வியாழன், 12 பிப்ரவரி, 2009

தெருவிளக்கு கார்ப்பரேட் கட்சிகளின் காம்பஸ் வியாபாரம்...

தற்போதைய நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடங்கியிருக்கிறது. அடுத்த நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான பொதுத்தேர்தல் குறித்த ஆலோசனை நடைமுறைகளை தேர்தல்ஆணையம் தொடங்கியிருக்கிறது.

நாட்டின் பெரிய கட்சிகளாக ஊடகங்களால் உசுப்பேற்றப்பட்டிருக்கும் காங்கிரஸ், பாஜக இரண்டுமே அதைப் பெரிதாக நம்பி அடுத்த ஆட்சியார் கையில் என்ற கற்பனைக் கோட்டையைக் கட்டத் துவங்கியுள்ளன.

சந்தையில் கடை விரிப்போர் தங்களது சரக்குகளின் அருமை பெருமை களைக் கூவி விற்பது போல் இரு கட்சிகளும் தங்களைப் பற்றி மக்களிடையே ஊது வதற்கும் ஓதுவதற்கும் மூலச்சரக்குகளை கீழ்மட்டத் தலைவர்களுக்கு விநியோகிக்கக் கிளம்பியுள்ளன. சந்தையில் கடைவிரிப் போருக்காவது அப்படிக்கூவுவது வயிற்றுப் பாடு. இந்த இரு கட்சிகளும் கூவுவதோ மக்களின் வயிற்றில் அடிக்கிற செயல்பாடு.

இரண்டு கட்சிகளுமே கார்ப்பரேட் கலாச்சார காதலர்கள் என்பதால், கார்ப் பரேட் ஸ்டைலிலேயே வியாபார உத்திக் கான கூட்டங்களை நடத்தியுள்ளன. கடந்த ஞாயிறன்று (பிப்.8) புதுடில்லியில் காங்கிரஸ் கட்சியும் நாக்பூரில் பாஜக-வும் தத்தமது வட்டாரத் தலைவர்களுடனான கூட்டங்களை நடத்தி, தம்முடைய சரக்குகள் பற்றி மக்களிடையே எப்படியெல்லாம் விளம் பரப்படுத்துவது என்று ‘காம்பஸ் கேம்ப்’ நடத்தியிருக்கின்றன.

காங்கிரசைப் பொறுத்தவரையில் மூத்த தலைமுறையாகிய பிரதமர் மன்மோகன் சிங், இளைய தலைமுறையாகிய ராகுல் காந்தி இருவரையும் பற்றிய படிமங்களை முன்வைப்பதையே தனது மையமான உத்தியாக நம்பியிருப்பது தெரியவந்தது. காங்கிரசுக்கே உரிய பாரம்பரியத்தின் படி எல்லாம் ஹை-கமாண்ட் முடிவுதான் என்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிரகடனங்களையே வேதவாக்காக அடுத்த மட்டத் தலைவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.

பாஜக-வின் குறுகிய மதவாத அரசியலை வன்மையாகச் சாடினார் சோனியா. “பாஜக-வின் குரல் பாகுபாட்டின், பிரிவினையின், பகைமையுணர்வின் குரலாக ஒலிக்கிறது,” என்று கூறினார். அதற்கு மாற்றாக காங்கிரசிடம் இருப்பது என்ன? “காங்கிரசின் குரல் சமூக நீதியின், மத நல்லிணக்கத்தின், அனைவரையும் அரவணைத்துக்கொள்வதின் குரலாக ஒலிக்கிறது” என்றார்.

வார்த்தை நயம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் சமூக நீதி, மத நல்லிணக்கம், அனைவருக்குமான வாய்ப்பு என்பவை யெல்லாம் இந்த நான்கரையாண்டு கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் கேலிக்குரியதாக மாறிவிட்டன.

வேலைவாய்ப்புகளைப் பெருக்காதது மட்டுமல்ல, இருக்கிற வேலைகளும் பறிபோகச் செய்கிற உலகமயக் கொள்கைகளைப் பிடிவாதமாகச் செயல் படுத்திவிட்டு, சமூக நீதி பற்றிப் பேசுவது எத்தனை அபத்தம்! அமெரிக்காவிடம் இந்தியாவின் சுயமரியாதையை அடகு வைத்துத்தான் அணுசக்தி உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது என்பது முதல், இவர்கள் சொல்கிற பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் ஊகபேர வர்த்தகச் சூதாட்ட வீக்கமே என்பது வரையில், விவசாயிகளின் தற்கொலைகள், வரலாறு காணாத விலைவாசி உயர்வு போன்ற வற்றை காங்கிரஸ் தலைமை மறக்கலாம் - ஆனால் மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்களே! அவர்களிடம் மன்மோகன்-ராகுல் பிராண்டுகள் எடுபடுமா?

ஆர்எஸ்எஸ் தலைமை பீடம் இருக்கும் நாக்பூரில் பாஜக நடத்திய தேசிய நிர்வாகக் குழு கூட்டம், எப்படியாவது அத்வானிதான் அடுத்த பிரதமர் என்ற பிரமையை விற்பனை செய்யக் கூறியது. அவர்களுடைய கூட்டணி ஆட்சியில் இந்தியா ஒளிவிட்டுப் பிரகாசித்ததாக தலைவர்கள் முழங்கினார்கள். பங்கேற்ற கீழ் மட்ட தலைவர்களோ தங்களுக்குள், “இந்தியா ஒளிர்ந்தது என்றால் மக்கள் தேர்தலில் நம்மை இருட்டில் தள்ளியது ஏன்,” என்று கேட்டுக்கொண்டார்கள். ஒருவேளை அத்வானி பிராண்டு எடுபடாது என்றால் நரேந்திர மோடியை வர்த்தகச் சின்னமாகப் பிரச்சாரம் செய்யவும் தலைவர்கள் வழிகாட்டினார்கள். அவருடைய ஆட்சியில் குஜராத் அமோகமாக வளர்ந்திருக்கிறது என்று சில பாஜக ஆதரவு ஊடகங்களும்,சில கார்ப்பரேட் முதலாளிகளும் சொல்லிவருவது அந்த விளம்பர உத்திக்குப் பயன்படும் என்று கருதினார்கள் போலும்.

ஆனால் மோடி என்ற பிராண்டுக்குப் பின்னால் மூர்க்கத் தனமான மதவெறியும் மனிதப்படுகொலைகளும் குதறிக்கிடப்பதை மறைக்க முடி யாதே! அத்வானி, மோடி இருவருமே எடுபடாமல் போகக்கூடும் என்ற ஞானம் பிறந்ததாலோ என்னவோ நாக்பூர் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் எதற்கும் இருக்கட்டும் என்று பகவான் ராமனை இழுத்துக்கொண்டார்.

மறுநாள் அத்வானியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர், “நாங்கள் எப்போது ராமனைக் கைவிட்டோம்,” என்று கூறியிருக்கிறார். உண்மைதான். சொல்லப்போனால், பாவம் ராமன் என்னவோ இவர்களிடம் “என்னை விட்டுடுங்கப்பா” என்று சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்கிறார். இவர்கள் தான் விட்டேனா பார் என்று அவரை பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

புதுடில்லி, நாக்பூர் இரண்டு கேம்ப்பு களிலுமே, இரண்டு கார்ப்பரேட் கட்சி களின் தலைவர்களும் நினைக்க மறந்த ஒருவர் உண்டு. அவர்தான் திருவாளர் பொதுமக்கள். அவரோ, இந்த இருவரது தர்பாரிலும் பட்டது போதும் என்று மாற்று சக்திகளின் வருகைக்குக் காத்திருக்கிறார்கள்.

-அ. குமரேசன்

கருத்துகள் இல்லை: