சனி, 26 பிப்ரவரி, 2011

ஜெயிக்கப்போவது எது? மானமா? வருமானமா? முரசொலிக்கு பதில்


தோல்விப் பள்ளத்தாக்கை நோக்கி பயணத்தைத் துவக்கும் போதெல்லாம் திமுக விற்கு ஏற்படும் முதல் அறிகுறி ஆத்திரம். அந்த ஆத்திரம் அறிவை மறைக்கத் துவங்க ஆதாரமற்ற அவதூறுகளை, சத்தில்லாத சப்பைக்கட்டுகளை, பதட்டத்தை மறைப்பதற் கான பசப்புரையை பந்திவைக்கத் துவங்கும் முரசொலி ஏடு.

முரசொலி ஏட்டில் (25.2.2011) இரண்டு பெட்டிச் செய்திகள் எழுதப்பட்டுள்ளன. ‘மார்க்சிஸ்ட் கட்சியை ஜெயலலிதா மதிக்க மறுப்பது ஏன்?’ என்ற தலைப்பில் ஒன்று. ஆத்திரம் இருக்கவேண்டியதுதான். அதற் காக அன்றாடம் செய்தித்தாள்களைக் கூட படிக்காமலா வார்த்தைகளை வாரியிறைப்பது?

திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதற்காக அதிமுக மற்றும் தோழமைக்கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு காண்பது என்று கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்தது. இதனடிப்படையில் பேச்சுவார்த்தைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு இதுவரை இரண்டு முறை அதிமுக குழு வுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த அணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சி களின் குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

மார்க்சிஸ்ட் கட்சியை சந்திக்கவே ஜெயலலிதா மறுத்து வருவதாக முரசொலி ஏடு எழுதியுள்ளது. ‘மார்க்சிஸ்ட் கட்சியின் மானம், ரோசம், எம்.எல்.ஏ.பதவி ஆசை பற்றியெல்லாம் எல்லோரையும் விட ஜெயலலிதா வுக்கே நன்றாகத் தெரியும்’ என்று முரசொலி வக்கனை பேசியுள்ளது.

பதவி ஆசை பற்றி திமுகவா பேசுவது? மத்திய அமைச்சர் பதவிக்காக ஆக்டோபஸ் ஆர்எஸ்எஸ்-ஸின் கைவிரல்களில் ஒன்றான பாஜகவுடன் கூட சேரத்துணிந்த கட்சியல்லவா அது. திமுகவின் மானம் எத்தகையது என்பதை திகார் சிறை அறியும். அலை அலையாய் எழுந்து வரும் செய்தி களும், கற்றை கற்றையாய் கைமாறிய தொகை குறித்து வெளியாகும் தகவல்களும் சொல்லும் திமுகவின் மானம்,ரோசம் குறித்து.

மூத்த அரசியல் தலைவரான கலைஞர் தில்லி சென்றபோது சோனியா காந்தியை சந்திக்க சில மணி நேரம் காத்திருக்க வேண் டியிருந்தது என்பதுதான் வெளியில் வந்த செய்தி. கோல்ப் விளையாடிக் கொண்டி ருந்த ராகுல் காந்தியும் தங்களது சந்திப்பின் போது இருக்க வேண்டும் என்று சோனியா விரும்பியதுதான் இந்த காத்திருப்புக்கு கார ணம் என்பது பலருக்கும் தெரியாது என்று எழுதியுள்ளது தினமணி ஏடு. “மானம் மானம் என முழங்கும்” என மறத்தமிழர் வீரம் குறித்து எழுதிய பழைய வசனம்தான் ஞாபகம் வருகிறது.

மறுபுறத்தில், திமுகவிடம் கழுத்தில் துண்டைப்போட்டு இழுத்து அதிக தொகுதி கேட்பதாகவும், ஆட்சியில் பங்கு கேட்பதாக வும் புலனாய்வு ஏடுகள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. “ஆட்சியில் பங்கு: இந்த முறை விட்டு விடக்கூடாது! கங்கணம் கட்டும் காங்கிரஸ்” இது குமுதம் ரிப்போர்ட்டர் தலைப்பு. “அடுத்த அணுகுண்டு... கேட்டதைத் தராவிட்டால் கவர்னர் ஆட்சி!: கதறடிக்கும் காங்கிர ஸின் பொலிட்டிகல் பிளாக் மெயில்!- இது ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி. கூட்டணிக்கு ஐந்து நிபந்தனை! திமுக-காங்கிரஸ் உறவு தொடருமா? பர... பர... திருப்பம்! இது திமுகவின் ஆதரவுப் பத்திரி கையான நக்கீரனின் கவர் ஸ்டோரி.

இந்த ஏடுகளில் எழுதப்பட்டுள்ள செய்தித் தொகுப்புகளின் சாராம்சம் திமுகவின் மானத்திற்கு, ரோசத்திற்கு சாட்சியமாக உள்ளது என்று முரசொலி ஏடு கருதுகிறதா? இல்லையென்றால் மறுப்பு தெரிவித்து எழுத வேண்டியதுதானே.

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்குதர மாட்டோம் என்றோ, கடந்த முறை கொடுத்ததை விட ஒரு தொகுதி கூட அதிகமாக தரமாட் டோம் என்றோ மறுக்குமா தலைமைக்கழகம்? ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்குப் பிறகும், புகைப்பட வெளிச்ச வெள்ளத்தையும் தாண்டி இருண்டு கிடக்கும் முகங்கள் காட்டுகிறதே என்ன நடந்திருக்கும் என்று!

முரசொலி வெளியிட்டுள்ள இன்னொரு பெட்டிச்செய்தியின் சாராம்சம், பா.ம.கவை ஒரு ஏடு குறை சொல்லிவிட்டதாம். அதற்கு பார்ப்பன ஏடு என்று நாமகரணம் சூட்டி அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது.

பார்ப்பன புத்தி, பார்ப்பன சக்தி என் றெல்லாம் பழைய பல்லவி பாடப்பட்டுள்ளது. காடுவெட்டி குரு திமுகவை குறிப்பாக முதல்வர் குடும்பத்தினரை இழிவாகப் பேசி விட்டார் என்று கூறித்தான் கூட்டணியிலிருந்து பாமக-வை கழற்றிவிட்டது திமுக. காடுவெட்டி குரு அதற்காக வருத்தம் தெரி வித்து அறிக்கை வெளியிட்டாரா? இல்லை. பாராட்டுவிழா நடத்த தேதி வாங்கியிருக் கிறாரா? எதுவும் இல்லையே. பிறகு எப்படி கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்தவரோடு கை குலுக்கி, உடன்பாடு என்று அறிவிக்க முடிந்தது. இது என்ன உத்தி. இது என்ன சக்தி.

பாமக, திமுக கூட்டணியிலிருந்து விலகும்போது கருணாநிதி என் வேட்டியையும் உருவப்பார்த்தார் என்று முன்பு சொன்னார் மருத்துவர் ராமதாஸ். இப்போது வேட்டியும் துண்டும் இணைந்தது எப்படி?

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காங்கிரஸ், திமுகவை கதறடித்துக் கொண்டிருக்கிறது. தைரியம் இருந்தால் காங்கிரசை எதிர்த்து மான ரோசத்தோடு எழுதிக்குவிக் கட்டும் முரசொலி. அதை விடுத்து, மார்க்சிஸ்ட் கட்சிக்கு புத்தி சொல்ல முனைய வேண்டாம்.

திமுக, காங்கிரஸ் பேச்சுவார்த்தையின் முடிவில் பார்க்கலாம். ஜெயிக்கப்போவது மானமா? வருமானமா? என்று.

-ஏகலைவன்

1 கருத்து:

மாயாவி சொன்னது…

பெரியவர் எல்லாமும் சொல்லுவர். இவருக்கு எதுக்கு கம்யூனிஸ்ட்கள் மீது இவ்வளவு அக்கறை? அய்யோ பாவம்... இவர் பதவி இல்லாமல் இருக்க போகும் இனி வரும் நாட்களை நினைத்தால்... வேணாம் விடுங்க, இவருக்குதான் கம்யூனிஸம் பிடிக்கும் கம்யூனிஸ்ட்களை பிடிக்காதே...