வியாழன், 29 செப்டம்பர், 2011

கோடிகளில் புரளும் கொள்ளைக்கார அமைச்சர்கள்:பி. சாய்நாத்




ஏர் இந்தியா விமான நிறுவனம் நாம் விரும்பிய வண்ணம் செயல்படாமல் இருக்க லாம். ஆனால் கடன் மேகங்களுக்குள் அதனை அச்சமின்றி பறக்கவிட்டவர்களின் நிலை நன்றாகவே இருக்கிறது. விமானப் போக்குவரத்துத்துறையின் அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேலின் சொத்துக்கள் 2009 மே மாதம் முதல் 2011 ஆகஸ்டு வரை யிலான 28 மாதங்களில் தினமும் சராசரியாக ரூ.5லட்சம் என்ற அளவில் அதிகரித்திருக் கிறது. இது அவரே கொடுத்துள்ள கணக்கின் படி அறியப்படும் விபரம். இதுபோன்றவிஷயங் களில் நமது அமைச்சர்களெல்லாம் மிகவும் தன்னடக்கத்துடன் செயல்படக்கூடியவர்கள் என்பதால், இது உண்மை மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கக் கூடும். ஆனாலும் அதிகாரப்பூர்வ விபரங் களின்படி கணக்கிடவேண்டும் என்பது தவிர்க்கமுடியாதது.

2009 தேர்தலின் போது பிரபுல் பட்டேல் அளித்த பிரமாண வாக்கு மூலத்தின்படி அவரது சொத்து மதிப்பு ரூ.79 கோடி. தேர்தல் நடைபெற்றது மே மாதத்தில் என்பதால் ஏப்ரல் மாதம் வரை அவர் சேர்த்து வைத் திருந்த சொத்துக்களின் மதிப்பை அளித் திருப்பார் என்று நம்புவோம். இந்த மாதத்தில் பிரதமர் அலுவலகம் தனது இணைய தளத் தில் அவரது சொத்துக்களின் மதிப்பாக கொடுத்துள்ள தொகை ரூ.122 கோடி. இந்த அதிகரிப்பு 28 மாதங்களில் நிகழ்ந்துள்ளது என்பதால் எனது கணக்கின் படி அவர் சரா சரியாக தினமும் ரூ.5லட்சம் சேர்த்துள்ளார்.

இதற்கிடையே பிரபுல் பட்டேல் பொறுப் பில் இருந்த ஏர்இந்தியா விமானக்கம்பெனி தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இந்த விமானக் கம்பெனியின் 40 சதவீத ஊழியர் களின் ஓராண்டு சம்பளத்தை பிரபுல் பட் டேல் என்ற ஒரு நபரே சம்பாதித்துள்ளார். எனவே விமானக்கம்பெனி தரை தட்டிப் போனாலும் பட்டேல் விண்ணில் உயரப் பறந்து கொண்டிருக்கிறார். தனியார் நிறுவனங் கள் நலிவடைந்தாலும் அதன் உடைமை யாளர்கள் செழிப்பாகத்தான் இருக்கின்றனர் என்று தொழில் மறுசீரமைப்பு வாரியத்தின் தலைவர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் னர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. (இந்த சமன்பாடுகளுக்குள் தொழில் நிறு வனத் தலைவர்களையும் கொண்டுவந்தால் அது மலைப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனால் அது வேறு கதை)பிரபுல் பட்டேல் ஆற்றிய மிகச்சிறந்த பணிகளுக்காக அவ ருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டு, கனரகத் தொழில் துறை அமைச்சர் என்ற பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக மத்திய அமைச்சர் களின் சொத்துக்களை எடுத்துக்கொண்டால் ஒரு அமைச்சரின் சராசரி சொத்து ரூ. 7.3 கோடியிலிருந்து ரூ10.6 கோடியாக அதி கரித்துள்ளது. அதாவது மாதத்துக்கு அதிக மில்லை வெறும் பத்து லட்சம் தான். பட்டேல் தான் அமைச்சர்களுக்குள் எல்லாம் மிகவும் பணக்காரர். ஆனால் வேகமான வளர்ச்சி பெற்றவர் என்ற புகழுக்கு சொந்தமானவர் திமுகவின் ஜெகத்ரட்சகன்தான். பட்டேலின் சொத்து மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு 53 சதவீதம் என்ற அளவில் தான் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஜெகத்ரட்சகனோ 1092 சதவீதம் அளவில் மின்னல் வேக வளர்ச்சியைப் பெற் றுள்ளார். 2009ல் அவரது சொத்துக்களின் மதிப்பு ரூ.5.9 கோடி. அது தற்போது ரூ.70 கோடியாக அதாவது பன்னிரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. சொத்து சேர்ப்பதில் இளைய தலைமுறையைச்சேர்ந்த அமைச்சர்கள் சற்றும் பின்தங்கிவிடவில்லை. தகவல் தொடர்புத்துறை அமைச்சரான மிலின்ட் தியோரா என்ற இளைஞரின் சொத்து மதிப்பு 2004ல் ரூ.8.8 கோடி. 2009ல் இது ரூ.17 கோடி யாக அதிகரித்தது. இப்போது அது ரூ.33 கோடியாக உயர்ந்துள்ளது. ஏழு ஆண்டுகளில் அவரது சொத்துக்கள் சராசரியாக தினம் ஒரு லட்சம் அளவில் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் மொத்தமாகக் கணக்கிட்டால் ஏழு ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரித்துள்ளது. இது ஒன்றும் மோசம் என்று கூறமுடியாது. இவரோடு ஒப்பிட்டால் விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் வளர்ச்சி திருப்திக ரமாக இல்லை. அவரது சொத்து 28 மாதங் களில் வெறும் ரூ.4 கோடி தான் அதிகரித்து ரூ.12.5 கோடியை எட்டியுள்ளது. ஆனால் அவரது மாநிலத்தில் வேறுவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள். எந்த கணக்கை கொடுப்பது என்பதில் அவருக்குக் குழப்பம் ஏற்பட்டதால், மொத்த சொத்துக் கணக்கைக் கொடுப்பதற்கு பதிலாக அவர் மாதாந்திர வருவாய்க் கணக்கைக் கொடுத்துவிட்டார் என்று பேசிக் கொள்கிறார்கள்.

மிதமான அளவில் சாதனை நிகழ்த்தியுள் ளார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான விலாஸ்ராவ் தேஷ்முக். 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வெறும் ரூ1.73 கோடி சொத்துக்களைத்தான் இவர் சேர்த்துள்ளார். மன்மோகன் அமைச் சரவையில் கிரிக்கெட் விளையாட்டுடன் சம் பந்தப்பட்ட கும்பலின் நிலை மிகச்சிறப் பாகவே உள்ளது. ஐபிஎல் அமைப்பின் புதிய தலைவரான ராஜீவ் சுக்லாவின் சொத்து மதிப்பு இக்காலத்தில் ரூ.7கோடியிலிருந்து 30 கோடியாக அதிகரித்துள்ளது.

இப்போது அமைச்சர்களாக இருப்பவர் கள் மற்றும் மத்திய அமைச்சர்களாக இருப் பவர்களின் சொத்துக்கள் மட்டுமே அதிகரித் துள்ளதாகக் கருதக்கூடாது. வேறு சிலரும் மேல் நோக்கி உயர்ந்துள்ளனர். இது போன்ற விஷயங்களில் எனது சொந்த மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்றவை கின்னஸ் சாதனையை நிகழ்த்தக்கூடியவை. (தமிழ் நாடும் ஒரு விதத்தில் எனது சொந்த மாநிலமே. எனவே ஜெகத்ரட்சகனையும் சேர்த்துக்கொண்டால் எனது சொந்த ஊர்க் காரர்களின் பெருமையை சொல்லிமாளாது)

ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரத் தில் இல்லை. ஆனால் இது அவரது முனைப் பான செயல்பாட்டுக்கு இடைஞ்சலாக இருக்கவில்லை. 2009 ஏப்ரலில் ரூ.72 கோடிக்கு சற்று குறைவாக இருந்த சொத்து மதிப்பு 24 மாதங்களில் ரூ.357 கோடியாக அதி கரித்துள்ளது. தினமும் சராசரியாக ரூ. 50 லட்சத்தை இவர் சேர்த்துள்ளார். பலமுனைத் தாக்குதல்களுக்கு தொடர்ந்து உள்ளாகி வரும் நிலையிலும் இவர் நிகழ்த்தியுள்ள சாதனை அற்பமானதல்ல. அடுத்த தலைமுறை அரசி யல்வாதிகளெல்லாம் கூடுதல் விசையியக் கம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அரசியல் பண்டிதர்கள் கூறுவதை நிரூபிப்ப தாக இது இருக்கிறது அல்லவா. ஐயோ பாவம் சந்திரபாபு நாயுடுதான் ஏழையாகிவிட்டார். அன்னா ஹசாரே ஏற்படுத்திய புதிய சூழலில் முன்னாள் ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு தானே முன்வந்து தனது சொத்து விபரங்களை அறிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 40 லட்சம் கூட தேறாது. அதனால் சாப்பாட்டுக்கே அவர் கஷ்டப் படுவதாக நினைத்துவிடாதீர்கள். அவரது மனைவியின் சொத்துமதிப்பு ரூ.40 கோடியை எட்டியுள்ளது. அவரது ஆடிட்டர்கள், அவரது ஜூபிலி வீட்டின் மதிப்பை அதை வாங்கிய விலையான ரூ.23.20 லட்சம் என்றே குறிப்பிட்டுள்ளனர். 10000 சதுரஅடி கொண்ட அந்த மாளிகையின் மதிப்பை அவரே 2009 தேர்தலின் போது ரூ.9 கோடி என்று தெரிவித் துள்ளார்.

மந்திரிகளின் செல்வம் மட்டுமல்ல, சட்ட மன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத் துக்களும் கூட தாறுமாறாக அதிகரித்துள் ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் 2004 ம் ஆண் டில் 108 ஆக இருந்த கோடீசுவரர்களின் எண்ணிக்கை 2009ல் 186 ஆக அதிகரித்துள் ளது. மத்திய அமைச்சர்களில் முக்கால் வாசிப்பேர் கோடீசுவரர்களே. இவர்கள் பதவி களில் இருந்த போதுதான் புதிய செல் வத்தை சேர்த்துள்ளனர். இவ்வாறு சொத்து விபரங்களை அறிவித்துவிட்டால் மட்டும் போதாது. அவர்கள் செலுத்தும் வருமான வரி விபரங்களும், அவர்கள் வருமான வரி அலு வலகத்துக்கு அளிக்கும் ஆண்டு வருமானக் கணக்குகளும் கூட இணையதளங்களின் மூலம் வெளியிடப்படவேண்டும். சொத்துக் கணக்குகளை முழுமையாக அளிக்காமல் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். கவனமான கணக்குத் தணிக்கை தேவைப்படுகிறது. பதவியில் இருக்கும்போது இவர்களால் தினமும் ரூ. 5லட்சத்தை எவ்வாறு சேர்க்க முடிகிறது. எனவே வெறுமனே சொத்து விபரங்களை அறிவிப்பது மட்டும் போதுமானதல்ல. ஒரு வரின் சொத்துக்கள் நம்ப முடியாத அளவுக்கு மிகவும் அதிகமாக இருந்தால், அது எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது குறித்த விசாரணை யும் தேவைப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் நகர்ப்புற இந்தி யாவில் வறுமைக்கோட்டைத் தீர்மானிப் பதற்கு ரூ.20 தினச் செலவும் கிராமப்புறங் களில் ரூ.15 தினச்செலவும் போதுமானதாக திட்டக்குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித் தது. இதனை இப்போது 20லிருந்து 25 ஆக தாராளமாக உயர்த்துவதற்கு அது முன்வந்துள் ளது. முறைசாராத் தொழிலாளர் நிலை குறித்த அர்ஜூன் சென்குப்தா குழுவின் அறிக்கை யை நாம் அறிவோம். 83.6 கோடி இந்தியர்கள் தினமும் ரூ.20 அல்லது அதற்குக் குறைவாக செலவு செய்து வாழ்க்கை நடத்துகின்றனர் என்று அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோடீசுவரர் சங்க உறுப்பினர்கள் அந்த ஏழை மக்களின் பிரதிநிதிகளாக எப்படி செயல்படுகிறார்கள் அல்லது அவர்கள் துவக்கத்தில் அவ்வாறு செயல்பட்டுவிட்டு பின்னர் விரைவாக இணைப்பை இழந்து விடுகிறார்களா, இதனை எவ்வாறு கட்டுப் படுத்துவது, இதுகுறித்து சிந்திக்க வேண்டி யுள்ளது. அதேபோல கடந்த 20 ஆண்டு களில் ஏற்பட்ட ஆழமான மாற்றங்கள் இந்த கோடீசுவரர்களைத் தவிர மற்றவர்களைத் தேர்தல்களில் போட்டியிடக்கூட முடியாத படி (வெல்வதைப்பற்றி பேசவேண்டாம்) செய்துவிட்டதா.

ஆதாரம் : தி இந்து (21.9.2011)


தமிழில்: கி.இலக்குவன்

கருத்துகள் இல்லை: