வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

விலை’க்கு விற்கப்படும் விடுதலை

1929ம் ஆண்டு ஏப்ரல் 8ம்தேதி நாடாளுமன்றத்தில் ஒரு சம்பவம்....ஆங்கிலேய ஏகாதிபத்திய நுகத்தடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த இந்திய திருநாட்டின் விடுதலை வேட்கை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரம்... நாடாளுமன்ற கட்டிடத்தில் வெறும் சத்தத்தை மட்டுமே எழுப்பும் ஒரு வெடிகுண்டை தூக்கிப் போட்டு தேசத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பிய பகத்சிங், பி.கே.தத், சுகதேவ், மற்றும் ராஜ குரு போன்ற தேச பக்தர்களால் புனிதம் பெற்றது நாடாளுமன்ற கட்டிடம்.

2008ம் ஆண்டு ஜூலை 22ம்தேதி, அதே நாடாளுமன்ற கட்டிடத்தில் நடை பெற்ற மற்றொரு சம்பவம்....விடுதலை பெற்ற அறுபதாண்டுகள் கழிந்தபின் சுதந்திரமாக இருக்கும் இந்திய தேசத்தை மீண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் அடகு வைக்க கரன்சி நோட்டுக் கட்டுகளை தூக்கிப் போட்ட ஆட்சியாளர்களால் கறைபடிந்து நிற்கிறது அதே நாடாளுமன்ற கட்டிடம்... மதவெறியர்கள் கூட ஒரு முறைதான் மகாத்மாவை கொலை செய்தனர். ஆனால், ஏகாதிபத்திய எதிர்ப்பின் குறியீடாக விளங்கிய ‘மகாத்மா’வின் படம் பொறிக்கப்பட்ட நோட்டுக்களை தூக்கிப்போட்டதன் மூலம் அவரின் ஆன்மாவை ஆயிரம் முறை படுகொலை செய் திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

சர்வதேச அரங்கில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிற இந்திய தேசத்தின் இறையாண்மையை ஒரு ஒப்பந்தத்திற்காக ஏகாதிபத்தியத்திடம் விட்டுக் கொடுக்க சம்மதிப்பதை எந்தவொரு தேச பக்தனாலும் ஒப்புக் கொள்ள முடி யுமா...

சுதந்திரமாக சுற்றிதிரிகிற யானையை பிடித்த ஒரு பாகன், சில்லறை காசுகளுக்காக அதை கடை கடையாக கூட்டி செல்லும் காட்சிக்கும் இந்த ஒப்பந்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. யானையாக இந்திய தேசமும பாகனாக அமெரிக்கா வும் சில்லறைக்காசுகளை போடும் கடைக்காரர்களாக எரிபொருள் வழங்கும் நாடுகளுமாக நமக்கு தெரிகிறது. பலன் என்னவோ பாகனுக்குத்தான்.

தன் மனைவி கொண்டு வந்த இரட்டை சீர் வரிசைகளை விற்று ஆங்கில கப்பல் கம்பெனிகளுக்கு எதிராக கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரன் பிள்ளையின் பேத்தி பிழைப்பதற்கு வழியின்றி தெருவோரத்தில் விடப்பட்டதாக ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. தெரு வோரத்தில் விடப்பட்டது. விடுதலைக்காக போராடிய தியாகிகளின் வாரிசுகள் மட்டுமல்ல.... அவர்கள் பெற்ற விடுதலையும் தான் என்பதும் நமக்கு புரிகிறது.

விடுதலை பிறகான அறுபதாண்டுகள்... கோட்டைகளில் ஏராளமான கொடியேற்றங்கள்.. அனைத்து மொழிகளிலும் சுதந்திர தின முழக்கங்கள்... எத்துணை எத்துணை வாக்குறுதிகள்... இவை அனைத்திற்கும் பின்னரும் கூடஇன்றைக்கும் நாளொன்றுக்கு வெறும் இருபது ரூபாய் வருமானம் ஈட்டி அரை வயிறோடு படுக்கச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை எண்பது கோடி என்று அரங்சாங்கமே சொல்கிறதே.‘விதர்பா’வில் ஒரு ஏழை விவசாயி வீட்டிற்கு சென்று வந்து அவர் வீட்டில் விளக்கு எரியவில்லை என்று நாடாளுமன்றத்தில் சொன்ன ராகுல் காந்தி அவர் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்ற உண்மையை ஏன் சொல்லவில்லை... இவற்றிற்கெல்லாம் பின்புலமாக இருப்பது ஏகாதிபத்தியத்திற்கு இசைவான அரசியலே...

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, மத வெறிக்கு மாற்றான, மக்களுக்கு நம்பிக்கைகள் அளிக்கக் கூடிய உண்மையானதொரு அரசியலே இந்திய தேசத்தின் தற்போதைய தேவை.... அத்தகையதொரு மாற்று அரசியலை நோக்கி இடது திசையில் இனி நம் தேசம் பயணிக்கட்டும்.அரசாங்கம் போடுகிற எல்லா ஒப்பந்தங்களையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதில்லை.அவற்றின் ஆபத்தான உள்ளடக்கங்களை புரிந்து கொண்டு எதிர்ப்பதே உண்மையான தேசபக்தி என்கிற உண்மையை மக்கள் கூட்டத்தில் உரத்து முழக்கமிட வேண்டிய தருணமிது. அந்த மகத்தான கடமையைத்தான் இடதுசாரிகள் துவக்கியிருக்கிறார்கள். அவர்களின் பின்னால் மக்கள் அணிவகுக்கும் காட்சிகளை இனி இந்த நாடு பார்க்கட்டும்...

கருத்துகள் இல்லை: