திங்கள், 16 மே, 2011

பெட்ரோல் விலை உயர்வும் அடிமை இந்தியனும் ...



பெட்ரோல் விலையை உயர்த்திய உடன் அமெரிக்க அதிபரின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக அமெரிக்க பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதுகின்றன. இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகள் ஒருவாரத்திற்கு முன்பே இந்த முதுகு எலும்பு இல்லாத இந்தியனின் மூளையை தயார்ப்படுத்துகிறது.

நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் மையமான கோஷம் என்பதே, ‘‘தேவையற்ற முறையில் அனைத்திலும் அரசு தலையிடாது’’ என்பதாகும். அதாவது அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்மானிப்பது சந்தைதான். இதில் வாங்கு பவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையில் அரசு தலையிடாது என்று சொல்லும் போது, பலர் இது நல்ல யோசனை என்று இதன் பின்னால் உள்ள சூட்சுமங்களை அறியாமலேயே அறிவித்தார்கள். ஆனால் இந்த சந்தையைத் தீர்மானிப்பது, வாங்குபவர்களா அல்லது விற்பவர்களா என்ற கேள்வியை எழுப்பிப் பார்த்தால், வாங்குபவர்களும் தீர்மானிப்பதில்லை, விற்பவர் களும் தீர்மானிப்பது இல்லை, ‘எல்லாம் அவன் செயல்’ என்று பக்தர்கள் தெரிவிப் பது போன்று உலகத்தில் அனைத்துப் பிரச் சனைகளுக்கும் வழிகாட்டல் மற்றும் தீர்வு என்பதை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில பன்னாட்டு முதலாளிகள் தீர்மா னிக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட்டுகள் வலியுறுத்திக் கூறியபோது, பலர் ‘இவர் கள் இப்படித்தான் கூறுவார்கள்’ என்று சொன்னார்கள். இப்போது உலகத்தோடு ஒன்றி வாழ்வது தவிர வேறு வழியில்லை என்று கூறி, ‘‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்’’ என்ற வள்ளுவரின் குறளைத் தங்கள் வாதத்திற்கு ஆதரவாக மேற்கோள் காட்டுகிறார்கள்.

வள்ளுவர், உலகத்தோடு ஒட்டி இருக் கக்கூடிய மக்கள், அவர்களுடைய பண் பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவை குறித் துத்தான் சொன்னாரே ஒழிய, இவர்கள் இப்போது சொல்வதுபோல் சந்தை குறித்து அல்ல.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தி இருக்கிறார்கள். மேலும் உயர்த்தப் போகிறோம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். அதாவது இவ் வாறு லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப் பட்டிருந்தாலும் அப்படியும் நஷ்டம்தான் வருகிறதென்றும், எனவே விரைவில் மீண்டும் உயர்த்தப்போகிறோம் என்றும் சொல் லியிருக்கிறார்கள்.

இது தவிர சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் ஆகிய அனைத்தின் விலைகளையும் உயர்த்த இருக்கிறார்கள். இதற்கான முடிவை அடுத்தவாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் உள்ள அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் எடுக்கவிருக்கிறார்கள்.

பெட்ரோல் விலையை சென்ற மாதமே உயர்த்த இருந்தார்களாம். ஐந்து மாநிலங் களின் சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கட்டும் என்று காத்திருந்தார் களாம்.

2010 ஜூன் 25இல் கிரீத் பாரீக் குழு வின் பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் ஏற்று பெட்ரோலியப் பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியபிறகு இப்போது எட்டாவது முறையாக பெட்ரோல் விலை யை உயர்த்தி இருக்கிறது. அன்றைய தினம் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 51.43க்கு விற்றது. இப்போது அது ரூ.63.37 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது ஓராண்டு காலத்திற்குள்ளேயே 32 விழுக் காடு உயர்த்தப்பட்டிருக்கிறது.

சர்வதேச எண்ணெய் விலைகளோடு நம் நாட்டின் சந்தையை இணைப்பது என் பது மிகவும் ‘‘அபத்தமான’’ மடிவு என்று பொருளாதாரப் பேராசிரியர்கள் சந்திர சேகர் மற்றும் ஜெயதி கோஷ் தெரிவித்தி ருக்கிறார்கள். இவ்வாறு அரசாங்கமானது கந்துவட்டிக்காரனைப்போல நடந்து கொண் டிருக்கிறது என்றும் மேற்குவங்கம், கேரளா வில் இடதுசாரி அரசாங்கங்கள் தோல்வி யடைந்ததை அடுத்து மத்திய அரசின் இத்தகைய ‘‘சொரணையற்ற தன்மை’’ மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஜெயதி கோஷ் கருதுகிறார்.

அமெரிக்கா கூட தன் நாட்டில் எண் ணெய் நிறுவனங்களுக்கு 21 பில்லியன் டாலர் அளவிற்கு மானியம் அளித்து வரு கிறது. (பில்லியன் = 100 கோடி)

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் அதனைத் தொடர்ந்து அத்தியா வசியப் பொருள்களின் விலைகள் மேலும் உயரும். இதனால் சாமானிய மக்களின் அவல நிலைமை மேலும் கடுமையாகி துன்பம் ஏற்படும்.

இதுகுறித்து மன்மோகன்சிங், சிதம்பரம் வகையறாக்களிடம் கேட்டால், அவர்கள் ‘‘மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகி விட்டது. அதனால் விலைகள் உயர்கின் றன’’ என்று ஜோக்கடிப்பார்கள்.

இதில் மிகவும் கவனிக்க வேண்டியது, ஓராண்டுக்கு முன்பு வரை, அதாவது கிரீத் பாரீக் குழு பரிந்துரைகளை அரசு 2010 ஜூன் 25இல் ஏற்றுக்கொண்டு அமல் படுத்தத் தொடங்கிய பின்னர், பெட்ரோல் விலை உயர்வைத் தீர்மானிப்பது அரசு அல்ல. அரசுக்கு இதில் வேலையே இல்லை; இதனைக் கைகழுவி விட்டது.

இதற்குப் பெயர்தான் தனியார்மயம் என்பது. இன்றைய தினம் பெட்ரோல், டீச லுக்கு வந்திருக்கிற இந்தத் தனியார்மயம் தாராளமயமாக்கப்பட்டு அனைத்துப் பொருட்களுக்கும் வந்தால், நமது கதி என்னாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

கச்சா எண்ணெய்யின் விலை சர்வ தேசச் சந்தையில் உயர்ந்துள்ளதால், நாங் கள் ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் நம் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத் திற்கு உள்ளாகி இருக்கின்றன என்றும் ஆகவே நம் நாட்டிலும் பெட்ரோலின் விலை யை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் விளக்கம் அளிக்கிறார்கள்.

ஆனால், நமது அனுபவம் சர்வதேசச் சந்தையில் விலை உயரும்போது, இங்கும் விலையை உயர்த்துகிறார்கள். ஆனால் அங்கே விலை குறையும்போது, இங்கு விலையைக் குறைப்பது இல்லை. உயர்த் தப்பட்டது உயர்த்தப்பட்டதுதான்; இதை நாடறியும்.

மேலும் சர்வதேசச் சந்தையில் விலை உயர்வதைக் காரணம் காட்டி, இங்கும் விலை உயர்த்தப்படும்போது, அதனுடன் ‘விழுக்காட்டு வரி’ (யீநசஉநவேயபந வயஒ) என்ற பெயரில் விலை உயர்வுக்கு ஏற்ப, வரியிலும் ஓர் உயர்வினை ஏற்படுத்துகி றார்கள்.

அதாவது, பெட்ரோலின் விலையை உயர்த்தும்போது, அதனுடன் 55 விழுக் காடும், டீசல் விலையை உயர்த்தும்போது அதனுடன் 34 விழுக்காடும், சமையல் எரி வாயுவின் விலையை உயர்த்தும்போது அதனுடன் 11 விழுக்காடும், மண்ணெண் ணெய் விலையை உயர்த்தும்போது அத னுடன் 4 விழுக்காடும் வரி உயர்த்தப்படு கிறது. இதனால் அரசாங்கத்திற்கு இவற் றின் விலை உயரும்போது, இதனுடன் சேர்ந்து வரிவருவாயும் பெருமளவில் கிடைக்கிறது. இந்த வரியை ரத்து செய் தாலே, விலையை உயர்த்த வேண்டிய தேவையில்லை.

ஆட்சியாளர்கள் அடிக்கடி கூறுவது போல் தாங்கள் ‘‘சாமானிய மனிதர்களுக் காகத்தான்’’ (ஆம் ஆத்மி) ஆட்சி நடத்து கிறோம் என்பது உண்மையாக இருந்தால், இவர்கள் இந்த வரிகளைக் குறைத்திட வேண்டும்.

எனவே, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் என்பது மக்கள் வாழ்வதற்கான போராட்டமாகும். பெட் ரோல் விலை உயர்வு என்பது அனைத்துத் தரப்பினரையும் கடுமையாகப் பாதிக்கும் ஒன்றாகும். எனவே இதற்கு எதிராக அனைத்துப் பிரிவினரும் சாதி,மத பேத மின்றி ஒன்றுசேர்ந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

- கே.வரதராசன்

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கிளர்ந்தெழுவீர்!

பெட்ரோல் விலையை லிட் டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தி இருப்பதன் மூலம் காங்கிரஸ், ஐ.மு.கூட்டணி அரசாங்கமா னது, ஏற்கனவே அனைத்து வித மான பொருள்களின் விலைவாசி உயர்வாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மேலும் ஒரு கொடூரமான தாக்கு தலைத் தொடுத்திருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளை நீக் கிய பின், அநேகமாக ஒவ்வொரு மாதமும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆயி னும் 2011 ஜனவரியிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலைகளை உயர்த்தி அறிவிக்காமல் இருந்து வந்தன. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத்தேர்தல்கள் நடைபெறுவதை யொட்டி அந்நிறுவனங்களை அவ்வாறு விலைகளை உயர்த்தா மல் அவற்றை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் கட்டுப்படுத்தி வைத் திருந்திருக்கிறது.

தேர்தல்கள் முடிந்தவுடனேயே, இவ்வாறு செங்குத்தான விலை உயர்வு அறிவிக்கப்பட் டிருக்கிறது. இதுவே, பெட்ரோல் விலைவாசி உயர்வு என் பது அரசியல் ரீதியாகவே மேற் கொள்ளப்பட்டு வருகிறது என் பதைக் காட்டுகிறது. ஐ.மு.கூட் டணி அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி மீதான மதிப்புக் கூட்டு வரிக் கட்ட மைப்பை மாற்றியமைத்திட மறுத்து வருகிறது. சர்வதேச விலைகளில் உயர்வு ஏற்படுவதன் காரணமாக அரசாங்கத்திற்கு வருகின்ற தீர்வை வருவாய்களை எண் ணெய் நிறுவனங்களுக்குத் திருப்பிக் கொடுத்தாலே, பெட் ரோல் விலையை உயர்த்த வேண்டிய தேவையோ, சாமா னிய மக்களின் மீது சுமைகளை ஏற்ற வேண்டிய அவசியமோ இருக்காது.

பணவீக்கத்தை அதிகப்படுத் திடவும், விலை உயர்வைக் கொண்டு வரவும் கூடிய இத்தகைய மோசமான கொள்கையை மக்கள் அனு மதிக்கப்போவதில்லை. இப்புதிய தாக்குதலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி கிளர்ச்சி இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று அனைத்துக் கிளைகளுக்கும் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுக்கின்றன

கருத்துகள் இல்லை: