சாராயம் அளவிற்கு மீறினால் ஈரல் கெடுதல், புற்றுநோய், பிளாக் அவுட் என்ற மறதி வியாதி(குடி போதையில் செய்ததை மறப்பது உட்பட)வெர்னிக்கே-கர்ஷேக்காப்-சின்ட் ரோம்- சத்துணவு பெற வாய்ப்பில்லாத வர்கள் சாராயம் அருந்துவதால் வரும் மூளையை பாதிக்கும் வியாதி. இத்தகைய வியாதிகளை அளவு மீறிய குடி உறுதியாக கொண்டு வரும்.குரல் ஒலிக்கட்டும்கள்ளச் சாராய சந்தையை ஒழிக்கும் நடவடிக்கைக்கு குரல் கொடுக்க வேண்டும், வறுமையையும் அறியாமையையும் அகல நடவடிக்கை தேவை. நிலம், கூலி உரிமையை காக்கும் சுதந்திரம் வேண்டும். இந்த மூன்றுக்கும் போராடும் மக்களை திரட்டாமல் மது விலக்கு என்று பொதுவாக கூறுவதால் பயன் உண்டா?
-வே. மீனாட்சிசுந்தரம்

கருத்துகள் இல்லை: