சனி, 7 மார்ச், 2009

இலங்கையில் போரை உடனே நிறுத்த வேண்டும் பான் கி- மூன் வேண்டுகோள்

இலங்கையில் அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டையில் பலியாகும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை யளிக்கிறது. இரு தரப்பும் போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் - கி- மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வடக்கு வன்னி பகுதியில் போர் மண்டலத்துக்குள் சிக்கியுள்ள மக்களின் வாழ்நிலை மோசமடைந்து வருவதாக ஐ.நா. மனிதநேயச் செயல்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் வியாழனன்று கூறியது. இதையடுத்து பான் கி- மூன் மீண்டும் வேண்டு கோள் விடுத்துள்ளார். 

சுமார் 300 கி.மீ. பரப்பில் நடந்து வந்த போர் தற்போது 58 சதுர கி.மீ. பரப்பில் சுருங்கி விட்டது. சுமார் 14 ச.கி.மீ பரப்பில் உள்ள அமைதி மண்டலத்தில் சுமார் ஒன்று முதல் இரண்டு லட்சம் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும் ஐ.நா. அமைப்பின் தகவல் கூறுகிறது. 

போர் மண்டலத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறும் வகையில் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்லும் மனித நேய உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்று பான் கி- மூன் மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுத்துள் ளார். அவருடைய அறிக்கையை ஐ.நா. செய்தித் தொடர்பாளர் வெளியிட்டார். 

பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளுக்கும் அவர்களுடைய ஆயுதங்களும் வெளியேற வேண்டுமென்றும், மனித நேய உதவிகளில் ஒத்துழைக்க வேண்டும் என்றும், 13 வயதுள்ள சிறார்களை படையில் சேர்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும் அவர் விடுதலைப்புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

என்னால் நம்ப முடியவில்லை. தமிழ்மணத்தில் இப்படியொரு நியாயமான பதிவா?
புலிகளின் அழிவை ஆதரித்து பதிவுகள் வருவது தான் வழமை.