புதன், 25 மார்ச், 2009

ஆம்... “மூன்றாவது அணி” அரசு பொருளாதாரத்துக்கு நல்லதே!

நிலேஷ் கஞ்வாலா..

அகில் ஹிரானி..

அமித் ஜெயின்...

அலோக் கெஜ்ரிவால்...

சந்தோஷ் மங்கள்...

தேவேந்திர நெவ்கி..

பிரீதா பிரதான்..

ஆஷித் சவ்ஜானி..

ராஜிவ் எச் சிங்...

பரஞ்ஜோய் குஹா தாகுர்தா...

பல்வேறு கணினி, நிர்வாகவியல் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறைகளின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்தான் இவர்கள்.

பரஞ்ஜோய் மட்டுமே அரசியல் விமர்சகர். இந்திய தொழில்துறையின் இளமையான முகங்கள் என்று இவர்கள் வர்ணிக்கப்படுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் இன்று நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் மூன்றாவது அணி என்ற மாற்று அணி பற்றி இவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பிசினஸ் வேர்ல்டுஆங்கில வார இதழ்தான் இந்தக் கேள்வியை இவர்கள் முன் வைத்தது. “இந்தியப்பொருளாதாரத்திற்கு மூன்றாவது அணி தலைமையிலான மத்திய அரசு நல்லதா?” என்பதுதான் அது.

கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்கும் இந்த இளம் தலைமை நிர்வாகிகள் தங்களுக்கு பலன் அளித்ததாகக் கூறப்படும் நவீன தாராள, தனியார் மற்றும் உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த பாஜக அல்லது காங்கிரஸ் தலைமையிலான அணிகள்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறுவதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக எழுந்துள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடி இந்த இளம் தலைமை நிர்வாகிகளில் சிலரின் மனங்களிலும் மாற்றுக்கருத்தை விதைத்துள்ளது.

மூன்றாவது அணி அரசு ஆட்சிக்கு வருவதால் பொருளாதாரத்திற்கு நல்லது என்று 20 சதவீதம் பேர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். இதற்கு அவர்கள் பல காரணங்களைத் தெரிவித்துள்ளார்கள். தற்போது திட்டமிட்டுள்ளதை விட கட்டமைப்பு வசதிகளை அதிகமாக உருவாக்க வேண்டும் என்று அந்த அணியைச் சேர்ந்த பல தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அரசு முதலீடு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த உள்ளார்கள். ரூபாயை தங்குதடையின்றி பிற நாடுகளின் நாணயங்களுக்கு மாற்றிக்கொள்ளும் குழிபறிப்பு வேலை, வங்கித்துறை மறறும் காப்பீட்டுத்துறை சீர்திருத்தங்கள் ஆகியவற்றைத் தடுத்ததால் இந்திய நிதித்துறை நெருக்கடியில் சிக்காமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை பலவீனமாகி வருவதால், நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் மூன்றாவது அணிதான் பெரும்பங்காற்ற போகிறது என்றெல்லாம் இந்த தலைமை நிர்வாகிகளில் சிலர் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் 20 சதவீதம் பேர், இந்த அணி ஆட்சிக்கு வருவது கெட்டது என்று கூறுவதற்கு எந்தக்காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள். தலைவரில்லை, ஏராளமான கட்சிகள் இருக்கின்றன என்றெல்லாம் மற்றவர்கள் சொல்வதை இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு அரசின் கொள்கைகளே அதை உருவாக்கும் அல்லது அழிக்கும். வேறெதுவும் அதை அழித்துவிட முடியாது என்கிறார்கள் இவர்கள். பல்வேறு திறமையான தலைவர்கள் இந்த அணியில் இருப்பதால் இது வெற்றிக்கதையாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

பிரதேசக்கட்சிகள் கொண்ட கூட்டணி வெற்றிகரமானதாகவும் அமையக்கூடும். பொதுவான திட்டம் உருவாக்கப்பட்டு, சிறப்பான தலைமையும் அமைந்தால் அரசுஜாம், ஜாம்என்று நடக்கும். பல்வேறு தேசிய மற்றும் பொருளாதாரக்கொள்கைகளில் பரந்த அளவில் விவாதம் நடத்த பிரதேசக் கட்சிகள் இருப்பது உதவும் என்று இவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தலைமை நிர்வாகிகள் மட்டத்தில் இத்தகைய ஆய்வுக்கு பொதுவாக நூறு சதவீதம் ஒரே கருத்தே வெளிவரும். ஆனால் மாற்று அணிக்கு எதிராக 60 சதவீதம்தான் எதிர்ப்பு இருந்துள்ளது. கடந்த கால அனுபவங்கள் மாற்று அணி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் டெக்கான் கிரானிக்கிள்(மார்ச் 24) நாளிதழ் வெளியிட்டுள்ள ஆய்வு, இவர்கள் கருத்தை நிராகரிக்கிறது.

1979 முதல் 1991 வரையிலான நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 4.7 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால் 1989-91ல் வி.பி.சிங் தலைமையிலான அரசு இருந்தபோது பொருளாதார வளர்ச்சி சராசரியாக 5.7 சதவீதமாக இருந்தது. 1991க்குப்பிறகுள்ள காலகட்டத்தில் சராசரி வளர்ச்சி 6.4 ஆக இருந்த நிலையில், 1996-98ல் ஐக்கிய முன்னணி ஆட்சி இருந்தபோது வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது. மாற்றுக்கான ஆதரவு அதிகரித்து வருவதையே தலைமை நிர்வாகிகளின் கருத்துகள் காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை: