திங்கள், 5 செப்டம்பர், 2011

நாசவேலை செய்தால் பதவி உயர்வு..!!! மத்திய அரசின் சாதனை


மக்களின் உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் பிரச்சனையொன்றில், முறையாக நடத்தப்பட்ட துறைரீதியான விசாரணைக்கு சமாதி கட்டும் வேலை நடந்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

ஒருபுறம் மக்களின் உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரித்துக் கொண்டிருக்கும் அரசுக்குச் சொந்தமான மருந்து நிறுவனங்களை இழுத்து மூடும் முயற்சி நடக்கிறது. மறுபுறத்தில் இவற்றிற்கு மாற்றாக தனியார் நிறுவனங்களை முன்னிறுத்தும் வேலையும் உள்ளது. அரசுக்குச் சொந்தமான மருந்து நிறுவனங்களின் அபாரமான பணி ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்தது. இதனால் அரசு நிறுவனங்களில் சில கருப்பு ஆடுகளை உருவாக்கி அவர்கள் மூலமாக நாசவேலைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பாஸ்டியர் மருந்து மையத்தில் அத்தகைய நாசவேலை 2006 ஆம் ஆண்டில் நடைபெற்றது.டெடானஸ் நோய்க்கான மருந்துகள் தொடர்ந்து 14 முறை கெட்டுப்போயின. அவ்வாறு தொடர்ந்து கெட்டுப்போவதற்கு வாய்ப்பில்லாததால் விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இது திட்டமிட்டே செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 14 முறை மருந்துகள் கெட்டுப்போனதால் 21.2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. துறைரீதியான விசாரணை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியது. நாசவேலை நடந்துள்ளது என்பதையும் அந்த விசாரணை உறுதிப்படுத்தியது. இந்த நாசவேலையைச் செய்தவர் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன் என்பது விசாரணையில் தெரிந்தது. அவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்து மையத்தின் அப்போதைய இயக்குநர் இலங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.

மத்திய மருந்து பரிசோதனை நிலையத்தின் கூடுதல் இயக்குநரான சுரீந்தர் சிங் இந்தத் துறைரீதியான விசாரணையை நடத்தினார். அவரது அறிக்கையில், “தற்போதுள்ள ஆவணங்களின் அடிப்படையில் நாசவேலை நடந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. தொடர்ந்து 14 முறை மருந்துகள் கெட்டுப்போயிருக்கின்றன என்பதைப் பார்த்துக் கொண்டு அதிகாரிகள் சும்மாயிருந்திருக்க மாட்டார்கள். சம்பந்தப்பட்ட நபர்களின் நேர்மை மீது இது கேள்விக்குறியை எழுப்புகிறது. மையத்திற்கு ரூ.21 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என் பது பிரச்சனையல்ல. முக்கியமான உயிர்காக்கும் மருந்துகளை விநியோ கிக்க முடியாமல் போனது என்பது தான் மிகப்பெரிய பிரச்சனை” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதோடு நிற்கவில்லை. இந்த நாசவேலைக்கும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கும் உள்ள தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார். மோகன் என்ற ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு சரி. சுரீந்தர் சிங்கின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. தரமான உற்பத்தி முறையைப் பின்பற்றவில்லை என்று கூறி பாஸ்டியர் மையத்தின் உரிமத்தை மத்திய அரசு ஜனவரி 15, 2008 அன்று ரத்து செய்துவிட்டது. தொழிற்சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்தாலும் தனியார் மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாகவே மத்திய அரசும் இயங்கியது. கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு பிப்ரவரி 22, 2010 அன்று மருந்துகளைத் தயாரிப்பதற்கான ஒப்புதலை இந்த மையங்களுக்கு மத்திய அரசு வழங்கியது.

ஆனால், இன்னும் முழுமையான அளவில் இந்த மையங்களில் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி நடக்கவில்லை. சுரீந்தர் சிங்கின் பல்வேறு பரிந்துரைகள் கண்டுகொள்ளப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நாசவேலை செய்ததற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்ட மோகன், தற்போது பாஸ்டியர் மையத்தில் அதிகாரியாகப் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்டவர் எப்படி அதிகாரியானார் என்று பார்த்தால், அவரை பணிநீக்கம் செய்ததற்கான உத்தரவு மட்டும்தான் எங்களிடம் உள்ளது. துறைரீதியான விசாரணை அவர் மீது நடந்ததாகவோ அல்லது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவோ எந்தவித ஆவணங்களும் இல்லை. இந்நிலையில் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் வெளியாகி, அதில் அவர் விண்ணப்பம் செய்து பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார் என்கிறது மைய நிர்வாக வட்டாரம்.

முன்னாள் இயக்குநர் இலங்கேஸ்வரனிடம் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் சார்பில் இதுபற்றிக் கேட்டிருக்கிறார்கள். விதிமுறைகளை ஒட்டுமொத்தமாக வளைத்திருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மக்களின் உயிர் காக்கும் மருந்துகளில்கூட நாசவேலை செய்பவர்களைத் தண்டிக்காமல் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து அழகு பார்க்கும் வேலையையே மத்திய அரசு செய்துள்ளது. சி- பிரிவு ஊழியராக இருந்தபோதே, பெரிய நாசவேலையைச் செய்தவர் தற்போது உயர் அதிகாரியாகப் பணியேற்கிறார் என்றால், இதுவும் ஒருவகையான நாசவேலையே என்கிறார்கள் பாஸ்டியர் மையத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள்.


எங்களுக்கு அறிக்கை தரவில்லை- பாஸ்டியர் நிறுவனம்

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்திக்கு நிறுவனம் சார்பில் செப்டம்பர் 5ம்தேதியன்று உண்மை நிலையை விளக்கும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தரமற்ற மருந்து தயாரித்ததால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்படவில்லை. மாறாக, தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை செயல்படுத்துவதற்காகத்தான் என்று கூறியுள்ளனர்.

மேலும், மத்திய மருந்து பரிசோதனை நிலையத்தின் கூடுதல் இயக்குநராக இருந்து, 2006 ஆம் ஆண்டில் விசாரணை நடத்திய சுரீந்தர் சிங்கின் அறிக்கை எங்கள் நிறுவனத்திடம் தரப்படவில்லை. அதனால் அந்த அறிக்கை குறித்த செய்திகள் கேள்விக்குறியாகவே உள்ளது என்று கேள்வி எழுப்புகிறது பாஸ்டியர் நிறுவனத்தின் அறிக்கை. ஆராய்ச்சி அதிகாரி பணி நியமனம் எவ்வாறு நடைபெற்றது என்பதை விரிவாக எடுத்துரைக்கும் அறிக்கை, 2006 ஆம் ஆண்டின் நாசவேலை செய்தார் என்று பணி நீக்கம் செய்யப்பட்ட மோகன் என்பவர் அதிகாரியாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளது பற்றி மவுனம் சாதிக்கிறது. தகுதி மற்றும் அனுபவமுள்ள நபரையே முறையாக தேர்வு செய்துள்ளது என்று மட்டும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. .

2010 ஆம் ஆண்டு மீண்டும் உரிமம் புதுப்பிக்கப்பட்ட நிலையிலும், முறையான உற்பத்தி துவங்கப்படவில்லை என்கிற செய்தியை உண்மை நிலையை விளக்கும் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. அறிக்கையின் கடைசிப்பகுதியில், “தற்போதைய மருந்து உற்பத்தியானது உற்பத்தி நிலையிலும் உபகரணங்களிலும் சிறு சிறு தடைகளை நிவர்த்தி செய்த பிறகு தற்போது சீரான முறையில் நடந்து கொண்டு வருகிறது. கூடிய விரைவில் மருந்து விநியோகமானது ஆரம்பிக்கப்பட உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி இந்த மையத்தில் முழுமையாக நடக்கவில்லை என்பதை நிறுவனத்தின் அறிக்கையே ஒப்புக்கொள்ளும் வகையில் உள்ளது.

கருத்துகள் இல்லை: