திங்கள், 20 ஏப்ரல், 2009

வறுமையை விரட்டிய செங்கோட்டை

தேர்தல் வந்தால் தான் பல பத்திரிகை நிருபர்கள் கிராமத்துபக்கம் செல்கிறார்கள். அப்படி ஒரு நிருபர் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள குண்டல கார்க்கி என்ற கிராமத்திற்கு அண்மையில் சென்றார். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் பணிபுரியும் ஐயப்பா என்ற அந்த நிருபர் அந்த கிராமத்தில் பார்த்ததையும் கேட்டதையும் அப்படியே தனது பத்திரிகையில் பதிவு செய்திருக்கிறார். அவர் எழுதியதை அப்படியே தருகிறோம் :

கோலார் மாவட்டத்தில் மிகவும் குக்கிராமம் குண்டல கார்க்கி. கர்நாடகாவில் மிக நீண்டகால மாக இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூ னிஸ்டுகள் தலைமையிலான பஞ்சாயத்து நிர் வாகம் செயல்பட்டுவருகிறது.

கர்நாடகாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்ற காரணமாக இக்கிராமம் இருந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே கடந்த 35 ஆண்டுகளாக பஞ்சாயத்து தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கிராமப் பஞ்சாயத்து தேர்தல் என்பது அரசியல் சார்பற்ற முறையில் நடைபெற்று வந்தாலும் நாட்டின் மிகப் பெரிய இடதுசாரிக்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இந்த கிராமத்தை 1970 ஆம் ஆண்டு முதல் ஆண்டு வருகிறது.

இந்த கிராமத்தில் பெரிய மனிதர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் உழைப்பாளிகள். அனைவரும் கம்யூனிச இயக்கத்தால் ஈர்க்கப் பட்டவர்கள். சிறிய சிறிய குன்றுகளை கொண் டுள்ள இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1500 பேர். மொத்தமுள்ள வீடுகளில் 750 வீடுகளில் வசிப்பவர்கள் தலித் மக்கள். இவர்கள்தான் இந்த கிராமத்தில் பெரும்பான்மையோர்.

இந்த கிராமத்திற்குள் நீங்கள் நுழைந்துவிட்டால் மேற்கு வங்கத்திலோ அல்லது கேரளாவிலோ உள்ளதுபோல் தோன்றும். ஒவ்வொரு தெருக்களி லும் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தால் ஆன கோலங்கள் வரவேற்கின்றன. ஒவ்வொரு வீடுகளிலும் செங்கொடி பட்டொளி வீசி பறக்கிறது. டீ கடைகளில் மூத்த தோழர்கள் மார்க்சிய சித்தா ந்தம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சுவாரசியமாக பல வீடுகளில் கருப்பு வெள்ளை வண்ணத்தில் காரல் மார்க்ஸ், ஏங் கெல்ஸ், லெனின் புகைப்படங்களை காணலாம். இந்த கிராமத்தினர் அனைவரும் கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதால் கிராமத்திற்கு உலகப்புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பெயரை சூட்டியுள்ளனர்.

இந்த கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பஞ்சாயத்து நிர்வாகத்தை கைப்பற்றிய பின்னர் கிராமத்தின் சமூக-பொருளாதாரச் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜி. பபன்னாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்கிறார்கள் கிராம மக்கள். அவரது வழியில் வந்துள்ள கே. வெங்கடேஷ் கூறுகையில், 1970 ஆம் ஆண்டுகளில் நிலச்சுவான்தார்கள் கிராம மக்களை எப்படியெல்லாம் அடித்து சித்ரவதை செய்தனர் என்பதை இன்று நினைக்கும் போதும் நெஞ்சம் பதைக்கிறது என்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி இங்கு துவங்கும் முன்பு அதன் சார்பு தொழிற்சங்கம் மட்டுமே இந்த கிராமத்தில் இருந்தது என்று கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கூறினார்.

நிலச்சுவான்தார்களின் கொடுமை தாங்கமுடி யாமல் கிராம மக்கள் பலர் பிழைப்புக்காக அருகில் உள்ள நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் பஞ் சாயத்து நிர்வாகம் வந்த பின்னர் நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதனால் நிலமற்ற ஏழை விவசாய கூலிகள் பலருக்கு நிலம் கிடைத்தது. இதனால் கிராமப்புற வறுமை குறைந்தது. ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வங்கிகள் என பல வசதிகள் அந்த காலத்திலேயே இந்த கிராமத்திற்கு கிடைத்துவிட்டது. மார்க்ஸ் சொன்ன சோசலிச தத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றான கூட்டுப் பண்ணை முறை இந்த கிராமத்தில் அமலாக்கப் பட்ட பின்னர் விவசாயம் வளர்ந்து பல ஏழை விவ சாயிகள் தன்னிறைவு அடைந்ததோடு கிராமத்தின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலையும் மேம்பாடு அடைந்தது. இதனால் நாங்கள் எந்த தேவைக்கும் கிராமத்தை விட்டு வெளியே செல்லவேண்டிய அவசியம் இல்லை என்கிறார் வெங்கடேஷ்.

தமிழில்: அ.விஜி

கருத்துகள் இல்லை: