பூவுலகின் தொல் குடிகளில் தமிழ் குடியும் ஒன்று. மொழி என்பது வெறும் வார்த்தைகளும் வரிகளும் அன்று. ஒரு இனத்தின் முகவரி. தமிழ் மொழியின் தொன்மையையும், இலக்கிய வளமையையும் கண்டு உலகம் வியந்து நிற்கிறது. தமிழில் புழங்கப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும் தொன்மையான வாழ்க்கையின் சாரமும், அனுபவப் பிழிவும் புதைந்து கிடக்கிறது.
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி" என்ற சொற்றொடரில் அறிவியலுக்கு புறம்பான பெருமிதம் தொனித்தாலும், தமிழர்தம் பண்பாடு உலகின் தொல் பண்பாடுகளில் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால் இன்றைக்கு இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரமும், பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலால் முடிவின்றி தொடரும் அவலமும் ஒவ்வொரு தமிழனையும் வேதனையின் விளிம்புக்கு தள்ளுகிறது.
1980களில் இலங்கையில் துவங்கிய இன மோதல் இன்றளவும் தொடர்கிறது. இலங்கை மக்கள் தொகையில் 74 சதவீதம் சிங்களர்கள், 18 சதவீதம் தமிழர்கள், 7 சதவீதம் முஸ்லிம்கள் மற்றும் இதர பிரிவினர் ஒரு சதவீதம் என்று அந்நாட்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பு கூறுகிறது.
தமிழர்கள் என்று கூறும்போது அவர்கள் மூன்று வகைப்பட்டவர்கள். காலங்காலமாக அந்த மண்ணிலேயே வாழ்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகள் போல வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள்.
இந்தியப் பிரதமராக இருந்த சாஸ்திரி இலங்கைப் பிரதமராக இருந்த சிரிமாவோ ஆகியோருக்கிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்தியாவுக்கு ஒரு பகுதியினர் திருப்பி அனுப்பப்பட்டனர். மீதமுள்ளவர்கள் பூரண குடியுரிமையின்றி இன்னமும் இலங்கையில் இருப்பவர்கள். மூன்றாவது வகையினர் தமிழ் பேசும் முஸ்லிம்கள். கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதியிலுள்ள தமிழர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று துல்லியமாக கூற முடியவில்லை என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
அடுத்து எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த பகுதியில் தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை சென்றுவிடுமோ என்று இதயம் நடுங்குகிறது.
எல்டிடிஇ- பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ராஜபக்ஷே அரசு சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் எனப்படும் தீ குண்டுகளை மக்கள் மீது வீசுகிறது. கைகால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் கூட இந்த குண்டு வீச்சில் இருந்து தப்பமுடியவில்லை. அந்த பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட செஞ்சிலுவை சங்கத்தினரைக் கூட அரசு வெளியேற்றுகிறது. இந்த மாதம் இந்த பகுதிக்கு கூடுதலாக சவப்பைகள் தேவைப்படும் என்று ஐ.நா. தலைமையகத்திற்கு தகவல் அனுப்பியதைக் கூட தவறென்று ராஜபக்ஷே அரசு குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச அளவில் இலங்கைக்கு உள்ள நற்பெயரை செஞ்சிலுவை சங்கம் கெடுப்பதாக ராஜபக்ஷே பொருமியுள்ளார். சொந்த நாட்டு மக்களையே கொத்து குண்டுகள் வீசி கொல்லும் ஒரு அரசின் மீது சர்வதேச சமூகம் எத்தகைய மதிப்பு கொண்டிருக்கும் என்று ராஜபக்ஷேவுக்கு தெரியவில்லை.
எல்டிடிஇ-க்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களையே கொல்லும் ராஜபக்ஷே அரசின் அநியாயத்தை அம்பலப்படுத்தி எழுதும் சிங்கள மொழி பத்திரிகையாளர்கள் கூட தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.
போர் நடக்கும் பகுதிகளிலிருந்து சர்வதேச ஊடகங்களும் கூட வெளியேற்றப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை கொன்று குவிக்கவில்லை என்றால், ராஜபக்ஷே நிர்வாகத்திற்கு இந்த அளவுக்கு பதட்டமும் பயமும் ஏற்படவேண்டிய அவசியமில்லை.
மறுபுறத்தில் அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப்புலிகள் பயன்படுத்துகின்றனர் என்று ஐ.நா. பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களது பிடியிலிருந்து தப்பிக்க முயல்பவர்களை எல்டிடிஇ அனுமதிப்பதில்லை என்பது, உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பி வந்த சிலரது நேர்காணலிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்த கடைசி நகரமான புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிவிட்டோம் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. பெருமளவு தங்களது பிடிமானத்தை இழந்துவிட்ட நிலையில் இலங்கை அரசு போர்நிறுத்தம் அறிவிக்க சர்வதேச சமுகம் வற்புறுத்த வேண்டும் என்று புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் வேண்டுகோள் விடுக்கிறார். மறுபுறத்தில் கடைசி புலியை கொல்லும் வரை போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இடையில் சிக்கி எத்தனை ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்ற கண்ணோட்டத்துடனேயே ராஜபக்ஷே அரசு செயல்பட்டு வருகிறது.
1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலைபெற்றது. 1956ம் ஆண்டு பண்டார நாயகா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிங்கள இன தேசியவாதத்தை தூண்டிவிட்டார். அப்போதிருந்தே தாங்கள் ஒதுக்கப்படுவதாக பூர்வகுடியான தமிழர்களிடையே மனக்குறை எழுந்தது. கல்வி மற்றும் விவசாயக் கொள்கைகள் தங்களுக்கு எதிராக இருப்பதாக தமிழர்கள் ஜனநாயக ரீதியில் குரல் எழுப்பினர். தமிழர்கள் பெரும்பகுதியாக இருந்த வளமையான பகுதிகளில் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியேற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. துவக்கத்தில் ஜனநாயக ரீதியில் எழுந்த இயக்கங்களை தொடர்ந்து வந்த இலங்கை அரசுகள் புறக்கணித்தே வந்தன.
1972ம் ஆண்டு பண்டாரா நாயகா அரசு புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வந்தது. புத்தமதம்தான் அரசியல் சாசனப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மதம் என்றும் சிங்கள மொழிக்கே முன்னுரிமை என்றும் இந்த புதிய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருந்தது.
1980களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தின்போது கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். உலகத்தரத்திலான யாழ்ப்பாணநூலகம் தீவைத்து கொளுத்தப்பட்டது. இது தமிழர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அறிவுலகத்திற்கும் பேரிழப்பாகும்.
ஒரு செடியை எடுத்து வேறு இடத்தில் நடும்போது கூட வேரடி மண்ணையும் கொஞ்சம் சேர்த்து எடுத்து வைப்பது மரபு. ஆனால் இன்றைக்கு இலங்கை தமிழர்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் முகமற்று முகவரியற்று சிதறிக்கிடக்கின்றனர். தங்கள் சொந்த மண்ணுக்கு என்றைக்கு திரும்புவோம் என்ற ஏக்கம் கவிதையாக, கண்ணீராக வடிந்து கொண்டே இருக்கிறது.
சொந்த நாட்டில் வாழ வழியின்றி உயிரைகையில் பிடித்துக் கொண்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையையும் நம்பிக்கையையும் தொலைத்துவிட்டு சொந்த உடலையே சுமையாக நினைத்து இருந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழர்களின் நியாயமான ஜனநாயகப் பூர்வ உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான்போராளிக்குழுக்கள் உருவாகின. தனி ஈழம் என்ற குரலும் எழுந்தது. துவக்கத்தில் இபிஆர்எல்எப் பிளாட், இபிடிபி டெலோ, ஈராஸ் உள்ளிட்ட அமைப்புகள் மட்டுமின்றி விடுதலைப்புலிகளும் கூட சோசலிச தமிழ் ஈழம் என்ற முழக்கத்தை எழுப்பின. ஆனால் எல்டிடிஇ சோசலிசம் என்ற லட்சியத்தை கைவிட்டது மட்டுமின்றி அதை கைவிடாத குழுக்களை சேர்ந்த தலைவர்களையும் கூட கொன்று குவித்தனர் என்பதும் உறுத்தும் நிஜமாகும்.
விடுதலைப்புலிகளின் செயல்பாட்டில் பாசிச குணமே மேலோங்கியது. எதிர்கருத்து கொண்ட யாரோடும் பேசித் தீர்ப்பது என்பதற்கு பதிலாக தீர்த்துக் கட்டுவது என்பதே அவர்களின் அணுகுமுறையாக இருந்தது. அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை சீர்குலைத்ததில் தொடர்ந்து வந்த இலங்கை அரசுகளுக்கு மட்டுமின்றி எல்டிடிஇ அமைப்புக்கும் பங்கு உண்டு.
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷோபா சக்தியின் வார்த்தைகளில் கூறுவதானால், "பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் மட்டுமல்ல புலிகளும் நேர்மையாகவும் உண்மையாகவும் இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன. இருவருமே யுத்தத்தின் மூலமாகவே தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநிறுத்திக் கொள்கின்றனர்" என்று கூறும் அவர், "இத்தனைக்கு பின்னும் கூட யுத்தத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலம் குறித்தோ, நிரந்தரமான சமாதான தீர்வை நோக்கி போக வேண்டிய அவசியம் குறித்தோ எந்த கரிசனையும் இல்லாமல் தங்கள் இயக்கத்திற்கு அதிகாரங்களை பெற்றெடுப்பதிலேயே பேச்சுவார்த்தையை பயன்படுத்தி மாற்றுஅரசியல் இயக்கங்களை ஒழித்துக்கட்டுவதில் மட்டுமே புலிகள் குறியாக இருந்தன. போர்நிறுத்த காலங்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட மாற்று இயக்கங்களின் முக்கியஸ்தர்களை புலிகள் கொன்றழித்தனர்" என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.
தனி ஈழம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்பதே அனுபவம் உணர்த்துகிறது. தனி ஈழக் கோரிக்கைய ஆதரித்த திமுக போன்ற பெரிய கட்சிகள் கூட ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு தங்களது நிலையை மாற்றிக்கொண்டுள்ளன.
1980களில் தமிழகத்தில் பெரும் இனவாத கூச்சல் எழுப்பப்பட்ட நிலையிலும் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சனைக்கு தெளிவான தீர்வை முன்வைத்தது. ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள் தமிழர்கள் வாழும் வடக்க, கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழர்களுக்கும் தமிழுக்கும் சமஉரிமையும் சம வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்பின் முரணின்றி முன்வைத்தது மார்க்சிஸ்ட் கட்சி. மேலும் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண ராஜீய ரீதியில் இந்தியா தலையிட வேண்டும். ஐ.நா. சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்து இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்ற குரலையும் தொடர்ந்து ஒலித்து வருகிறது.
இப்போது முன்வந்துள்ள முக்கியப் பிரச்சனை இருதரப்புமோதலில் சிக்கி அன்றாடம் உயிரிழந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை பாதுகாக்க ராஜீய ரீதியில் இந்தியாவும் ஐக்கியநாடுகள் சபையும் தலையிட வேண்டும் என்பதுதான்.
இலங்கை இனப்பிரச்னையை சுமுகமாக தீர்க்க ராஜபக்ஷே அரசு பின்பற்றும் கொடூரமான அணுகுமுறையோ விடுதலைப்புலிகளின் நம்பகமற்ற அணுகுமுறையோ எந்தவகையிலும் பயன்படாது.
கிழக்கு மாகாணத்தின் அரசு ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக ராஜபக்ஷே அரசு கூறுகிறது. ஆனால் ஒரு நகராட்சிக்கு உள்ள அதிகாரம் கூட அந்த மாகாண அரசுக்கு இல்லை என்று முதல்வர் பிள்ளையான் கூறுகிறார். இத்தகைய ஒரு அரசை வடக்கமாகாணத்திலும அமைத்து பிரச்சனையை முடித்துவிட்டதாக ராஜ்பக்ஷே அரசு கருதுமானால் அது முட்டாள்தனமாகவே இருக்கும். தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் உண்மையாக சுயாட்சி அதிகாரம் உள்ள மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும்.
முடிவின்றி தொடரும் உள்நாட்டுப்போர் தமிழ் மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ச்சியும் பெருமளவு பின்னுக்கு தள்ளியுள்ளது. இதை பயன்படுத்தி அமெரிக்கா போனற் வல்லரசுகள் இலங்கையை தங்களது சதுரங்க களத்தல் பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் அமெரிக்க தூதரகத்திற்கு சென்று இலங்கை பிரச்னையில் தலையிடுமாறு மனு கொடுக்கின்றன. ஒரு கட்சியின் தலைவரோ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு எஸ்எம்எஸ் கொடுக்குமாறு தனது கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவை சர்வதேச போலீஸ்காரனாக நினைக்கும் அடிமை மனோபாவமே இது. இப்போது தேவை அமெரிக்க தலையீடு அல்ல. ஐநாவின் தலையீடு.
இலங்கை தமிழர் பிரச்சனை தமிழகத்திலும் பிரதிபலிப்பை ஏற்படுத்துவது இயல்பு ஆனால் சிலர் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதும், உணர்ச்சிக் கொந்தளிப்பில் தங்களைத் தாங்களே தீயிட்டு கொளுத்திக்கொண்டு மாள்வதை உற்சாகப்படுத்துவதும் பெரும்கேடாகவே முடியும்.
தமிழ் மக்களின் குரல் ஒன்றுபட்டு ஒலிக்கவேண்டிய நேரம் இது. எதிர்கால அரசியல் கணக்கை மனதில் வைத்துக் கொண்டு பிரிந்துநின்று பேதம் வளர்ப்பது இலங்கை தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவாது.
புதன், 18 மார்ச், 2009
யுத்தம் நிற்கட்டும்
மதுரை சொக்கன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
//இந்த மாதம் இந்த பகுதிக்கு கூடுதலாக சவப்பைகள் தேவைப்படும் என்று ஐ.நா. தலைமையகத்திற்கு தகவல் அனுப்பியதைக் கூட தவறென்று ராஜபக்ஷே அரசு குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச அளவில் இலங்கைக்கு உள்ள நற்பெயரை செஞ்சிலுவை சங்கம் கெடுப்பதாக ராஜபக்ஷே பொருமியுள்ளார். சொந்த நாட்டு மக்களையே கொத்து குண்டுகள் வீசி கொல்லும் ஒரு அரசின் மீது சர்வதேச சமூகம் எத்தகைய மதிப்பு கொண்டிருக்கும் என்று ராஜபக்ஷேவுக்கு தெரியவில்லை.//
சரியா சொல்லி இருக்கிங்க.
மொத்தக் கட்டுரையும் நடுநிலையா இருக்கு விடுதலை.
நன்றி பட்டாம்பூச்சிக்கு
கருத்துரையிடுக