பத்தாண்டுகளுக்கு முன்பு சாவேஸ் பதவியேற்ற பிப்.2 அன்று வெனிசுலாவின் தெருக்களில் கோலாகலமான கொண்டாட்டங்கள் காணப்பட்டன. முற்போக்கான அரசியலமைப்புச்சட்டம், சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் வளர்ச்சி, வரலாறு காணாத அளவிலான சுகாதார மற்றும் பிற சமூக நலத்திட்டங்களின் விரிவாக்கம் போன்ற நடவடிக்கைகளை புரட்சிக்கான அடித்தளத்தை அமைக்கும் பணிகள் என்று வெனிசுலா மக்கள் உற்சாகத்துடன் குறிப்பிடுகிறார்கள். நடமாட முடியாமல் செயலிழந்து கிடப்பவரைப் போல இருந்த வெனிசுலா உலகிற்கு முன்மாதிரியாக விளங்கும் நிலைக்கு வந்துள்ளது என்று சாவேஸ் குறிப்பிடுகிறார்.
சுகாதாரத்துறையில் வெனிசுலா மேற்கொண்ட பணிகளால் தென் அமெரிக்காவில் உள்ள மற்ற நாடுகளும் உத்வேகம் பெற்றன. கியூபாவின் உதவியைப் பெற்றுக் கொண்ட வெனிசுலா ஆரம்ப சுகாதாரம் அனைத்து வெனிசுலா மக்களுக்கும் கிடைக்கும் வகையிலான பணிகளை மேற்கொண்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த வசதிகள் கிடைத்து வந்தன. நகரங்களில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு கிராமத்திலும் இலவசமாக மருத்துவ வசதியை அளிக்கும் முகாம்கள் நிரந்தரமாக அமைக்கப்பட்டது, பத்தாண்டுகால சாதனைகளில் ஒன்றாகும்.
கல்வித்துறையில் எந்த ஒரு பகுதியினரும் தனித்துவிடப்படுவதை விரும்பாத வெனிசுலா அரசு பல முயற்சிகளைச் செய்தது. பள்ளி செல்வதற்கு முன்பான கல்வியில் இருந்த மாணவர் சேர்க்கை, 40.3 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. ஆரம்பப்பள்ளிகளில் ஆண் குழந்தைகளின் சேர்க்கை 78 சதவீதத்திலிருந்து 93 சதவீதமாகவும், பெண்குழந்தைகளின் சேர்க்கை 85 சதவீதத்திலிருந்து 98 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பத்தாண்டுகளுக்கு முன்பு 6 லட்சத்து 76 ஆயிரத்து 515 என்று இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 18 லட்சமாகியுள்ளது.
வருமானப்பகிர்விலும் கடந்த பத்தாண்டுகள் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்துள்ளது. அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்கள் இருந்தபோது வெனிசுலாவின் பெரும் பணக்காரர்களுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 54 சதவீத வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது. அதே பெரும் பணக்காரர்களின் வருமானம் தற்போது 46 சதவீதமாகக் குறைந்து விட்டது. இருப்பதிலேயே மிகவும் ஏழைகளின் நலன்களுக்காக இந்த நிதி, அரசால் திருப்பி விடப்பட்டுள்ளது என்கிறார் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோஸ் ரங்கல். இந்த முதலீடுகளில் கணிசமான அளவு விவசாயத்துறை, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகள் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையை அகற்றுவதில் பெரும் பங்காற்றியுள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்பு 54.5 சதவீத வெனிசுலா மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் அவதியுற்று வந்தார்கள். தற்போது அது 31.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடுமையான வறுமையில் துயருற்று வந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவர்களது எண்ணிக்கை 23.4 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதமாகக் குறைந்து விட்டது. வெனிசுலா வரலாற்றில் குறைந்தது 15 சதவீதம் என்பதுதான் வேலைவாய்ப்பின்மையின் அளவாக இருந்தது. ஜன.2009 கணக்கின்படி அது வெறும் 6.1 சதவீதமாகவே உள்ளது.
அமெரிக்க ஆதரவு கவிழ்ப்பு முயற்சி நடந்த ஏப்.2002 மற்றும் 2003ன் துவக்கத்தில் நடைபெற்ற முதலாளிகளின் வேலை நிறுத்தம் ஆகிய காலகட்டங்களைத்தவிர மற்ற சமயங்களில் நாட்டின் வளர்ச்சி அதிகரித்தே வந்தது. அரசியல் தளங்களிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசில் குவிந்து கிடந்த அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, உள்ளூர் சமூக அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புறத் தொழில்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நல்ல அம்சமாகும். மக்களுக்கு லாபம் அளிக்கக்கூடியதாகவும், முதலாளித்துவத்திற்கு நஷ்டம் அளிப்பதாகவும் இந்த நூற்றாண்டு அமையும் என்கிறார் வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ்.
வியாழன், 5 பிப்ரவரி, 2009
பத்தாண்டுகளில் கடந்து வந்த பாதை!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக