திங்கள், 26 ஜனவரி, 2009

இந்தியத் தலிபான்களின் அட்டூழியம்!

கர்நாடகாவில் பல்வேறு மதவெறித்தாக்குதல்களை நடத்திய கும்பல் மீண்டும் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளது. அம்மாநிலம் மங்களூரில் மதுவிடுதி ஒன்றிற்குள் நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அரசியல் தளத்தை ஏற்படுத்திக் கொள்ள மதக்கலவரங் களை ஏற்படுத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜகவினர், ஆட்சிக்கு வந்தவுடன் அதை பெரும் அளவில் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் சேதமடைந்தன. பைபிள்களை தீயிலிட்டு கொளுத்தியது ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல். புகார் செய்த கிறிஸ்தவர்களைத் தாக்கி அவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்தது கர்நாடகக் காவல்துறை.

காதலிக்கக்கூடாது, சுடிதார் அணியக்கூடாது, மற்ற மதத்தினருடன் பழகக்கூடாது என்று பெண்களுக்கு எதிராக பல்வேறு நிபந்தனைகளை விதித்து வரும் இந்த இந்தியத் தலிபான்கள், பெண்கள் மீதான தங்கள் தாக்குதல்களை பெரும் அளவில் நடத்தத் துவங்கியுள்ளனர். கடந்த ஆண்டின் இறுதியில் கல்லூரி சார்பாக சுற்றுலா சென்று கொண்டிருந்த மாணவர்களை கீழே இறக்கி விட்டு கடுமையாகத் தாக்கினார்கள்.

ஒரே பேருந்தில் இந்துக்களைத் தவிர மற்றவர்களும் பயணம் செய்ததுதான் தாக்கியதற்குக் காரணம். இதை இந்துத்துவா கும்பல் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டது. ஆட்சி அவர்கள் கையில் இருப்பதால் ஒப்புக்காகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், மங்களூரில் உள்ள மதுவிடுதி ஒன்றில் தங்கள் நண்பர்களுடன் அமர்ந்திருந்த பெண்கள் மீது ராமர் சேனா என்ற குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சனிக்கிழமையன்று டாக்டர் சிவராம் கரந்த் சாலையில் உள்ள மதுவிடுதிக்குள் புகுந்த 15 முதல் 20 பேர் வரை கொண்ட மதவெறிக்கும்பல் பெண்களைப் பிடித்து வெளியே தள்ளி, அவர்களை அடித்தது. இந்த வெறியாட்டத்தை நிகழ்த்தியவர்களில் 13 பேரைக் கைது செய்துவிட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது. அவர்கள் ராமர் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கும் காவல்துறை, அவர்களை செவ்வாயன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்போகிறது.

தாக்குதல் நடந்த மதுவிடுதியின் உரிமையாளர் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கத் தயங்கியுள்ளார். மதவெறியர்கள் மீண்டும் தாக்குதல் நடத்திவிடுவார்கள் என்று அச்சப்பட்டதுதான் இதற்குக் காரணம். அவசியம் பாதுகாப்பு அளிப்போம் என்று காவல்துறையினர் வற்புறுத்தியதையடுத்து அவரும், அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்களும் புகார் கொடுக்கவும், சாட்சியளிக்கவும் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மங்களூர் நகர ராம சேனையின் தலைவர் சசிதர் ஷெட்டி மற்றும் பிரீதம் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலின்போதும், மற்ற மதத்தினரோடு எப்படி இந்த இடத்திற்கு வரலாம் என்று கேட்டும் தாக்கியுள்ளனர். பெண்களை குறிவைத்துள்ள மதவெறியர்கள் எப்போதும் பெண்களுக்கு எதிரானவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்கள் எங்களைச் சார்ந்தவர்களல்ல என்று வழக்கம் போல ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் கூறியுள்ளது. இவர்களின் பாகிஸ்தான் சகோதரர்களான தலிபான்கள், பெண்கள் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று கூறியதால் பாகிஸ்தானின் வடமேற்குப்பகுதியில் 400 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்களல்ல என்பதுதான் இந்திய தலிபான்கள் விடுக்கும் செய்தியாகும்.

“ராமர் சேனை”?

ஆர்.எஸ்.எஸ்.சுக்கு விசுவாசமான பிரமோத் முதாலிக் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பு துவக்கப்பட்டது. இது பணக்காரர்களிடம் இருந்து பெரும் பணம் வசூலித்து பண்டிகைகளைக் கொண்டாடுவதோடு, மத ரீதியான கலவரங்களை நடத்தும் கொலைவெறிக் கும்பலாகும். காவிரிப் பிரச்சனையில் இரு மாநிலங்களிலும் பிராந்திய வெறி தூண்டிவிடப்பட்டபோது தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி வீட்டின் மீது இந்த மதவெறிக்கும்பல்தான் தாக்குதல்நடத்தியது.

3 கருத்துகள்:

TamilBloggersUnit சொன்னது…

welcome to you join now in bloggers unit...

பெயரில்லா சொன்னது…

ஆர்.எஸ்.எஸ்,பாஜக இதைக் கண்டித்துள்ளன.இந்திய தலிபான்கள்
தஸ்லீமாவை கொல்காத்திவிலிருந்து துரத்திய போது, ரசூலை ஊர்விலக்கம்
செய்த போது மெளனமாக இருந்தவர்கள் எதற்கெடுத்தால் ஆர்.எஸ்.எஸ் என்று ஊளையிடுவது எதை மறைக்க.இந்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள், தலிபான்களுடன்
கொண்டுள்ள கள்ள உறவை மறைக்க.

விடுதலை சொன்னது…

மதத்தின் மூலம் வயிறு வலத்து அதில் அரசியல் அதிகாரம் கோரும் எந்த மதத்தின் பிற்போக்கு நடவடிக்கையும் ஆதரிப்பதற்கு இங்கு யாரும் தயார் இல்லை.