வியாழன், 3 பிப்ரவரி, 2011

முதலாளித்துவ சமூகம் அப்படித்தான்!


வாழ்க்கை நிலைகளில் ஏற்பட்ட அவலங்களால் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒன்றரை லட்சத்துக்கு மேற் பட்ட விவசாயிகள் நாடுமுழுவதிலும் தற் கொலை செய்து கொண்ட சோக வரலாறு தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிகழ்வு. ஆனால் தொழிலாளிகளின் மத்தியிலும் தற்கொலைச்சாவுகள் நிகழ்ந்துள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ஆம், அவை யும் அண்மை ஆண்டுகளில் பதிவாகியுள் ளன. அதுவும் தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரான திருப்பூரில் இது கடந்த சில ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தியை நீங்கள் அறிவீர்களா?

தமிழக அரசின் குற்றச்செயல்கள் பதி வேடுகள் வெளிப்படுத்தியுள்ள செய்தி இது . 2007 ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை -526. இதே ஆண்டில் மாநில அளவிலான சராசரி 373. அதாவது இந்த எண்ணிக்கை 41 சதவீதம் கூடுதலானது. 2008ம் ஆண்டில் பதிவான தற்கொலைகளின் எண் ணிக்கை 555. மாநில சராசரி 380. இது 46 சதவீதம் கூடுதல். 2009ம் ஆண்டில் பதி வான தற்கொலைச் சாவுகளின் எண் ணிக்கை 491. இதுவும் மாநில சராசரியை விடக் கூடுதலானது தான். வேதனை யளிக்கும் இந்த நிகழ்வுகளின் பின்னணியை விளக்கும் கட்டுரையொன்று டிசம்பர் 8ம் தேதி ‘பிரன்ட்லைன்’ இதழில் வெளியிடப்பட்டது.

திருப்பூரில் இயங்கி வரும் 6200 ஆயத்த ஆடை நிறுவனங்களில் 4லட்சம் தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர் களில் சரிபாதி அளவில் பெண் தொழி லாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்த தொழி லாளர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாவட் டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். இப்போது ஒரிசா , பீகார், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் திருப்பூர் நகர உழைப்பாளர் படையில் இணைந்துள்ளனர். ஏற்றுமதிக்கான ஆர்டர்களின் அடிப்படை யிலேயே உற்பத்தி நடைபெற்றுவருவதால், ஆண்டு முழுவதும் ஒரே சீரான முறையில் உற்பத்தி என்பதற்கு பதிலாக, சில பருவங்க ளில் இரவுபகல் என்ற வேறுபாடின்றி கடும் மும்முரத்துடன் வேலை நடைபெறுவதும் மற்ற சில பருவங்களில் வேலையும் கூலியும் இன்றி தொழிலாளர்கள் அவதிப்படுவதும் வழக்கமான நடைமுறையாகிவிட்டது.

திருப்பூரின் 4லட்சம் தொழிலாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர்தான் தொழிற்சங்க உறுப்பினர்களாக அணிதிரட்டப்பட்டுள்ளனர். மற்றவர்கள், போராடும் தொழிற்சங்கங்களின் செல்வாக்கின் கீழ் வந்துவிடக்கூடாது என்ப தற்காக ஆலை அதிபர்கள், அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வரு கின்றனர். சுமங்கலி திட்டம் என்ற பெயரில் 15 வயதே நிரம்பிய இளம் பெண்கள் மூன்றாண் டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு தொழிற் சாலை வளாகங்களிலேயே பூட்டி வைக்கப் படுவதையும், மூன்றாண்டுகளுக்குக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கிய பிறகு ரூ. 20 ஆயிரம் அல்லது ரூ.30 ஆயிரம் திருமண உதவித் தொகையினை அளித்துவிட்டு வெளியேற்றப் படும் சுரண்டல் முறையையும் நாம் அறி வோம். அதன் மறுபதிப்பு ஒன்று இப்போது திருப்பூரில் அமலாகி வருகிறது. 2007ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி 191 ஆயத்த ஆடைத் தொழிலகங்களில் 32,545 பெண்கள் இந்த முறையின் கீழ் வேலை செய்து வருகின்றனர். தொழிற்சங்கங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படியான கூலியோ, வேலை நேரம் தொடர் பான சட்டப்பாதுகாப்பு எதுவுமோ இவர்களுக் குக் கிடையாது. உச்சகட்ட உழைப்புச்சுரண் டலுக்கு இவர்கள் உள்ளாக்கப்படுகின்றனர்.

திருப்பூர் தொழிலாளர்களில் சிலர் விரக்தி யின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டப்படுவதற்கு போதுமான வருமானமின்மை, எதிர்காலம் குறித்த நம்பிக்கை இழப்பு, கடுமையான வேலைப்பளு, கந்து வட்டி, தங்குமிடப்பிரச் சனைகள், மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடிய மனமகிழ்வு பொழுதுபோக்குகள் இல்லாமை போன்றவையாகும். உலகமயத் தின் காரணமாக கடும் போட்டிச்சூழலை எதிர் கொள்ளும் முதலாளிகளால் மின்சாரக்கட்ட ணம், போக்குவரத்துச் செலவு போன்றவை களில் சிக்கனத்தை ஏற்படுத்த முடியாது. அவர்கள் எளிதாகக் கை வைக்கக்கூடியது தொழிலாளிகளின் சம்பளத்தின் மீதுதான். எனவே விலைவாசி ஏற்றம் மற்றும் பண வீக்கச் சூழலுக்கு சற்றும் பொருத்தமற்ற குறை வான கூலியையே பெரும்பாலான முதலாளி கள் அளித்து வருகின்றனர். இந்த கூலியை வைத்துக் கொண்டு அதில் கணிசமான பகுதியை கந்து வட்டிக்காரரிடம் கொடுத்து விட்டு, அன்றாட வாழ்க்கைக்கான அத்தியாவ சியப் பொருட்களைக் கூட தொழிலாளர் களால் வாங்கமுடிவதில்லை. ஆண்டு முழு வதும் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் வேலை இல்லாத காலங்களில் பிழைப்பை நடத்தவும், நோய்வாய்ப்படுதல், வீட்டுவிசேஷங்கள், எதிர்பாராத செலவுகள் போன்றவற்றை சமாளிப்பதற்கும் கந்துவட் டிக்காரர்களின் உதவியை நாடவேண்டியுள் ளது. இதனால் அன்றாடம் வாழ்க்கை நடத் துவதே உன்பாடு என்பாடு என்றாகிவிடு கிறது. அதனால் குடும்பங்களில் சண்டை சச் சரவுகள் ஏற்பட்டு நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகிவிடுகிறது. டாஸ்மாக் கடைப்பழக் கம் நிலைமையை மேலும் மோசமாக்கி விடுகிறது.

தொழிற்சங்க பாதுகாப்பு போதுமானதாக இல்லாத நிலையில், வேலைநேரத்துக்கான சட்டவரம்புகள் பல நிறுவனங்களிலும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. வாரத்தில் ஒருநாள் விடுப்பு, மற்ற நாட்களில் 8மணிநேர வேலை என்ற அடிப்படையில் ஒரு தொழிலாளி 48மணி நேரம் வேலைசெய் வதற்கு பதிலாக 90 மணி நேரம் வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும் நிலையிலும் ஏராளமான தொழிலாளர்கள் வைக்கப்பட்டுள் ளனர். குறிப்பாக ஏற்றுமதிக்கான ஆர்டர்களை குறிப்பிட்ட தேதிக்குள் செய்துமுடிப்பதற்காக இயந்திரகதியில் ஓய்வேஎடுக்காமல் தொழி லாளிகள் வேலை செய்யவேண்டியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் ஓவர்டைம் ஊதியமே முறையாக வழங்கப்படுவதில்லை. வடநாட்டிலிருந்து வரவழைக்கப்படும் தொழி லாளர்களின் நிலை படுமோசம். மற்ற தொழி லாளிகளுக்குக் கொடுக்கப்படுவதைவிடக் குறைவான சம்பளமே அவர்களுக்கு வழங் கப்படுகிறது.

பஞ்சு தூசி நிரம்பிய சுற்றுச்சூழலில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருப் பதால் வாய்ப்புண், நுரையீரல் பிரச்சனைகள், தலைசுற்றல் போன்ற பல நோய்களால் தொழி லாளிகள் பாதிக்கப்படுகின்றனர். ஈஎஸ்ஐ வசதிகள் மறுக்கப்படுவதால் உரிய மருத்துவ சிகிச்சைகளைஅவர்களால் செய்துகொள்ள முடிவதில்லை. திருப்பூரில் தற்கொலைச் சாவுகள் அதிகரித்துள்ளது தொடர்பான கட் டுரை ‘பிரண்ட்லைன்’ இல்(டிச.8) வெளி யானதையடுத்து மத்திய தொழிலாளர் நலத் துறை நேரடியாக களஆய்வு செய்வதற்காக துணை தலைமை தொழிலாளர் நல ஆணை யர் தலைமையில் ஒரு குழுவினை திருப் பூருக்கு அனுப்பி வைத்தது. அக்குழுவினர் திருப்பூருக்கு வந்து, தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்று மதியாளர்கள், தொழிற்சங்கத்தலைவர்கள் மற்றும் சம்பந் தப்பட்ட அதிகாரிகளுடன் விவா தித்தனர். வீட்டுவசதி, ஈஎஸ்ஐ, கூட்டுறவுக் கடன் போன்றவை தொடர்பாக மத்திய அர சுக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. மத்திய அரசு நேர்மையானமுறையில் மனப் பூர்வமாக இந்த பரிந்துரைகளை நிறைவேற்றினாலும் தொழிலாளர்களின் வாழ்க்கைச்சூழலில் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்க முடியும். ஏனென்றால் திருப்பூர் தொழிலாளர்களின் இன்றைய அவலநிலைக்குக்காரணம் லாபம் ஈட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பே. மார்க்ஸ், மனித சமூகத்துக்காக விட்டுச் சென்ற வரலாற்றுக்கருவூலமான ‘மூலதனம்’ நூலில், வேலைநாள் பற்றிய பகுதியில் அவர் அளித்துள்ள சித்தரிப்பு 150 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் கூட மிகச்சரியாக இருக் கிறது என்பதற்கு திருப்பூர் நிலையே சரியான நிரூபணம் ஆகும்.

சமுதாய நிர்ப்பந்தம் இன்றாலன்றி, தொழி லாளியின் ஆரோக்கியம் பற்றியோ, ஆயுள் பற்றியோ மூலதனத்துக்குக் கவலையில்லை. உடலும் உள்ளமும் பாழாவது, அகாலமரணம், மிகைவேலை எனும் சித்ரவதை ஆகியவை குறித்து எழுப்பப்படும் கூக்குரலுக்கு அது பின் வருமாறு பதிலளிக்கிறது.இவற்றால் எங்கள் லாபம் அதிகமாகும் போது நாங்கள் ஏன் இவைகுறித்து கவலைப்படவேண்டும்? ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இவை யெல்லாம் தனிப்பட்ட முதலாளியின் நல் லெண்ணத்தையோ, கெட்ட எண்ணத் தையோ பொறுத்ததன்று. தடையில்லாப் போட்டியானது முதலாளித்துவப் பொருள் உற் பத்தியின் உள்ளார்ந்த விதிகளை வெளி யிலிருந்து பலவந்தம் செய்து,ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியின் மீது அதிகாரம் செலுத்தும் விதிகளாக உருவெடுக்கச் செய்கிறது.


-கி.இலக்குவன்

கருத்துகள் இல்லை: