ஞாயிறு, 11 ஜனவரி, 2009

`கூட்டணி’ வேறு; ‘தொகுதி உடன்பாடு’ வேறு.

பொதுவாகவும் மேலோட்டமாகவும் அரசியலை பரிசீலிக்கிற யாரும் அந்த இரண்டும் ஒன்றுதான். வெவ்வேறு வார்த்தைகளில் என்று கருதுவர். பொதுமக்களும் அப்படியே கருதும் நிலை உண்டு. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதலாவதாக, ஊடகங்கள் பெரிதும் சுரண்டும் வர்க்க சார்புடையவையே. அவை கம்யூனிஸ்ட்டுகளின் கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையை அறிந்திருந்த போதும்; வேண்டும் என்றே கம்யூனிஸ்ட்டுகளை இழிவுபடுத்துவதற்காக இப்படி கூறுவது வழக்கமாகிவிட்டது.

அடுத்து, தேர்தல் களத்தில் மோதுகிற கட்சிகள் தன் எதிரணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளை அவதூறு செய்ய பதவிக்காக கொள்கை சமரசம் என்பது போல் செய்கிற பிரச்சாரமும்; தொகுதி உடன்பாடு கண்ட பிறகு வெற்றிபெறும் வேகத்தில் செய்யப்படுகிற சில நடைமுறைக் குழப்பங்களும் சேர்ந்து ``தொகுதி உடன்பாடும் ``கூட்டணியும்’’ ஒன்றுபோல் தோற்றமளிப்பது உண்டு. இது தவறு.

கூட்டணி என்பது கொள்கை அடிப்படையிலானது. அதாவது திடீரென்று தேர்தலுக்காக வரையப்பட்ட கூட்டுப் பிரகடனமோ அறிக்கையோ அல்ல.
மாறாக குறிப்பிட்ட கொள்கை அடிப்படையில் சில பொதுவான இலக்குகளை முன்வைத்து தொடர்ந்து மக்களைத் திரட்டி போராடி சிறைசென்று தியாக வடுக்கள் தாங்கி அப்போராட்டத்தின் நீட்சியாக தேர்தல் களத்திலும் போராடுவது; வென்றால் ஆட்சி அமைப்பது இதுதான் கூட்டணியின் இலக்கணம். 

மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் `இடதுசாரிக் கூட்டணியும்’’, கேரளாவில் ``இடது ஜனநாயகக் கூட்டணியும்’’ இப்படித்தான் செயல்படுகின்றன.

தொகுதி பங்கீடு

இதற்கு மாறாக சில குறிப்பிட்ட அரசியல் சூழலில், சில குறிப்பிட்ட அரசியல் போக்குகளை முறியடிக்கவும்; வேறு குறிப்பிட்ட அரசியல் திசைக்கு மாற்றவும் இடதுசாரிகள் முயற்சிக்கின்றனர். அப்போது அப்பிரச்சனையில் வாக்குகள் சிதறி எதிரியை வெற்றி பெற விடாமல் தடுக்கவும்; அதன் மூலம் தாம் விரும்பும் சாதகமான போக்கை நோக்கி மக்களை இட்டுச் செல்லவும், வாய்ப்பான கட்சிகளோடு பேசி தொகுதிகளைப் பங்கிட்டுக் கொண்டு - தங்களுக்குள் போட்டியைத் தவிர்த்து - ஒன்றுபட்ட எதிர்ப்பை காட்டும் முயற்சியே தொகுதி பங்கீடு. 

இதில் விரும்பிய பாதையில் அரசியலை செலுத்தவும்; அதற்கேற்ப தம் வலுவை அதிகரிப்பதும் என இருமுனை பார்வை இருக்கும். பல கட்சி ஆட்சிமுறை உள்ள தேசத்தில் இது தவிர்க்க முடியாத நடைமுறைத் தந்திரமாகும். ஆக `கூட்டணி’ வேறு; ‘தொகுதி உடன்பாடு’ வேறு.

கருத்துகள் இல்லை: