அம்பேத்கர் பார்ப்பனியத்துக்கு எதிராகப் போராடினார். அத்தகைய போராட்டங்களின் விளைவாகத் தலித்துகளில் சிலர் பார்ப்பனர்களாக மாறினார்கள். அதனால் சாதிச் சிக்கலைத் தீர்க்க முடியவில்லை. இக்கருத்து பொருத்த மற்றதாகத் தோன்றலாம். தலித்துகளில் ஒரு பிரிவினர் தலித் முதலாளியம் என்ற கோட்பாட்டை ஆதரித்துப் பரப்பு பவர்களாக இருப்பதால் இவ்வாறு எண்ணத் தோன்றுகிறது.
திசைமாறிய தலித்துகளின் திட்டம்
தலித்துகளில் 81 விழுக்காட்டினர் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் நிலமற்ற வேளாண் தொழி லாளர்களாகவும் சிறுபகுதியினர் சிறு நிலவுடைமையாளர் களாகவும் உள்ளனர். 19 விழுக்காட்டினர் நகரங்களில் வாழ் கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். அமைப்புசாராத் தொழில்களில் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்கின்றனர். தலித்துகளின் இத்தகைய வாழ்நிலையை ஆராயும் போது, இடஒதுக்கீட்டால் இப்பிரிவினர் அதிகப் பயனடையவில்லை என்பதை நாம் காணமுடியும். ஆனால் நீண்டகாலமாக இடஒதுக்கீடு என்பதே தலித் கோட்பாட்டின் மய்யமாக இருந்து வருகிறது. காலங் காலமாகத் தலித்துகள் மீது சுமத்தப்பட்ட இழிந்த வாழ் நிலையிலிருந்து விடுபட்டு முன்னேற விரும்பிய நகர்ப்புற தலித்துகள் சிலரால் இடஒதுக்கீட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டது. இப்பிரிவினர், அய்ந்து நட்சத்திர விடுதிகளில் கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். இக்கருத்தரங்குகளிலும், உலக அளவில் நடைபெறும் மாநாடுகளிலும் கலந்து கொள் கிறார்கள். இத்தகைய நோக்கம் கொண்ட 5000 தலித்துகள் 2006ஆம் ஆண்டு தில்லியில், ‘தலித் முதலாளியப் பேரணி’ என்ற பதாகையின் கீழ், கையில் குடைகளுடன் ஊர்வலம் சென்றனர். இவர்கள் முதலாளியத்தையும், உலகமயத்தையும் ஆதரித்துச் செய்தி ஏடுகளில் எழுதுகிறார்கள். ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்கிலியான’ அறிவார்ந்த உங்கள் இதழிலும் இவர்களின் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.
உலகமயக் கோட் பாடு நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு, தலித்துகள் கிராமங்களிலிருந்து வெளியேறி, வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவ்வாறு கூறுபவர்கள், கிராமங்களில் தலித்துகளின் வாழ்வா தாரங்களுக்கான வாய்ப்பு மிகவும் குறை வாக இருப்பதால், தலித் துகள் நீண்டகாலமாக வே கிராமங்களை விட்டு வெளியேறி வருகிறார்கள் என்கிற உண்மையை மறந்துவிட்டார்கள் போலும்! உலகமயமாக் கலுக்கு முன்பு இருந்ததைவிட, தலித்துகள் இப்போது வளமாக இருக்கிறார்கள் என்பது, முறையாக ஆராயாமல், மேலோட்ட மாகப் பார்த்துவிட்டுப் பேசுவதாகும்.
இரண்டாவதாக, தலித்துகளின் வாழ்நிலை மேம்பட்டிருக் கிறதா அல்லது தாழ்ந்திருக்கிறதா என்பதைத் தலித் அல்லாத மக்களின் வாழ்நிலையுடன் ஒப்பிட்டு முடிவு செய்ய வேண்டும். தலித் முதலாளிகளும் அவர்களின் வணிகக் குழாம்களும், 17 கோடிப் பேர்களாக உள்ள தலித் மக்களில் சில நூறு பேர்கள் தொழிலிலும் வணிகத்திலும் முன்னேறியிருப்பதை அடிப் படையாகக் கொண்டு, ஒட்டுமொத்த தலித் மக்களும் முன் னேறியிருப்பது போல் மகிழ்ந்து பாராட்டுகின்றனர். தலித் முதலாளிகளின் சொத்து மதிப்பு கடலில் ஒரு சொட்டு நீர் போன்றதேயாகும். இவ்வாறு கூறுவது, புதிய தாராளமயக் கொள்கையரைக் களிப்புறச் செய்யும். ஆனால் இது ஒரு பெரிய வளர்ச்சி அன்று. உலகமயமாக்கலுக்கு முன்பும் தலித்துகளில் இதுபோன்ற ‘முதலாளிகளும்’, ‘முதலாளியக் குழாம்களும்’ இருந்துள்ளன. தலித்துகளின் எந்தவொரு முன்னேற்றமும் பாராட்டப்பட வேண்டியதுதான். ஒட்டு மொத்த தலித் சமுதாயத்தின் துன்பங்களைப் புறக்கணித்து விட்டு இதைக் கூறும்போது தான் சிக்கல் எழுகிறது.
முதலாளியம் குறித்து அம்பேத்கர்
தலித் மக்களுக்கான ஒப்பற்ற தத்துவ ஆசானாக அம்பேத்கர் திகழ்கிறார். அதனால் மக்கள் தங்கள் கருத்துக்கு - குறிப்பாக அது மாறுபட்ட தன்மையதாக இருக்கும் போது - அம்பேத்கரின் கருத்தைத் தமக்கு ஆதரவாக மேற்கோள் காட்டுகின்றனர். உலகமயக் கொள்கையைத் தூக்கிப் பிடிப்போர், அம்பேத்கர், சுதந்தரமான சந்தையை - புதிய தாராளமயக் கொள்கையை ஆதரித்தார் என்று கூறித் தங்கள் கொள்கைக்கு அரண் சேர்க்க முயல் கின்றனர்.
அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் முதலாளியத்தை வெளிப்படையாக எதிர்த்து வந்தார். உலகமயம் எனப்படும் புதிய தாராளமய முதலாளியத்தை அம்பேத்கர் ஆதரித்தார் என்று கூறுவதன் மூலம் அம்பேத்கரின் கொள்கையைக் கொச்சைப்படுத்த முயல்கின்றனர் திரிபுவாதிகள். 1938ஆம் ஆண்டு மகாராட்டிரத்தில் மன்மத் நகரில் நடந்த இரயில்வே தொழிலாளர் மாநாட்டில், தீண்டப்படாதவர்களின் எதிரிகள் பார்ப்பனியமும் முதலாளியமும் என்று அம்பேத்கர் அறிவித் தார். அம்பேத்கர் தொடங்கிய முதல் அரசியல் கட்சியின் பெயர், “சுதந்தரத் தொழிலாளர் கட்சி” என்பதாகும். பிரிட்டிஷ் தொழிற்கட்சி போன்று, அமைதியான வழியில் சோசலிசச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். முதலாளியத்தை வெறுத்தார். அக்காலக் கட்டத்தில் அம்பேத் கரின் “சுதந்தரத் தொழிற்கட்சி” தான் இந்தியாவில் உண்மை யான இடதுசாரிக் கட்சியாக விளங்கியது. ஏனெனில் அப்போது காங்கிரசுக் கட்சியில் இடதுசாரிக் கொள்கை கொண்டவர் களால் உருவாக்கப்பட்டிருந்த சோசலிஸ்ட் கட்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேர்ந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, வர்க்க முரண் பாடுகள் என்ற கோட்பாட்டை மேலை நாடுகளின் மாதிரியில் பின்பற்றியது. இந்தியாவில் வர்க்கம் பற்றிய ஆய்வில், இந்தியச் சமூகத்தில் எல்லாவற்றிலும் நீக்கமற ஊடுருவிப் படர்ந்துள்ள சாதி அமைப்பை - சாதியத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறியது. மாறாக, அம்பேத்கரின் சுதந்தரத் தொழிற் கட்சி, சமூக நீதிக்கான போராட்டத்தில், சாதியையும் வர்க்கத்தையும் எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்பதைச் செயலில் காட்டியது.
1942இல் வெளியிட்ட கிரிப்ஸ் குழுவின் அறிக்கையின் விளைவாக அம்பேத்கர், சுதந்தரத் தொழிலாளர் கட்சியைக் கலைத்துவிட்டு, “பட்டியல் வகுப்புச் சாதிகள் பேரவை”யைத் தொடங்கினார். ஆயினும் அம்பேத்கரின் இடதுசாரிக் கொள் கையும் முதலாளிய எதிர்ப்பும் அப்படியே நீடித்தன. 1947இல் பட்டியல் வகுப்புச் சாதிகள் பேரவையின் சார்பில், அரசமைப்புச் சட்ட அவையிடம் ‘சிறுபான்மையினரும் அரசுகளும்’ என்ற தலையில் ஓர் ஆவணத்தை அளித்தார். எளிதில் கட்டுப்படுத்த முடியாததாக உள்ள முதலாளியத்துக்கு மாற்றாக ‘அரசு சோசலிசம்’ என்கிற திட்டத்தை முன் மொழிந்திருந்தார். அம்பேத்கர் சனநாயகத்தின் மீது பெரும் பற்றுக் கொண்டவர், ‘முதலாளியம் தனியார் முதலாளியின் சர்வாதிகாரம்’ என்று கூறினார்.
வேறோர் இடத்தில், “முதலாளியத்தைப் பணக்காரர்கள் விரும்பிப் போற்றுகின்றனர். ஆனால் ஏழைகளை அது ஈர்ப்பதில்லை. மாறாகச் சோசலிசத்தை ஏழை மக்கள் நாடு கின்றனர். செல்வர்கள் சோசலிசத்தை வெறுக்கின்றனர்” என்று அம்பேத்கர் கூறியுள்ளார். தன் வாழ்வின் இறுதிக் காலத்தில், பவுத்தத்தைத் தழுவுவது ஏன் என்று விளக்கிய போது, அம்பேத்கருக்குச் சோசலிசத்தின்பால் இருந்த ஈர்ப்பும், முதலாளியத்திடம் கொண்டிருந்த வெறுப்பும் வெளிப்பட்டன. அவருடைய ‘புத்தர் அல்லது காரல்மார்க்சு’ என்ற நூலில் காரல் மார்க்சை ஏற்றுக்கொள்ளும் மனநிலைமைக் காண முடிகிறது. ஆயினும் அவருடைய ஆய்வு முறைக்கு ஏற்ப இறுதியில் பவுத்தத்தை ஏற்றார்.
சாதி மூலதனம்
இந்தியாவில் காலனிய ஆட்சி ஏற்பட்டது. அதன் உடன் பிறப்பாக முதலாளியம் இந்தியாவில் காலூன்றியது. மேலை நாடுகளில் நிலப்பிரபுத்துவத்துடன் உருவான பகை முரண் பாட்டால் முதலாளியம் முகிழ்த்தது, நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தியது. ஆனால் இந்தியாவிலோ முதலாளியத்துக்கு நிலப்பிரவுத்துவத்துடன் மோத வேண்டிய தேவை எழவில்லை. மாறாக நிலப்பிரபுத்துவத்தின் சில கூறுகளுடன் சமரசம் செய்து கொண்டது. இதன்மூலம் நிலப்பிரபுத்துவமும் நீடிப்பதற்கு வழியமைத்தது.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் இருந்த சாதிப் பிரிவினை யைத் தொழிலாளர்களைப் பிரித்து வைப்பதற்கு முதலாளியம் பயன்படுத்திக் கொண்டது. ஆயினும் முதலாளியம் இந்தியாவில் உருவாகிப் பரவியதால் சாதி அமைப்பின் மீது சில தாக்கங் களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டு, தொடர் வண்டிகள் இயக்கப்பட்ட தொடக்கக் காலத்தில், இந்தியா குறித்து மார்க்சு எழுதிய கட்டுரையில், ‘இரயில்வே இந்தியாவில் சாதியமைப்பைத் தகர்க்கும்’ என்று எழுதினார். அவருடைய கருத்து முடிவு தவறானது என்பதை காலம் எண்பித்துவிட்டது. முதலாளியத்தை ஏற்றுக்கொண்ட இருபிறப்பாளர் எனும் சாதிகளின் பழக்கவழக்கங் களும், சடங்குமுறைகளும் குலையவில்லை. சாதியமைப்பில், ஒரு சாதி, தன்னுடைய சாதிய வலைப்பின்னல் தொடர்பை, மூலதனத்தைப் பெருக்கவும், கடன் வசதிகளை உருவாக் கவும், தகவல்களைத் திரட்டவும், சேமிக்கவும், அரசியலில் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் எனப் பல நிலைகளில் சாதி, மூலதனமாகச் செயல்படுவதைக் காண முடிகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக மார்வாடிகளை, குசராத்தியரைக் கூறலாம்.
இடைநிலைச் சாதியினரிடையிலும், மார்வாடிகள், குசராத் தியர் போன்ற தொழில் முனைவோரும் வணிகரும் உருவாகி யுள்ளனர். சுதந்தரத்திற்குப் பின் நேருவின் ஆட்சிக்காலத்தில், நேரு கொண்டுவந்த நிலச்சீர்திருத்தத்தின் மூலம் இடை நிலைச் சாதிகள் பொருளாதார நிலையில் வளர்ந்தன. பசுமைப்புரட்சி இந்த வளர்ச்சிக்கு உந்துவிசையாக அமைந்தது. முதலாளிய வேளாண்மையிலிருந்து பெறப்பட்ட உபரி, தொழில்களில் மூலதனமாக இடப்பட்டது. இந்த வளர்ச்சிக்குச் சாதி, ஆதாரமாக விளங்கியது. தமிழ்நாட்டில் நடுத்தர வேளாண் சாதியாக இருந்த கவுண்டர்கள் வேளாண்மையிலிருந்து பெற்ற உபரியைக் கொண்டு திருப்பூரில் பின்னலாடைத் தொழிலை உருவாக்கினர். இன்று பின்னலாடைத் தொழிலில் திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. ஒரு சாதி, சமூக மூல தனமாக மாறியதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும். நாடார்கள், மார்வாடிகள், சிந்திகள், பட்டேல்கள் முதலான பல சாதிகள் உலக அளவில் படர்ந்துள்ள தம் சாதிய வலைப் பின்னலைத் தங்கள் தொழில் மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.
சாதியத் தொடர்புகளைப் பயன்படுத்தி மூலதனம் உருவாக் கப்படுகிறது. அதனாலேயே இதைச் சாதிய மூலதனம் என்று வரையறை செய்ய முடியுமா? முதலாளிய அடிப்படைத் தத்துவத்தின்படி, இதற்கான விடை, அவ்வாறு வரையறுக்க முடியாது என்பதேயாகும். ஒரே சாதியைச் சேர்ந்த முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடை யிலான முரண்பாட்டை, சாதி உயர்வு எனும் திரையால் ஓரளவு மறைக்க முடியும். ஆனால் அம்முரண்பாட்டைக் களைய முடியாது. அதேபோன்று, சாதியைக் கடந்து முதலாளிகள் ஒரே வர்க்கமாகத் திரள்வதைச் சாதியால் தடுத்து நிறுத்த முடியாது.
மூலதனத்துக்கு, மரபினம், மதம், சாதி, குலநம்பிக் கை, நாடு ஆகிய எந்தவொரு அடையாளமும் இல்லை. இதுதான் மூலதனத்தின் அடிப்படையான பண்பு. எனவே தான், உலகம் தழுவிய தன்மையில் படர்ந்து விரிவதற்கான உள்ளுறை ஆற்றல் மூலதனத்துக்குள் பொதிந்துள்ளது. ஆகவே இன்று மூலதனம், உலகளாவிய மூலதனமாக வளர்ந்துள்ளது.
கொடிய நகைச்சுவை :
நேரு நடைமுறைப்படுத்திய நவீனத் திட்டங்கள், கிராமப் புறங்களிலும் முதலாளிய சமூக உறவுகளை ஏற்படுத்தியது. இதன்மூலம் இடைநிலைச் சாதிகளுள் ஒரு பிரிவினர் பொரு ளாதார நிலையிலும் அரசியல் நிலையிலும் செல்வாக்கும் ஆதிக்கமும் பெற்றனர். நாடு முழுவதும், அதற்கு முன் நிலவிவந்த நில உடைமையின் சமூக உறவுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் தலித்துகள் நடுத்தர நிலவுடை மையாளர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். நகரங்களில் தொழில்களை மேற்கொள் வதற்காக, கிராமங்களிலிருந்து மேல்சாதி நிலவுடைமையாளர் கள் நகரங்களுக்குக் குடியேறினர். அதன்பின் இடைநிலைச் சாதியினர் பார்ப்பனியத்தின் காவலர்களாகப் புதிய பொறுப்பை ஏற்றனர். அதாவது சூத்திரர்களான இடைநிலைச் சாதியினர் இருபிறப்பாளர் என்கிற உயர்சாதிகள் போலாயினர். எனவே கிராமங்களில் சாதி அமைப்பும் அதன் முரண்பாடும் தலித்து அல்லாதவர் மற்றும் தலித்துகள் என்பதாக வடிவெடுத்தது.
முதலாளிய வளர்ச்சியால் உயர்நிலை பெற்ற இடைநிலைச் சாதியினருக்கும் தலித்துகளுக்கும் இடையிலான முரண்பாடு, சாதிய ஒடுக்குமுறைகளாக வெடித்தது. 1984இல் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், தலித்துகளின் வாழ்நிலை மேலும் சீரழிந்தது. நவீன மதச் சார்பற்ற நிறுவனங்களுக்கு ஏற்ப சாதியமைப்பு தன்னைத் தகவமைத்துக் கொண்டது. அதனால் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தலித்துகளின் வாழ்நிலை இயலாமைகளும் துன்பங்களும் நிறைந்ததாகவே நீடிக்கிறது. தலித்துகளின் வாழ்நிலை இத்தகைய இரங்கத்தக்க இழிநிலையில் மூழ்கிக் கிடக்க, சில குட்டி தலித் முதலாளிகளைச் சுட்டிக்காட்டி, இவர் களின் முன்னேற்றத்தைத் தலித் சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தின் அடையாளமாகக் காட்ட முயலுவது, ஒரு கொடிய நகைச்சுவையே ஆகும்.
இவ்வாறு காட்ட முயல்வதன் நோக்கத்தைப் புரிந்து கொள்வது எளிதன்று. தலித்துகளிலும் சில தனிப்பட்ட பணக்காரர்கள் உள்ளனர் என்று காட்டுவது அவர்களின் நோக்கமெனில், இதற்கு முன்பும் தலித்துகளில் சில பணக் காரர்கள் இருந்துள்ளனர். பிரித்தானியரின் காலனி ஆட்சியில் சில தலித்துகள் பெருஞ்செல்வராக இருந்தனர். அவர்கள் பணக்காரர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் ‘தலித்துகள்’ என்ற நிலையை மாற்றவில்லை. மேலும் அவர்கள் பிறந்த தலித் சமூகத்தில் எம் மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
காலனிய ஆட்சிக்காலத்தில் (ஏன், அதற்கு முன்பும்) தலித்துகள் புதிய தொழில் பணிகளை ஏற்று அவற்றில் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இதேபோன்று சிறிய அளவிலான வணிகத்திலும், தங்கள் சாதித் தொழில்களை நவீனமயமாக்குவதிலும் தம் ஆற்றலைப் புலப்படுத்தி முன் னேறியுள்ளனர். உண்மையில், இவ்வாறான முன்னேற்றத் தின் விளைவாகத்தான் தலித் இயக்கம் தோன்றியது.
ஒரு சில தலித் முதலாளிகளைச் சுட்டிக்காட்டி, அதன் வாயிலாக உலகமயக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அரசையும் புகழ்ந்திடச் சிலர் முயல்கின்றனர். இது ஒரு கண்ணியமற்ற செயல் என்பதுடன் தலித்துகளின் நலன் களுக்கு இரண்டகம் செய்வதுமாகும். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். ஆளும் வர்க்கத்தினரின் கொள்கை களைப் புகழ்ந்து, அவர்களிடமிருந்து சலுகைகளை - நன்மை களை அடையும் தலித் அறிவாளிகள் பலர் இருக்கின்றனர்.
தலித்துகளில் தனிப்பட்ட சிலர் உயர் அதிகாரிகளாகவோ, பெருமுதலாளிகளாகவோ, வேறுவகையில் பெரிய ஆளாகவோ ஆகட்டும். ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் முன்னேறுவது என்பது, தலித்துகளின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டத்துக்கு உதவாது. தலித்துகளின் விடுதலையை முன்னேற்றம், சமூக அமைப்பை அடியோடு மாற்றியமைப்பதன் மூலமே அடைய முடியும்.
ஆனந்த் டெல்டும்டே
நன்றி : Economic and Political Weekly, 2011, March 5
தமிழாக்கம் : க.முகிலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக