புதன், 11 பிப்ரவரி, 2009

‘பசு மூத்திரத்தில் சாணத்தைக் கலந்து குடியுங்கள்’ கோவிலுக்குள் நுழைய தலித்துகளுக்கு நிபந்தனை

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் திலோலி கிராமத்தில் உள்ள அனுமார் கோவில் திருவிழாவில் தலித்துகள் பங்கேற்க முடியாது என்று சாதி ஆதிக்க சக்திகள் அனுமதி மறுத்துள்ளனர்.

5 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 450 தலித் குடும்பங்கள் உள்ளன. அனுமார் கோவிலில் திருவிழா என்றவுடன் மகிழ்ச்சியோடு கிளம்பிய தலித்துகளுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. நாங்கள் எல்லோரும் அதில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம் என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த சோகா லால் என்ற தலித் கூறுகிறார்.ஆனால் இந்த திருவிழாவில் தலித்துகள் பங்கேற்கக்கூடாது என்று சாது ராமேஸ்வர் லால் அறிவித்துவிட்டார் என்கிறார் கனயா லால் கதீக்.

தலித்துகளை அவமதிப்பது குறித்து காவல்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் கூறப்பட்டது. கிராம மக்கள் அனைவரும் பங்கேற்ற கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற தலித்துகள், தங்களையும் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். ஆதிக்க சாதியினர் சார்பாகப்பேசிய சாது ராமேஸ்வர் லால் மிகவும் திமிராகப் பேசியுள்ளார். தலித்துகள் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு பூஜை செய்ய வேண்டுமானால், பசு மாட்டின் சாணத்தை அதன் மூத்திரத்தோடு கலந்து அருந்த வேண்டும். அவ்வாறு செய்தால் கோவிலுக்குள் நுழையலாம் என்று அடாவடியாகக் குறிப்பிட்டார்.

தலித்துகளையும் அனுமதிக்கலாம் என்று ஒப்புக்கொண்டாலும் நிர்வாகத்தின் முன்பு துண்டறிக்கைகள் மூலமாக தலித்துகள் பங்கேற்கக்கூடாது என்று வெறியூட்டும் வேலைகள் நடந்தன. நிலைமையை பதற்றமடையச் செய்யும் வேளையில் ராமேஸ்வர் லாலின் ஆதரவாளர்கள் இறங்கினர். ரய்கெர், கதீக் மற்றும் படாய் ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் திருவிழாவில் பங்கேற்கக்கூடாது என்று அந்த துண்டறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் நிர்வாகத்திடம் முறையிட்ட தலித்துகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திருவிழாவை 400 மீட்டர் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே அவர்களால் முடிந்துள்ளது. தங்கள் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள முதல்வரைச் சந்திக்கப்போவதாக தலித்துகள் கூறியுள்ளனர்.

2 கருத்துகள்:

baappu சொன்னது…

எந்த அளவுக்கு ஆதிக்க ஜாதி வெறி இருந்தால் இப்படி செயல்பட முடியும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

சட்டம்போடுவதால் மட்டுமே இக்கொடுமை ஒழியாது. வலுவான மக்கள் இயக்கம் வேண்டும்.

ஒருவேளை ஆதிக்க ஜாதியினர் சாணியை பசுமூத்திரம் கலந்து குடித்துத்தான் கோவிலுக்குள் செல்கிறார்களொ என்னமோ?

விடுதலை சொன்னது…

\\சட்டம்போடுவதால் மட்டுமே இக்கொடுமை ஒழியாது. வலுவான மக்கள் இயக்கம் வேண்டும்.\\

சரியாக சொண்னீர்கள் பாபு அதை சாதித்துக்கொண்யிருப்பது இடதுசாரிகள்தான் என்பதை நிருபித்துக்கொண்டு இருக்கிறார்கள் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும்