வெள்ளி, 15 மே, 2009

முடிவு வெளியாகும் நேரத்தில் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா சீத்தாராம் யெச்சூரி சாடல்

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழ்நிலையில், இந்திய அரசியலில் அமெரிக்க நிர்வாகம் தலையிடத் துவங்கி விட்டது. இது அப்பட்டமான அத்துமீறல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக சாடியுள்ளது.


இந்தியாவில் 15-வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே 16-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிய அரசை யார் அமைக்க வேண்டும் என்பது குறித்து அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மூக்கை நுழைக்கத் துவங்கியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு பலத்தை பெற்ற இடதுசாரிக் கட்சிகள், அமெரிக்காவுடனான மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி உடன்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தன. இந்நிலையில் இடதுசாரிக் கட்சிகளின் பலத்தை இந்தத் தேர்தலில் எப்படியேனும் குறைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராக, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சதி வேலைகளில் அமெரிக்க தூதரகமே ஈடுபட்டது. பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களோடு கூடிக் குலாவிய அமெரிக்க தூதரக அதிகாரிகளும், வாஷிங்டனில் இருந்து வந்த பல்வேறு ஏஜெண்டுகளும் ஏராளமான பணத்தையும் புழங்க விட்டனர்.

இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அரசியலில் இடதுசாரிக் கட்சிகளை மையமாகக் கொண்ட மூன்றாவது மாற்று அணி என்ற ஒரு புதிய அரசியல் அணி சேர்க்கை பெரும் சக்தியாக எழுந்து, காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக மிகப்பெரும் அலையை இந்தத் தேர்தலில் ஏற்படுத்தியது. இதை கவனித்த அமெரிக்க ஏகாதிபத்தியம், வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், முடிவுகள் வெளியான பின்னர் இடதுசாரிக் கட்சிகளை மையமாகக் கொண்ட ஒரு ஆட்சி அமையாமல் தடுப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்க தூதர் பீட்டர் பர்லே என்பவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியையும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும், வேறு சில கட்சிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து பேசியுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவிடம் பேசிய போது, அமெரிக்காவுடனான கேந்திர ரீதியான உறவுகளை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் பங்களிப்பு ஏதும் இல்லாத ஒரு புதிய அரசை அமைக்க பணியாற்றுமாறு அமெரிக்க தூதர் பீட்டர் பர்லே வற்புறுத்தியதாக தெரிய வந்துள்ளது. இது அமெரிக்காவின் அப்பட்டமான அத்துமீறல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் யார் அரசு அமைக்க வேண்டும், யார், யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்களிடம் அமெரிக்க தூதர் அறிவுரை கூறியிருக்கிறார். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் அத்துமீறிய தலையீடு ஆகும். இப்படி செய்திருப்பதன் மூலம் சுயேட்சையான, இறையாண்மை மிக்க நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா எந்த அளவிற்கு அராஜகமாக தலையிடுகிறது என்பது அம்பலமாகியுள்ளது. இத்தகைய தலையீட்டை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டார்.

மேலும் இத்தகைய தலையீட்டை தெலுங்குதேசம் கட்சியும் வன்மையாகக் கண்டித்துள்ளது என்று குறிப்பிட்ட சீத்தாராம் யெச்சூரி, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் எச்சரித்தார்.

2 கருத்துகள்:

ISR Selvakumar சொன்னது…

கருணாநிதி - ஜெயலலிதாவைத் தாண்டி அரசியல் பற்றி எழுதும் தமிழ் பதிவர்கள் அரிதாக இருக்கிறார்கள்.

உங்களுடைய இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

விடுதலை சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி செல்வகுமார்