வெள்ளி, 27 மார்ச், 2009

மக்களோடுதான் கூட்டணி !

ராஜகுரு












மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங்கும், பிரதமர் கனவில் மிதக்கும் எல்.கே. அத்வானியும்டில்லியில் ஒரு விழாவில் சந்தித்துக்கொள்கின்றனர். நமஸ்தேஜி என்று இருவரும்கைகூப்பி வணக்கம் தெரிவித்துக் கொள்கின்றனர்.


மன்மோகன்சிங் : அடுத்த பிரதமர் நீங்களா, நானான்னு மே மாதம் தெரிஞ்சுடும்!


அத்வானி : இதுக்கு மே மாதம் வரை காத்திருப்பானேன்? நான்தான் அடுத்த பிரதமர்ங்கறதிலே உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கா?


மன்மோகன்சிங் : இதுக்கு மே மாதம் வரை காத்திருப்பானேன்? நான்தான் அடுத்த பிரதமர்ங்கறதிலே உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கா?

மன் : இதை நீங்க உங்க கூட்டத்திலே சொல்லுங்க. பேசாம கேட்டுக்குவாங்க. என்கிட்ட சொல்லாதீங்க. உங்க அறிக்கைக்கு நான் கொடுத்த பதிலடியைப் பாத்தீங்கள்ல..?

(இருவரும் பேசிக் கொண்டே பக்கத்தில் உள்ள ஒரு அறைக்குச் சென்று இரு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அருகில் அமர்கின்றனர்)

அத் : பார்த்தேன், பார்த்தேன் ! அதுக்குன்னு இவ்வளவு கடுமையாவா அறிக்கை கொடுப்பீங்க? நம்ம ரெண்டு பேர் அறிக்கையையும் ஜனங்க ஒழுங்காப் படிச்சாங்கன்னா நம்ம ரெண்டு பேரையுமே பிரதமரா வர விடமாட்டாங்க !

மன் : பின்னே, இந்தியப் பிரதமர்களிலேயே ஆகப் பலவீனமான பிரதமர் நான்தான்னு நீங்க சொன்னா அதைக் கேட்டுக்கிட்டு சும்மா இருக்க நான் என்ன வாஜ்பாயா?

அத் : இப்ப எதுக்கு அவர் பேரை இழுக்கணும்? ஒரு வழியா கட்சியிலே எனக்கு லைன் கிளியர் ஆகிட்டுதுன்னு நான் நிம்மதியா இருக்கேன். நீங்க அவரை ஞாபகப்படுத்தாதீங்க. நாம பேசி ஒருமுடிவுக்கு வருவோம்...

மன் : உங்க அறிக்கையைப் பாத்துட்டு நீங்க சொல்றது சரிதான்னு ஜனங்க நெனச்சுட்டாங்கன்னா?

அத் : அதையேதான் நானும் கேக்கறேன். பாபர் மசூதியை இடிச்சதுதான் என்னோட வாழ்நாள் சாதனைன்னு நீங்க சொன்னதை, ஆமா, உண்மைதானேன்னு ஜனங்க நெனச்சுரமாட்டாங்களா?

மன் : 123 ஒப்பந்தத்தை நான் நிறைவேத்தின பிடிவாதத்தைப் பாத்தப்புறமும் என்னை நீங்க பலவீனமான பிரதமர்னு சொல்றதை நெனச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு !

அத் : வெளையாடாதீங்க மன்மோகன்ஜி ! உள்நாட்டிலே உங்களுக்கு சோனியாஜீதான் பாஸ்னா, நாட்டு எல்லையைத் தாண்டிட்டா உங்க பாஸ் ஜார்ஜ் புஷ்தான்னு எனக்குத் தெரியாதா? புஷ் இல்லே ஒபாமான்னு உடனே கரெக்ஷன் கொடுக்காதீங்க...இதிலே உங்க சாதனை எங்கே வருது?

மன் : பாம்பின் கால் பாம்பறியும். நீங்க அமெரிக்க ஒப்பந்தத்தை எதிர்க்கற மாதிரி பாவ்லா பண்றதெல்லாம் `ச்ச்சும்மா’ன்னு எனக்குத் தெரியாதா?

அத் : சரி, அதை விடுங்க. பயங்கரவாதிகளை ஒடுக்கறதிலே உங்க ரெக்கார்டு என்ன?

மன் : இதுக்கு நான் தெளிவா பதில் சொல்லியிருக்கேன். பத்திரிகையை எடுத்து நல்லாப் படிங்க !

அத் : சரி, இதையெல்லாம் விடுங்க. சப்ஜெக்ட்டுக்கு வருவோம். பீகார்லயும் ஜார்க்கண்ட்லயும் உங்களை இப்படிக் கழட்டி விட்டுட்டாங்களே..!

(நக்கலாகச் சிரிக்கிறார்)

மன் : கண்ணாடியிலே முகத்தைப் பாத்துட்டு அடுத்தவங்களைக் கேலி பண்ணணும். ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம், தமிழ்நாட்டிலே உங்க நெலமை என்ன?

(மன்மோகன்சிங் பலமாகச் சிரிக்கிறார்)

அத் : இப்படி நாம ஏட்டிக்குப் போட்டியா பேசிக்கிட்டே போனோம்னா பிரதமர் நாற்காலியை நேத்து வந்தவங்க கொண்டு போயிருவாங்க. நாம ரெண்டு பேரும் பாரம்பரியப் பெருமையைச் சொல்லிக்கிட்டுத் திரிய வேண்டியதுதான். அதை நெனச்சா வேற எனக்குத் தூக்கம் வர மாட்டேங்குது !

மன் : சரி, அதுக்கு என்ன செய்யலாம்கறீங்க?

அத் : அப்படிக் கேளுங்க. நம்ம ரெண்டு பேரோட கொள்கைகள்ல அதிக வித்தியாசம் இல்லேங்கறது உங்களுக்குத் தெரியும். என்ன, நாங்க முஸ்லிம்களைப் பத்தி அதிகமாப் பேசுவோம். வாய்ப்பு கிடைச்சா குஜராத்ல செஞ்ச மாதிரி காரியத்திலேயும் இறங்குவோம். நீங்க அதைச் செய்ய மாட்டீங்க. ஆனாலும் பிரதமரா இருந்த இந்த அஞ்சு வருஷத்திலே எங்க மேலே உருப்படியா ஏதாவது நடவடிக்கை எடுத்திருப்பீங்களா? சேது சமுத்திரத் திட்டத்தை நாம ரெண்டு பேரும் சேர்ந்து எப்படிக் கிடப்பிலே போட்டிருக்கோம் ! நாம ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணுங்கறதை மறந்துடாதீங்க. வெளியிலே போடற சண்டையிலே காட்டம் அதிகமா இருக்கக் கூடாது. ஞாபகம் வச்சுக்குங்க. அதனாலே ரெண்டு பேருக்குமே ஆபத்து !

மன் : நீங்க சொல்றதும் சரிதான். நம்மைத் தவிர வேற எந்த முன்னணி ஆட்சிக்கு வந்தாலும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்களைக் கவுத்திருக்கோம். இதுதான் நம்மோட வரலாறுங்கறதை மறந்துட முடியுமா? ஆனா எவ்வளவு சாமர்த்தியமா பேசிப் பாத்தும் கூட்டணிக் கட்சிங்க செட் ஆக மாட்டேங்குதே? அதை எப்படி சமாளிக்கறது?

அத் : இந்த விஷயத்திலே தமிழ்நாட்டு விஜயகாந்த் கிட்டேயிருந்து சில வார்த்தைகளைக் கடன் வாங்க வேண்டியதுதான். அவர் யார் கூடவும் சேர மாட்டேங்கறாரு. நம்ம நிலைமையே வேற. பல பேரு நம்ம கிட்ட நெருங்க பயப்படறாங்க. அப்படிப்பட்ட மாநிலங்கள்ல “எங்களுக்கு எந்தக் கட்சியோடவும் கூட்டணி வேண்டாம். மக்களோடதான் எங்க கூட்டணி”ன்னு தெம்பா அறிவிச்சுர வேண்டியதுதான் !

மன் : அட, இது நல்ல யோசனையா இருக்கே. கீழே விழுந்தாலும் மீசை, தாடியிலே மண் ஒட்டாம சமாளிக்கறது எப்படின்னு அப்பப்ப உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கறேன் ! தாங்க் யூ அத்வானிஜி !

(அத்வானியைக் கட்டித்தழுவிக் கொள்கிறார்)

கருத்துகள் இல்லை: